“இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!” என்றார் புதுவை நண்பர்.
”இந்த வீதிக்குப் பெயர்?”
”ஈசுவரன் கோயில் தெரு!”
கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற்கரையில் போய் முடிகிறது.
”பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு, அதுதான் பாரதியார் குடியிருந்த வீடு!”
கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற அந்த இல்லத்தின் தோற்றம், என் உள்ளத்தில் ஏதேதோ சிந்தனைகளைக் கிளறிவிட்டன.
பாரதியாரின் இல்லத்துக்கு அடுத்த வீட்டு வாசல் திண்ணையில், சாதுவாக ஒரு மனிதர் உட்கார்ந்தபடி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் நெற்றியிலே பளிச்சென்று திருநீறு ஒளி வீசிக்கொண்டிருந்தது.
”அடுத்த வீட்டில்தானே பாரதியார் குடியிருந்தார்?” என்று மெதுவாக அவரிடம் விசாரித்தேன்.
”ஆமாம். இப்போது அது என் வீடு. 1953-ல் நான் விலைக்கு வாங்கிவிட்டேன். பத்து வருஷமா சும்மாவேதான் பூட்டி வெச்சிருக்கேன். போன வருசமே சர்க்கார்லே இந்த வீட்டை வாங்கறதா இருந்தது. இந்த வருசத்துக்குள்ளேயாவது முடிஞ்சுடும்னு எம் புத்தியிலே படுது. தனிப்பட்டவங்க யாருக்கும் இதை விக்கறதா உத்தேசமில்லை. சிவாஜி கணேசன் கூட வந்து பார்த்துட்டுப் போனாரு.”
”நீங்க பாரதியாரை நேரிலே பார்த்திருக்கீங்களா? பேசியிருக்கீங்களா?”
”பார்க்காமல் என்ன? அடுத்த வீட்டுலேதானே பத்து வருசத்துக்கு மேல இருந்தாரு! கவர்மென்ட்டுக்கு விரோதமாக இங்கே வந்தாரு. தங்கமான குணம். எல்லார்கிட்டேயும் சகஜமா பழகுவாரு. குழந்தைங்களைக் கண்டால் தூக்கிட்டுப் போய் விளையாடுவாரு. குழந்தைங்க ஏணையிலே தூங்கிக்கிட்டு இருந்தாக் கூட தூக்கிட்டுப் போயிடுவாரு. குழந்தைங்கன்னா அவ்ளோ பிரியம்! அவரும் சரி, அவர் பெண்ஜாதியும் சரி. ரொம்ப நல்ல குணம். ஒருத்தரையும் கடுமையாப் பேசமாட்டாரு. யார் கூப்பிட்டு சாப்பாடு போட்டாலும் சாப்பிடுவாரு. வித்தியாசமே கிடையாது.”
”பார்க்க எப்படி இருப்பார்?”
”எப்பப் பார்த்தாலும் கறுப்புக் கோட்டு ஒண்ணு போட்டுக்கிட்டிருப்பாரு. தலையிலே ஒரு துணியைச் சுத்திக்குவார். மாடி மேலே உலாத்திக்கிட்டே பாடிக்கிட்டிருப்பார்.”
”எந்தப் பாட்டாவது ஞாபகம் இருக்குதா?”
”அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. அந்தக் காலத்திலே இவர் இவ்வளவு பெரிய ஆசாமியாவார்னு தெரிஞ்சிருந்தா, கொஞ்சம் உன்னிப்பாவே கவனிச்சிருக்கலாம்!”
”அவர் உங்களோடு பேசியிருக்காரா?”
”ஆமாம். ‘என்ன செட்டியாரே’ன்னுதான் கூப்பிடுவார்.”
”உரக்கப் பாடுவாரா?”
”பெரிய குரல் கொடுத்துத்தான் பாடுவார். பேச்சும் அப்படித்தான் ஆவேசமாயிருக்கும். எப்பவும் ஒரு வேகம்தான்; ஆவேசந்தான். சில சமயம் ‘ஓம் சக்தி! ஓம் சக்தி’ன்னு கூவுவாரு. சின்னக் குரலே கிடையாது. உறைப்பாப் பேசுவாரு. அடிக்கிறாப்போல இருக்கும். ‘என்னடா இவர் இப்படிப் பேசறாரே’னு கூடத் தோணும். அது அவரு சுபாவம். கவர்மென்ட் பேரிலே இருக்கிற வெறுப்பு அப்படி.”
”உங்க பேரு?”
”கு.மா.சி.எம். அண்ணாமலைச் செட்டியார்.”
”செட்டிநாடா?”
”இல்லே. இந்த ஊரேதான். இவர் என் மகன். காளத்தின்னு பேரு.”
