கல்கியின் அலை ஓசை நாவல் உயர்ந்த இலக்கியம் இல்லை. திடுக்கிடும் சம்பவங்கள், ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ச்சி வைக்க வேண்டிய கட்டாயம், நம்ப முடியாத தற்செயல் நிகழ்ச்சிகள், ஸ்டீரியோடைப் காரக்டர்கள் என்று எல்லா விதமான பலவீனங்களும் மலிந்து காணப்படுகின்றன. கதாநாயகி சீதா கல்கத்தாவில் மயங்கி விழுந்தால் அங்கே அவளைக் காப்பாற்றுவதற்காகவே அமர்நாத்-சித்ரா தம்பதியினர் அங்கே மாற்றல் ஆகிப் போயிருக்கிறார்கள். லாகூரில் மாட்டிக் கொண்டால் மவுல்வி சாஹிபும் ரசியா பேகமும் வந்து காப்பாற்றுகிறார்கள். இரவு 12 மணிக்கு யாரும் இல்லாத இரவில் தற்கொலை செய்து கொள்ளப்போனால் அம்மாஞ்சி சூர்யா வந்து தடுக்கிறான். நேரம்தான்!
நாவலை மீள்வாசிப்பு செய்தபோது எனக்கு அலைகள் ஓய்வதில்லை படம் நினைவு வந்துகொண்டே இருந்தது. என் பதின்ம வயதுகளில் வந்த படம் அது. பாட்டுகள் அமர்க்களமாக இருந்தன. கன்னாபின்னா என்று ஓடிற்று. பார்த்தவரெல்லாம் புகழ்ந்தார்கள். இரண்டு முறை படம் பார்க்கப் போய் டிக்கெட் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு வழியாக டிக்கெட் கிடைத்துப் போய்ப் பார்த்தால் பாரதிராஜா சோகப்படுத்துகிறார். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் சீன் – கார்த்திக்கும் ராதாவும் ஓடுகிறார்கள், ஊரே துரத்துகிறது, தியாகராஜன் அவர்களை வெட்டப் போகிறார், திடீரென்று பாதிரியார் வந்து தடுக்கிறார். பாதிரியாரைப் பார்த்து நானும் என் நண்பர்களும் கொல்லென்று சிரித்துவிட தியேட்டரில் ரத்தக் களரி ஆகும் நிலை. பாதிரியார் எங்கிருந்து வந்தார்? கரெக்டாக இங்கே மாட்டிக் கொள்வார்கள் என்று முன்னாலேயே கணித்து அங்கே வந்து ஒளிந்து கொண்டிருந்தாரா?
Deux ex machina – அதிசய தற்செயல் நிகழ்ச்சிகள் – கதையில் வரலாம். இங்கே Deux ex machina-வில் அவ்வப்போது கதை வருகிறது.
அப்புறம் அலை ஓசை என்று தலைப்பு வைத்துவிட்டோமே என்று பலவந்தமாக அந்த ஓசையை இழுத்து வருகிறார்.
ஆனால்: ஆயிரம் குறை இருந்தாலும் கதையில் கொஞ்சம் ஜீவன் இருக்கிறது. நிறைய சுவாரசியம் இருக்கிறது. சீதா இறக்கும்போது அங்கஹீனம் அடைந்த தாரிணியின் கோர சொரூபத்தைப் பார்த்து அக்கா என்ன அழகாக இருக்கிறாய் என்று வியக்கும் இடத்தில் கவிதை இருக்கிறது. சீதாவைக் கண்டு சுண்டு உட்பட எல்லாரும் கொஞ்சம் மயங்குவதில் உண்மை இருக்கிறது.
லலிதாவும் அவள் அத்தை மகள் சீதாவும் நெருங்கிய தோழிகள். நல்ல வேலையில் இருக்கும் ராகவன் தாரிணியை காதலிக்கிறான், ஆனால் அது கைகூடவில்லை. லலிதாவை பெண் பார்க்க வரும் ராகவன் சீதாவை விரும்பி மணம் செய்து கொள்கிறான். லலிதாவின் அண்ணன் சூர்யா காங்கிரஸ்காரன். அவன் தாரிணியை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சந்திக்கிறான். இருவரும் நெருங்குகிறார்கள். தாரிணியை மீண்டும் சந்திக்கும் ராகவன் அவளையும் மணக்க விரும்புகிறான். தாரிணி அவனை நிராகரிக்கிறாள். சீதா-ராகவன் வாழ்க்கை பரஸ்பர சந்தேகத்தால் நரகம் ஆகிறது. சில அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளால் சீதா-ராகவன் பிரிகிறார்கள், பிறகு சேர்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் பிரிவின்போது சீதா பாகிஸ்தான் பக்கம் மாட்டிக் கொள்கிறாள். தாரிணி தன் சொந்த அக்கா என்று அவளுக்கு தெரிய வருகிறது. பல துன்பங்களுக்குப் பின்னால் ராகவனின் மடியில் அவள் இறக்கிறாள். தாரிணி கை இழந்து கண்ணிழந்து கோரமான உருவத்தோடு இருந்தாலும் சீதாவின் இறுதி ஆசைப்படி ராகவனும் அவளும் மணந்து கொள்கிறார்கள்.
