நானும் புத்தகங்களும்

என் அம்மாவுக்கு புத்தகப் பித்து உண்டு. எனக்கு ஏழு வயது இருக்கும்போது என் அம்மா என்னை உள்ளூர் (லாடகரனை எண்டத்தூர்) நூலகத்தில் உறுப்பினனாக சேர்த்துவிட்டாள். முதல் முதலில் படித்த கதை புத்தகம் ஏதோ ஓநாய் பன்றிக்குட்டிகளை சாப்பிட முயற்சிக்க, அம்மா பன்றி அதை துரத்துவதாக வரும். எனக்கு அப்போதிலிருந்தே புத்தகங்கள் – குறிப்பாக கதைப் புத்தகங்கள் – மிகவும் பிடிக்கும்.

வாண்டு மாமா (காட்டு சிறுவன் கந்தன் புத்தகம் இன்னும் கிடைக்கிறதா?) கதைகளை முடித்த பிறகு, எனக்கு புஸ்தகங்களை சிபாரிசு செய்தது என் அம்மாதான். சாண்டில்யன், ஜெயகாந்தன், சாயாவனம், கே.ஏ. அப்பாசின் இன்குலாப், வி.எஸ். காண்டேகரின் யயாதி, உண்மை மனிதனின் கதை என்ற ஒரு ரஷிய புத்தகம், ஏ.என். சிவராமன் எழுதிய அமெரிக்க ராக்கெட் ப்ரோக்ராம் பற்றிய ஒரு புத்தகம் ஆகிய சிபாரிசுகள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. என்ன தைரியத்தில் சாண்டில்யன் கதைகளை என் அம்மா படிக்க சொன்னாள் என்று இன்னும் புரியவில்லை. ஆனால் மலைவாசல், மன்னன் மகள், கன்னிமாடம், யவனராணி, கடல்புறா, ராஜமுத்திரை ஆகியவற்றில் எனக்கு நினைவிருப்பது சாகசங்கள்தான். பத்து வயதுக்குள்ளேயே சாண்டில்யன் முடிந்து விட்டது. ஜெயகாந்தன் சில முறைதான் புரியும். சில நேரங்களில் சில மனிதர்கள் சரியாக புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஜயஜய சங்கர சீரிஸ் புரிந்தது. சாயாவனம் படிக்கும்போது ஒரு 11 வயதிருக்கலாம். அற்புதமான புஸ்தகம். எனக்கு 12 வயது இருக்கும்போது ஒன்றன் பின் ஒன்றாய் வந்த வேலை மாற்றல்கள், படிப்பு ஆகியவற்றால் எங்கள் குடும்பம் பிரிந்துவிட்டது. 20 வயதான பிறகு நான்தான் அம்மாவுக்கு புஸ்தகம் சிபாரிசு பண்ண வேண்டிய நிலை.