”எதிர் வீட்டிலே ராஜரத்தினம் செட்டியார் இருக்கிறார். அவருக்கும் பாரதியாரோடு பழக்கம் உண்டு. அவர் வீட்டிலே பாரதியார் உட்கார்ந்த நாற்காலி கூட ஒண்ணு இருக்குது. பார்த்துட்டுப் போங்க. வாங்க, நானே அழைச்சிட்டுப் போறேன் அவரிடம்” என்று கூறி, எங்களை எதிர் வீட் டுக்கு அழைத்துச் சென்றார் காளத்தி.
”ரொம்பக் கஷ்டம்தாங்க அவருக்கு, அந்தக் காலத்திலே! எந்த நேரமும் யூனியன் போலீஸ் ஸி.ஐ.டிங்க தெருக் கோடியிலே இருந்துக்கிட்டு ‘வாச்’ பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அப்பெல்லாம் அவரைக் காப்பாத்தினது ரௌடி வேணுதான்” என்றார் ராஜரத்தினம் செட்டியார்.
”என்ன? ரௌடி வேணுவா?!”
”ஆமாங்க! பாரதியார்கிட்டே அவனுக்கு என்னவோ அவ்வளவு அன்பு. அவர் கூடவே இருந்து பந்தோபஸ்து கொடுப்பான். பாரதியார் அவன் கூடத்தான் தென்னந்தோப்புப் பக்கமெல்லாம் உலாத்தப் போவாரு. ‘பாரதியாரை புதுச்சேரி பார்டர் தாண்டி இட்டுக்கிட்டு வந்துடு. ஆயிரம் ரெண்டாயிரம் தரேன்’னு இங்கிலீஷ் போலீஸ் சொல்லுவாங்க. ஆனாலும் வேணு ரொம்ப நேர்மையானவன். பாரதியாருக்கு உண்மையாய் இருந்தான். கடைசி வரைக்கும் அவரைக் காப்பாத்தினான்.”
”உங்களுக்கு அப்ப என்ன வயசு இருக்கும்?”
”இருபதுக்குள்ளே இருக்கலாம். அவருக்கு முப்பது இருக்கலாம்.”
”அவர் பாடறப்போ நீங்க கேட்டிருக்கீங்களா?”
”உம். மெத்தையிலேருந்து உரக்கப் பாடுவாரு. காளி பூஜை பண்ணுவாரு. சுதேசமித்திரன் ஆபீசிலேருந்து மாசா மாசம் முப்பது ரூபா வரும் அவருக்கு. அதிலேதான் ஜீவனம். ஏழு ரூபாயோ என்னமோதான் வாடகை. அதையே அவரால கொடுக்க முடியாது. ஒரு நாள் அவர் சம்சாரம் வந்து ‘ராஜம்! – அந்தம்மா என்னை ராஜம் ராஜம்னுதான் கூப்பிடும் – அவசரமா எனக்கு ஏழு ரூபா கொடு. இந்த நாற்காலியை வெச்சுக்கோ. இதை விலைன்னு வெச்சுக்க வேணாம். உதவி செய்யறதா நினைச்சுக் கொடு’ன்னாங்க. இன்னுங்கூட அந்த நாற்காலி இருக்குது. பத்திரமா வெச்சிருக்கேன். பிரம்பு பின்னின நாற்காலி. நாலு ரூபா கூட பெறாது. பிரம்பு கூட மேலேதான் பின்னினோம். அடியிலே இருப்பது அப்படியேதான் இருக்குது. மாத்தல்லே. கடையிலே இருக்குது நாற்காலி. போய்ப் பாருங்க. டேய் இவங்களை அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டுடா! ரொம்பப் பேரு வந்து பாக்கறாங்க. ‘எனக்குக் கொடுத்துடு’ன்னு கேக்கறாங்க. பாரதியார் ஞாபகார்த்தமா இருக்கட்டும்னு யாருக்கும் கொடுக்கல்லே!” என் றார் ராஜரத்தினம் செட்டியார்.
அவருடைய பேரனுடன் சென்று அந்த நாற்காலியைத் தரிசித்தோம்.
சித்திரக்காரர் அதைப் படம் வரைந்துகொள்ளும் நேரத்தில் நான் அதைத் தொட்டு, நகர்த்தி, நிமிர்த்திப் புரட்டிச் சாய்த்துக் கவிழ்த்து ஒருக்களித்து எத்தனை கோணங்களில் எப்படியெல்லாம் பார்க்கமுடியுமோ அத்தனை கோணங்களிலும் ஆசை தீரப் பார்த்தேன்.
கடைசியாகக் கவியரசரின் ஆசனத்தைத் தொட்டு வணங்கி விட்டுப் புதுவையிலிருந்து ஒரு புதிய உணர்ச்சியோடும் ஊக்கத்தோடும் திரும்பி வந்தேன்.
என் மூச்சிலே இப்போது ஒரு சக்தியே பிறந்திருக்கிறது!