கல்கியின் ஆதர்சம் டிக்கன்ஸ் ஆக இருக்க வேண்டும். இது ஒரு Dickensian நாவலே. ஆனால் டிக்கன்சின் பாத்திரப் படைப்பு எப்போதும் சிறப்பானது. இந்த கதையில் ஸ்கோப் இருந்தும் கல்கியின் கவனம் மெலோட்ராமா கதையில்தான் இருக்கிறது. சீதா, ராகவன், தாரிணி, சூர்யா, லலிதா எல்லாருமே நன்றாக வரக் கூடிய பாத்திரங்கள்தான். சுதந்திரப் போராட்டம் போராட்டம் என்கிறார்களே தவிர அது யாருடைய வாழ்க்கையையும் பெரிதாக பாதிப்பதாகத் தெரியவில்லை. (இத்தனைக்கும் ஜெயிலுக்கு போகிறார்கள், அடி வாங்குகிறார்கள்…) வழக்கமான காதல் கத்திரிக்காய் என்ற உலகத்தைத்தான் கல்கி காட்டுகிறார். இதை நல்ல இலக்கியம் ஆக மாற்றக் கூடிய சாத்தியக் கூறுகளை அவர் உணரவில்லை என்று தோன்றுகிறது.
கதையில் சீதாவைக் கண்டு சூர்யா, ராகவன், பட்டாபி எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். அது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. ஆனால் அத்தை மகளை சூர்யா விரும்புவது, காதலி தாரிணி சாயலில் உள்ளவளை ராகவன் விரும்புவதும், தனக்காக உழைத்த நாகரீகப் பெண்மணியை பட்டாபி விரும்புவதும் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளே.
ஐம்பதுகளில் இது உயர்ந்த இலக்கியமாகவே கருதப்பட்டிருக்கும். கல்கிக்கு இது இலக்கியம்தான், இதுவே தான் எழுதிய எல்லா கதைகளிலும் சிறந்தது என்று அவர் கருதினார். தொடர்கதையாக வெளிவந்த நாட்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும், வாசகர்கள் சீதா, ராகவன், தாரிணி, சூர்யா ஆகியோரின் வாழ்வில் அடுத்தது என்ன என்று ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். இன்றைக்கு கல்கியின் தீவிர ரசிகர்கள் கூட பொன்னியின் செல்வனைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு இதை ரசிப்பதில்லை. இன்றைக்கு என் புரிதலின் படி தவறான தேர்வு என்றாலும் அந்த காலகட்டத்தில் இதற்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது புரிந்து கொள்ளக் கூடியதே. புரிந்து கொள்ள முடியாத விஷயம் ஒன்றுதான். ஒரு flawed படைப்பு ஒரு தலைமுறை வாசகர்களை எப்படி இந்த மாதிரி கட்டிப்போட்டது? ஒரு தலைமுறை வாசகர்களை கட்டிப்போட்ட படைப்பு எப்படி அடுத்த ஓரிரு தலைமுறையிலேயே தன் ஈர்ப்பு சக்தியை இழந்தது?
ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.
ஆன்லைனில் படிக்க விரும்புபவர்கள் சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கலாம். மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இது ஒரு flawed, மெலோட்ராமா கதையே. ஆனாலும் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து கிடக்கிறது. அதனால் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
ஆர்வி!
மறுபடியும் சொல்கிறேன். உங்களுடைய வாசிக்கும் முறையில் சீரியசான கோளாறு இருக்கிறது. நீங்கலாக எதையும் முடிவு செய்ய மாட்டேன் என்கிறீர்கள். கதை எழுதப்பட்ட காலம், அந்த நாளைய வாசகர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, நடப்பு எதையுமே பிடிவாதமாகப் புரிந்துகொள்ளாமல் ஜெயமோகன் சிபாரிசு ஒன்றை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஜெயமோகன் ஒன்றும் இலக்கிய அதாரிட்டி இல்லை, அப்படித் தன்னை சொல்லிக் கொள்கிற அளவுக்கு அவர் இன்னமும் எதையும் சாதித்துவிட்டதாகக் கூடத் தெரியவில்லை.