எனக்கு தமிழ் புத்தகங்களை யாரும் சீர்தூக்கி விமர்சிப்பதில்லை, டாப் டென் புத்தகங்களை யாரும் சிபாரிசு செய்வதில்லை என்ற பெரிய குறை உண்டு. இப்போதே அந்த குறை இருந்தால் ஒரு இருபது முப்பது வருஷங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். அப்படியே அந்தக் காலத்தில் இலக்கிய விமர்சனங்கள் வந்தாலும் அது டி.கே.சி, மு.மு. இஸ்மாயில் மாதிரி யாராவது கம்பன், புறநானூறு, குறளோவியம் பற்றி எழுதியதாகத்தான் இருக்கும். கதைப் புத்தகங்களை பற்றி யாரும் சிபாரிசு செய்வதே இல்லை. நானோ பண்டைத் தமிழ் இலக்கியம் என்றால் பின்னங்கால் பிடரியில் பட ஓடுபவன். சுஜாதா மாதிரி வேறு யாராவது எழுதுகிறார்களா? (பெங்களூர் ரவிச்சந்திரன் என்பவர் எழுதிய இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் என்ற சிறுகதை தொகுப்பு சுஜாதாவின் ஸ்டைலில் எழுதப்பட்டிருக்கும்.) பி.ஜி. உட்ஹவுஸ் மாதிரி எழுதுபவர்கள் உண்டா? (தேவன், எஸ்.வி.வி.யின் சில படைப்புகள்) பிரெக்ட் மாதிரி நாடகம் எழுதுபவர்கள் உண்டா? (எனக்கு தெரிந்து யாருமில்லை) எனக்கு இந்த மாதிரி கேள்விகள்தான். பதில் சொல்லத்தான் யாருமில்லை. நான் வேலைக்கு போய் ஓரளவு கையில் பணம் வந்து மாதம் ஒன்றிரண்டு புஸ்தகம் கவலைப்படாமல் வாங்கலாம் என்ற நிலை வந்த பிறகு தமிழில் என்ன வாங்குவது என்றே தெரியவில்லை.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எண்பதுகளின் இறுதியில் புத்தக கண்காட்சி நடத்துவார். நான் அங்கே போய் சாயாவனம் புத்தகம் வாங்கினேன். அவர் நீங்க படிக்கற ஜாதி போலருக்கே என்று பல புத்தகங்களை சிபாரிசு செய்தார். அவர் சொல்லித்தான் நான் அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?, எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை போன்றவற்றை வாங்கினேன். அவர் சொன்ன எல்லா புத்தகங்களையும் வாங்கித் தொலைத்திருக்கலாம். நான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று காட்டிக்கொள்ளும் ஒரு உந்தல் இருந்ததால், சிலவற்றை வாங்கவில்லை. அவர் சிபாரிசு செய்த ஆல்பர்ட் காமுவை இருபது வருஷங்களுக்கு பிறகும் நான் இன்னும் படிக்கவில்லை என்பது வேறு விஷயம். நான் 2 வருஷம்தான் செகந்தராபாதில் இருந்தேன். அதனால் அவருடன் அதிக பழக்கம் இல்லை. தமிழ், தமிழ் வாசிப்பு ஆகியவற்றுக்கு உண்மையாக உழைத்தவர். அவருக்கு ஒரு கை கொடுத்திருக்கலாம். புத்தகக் கண்காட்சியில் உட்கார்ந்து பில்லாவது போட்டிருக்கலாம். நான் ஒன்றும் பெரிதாக வெட்டி முறிக்கவில்லை. என் துரதிருஷ்டம், அந்த வயதில் தோன்றவில்லை. ஒரு விஷயத்தை ஆர்கனைஸ் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று அந்தக் காலத்தில் தெரியவே இல்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி பிரபலமாக ஆரம்பித்ததும் எண்பதுகளின் இறுதியில்தான். இரண்டு முறை ஆஃபீசுக்கு லீவ் போட்டுவிட்டு சென்னை வந்து புஸ்தகங்கள் வாங்கி இருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐநூறு ரூபாய்க்கு புஸ்தகம் வாங்கினால் அதிகம், அதற்கு மேல் கட்டுப்படியாகாது.

க.நா. சுப்பிரமணியம் எழுதிய படித்திருக்கிறீர்களா? என்ற புத்தகம்தான் முதன் முதலாக நான் படித்த தமிழ் புத்தகங்களை பற்றிய புத்தகம். இன்னும் என்னிடம் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட மண்ணாசை போன்ற புத்தகங்கள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. 1957-இல் முதல் பதிப்பு வந்திருக்கிறது. அப்போதே மனுஷன் தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த எழுத்துகளை பற்றி எழுதி இருக்கிறார். எனக்கு அதை படிப்பது பெரிய சுகமாக இருந்தது. இரண்டே முக்கால் ரூபாய் விலை! நான் சுப்ரபாரதிமணியன் சொல்லியும் எனக்கே தெரிந்தும் (வேறென்ன, சுஜாதா புத்தகங்கள்தான்) அந்தக் கண்காட்சியில் ஒரு பத்து இருபது புஸ்தகம் வாங்கினேன். இதை மட்டும் வீட்டுக்கு கூட போகாமல் அங்கேயே ஒரு வராந்தாவில் உட்கார்ந்து படித்து முடித்தேன்.

