கல்கியின் “அலை ஓசை”

கல்கியின் அலை ஓசை நாவல் உயர்ந்த இலக்கியம் இல்லை. திடுக்கிடும் சம்பவங்கள், ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ச்சி வைக்க வேண்டிய கட்டாயம், நம்ப முடியாத தற்செயல் நிகழ்ச்சிகள், ஸ்டீரியோடைப் காரக்டர்கள் என்று எல்லா விதமான பலவீனங்களும் மலிந்து காணப்படுகின்றன. கதாநாயகி சீதா கல்கத்தாவில் மயங்கி விழுந்தால் அங்கே அவளைக் காப்பாற்றுவதற்காகவே அமர்நாத்-சித்ரா தம்பதியினர் அங்கே மாற்றல் ஆகிப் போயிருக்கிறார்கள். லாகூரில் மாட்டிக் கொண்டால் மவுல்வி சாஹிபும் ரசியா பேகமும் வந்து காப்பாற்றுகிறார்கள். இரவு 12 மணிக்கு யாரும் இல்லாத இரவில் தற்கொலை செய்து கொள்ளப்போனால் அம்மாஞ்சி சூர்யா வந்து தடுக்கிறான். நேரம்தான்!

நாவலை மீள்வாசிப்பு செய்தபோது எனக்கு அலைகள் ஓய்வதில்லை படம் நினைவு வந்துகொண்டே இருந்தது. என் பதின்ம வயதுகளில் வந்த படம் அது. பாட்டுகள் அமர்க்களமாக இருந்தன. கன்னாபின்னா என்று ஓடிற்று. பார்த்தவரெல்லாம் புகழ்ந்தார்கள். இரண்டு முறை படம் பார்க்கப் போய் டிக்கெட் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு வழியாக டிக்கெட் கிடைத்துப் போய்ப் பார்த்தால் பாரதிராஜா சோகப்படுத்துகிறார். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் சீன் – கார்த்திக்கும் ராதாவும் ஓடுகிறார்கள், ஊரே துரத்துகிறது, தியாகராஜன் அவர்களை வெட்டப் போகிறார், திடீரென்று பாதிரியார் வந்து தடுக்கிறார். பாதிரியாரைப் பார்த்து நானும் என் நண்பர்களும் கொல்லென்று சிரித்துவிட தியேட்டரில் ரத்தக் களரி ஆகும் நிலை. பாதிரியார் எங்கிருந்து வந்தார்? கரெக்டாக இங்கே மாட்டிக் கொள்வார்கள் என்று முன்னாலேயே கணித்து அங்கே வந்து ஒளிந்து கொண்டிருந்தாரா?

Deux ex machina – அதிசய தற்செயல் நிகழ்ச்சிகள் – கதையில் வரலாம். இங்கே Deux ex machina-வில் அவ்வப்போது கதை வருகிறது.

அப்புறம் அலை ஓசை என்று தலைப்பு வைத்துவிட்டோமே என்று பலவந்தமாக அந்த ஓசையை இழுத்து வருகிறார்.

ஆனால்: ஆயிரம் குறை இருந்தாலும் கதையில் கொஞ்சம் ஜீவன் இருக்கிறது. நிறைய சுவாரசியம் இருக்கிறது. சீதா இறக்கும்போது அங்கஹீனம் அடைந்த தாரிணியின் கோர சொரூபத்தைப் பார்த்து அக்கா என்ன அழகாக இருக்கிறாய் என்று வியக்கும் இடத்தில் கவிதை இருக்கிறது. சீதாவைக் கண்டு சுண்டு உட்பட எல்லாரும் கொஞ்சம் மயங்குவதில் உண்மை இருக்கிறது.