கல்கியின் மிகச் சிறந்த படைப்பு என்று எதையும் நீங்கள் ஒத்துக் கொள்ளவே வேண்டாம். குறைந்தபட்சம் திறந்த மனதுடன் வாசிக்கவாவது முயற்சிக்கலாமே!
//ஆனாலும் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து கிடக்கிறது. அதனால் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.//
உங்களுடைய சிபாரிசை மற்றவர்கள் ஏற்பது ஒருபக்கம் இருக்கட்டும், நீங்களே ஒருதரம் முயற்சித்துப் பார்த்தால் என்ன? கதையின் ஜீவன் எங்கோ மறைந்து கிடப்பதைக் கண்டுபிடித்து விட்டு அப்புறமாக, இன்னொரு தரம் விமரிசனம் எழுதுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!
LikeLike
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
நீங்கள் பதிவைப் படித்ததாகவே தெரியவில்லை. நேராக ஜெயமோகன் பேரைப் பார்க்கிறீர்கள், உடனே ஜெயமோகன் சிபாரிசைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறீர்கள். இப்படி முன் முடிவுகளுடன் பேசுபவரிடம் என்னத்தை விவாதிப்பது? கதையில் ஜீவன் இருக்கிறது என்று நான் சொல்வது தெரிகிறது. ஆனால் நானாக முடிவு செய்யவில்லை என்கிறீர்கள். கதை எழுதப்பட்ட காலம் etc . பற்றி விழுந்து விழுந்து எழுதி இருக்கிறேன், ஆனால் அதை புரிந்து கொள்ளவில்லை என்கிறீர்கள். கதையின் குறைகள் என்ன என்றுதான் ஆரம்பிக்கிறேன்; அதை விடுங்கள் கதையின் பலங்கள் என்ன என்று எழுதுகிறேன், எதுவும் உங்கள் கண்ணில் பட்டதாகவே தெரியவில்லையே!
உங்களுக்கு ஜெயமோகன் மீது கடுப்பு இருந்தால் அடுத்தவர்கள் ஜெயமோகனை மதிக்கக் கூடாதா? எனக்கு இந்த இந்த காரணங்களால் அவர் படைப்புகள் சாதனையாகத் தெரியவில்லை என்றால் பேசலாம், விவாதிக்கலாம். கிளிப்பிள்ளை மாதிரி அவர் அதாரட்டி இல்லை என்றால் என்ன பதில் எதிர்பார்க்கிறீர்கள்? ஜெயமோகன் பற்றியா இந்தப் பதிவு? நூறு வரி பதிவில் அவர் இந்தப் புத்தகத்தை சிறந்த romance ஆக கருதுகிறார் என்ற ஒரு வரி இருக்கிறது, நீங்கள் உங்கள் பத்து வாக்கிய பதிலில் அவரைப் பற்றி இரண்டு வாக்கியம் எழுதுகிறீர்களே!
கருத்துகளை விவாதிப்போம், என் motivation என்ன, யார் சிபாரிசு எனக்கு தெய்வ வாக்கு என்றெல்லாம் பேசுவதில் பயன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
LikeLike
ஆர்வி!
மறுபடியும் தவறுதலான முன்முடிவுகளுக்கே போகிறீர்கள். ஜெமோவை எனக்குப் பிடிக்கிறது, அல்லது பிடிக்கவில்லை என்று எங்கே சொன்னேன்? ஜெமோ எழுதுவதையும் படித்துக் கொண்டிருக்கிறேன், மற்றவர்கள் எழுதுவதையும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இங்கே என்னுடைய கருத்து, வாசிப்பின் மீது உண்டாவது. எழுதியவரின் மீதல்ல.உங்களுடைய பதிவுகளை முழுமையாகப் படித்த பிறகு தான், என்னுடைய கருத்தை எழுத முனைந்திருக்கிறேன்.
அலை ஓசையை நான் முழுமையாகப் படித்திருக்கிறேன். அது ஒரு பீரியட் கதை.பிரிவினையின் தருணங்களை மையமாக எடுத்துக் கொண்டு, அதற்கேற்ற மாதிரி, கதையை டெவலப் செய்த விதம், அந்த நாட்களைப் படிப்பவர் கண் முன் நிறுத்தியதென்னவோ வாஸ்தவம். அதே உணர்வுகளை இப்போது எதிர் பார்க்க முடியாது என்பதும், கதையின் ஜீவன் கண் முன்னால் தான் இருக்கிறது எங்கேயும் ஓடிப்போய் விடவில்லை.என்பதும், திறந்தமனதுடன் வாசிக்கும்போது தானே புலப்படும்.