அதற்கு பிறகு ஜெயமோகன். அவருடன் 2000-2001 கால கட்டத்தில் இணைய தளத்தில் கல்கி, மற்றும் பல புஸ்தகங்கள் குறித்து வாதித்திருக்கிறேன். அவர் தமிழில் சிறந்த புத்தகங்களாக தானே எழுதிய விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவற்றை குறிப்பிட்டது பலருக்கு பிடிக்கவில்லை. தலைக்கனம் பிடித்த மனிதர் என்று ஒரு அபிப்ராயம் நிலவியது. அவருக்கு அவரது புத்தகங்கள் பிடித்திருந்தால் போலி தன்னடக்கம் காரணமாக அதைப் பற்றி சொல்லக்கூடாது என்பதெல்லாம் பிதற்றல். அவரும் ஒரு வாசகர், காசு கொடுத்து (சரி ஓசியில்) புஸ்தகம் படிக்கும் எல்லாருக்கும் – எழுத்தாளர்கள் உட்பட எல்லாருக்கும் – புஸ்தகங்கள் பற்றி கருத்து சொல்ல உரிமை உண்டு. ஜெயமோகனின் வாசிப்பு சிபாரிசுகள் மிக முக்கியமானவை. எனக்குத் தெரிந்து பாப்புலர் எழுத்துகளுக்கு இலக்கியத்தில் ஒரு இடம் உண்டு என்று எழுதிய முதல் “இலக்கிய” எழுத்தாளர் அவர்தான். இன்றும் அவர் மட்டுமே நல்ல பாப்புலர் எழுத்து என்று ஒரு லிஸ்ட் போட்டிருப்பவர். அவர் எழுத்தாளர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்த புத்தகங்கள் மிக அருமையானவை. அவரது நாவல் என்ற புத்தகம் கதை, நீள்கதை, நாவல் என்றெல்லாம் கொஞ்சம் செயற்கையான பாகுபாடுகளை உருவாக்குகின்றன. ஆனாலும் அவரது கருத்துகள், அந்தப் புத்தகம் மிகவும் முக்கியமானவை.

க.நா.சு. போன்றவர்கள் என் ஜாதி. பிடித்திருக்கிறது, இல்லை என்பதோடு சரி. விமர்சகர் என்பதை விட சிபாரிசு செய்பவர் என்று சொல்லலாம். ஏன் பிடித்திருக்கிறது, எப்படிப்பட்ட புனைவுகள் கால ஓட்டத்தில் நிற்கின்றன என்று ஒரு meta-level -இல் ஜெயமோகனின் “நாவல்” புத்தகம் பேசுகிறது. படிக்க சுலபமான புத்தகம் என்று சொல்லமாட்டேன், ஆனால் கஷ்டமான புத்தகமும் இல்லை. புரியாத மொழியில் தன் மேதமையை காட்ட எழுதப்பட்ட புத்தகம் இல்லை. தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அவர் எழுதிய புத்தகங்களும் மிக அருமையானவை. தேர்ந்த அலசல்கள். நிறைகுறைகளை சீர்தூக்கிப் பார்ப்பவை. அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவரோடு ஓரளவு ஒத்த ரசனை உள்ள நானே பல இடங்களில் அவரது கண்ணோட்டத்தை மறுத்து எழுதி இருக்கிறேன். அவரது கருத்துகளோடு, கோட்பாடுகளோடு எனக்கு சில வேறுபாடுகள் உண்டு, ஆனால் அவர் கோட்பாடுகள், கருத்தை வெளிப்படுத்தும் பாணியை பெரிதும் மதிக்கிறேன்.

