மனோகர் மல்கோங்கர் (Manohar Malgonkar) என்ற பேரை கேள்விப்பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் எழுதி வந்த மராத்திய எழுத்தாளர். சிறு வயதில் அவரது Men Who Killed Gandhi என்ற புத்தகத்தை விரும்பிப் படித்திருக்கிறேன். சமீபத்தில்தான் (ஜூன் 2010) இறந்துபோனார். இந்திய ராணுவ அதிகாரிகளின் உலகத்தை – அதுவும் நாற்பதுகள்/ஐம்பதுகளில் – சித்தரிப்பதில் வல்லவர். கரியப்பாவும் திம்மையாவும் வாழ்ந்த உலகம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றும். அவரும் ராணுவ அதிகாரியாக இருந்திருக்கிறார்.
அவர் இறந்த செய்தி கேட்டபோது அவருடைய இரண்டு புத்தகங்களைப் படித்தேன். இன்னும் சில புத்தகங்களைப் படித்த பிறகு அவருக்கு ஒரு ஆபிச்சுவரி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் புத்தகங்களுக்கு எங்கே போவது? அதனால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
டெவில்ஸ் விண்ட் (Devil’s Wind): முதல் இந்திய விடுதலைப் போர் வீரரான நானா சாஹிப் தன் கதையை சொல்கிறார். நாவல் சுமார்தான். ஆனால் சுலபமாகப் படிக்கும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
சுருக்கமான கதை இதுதான் – ஆங்கிலேயர்கள் செய்வது அயோக்கியத்தனம் என்று தெரிந்தாலும் நானாவுக்கு தனிப்பட்ட ஆங்கிலேயர்களுடன் நல்ல உறவு இருக்கிறது. போரில் அவர் விரும்பிய ரோல் ஒரு மீடியேட்டர் ரோல்தான். ஆனால் சம்பவங்கள் அவரை போராட வைக்கின்றன. கடைசியில் தப்பித்து நேபாளத்துக்கும், பிறகு சிந்தியா உதவியால் துருக்கிக்கும் சென்று காலத்தை கழிக்கிறார்.
ஆங்கிலேயர்கள் நானாவை தேடிக் கொண்டே இருந்தார்கள், பலரை நானா என்று நினைத்து தூக்கில் இட்டார்கள் என்று எழுதி இருக்கிறார். இது உண்மையா இல்லை அவர் கற்பனையா என்று தெரியவில்லை.
இதிலும் கான்பூரில் ஆங்கிலேய ஜெனரலாக இருக்கும், ஏறக்குறைய இந்தியனாக மாறிவிட்ட அதிகாரியின் சித்தரிப்பு பிரமாதமாக இருக்கும்.
பெண்ட் இன் தி கேஞ்சஸ் ((Bend in the Ganges): சுதந்திர போராட்ட காலத்தை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட நாவல். மெலோட்ராமா, தற்செயல் நிகழ்ச்சிகள், எல்லாரும் சொல்லி வைத்தாற்போல ஒரே இடத்துக்கு வருவது என்று நிறைய உண்டு. அலை ஓசை மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால் அலை ஓசையை விட எனக்கு பிடித்திருக்கிறது. பல காட்சிகள் powerful ஆனவை.