LikeLike
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி, // ஜெமோவை எனக்குப் பிடிக்கிறது, அல்லது பிடிக்கவில்லை என்று எங்கே சொன்னேன்? // முந்தைய மறுமொழியிலிருந்து – // அப்படித் தன்னை சொல்லிக் கொள்கிற அளவுக்கு அவர் இன்னமும் எதையும் சாதித்துவிட்டதாகக் கூடத் தெரியவில்லை. //
// அதே உணர்வுகளை இப்போது எதிர் பார்க்க முடியாது என்பதும், கதையின் ஜீவன் கண் முன்னால் தான் இருக்கிறது எங்கேயும் ஓடிப்போய் விடவில்லை.என்பதும், திறந்தமனதுடன் வாசிக்கும்போது தானே புலப்படும். // என் கண்ணில் காலம் தாண்டி நிற்பவையே உயர்ந்த இலக்கியம். மாக்பெத் ஐநூறு வருஷம் தாண்டி நிற்கிறது. பொன்னகரம் எழுபது வருஷம் தாண்டி நிற்கிறது. பொன்னியின் செல்வன் ஐம்பது அறுபது வருஷம் தாண்டி நிற்கிறது. அலை ஓசை பத்து பதினைந்து வருஷம் கூட தாண்டவில்லை என்றே கருதுகிறேன்.
LikeLike
முந்தையதில் பிழைகள் நிறைய 😦
சிவகாமியின் சபதம் நல்ல சுவாரய்ஸ்யமான நாவல் ,(நாக நந்தியின் பாத்திரபடைப்பு தவிர)
ஆனால் பொன்னியின் செல்வன் தேவையின்றி இழுக்கப்பட்ட , சொல்ல வந்த எதையும் சொல்லாத நாவலாக எனக்கு தோன்றுகிறது ,
சமீபமாகத் தான் பொன்னியின் செல்வன் படித்து முடித்தேன் , வந்தியத்தேவனுக்கு எதற்க்கு இந்த முக்கியத்துவம் ? நாவல் முழுக்க என்னதான் செய்கிறான் ?(மாட்டிக் கொண்டு தப்பிப்பதை தவிர ? சுபா நாவல்கள் நினைவிற்க்கு வருவதை தவிர்க்க இயலவில்லை 🙂 )
கடைசி பாகம் படிக்கமுடியாத வர்ணனைகள் அடங்கிய முக்கிய கட்டமான பதவியேற்ப்பை உச்சகட்டமாக சொல்ல முடியாத தோல்வியடந்த பாகம் என்று தோன்றுகிறது, ஏன் மக்களுக்கு இது பிடிக்கிறது என்றுதான் தெரியவில்லை .
LikeLike
நீங்கள் இந்தகாலத்தில் இருந்து இந்தகால நாவல்கள் படிக்கிறீர்கள். அதுவுமில்லாமல் ஒரே புத்தகமாக படிக்கிறீர்கள். அது அந்தகாலத்தில் எழுதப்பட்டது. தொடராக வந்தது. ஒரு சாகச கதாநாயகன், காதல், கொஞ்சம் சரித்திரம், வில்லன், சிறிது நகைசுவை, பிரமாதமான படங்கள், படங்கள் என்று எளிதாக சொல்லிவிட முடியாத ஓவியங்கள். ஒவ்வொரு வாரமும் சஸ்பென்ஸ் (தமிழில் என்ன வார்த்தை?) என்று வந்ததால் அது அதிக வரவேற்ப்பை பெற்றது. ஒரு வாரத்துக்கு ஒரு அத்தியாயம் மட்டும் படித்தால் ரசிக்கலாம். இதேதான் சாண்டில்யன் கதைகளுக்கும்!
LikeLike
சுல்த்தான் , அப்ப அந்த நாவல்களைப் பற்றி இப்போது பேசவேண்டிய பொருளே இல்லாமல் போகிறதே ?
LikeLike
அரங்கசாமி, எனக்கு பொ. செல்வனின் கதைப் பின்னல் அற்புதமாகத் தெரிகிறது. முடிச்சுகள் அவிழ்வது மிக நன்றாக வந்திருக்கிறது என்று எண்ணம்.
LikeLike
அலை ஓசை – PDF வடிவம்
http://www.mediafire.com/download.php?mrh25hl782ywbpg
2 MB
LikeLike