இந்த மாதிரி அலசல்கள் நிறைய வர வேண்டும். ஆனால் என் கண்ணில் எதுவும் இது வரை படவில்லை. எஸ்.ரா. எழுதிய சில கட்டுரைகளை, அதுவும் இணையத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். பொதுவாக இந்த மாதிரி கட்டுரைகள் எல்லாம் நிறைகளை பற்றி மட்டுமே பேசுபவை, குறைகளைப் பற்றி எழுதுவதில்லை. இலக்கிய விமர்சனம் என்று வந்துவிட்டால் அடுத்தவரை குறை சொல்லக் கூடாது என்ற நாகரீகத்தை விட தன் மனதுக்குப் பட்டதை நேர்மையாக எழுதுவதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நான் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தபோது கையில் ஓரளவு காசு புரண்டது. புஸ்தகங்களை வாங்கி குவிக்க வேண்டும் என்ற வெறியை தீர்த்துக்கொள்ள நல்ல சந்தர்ப்பம். ஆனால் எங்கே புஸ்தகங்கள்? எனக்குத் அப்போதெல்லாம் தெரிந்த ஒரே கடை ஹிக்கின்பாதம்ஸ்தான். சில புஸ்தகங்கள் கிடைத்தன. அப்புறம் லாண்ட்மார்க் பற்றி கேள்விப்பட்டு அங்கே போனேன், இன்னும் சில கிடைத்தன. ஆனால் நான் தேடிக்கொண்டிருந்த புஸ்தகங்கள் – வாடிவாசல், நித்யகன்னி மாதிரி – எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் அல்லையன்ஸ் பதிப்பகம் போனேன். அங்கே சில தேவன் புத்தகங்களை வாங்கினேன். பிறகு வாடிவாசல் கிடைக்குமா என்று கேட்டேன். விற்பனையாளர் அந்தப் பேரையே கேட்டதில்லை. கடைசியில் அவர் சொன்னார் “இதே ஆர்.கே. மட் ரோட்லே போங்கோ. பி.எஸ். ஹைஸ்கூல் முன்னாலே, இந்தியன் பாங்க் மாடிலே திலீப்குமார்னு ஒருத்தர் சின்ன கடை நடத்தறார், அவரை கேட்டு பாருங்கோ” – சரி இதுதான் கடைசி என்று அங்கே போனேன். என் பல வருஷ தேடல் அங்கே ஒரு நொடியில் முடிந்தது. நான் அதற்கப்புறம் சென்னைக்கு போய் என் உறவினர்கள், நண்பர்களை பார்க்காமல் வந்திருக்கிறேன். திலீப்குமாரை பார்க்காமல் வந்ததில்லை. அவர் கை காட்டும் புஸ்தகங்களை வாங்குவேன். மெதுவாகத்தான் படிப்பேன். (விஷ்ணுபுரம் படிக்க 4 வருஷம் ஆயிற்று.)

இணையம் வந்த பிறகு நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. இது வரை பார்க்காதவர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் சிபாரிசுகளை பார்க்கலாம். ஆனால் இணையத்தில் சண்டை சச்சரவு கொஞ்சம் அதிகம். அதுவும் ஜெயமோகனுக்கு “வசை காந்தம்” என்று பட்டமே கொடுக்கலாம். 🙂 அதை தாண்டிப் பொறுமையாகப் படிப்பவர்களுக்கு இணையம் ஒரு பொக்கிஷம்!

10 thoughts on “நானும் புத்தகங்களும்

  1. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஒளிவு மறைவில்லாமல் எந்த விதமான பாவனைகளும் இல்லாமல் எழுதி இருக்கிறீர்கள். இது மற்றவர்களுக்கு மிக சாதாரணமாகக் கூடத் தெரியும்- அவ்வளவு எளிமையாக விஷயத்தை அணுகி இருக்கிறீர்கள்.

    பொதுவாக புத்தகத்தைப் பற்றி எழுதுபவர்கள் புத்தகங்களில்கூட இல்லாத பொல்லாத ஆழங்களையும் அகலங்களையும் வார்த்தைகளால் நிரப்புவார்கள்- நீங்கள் அதைத் தெரிந்தே தவிர்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்.

    Like

  2. Almost my introduction to the literature is like yours…my mother (fictions) and my wife (non-fiction) played an important role in choosing the books.

    From 2001 I started reading JeyaMohan in Thinnai. But during those days his way of writing was literally breaking my back, then after some time, I was able to follow him.

    JM’s critique works about various authors of their time (Thamizini, 6 volumes) is very important but usually rejected because it was written by him (Hindutva, RSS and all the crap).

    S. Ra. wrote about 50 authors in ‘Katha vilasam’ (Vikatan). K. Na. Su’s works I like and Kavitha Pub. brought his whole works in 2 volumes (bought them through anyindian.com).