தேபிதயாள் பணக்கார வீட்டுப் பிள்ளை. அவன் தங்கை சுந்தரி. தேபி பகத் சிங் மாதிரி வன்முறையால் சுதந்திரம் வாங்க வேண்டும் என்று நினைப்பவன். ஒரு விமானத்தை அவர்கள் குழு எரித்துவிடுகிறது. அவர்கள் குழுவின் தலைவன் ஷாஃபியின் மனதில் மெதுவாக ஹிந்துக்களுக்கு எதிராக உணர்ச்சிகள் எழுகின்றன. போலீஸ் நெருங்கும்போது அவன் தன் குழுவின் முஸ்லிம்களை மட்டும் தப்பிக்க வைக்கிறான். தேபி அந்தமான் ஜெயிலில். அங்கே தேபியுடன் காலேஜில் படித்த கியானும் ஒரு கொலை செய்துவிட்டு வந்திருக்கிறான். தேபி யாருக்கும் தலை வணங்காமல் முறைத்துக் கொண்டு நின்றால் கியான் வார்டனுக்கு சலாம் போட்டு ஓரளவு சுகமாக வாழ்கிறான். தேபிக்கு கடுமையான அடி விழவும் அவனே காரணமாகிறான். ஜப்பானியர்கள் அந்தமானைக் கைப்பற்ற வரும்போது கியான் தப்பிக்கிறான். தேபியின் அப்பாவிடம் தான் தேபியின் நண்பன் என்று பொய் சொல்லி ஒரு வேலை வாங்கிக் கொள்கிறான். அவனுக்கும் கல்யாணம் ஆன சுந்தரிக்கும் உறவு ஏற்படுகிறது. கியான் சுந்தரியை உண்மையாக காதலிக்கிறான், தான் தேபிக்கு துரோகம் செய்தவன் என்ற உண்மையை சொல்ல முடியவில்லை. தேபியை ஜப்பானியர்களே இந்தியாவுக்கு சென்று நாச வேலைகள் செய்யுமாறு சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் தேபி அப்படி எதுவும் செய்யவில்லை. தற்செயலாக ஷாஃபியை பார்க்கிறான். அவனை பழி வாங்கப் போகும்போது அவனுடன் ஒரு விபசாரம் செய்யும் சிறு பெண் சேர்ந்து கொள்கிறாள். தேபி அவளை மணக்க விரும்புகிறான். சுந்தரியை சந்தித்து ஸ்டேடஸ் பார்க்கும் அப்பா அம்மாவிடம் பேசுமாறு சொல்கிறான். கியானைப் பற்றி தெரிந்துகொண்ட சுந்தரி அவனை துரத்திவிடுகிறாள். அப்பா அம்மா வீட்டுக்கு போகிறாள். அது 1947. அவர்கள் இருப்பது பாகிஸ்தானுக்கு போக வேண்டிய பகுதி. கலவரம் நடக்கும்போது கியான் அங்கே வருகிறான். சுந்தரி தன்னை வெறுத்தாலும் அவர்களை காப்பாற்றியே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறான். கலவரத்தில் தேபி இறக்கிறான். கியானும் சுந்தரியும் மட்டும் பிழைத்து இந்தியாவுக்கு வருகிறார்கள்.
பிரிவினை கலவரங்கள், கியான் கொலை செய்வதில் உள்ள தகராறு, அந்தமான் நிகழ்ச்சிகள் என்று பல இடங்களை அருமையாக எழுதி இருக்கிறார். கியான் குடும்பத்துக்கும் அவன் பெரியப்பா குடும்பத்துக்கும் சொத்து தகராறு. கேஸ் கியான் பக்கம் தீர்ப்பானாலும் அவன் அண்ணனைக் கொன்றுவிடுகிறார்கள். கியான் தன எதிரிகளை கொல்வதில் ஒரு inevitability தெரியும் – இதுதான் விதி, இதை யாராலும் மாற்ற முடியாது என்ற உணர்வு ஏற்படும். ஷாஃபி தன் gang-இல் முஸ்லிம்களை மட்டும் தப்பிக்க வைப்பதும் அப்படித்தான். குறைகள் இருந்தாலும் படிக்க வேண்டிய புத்தகம். இதுதான் அவரது மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது.
நான் இன்னும் மூன்று புத்தகங்களையாவது படிக்க விரும்புகிறேன். மராத்திய கப்பற்படைத் தலைவர் கனோஜி ஆங்க்ரே பற்றி அவர் எழுதிய non-fiction புத்தகமான Sea Hawk, சிறு வயதில் படித்த Men Who Killed Gandhi, மற்றும் Distant Drum. Distant Drum பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் core values-ஐ, essence-ஐ, படம் பிடித்துக் காட்டும் புத்தகம் என்று சொல்கிறார்கள். (எனக்கும் அப்படித்தான் நினைவு.) சான் ஃபிரான்சிஸ்கோ Bay Area-வில் யாரிடமாவது இருந்தால் இரவல் கொடுங்கப்பா!
தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய எழுத்தாளர்கள்