லலிதாவும் அவள் அத்தை மகள் சீதாவும் நெருங்கிய தோழிகள். நல்ல வேலையில் இருக்கும் ராகவன் தாரிணியை காதலிக்கிறான், ஆனால் அது கைகூடவில்லை. லலிதாவை பெண் பார்க்க வரும் ராகவன் சீதாவை விரும்பி மணம் செய்து கொள்கிறான். லலிதாவின் அண்ணன் சூர்யா காங்கிரஸ்காரன். அவன் தாரிணியை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சந்திக்கிறான். இருவரும் நெருங்குகிறார்கள். தாரிணியை மீண்டும் சந்திக்கும் ராகவன் அவளையும் மணக்க விரும்புகிறான். தாரிணி அவனை நிராகரிக்கிறாள். சீதா-ராகவன் வாழ்க்கை பரஸ்பர சந்தேகத்தால் நரகம் ஆகிறது. சில அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளால் சீதா-ராகவன் பிரிகிறார்கள், பிறகு சேர்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் பிரிவின்போது சீதா பாகிஸ்தான் பக்கம் மாட்டிக் கொள்கிறாள். தாரிணி தன் சொந்த அக்கா என்று அவளுக்கு தெரிய வருகிறது. பல துன்பங்களுக்குப் பின்னால் ராகவனின் மடியில் அவள் இறக்கிறாள். தாரிணி கை இழந்து கண்ணிழந்து கோரமான உருவத்தோடு இருந்தாலும் சீதாவின் இறுதி ஆசைப்படி ராகவனும் அவளும் மணந்து கொள்கிறார்கள்.

கல்கியின் ஆதர்சம் டிக்கன்ஸ் ஆக இருக்க வேண்டும். இது ஒரு Dickensian நாவலே. ஆனால் டிக்கன்சின் பாத்திரப் படைப்பு எப்போதும் சிறப்பானது. இந்த கதையில் ஸ்கோப் இருந்தும் கல்கியின் கவனம் மெலோட்ராமா கதையில்தான் இருக்கிறது. சீதா, ராகவன், தாரிணி, சூர்யா, லலிதா எல்லாருமே நன்றாக வரக் கூடிய பாத்திரங்கள்தான். சுதந்திரப் போராட்டம் போராட்டம் என்கிறார்களே தவிர அது யாருடைய வாழ்க்கையையும் பெரிதாக பாதிப்பதாகத் தெரியவில்லை. (இத்தனைக்கும் ஜெயிலுக்கு போகிறார்கள், அடி வாங்குகிறார்கள்…) வழக்கமான காதல் கத்திரிக்காய் என்ற உலகத்தைத்தான் கல்கி காட்டுகிறார். இதை நல்ல இலக்கியம் ஆக மாற்றக் கூடிய சாத்தியக் கூறுகளை அவர் உணரவில்லை என்று தோன்றுகிறது.

கதையில் சீதாவைக் கண்டு சூர்யா, ராகவன், பட்டாபி எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். அது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. ஆனால் அத்தை மகளை சூர்யா விரும்புவது, காதலி தாரிணி சாயலில் உள்ளவளை ராகவன் விரும்புவதும், தனக்காக உழைத்த நாகரீகப் பெண்மணியை பட்டாபி விரும்புவதும் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளே.

ஐம்பதுகளில் இது உயர்ந்த இலக்கியமாகவே கருதப்பட்டிருக்கும். கல்கிக்கு இது இலக்கியம்தான், இதுவே தான் எழுதிய எல்லா கதைகளிலும் சிறந்தது என்று அவர் கருதினார். தொடர்கதையாக வெளிவந்த நாட்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும், வாசகர்கள் சீதா, ராகவன், தாரிணி, சூர்யா ஆகியோரின் வாழ்வில் அடுத்தது என்ன என்று ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். இன்றைக்கு கல்கியின் தீவிர ரசிகர்கள் கூட பொன்னியின் செல்வனைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு இதை ரசிப்பதில்லை. இன்றைக்கு என் புரிதலின் படி தவறான தேர்வு என்றாலும் அந்த காலகட்டத்தில் இதற்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது புரிந்து கொள்ளக் கூடியதே. புரிந்து கொள்ள முடியாத விஷயம் ஒன்றுதான். ஒரு flawed படைப்பு ஒரு தலைமுறை வாசகர்களை எப்படி இந்த மாதிரி கட்டிப்போட்டது? ஒரு தலைமுறை வாசகர்களை கட்டிப்போட்ட படைப்பு எப்படி அடுத்த ஓரிரு தலைமுறையிலேயே தன் ஈர்ப்பு சக்தியை இழந்தது?

ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

ஆன்லைனில் படிக்க விரும்புபவர்கள் சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கலாம். மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இது ஒரு flawed, மெலோட்ராமா கதையே. ஆனாலும் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து கிடக்கிறது. அதனால் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.