    Dilip Kumar was referred by JM and I got the same experience like you with him. He recommended only important works (http://rchandra.blogspot.com/2004_07_01_archive.html), and purchasing the books from him was a pleasure. He takes care of every shipment like his own orders.

    I may start just cataloging the books list and write a short reviews about them, after I started reading your blog :).

    Like

      1. Just replied to RV too…but just wanted to let you know:

        >>ராஜ் சந்திரா, திலீப்குமார் அனுபவம் உள்ளவரா நீங்கள்? நாமெல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் வைக்க வேண்டியதுதான்! பாஸ்கரோடு நானும் உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.

        – இது தொடர்பாக நான் இன்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்: http://rchandra.blogspot.com/2011/02/blog-post.html.

        Like

  3. தமிழில் அமைப்பி பலம் இல்லாமல் , தனியாளாக நின்றுதான் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நல்ல இலக்கியங்கள் அச்சில்வரவே சொந்தப்பணம் போடவேண்டும். வாசிக்க 500 பேர் கூட இல்லை. சிற்றிதழ்கள் 200 பிரதி அச்சிடப்படும். இந்நிலையே 80களில் இறுதிவரை நிலவியது.

    ஆகவே ஆர்வி கோருவதுபோல பிரபல பட்டியல்கள் எப்படி இருக்க முடியும்? பட்டியல்கள் கண்டிப்பாக வருடம்தோறும் வந்தன. அவற்றில் நல்ல இலக்கியம் பற்றி ஒரு வரிகூட இருக்காது. 1975ல் முவ நல்ல நவீன இலக்கிய படைப்புகள் பற்றி ஒருபட்டியலை குமுதத்தில் போட்டார். அதில் புதுமைப்பித்தன், மௌனி, குபரா, கு அழகிருசாமி, தி ஜானகிராமன், சுந்தர ராமசாமி எவருமே இல்லை. வருடா வருடம் அன்று பிரபலமாக இருக்கும் பட்டியல் சாலை இளந்திரையன் போடுவது அவர் 12 வருடம் தொடர்ச்சியாக போட்டு பேரிதழ்களில் வெளியாகும். ஒரே ஒருமுறை சுந்தர ராமசாமியின் பெயர் வந்ததே ஒழிய வேறு எவர் பெயரும் வந்ததில்லை!

    பட்டியல் என்ற விமர்சன முறையை உருவாக்கியவர் க.நா.சு. அதற்கான காரணம் நீங்கள் கோரும் இதே தேவைதான். ஆனால் அந்தப்பட்டியல் சிற்றிதழ்களில் மட்டுமே புழங்கியது. குமுதமோ விகடனோ எப்படி அதை வெளியிடும்? அவர் போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே

    அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

    பட்டியல்கள் அன்று எழுத்தாளர்களிடமும் இருந்தன. சுந்தர ராமசாமி ஒரு நல்ல நூல் பட்டியலை சை
    க்ளோஸ்டைல் பண்ணி வைத்திருந்தார். அவரை பார்க்கப்போனால் உடனே கொடுப்பார். அவரைப்பின்பற்றி நான் ஒன்று தயாரித்து செல்லுமிடமெல்லாம் கொடுத்திருக்கிறேன்.பல கல்லூரிகளில்.

    அந்தப்பட்டியல்தான் இணையத்தில் அச்சாகியது. [கநாசு மீதும் பட்டியலில் அவரது பெயர் இருந்தைச் சொல்லித்தான் அவதூறும் வசையும் வீசப்பட்டன.]

    இன்று பல பட்டியல்கள் உள்ளன. அப்பட்டியல்கள் முதன்முதலாக தமிழ்மணி இணைப்பில் பிரசுரமாகி பரவலான வாசகர்களை எட்டின. அதன்பின்னர் சுபமங்களாவில் . இன்றைய இலக்கிய வாசிப்புப்போக்கு அவ்வாறே உருவானது

    அப்பட்டியலை முழுமையாக்கவேண்டும் என்றே நான் மொழிபெயர்ப்பு நாவல்கள் , வணிக ஆக்கங்கள அனைத்துக்கும் பட்டியல் போட்டேன்.

    தமிழில் கிடைக்கும் உலக இலக்கிய நூல்களுக்கான ஒரு பட்டியல் பாக்கி))

    இதை எழுத்தாளன் செய்யவேண்டியதில்லை. அது அவனுக்கு சுமை. அனாவசியமான வசையும் கிடைக்கும். ஆனாலும் செய்வது இலக்கியம் என்ற அமைப்பு, விழுமியம் மீதான பற்றின் வெளிப்பாடு. ஆகவே அது கடமை. நானோ எஸ் ராமகிருஷ்ணனோ செய்வது முன்னோடிகள் செய்ததைத்தான்

    Like

  4. அன்புள்ள ஜெயமோகன்,
    // தமிழில் அமைப்பி பலம் இல்லாமல் , தனியாளாக நின்றுதான் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நல்ல இலக்கியங்கள் அச்சில்வரவே சொந்தப்பணம் போடவேண்டும். வாசிக்க 500 பேர் கூட இல்லை. சிற்றிதழ்கள் 200 பிரதி அச்சிடப்படும். இந்நிலையே 80களில் இறுதிவரை நிலவியது. ஆகவே ஆர்வி கோருவதுபோல பிரபல பட்டியல்கள் எப்படி இருக்க முடியும்? // உண்மை, முற்றிலும் உண்மை.

    மு.வ.வின் 75 -ஆம் வருஷ லிஸ்டை மிஸ் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். சின்னப் பையன். ஆனால் இந்த சாலை இளந்திரையன் என்ற பேரையே கேட்டதில்லை. 🙂 கணையாழி என்ற பேரைக் கூட ஒரு இருபது வயதில்தான் கேள்விப்பட்டேன். 🙂 சுபமங்களா ஆரம்பித்த காலத்தில் நான் செகந்தராபாதில் இருந்தேன். தேடித் பிடித்து வாங்க வேண்டி இருந்தது, ஆனால் அனேகமாக வாங்கிவிடுவேன்.

    நீங்கள் நன்றியை எதிர்பார்த்து லிஸ்ட் போடவில்லை என்று தெரியும். ஆனாலும் நன்றி!

    பாஸ்கர், நன்றி! // புத்தகத்தைப் பற்றி எழுதுபவர்கள் புத்தகங்களில்கூட இல்லாத பொல்லாத ஆழங்களையும் அகலங்களையும் வார்த்தைகளால் நிரப்புவார்கள் // ஆப்பையில் வரவில்லை என்று சந்தோஷப்படுகிறீர்கள். சட்டியிலேயே கிடையாது!

    ராஜ் சந்திரா, திலீப்குமார் அனுபவம் உள்ளவரா நீங்கள்? நாமெல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் வைக்க வேண்டியதுதான்! பாஸ்கரோடு நானும் உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.

    கலா, திலீப்குமாரின் ஈமெயில் dhwanibooks அட் ஜிமெய்ல் டாட் காம். அவர் இப்போது புத்தக வியாபாரத்தை மிகவும் குறைத்துவிட்டார் என்று கேள்வி.

    Like

    1. >>ராஜ் சந்திரா, திலீப்குமார் அனுபவம் உள்ளவரா நீங்கள்? நாமெல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் வைக்க வேண்டியதுதான்! பாஸ்கரோடு நானும் உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.

      – இது தொடர்பாக நான் இன்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்: http://rchandra.blogspot.com/2011/02/blog-post.html.

      Thanks.

      🙂

      Like

      1. என்ன சார் இந்த சுட்டியில் திலீப்குமாரைப் பற்றி ஒன்றும் இல்லையே?

        Like

  5. //ஆப்பையில் வரவில்லை என்று சந்தோஷப்படுகிறீர்கள். சட்டியிலேயே கிடையாது!//

    அப்படியெல்லாம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்- பேசுகிறவர்களில் எவரும் தன்னை பேச்சாளன் என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் டிவிட்டரில் மிஞ்சிப் போனால் நூற்று நாற்பது எழுத்துகள் எழுதக்கூடியவர்களும்கூட பெரிய ரேஞ்சில் பேசுகிறார்கள்!

    சட்டியில் எதுவும் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆப்பையை அடுத்தவனிடமிருந்து ஆட்டை போட்டால் ஆச்சு!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.