எது இலக்கியம்?

அலைஓசை பற்றி எழுதும்போது இப்படி சொல்லி இருந்தேன் –

ஐம்பதுகளில் இது உயர்ந்த இலக்கியமாகவே கருதப்பட்டிருக்கும். கல்கிக்கு இது இலக்கியம்தான், இதுவே தான் எழுதிய எல்லா கதைகளிலும் சிறந்தது என்று அவர் கருதினார். தொடர்கதையாக வெளிவந்த நாட்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும், வாசகர்கள் சீதா, ராகவன், தாரிணி, சூர்யா ஆகியோரின் வாழ்வில் அடுத்தது என்ன என்று ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். இன்றைக்கு கல்கியின் தீவிர ரசிகர்கள் கூட பொன்னியின் செல்வனைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு இதை ரசிப்பதில்லை. இன்றைக்கு என் புரிதலின்படி தவறான தேர்வு என்றாலும் அந்த காலகட்டத்தில் இதற்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது புரிந்து கொள்ளக் கூடியதே. புரிந்து கொள்ள முடியாத விஷயம் ஒன்றுதான். ஒரு flawed படைப்பு ஒரு தலைமுறை வாசகர்களை எப்படி இந்த மாதிரி கட்டிப்போட்டது? ஒரு தலைமுறை வாசகர்களை கட்டிப்போட்ட படைப்பு எப்படி அடுத்த ஓரிரு தலைமுறையிலேயே தன் ஈர்ப்பு சக்தியை இழந்தது?

ஐம்பதுகளில் அலை ஓசையை ரசித்தவர்கள் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு இதைப் படிடா/படிடி என்று நிச்சயமாக சொல்லி இருப்பார்கள். அது எப்படி அவர்களை அவ்வளவு தூரம் ஈர்த்த ஒரு படைப்பு அடுத்த ஓரிரு தலைமுறையிலேயே தன் வீரியத்தை இழக்க ஆரம்பிக்கிறது? சரி reverse கேள்வியையும் பார்ப்போம் – அத்தனை “சக்தி” இல்லாத படைப்பு ஒரு தலைமுறையினரை எப்படி இவ்வளவு தூரம் கவர்கிறது?

இது அலை ஓசைக்கு மட்டுமே நடந்த அபூர்வ நிகழ்ச்சி இல்லை. மீண்டும் மீண்டும் நடப்பது. மு.வ.வுக்கும், அகிலனுக்கும், நா.பா.வுக்கும் நடந்தது, நடந்து கொண்டிருப்பது.ஒரு காலத்தில் மு.வ. பெரும் இலக்கிய, கலாசார சக்தி. இன்று மு.வ.வை யார் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? சித்திரப்பாவை தவிர வேறு எந்த அகிலன் நாவல் இன்று படிக்கப்படுகிறது? அதுவும் கூட சாஹித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு என்ற காரணத்தால்தானே? எத்தனை அரவிந்தன்களும் பூரணிகளும் அறுபதுகளில் பிறந்தார்கள்? இன்று குறிஞ்சி மலர் நாவலே பெரிதாக யாருக்கும் நினைவிருப்பதில்லையே?மு.வ., அகிலன், நா.பா. மாதிரி பலர் ஒரு காலத்தில் பெரும் இலக்கியம் படைத்தவர்கள் என்று மதிக்கப்பட்டாலும், இந்த உண்மையான பலம் இல்லாத படைப்புகளை பத்து பதினைந்து வருஷங்களில் மெதுமெதுவாக வாசகர்கள் மறக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில், அன்றைய மார்க்கெட்டுக்கு சரியாக இருக்கும் புத்தகங்கள் எல்லாம் என்றும் நிலைத்து நிற்பதில்லை. ஒரு விதமான வடிகட்டுதல் நடைபெறுகிறது.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் சிறு வயதில் சுஜாதா பக்தன். அன்றைக்கு சுஜாதா வாரப் பத்திரிகைகளில் எழுதியவற்றில் மாணிக்கங்கள் உண்டுதான், ஆனால் பாதிக்கு மேல் குப்பை. நான் எப்படி அவற்றால் ஈர்க்கப்பட்டேன்? ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ கதைதான் என்று வைத்துக்கொண்டாலும் அடுத்த தலைமுறையினருக்கும் என்ன சர்க்கரை கிடைத்தது? இன்றைய முப்பது நாற்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு சுஜாதா ஒரு icon. ஆனால் இன்றைய பதின்ம வயதினருக்கு அப்படி இல்லையே? அவர்கள் எப்படி சுஜாதாவை இரண்டாம் வரிசைக்கு தள்ளினார்கள்?

இது இன்று நேற்று மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியும் இல்லை. தமிழில் மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியும் இல்லை. ஆர்.கே. நாராயணின் சிறு வயதில் அவரது மனம் கவர்ந்த எழுத்தாளர் மேரி கோரல்லி என்பவராம். எண்பதுகளில் சேலம் நகர நூலகத்தில் அவர் எழுதிய தூசு படிந்த சில புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். குறைந்தது பத்து வருஷமாக யாரும் தொட்டதில்லை என்று தெரிந்தது. இன்று வரையும் நிலை அப்படித்தான் இருக்கும். சோமர்செட் மாம் புத்தகங்கள் கதி என்ன? நோபல் பரிசு வென்ற நட் ஹாம்சன் புத்தகங்களை இன்று யாரும் சீந்துவதாகத் தெரியவில்லை. பாடமாக இல்லாவிட்டால் பேர்ல் பக், ஜான் ஸ்டீன்பெக் போன்றவர்களின் புத்தகங்களை யாரும் படிக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது.

கால ஓட்டத்தில் ஒரு வடிகட்டல் நடந்துகொண்டே இருக்கிறது. அதில் ஒரு ஜனநாயகம் இருக்கிறது. பலரும் தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக சொல்லி வரும் படிப்புகள் சிலவே. எனக்குத் தெரிந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து இன்னும் பரவலாக இலக்கியம் என்று சொல்லப்படும் படைப்புகள் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மட்டுமே. (நான் கவிதைகளை, காப்பியங்களை இதில் சேர்க்கவில்லை)

இப்படி இருக்கும்போது இன்றைக்கு வரும் எழுத்துகளை நாம் இலக்கியம், இலக்கியம் இல்லை என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? எனக்கு விஷ்ணுபுரம் ஒரு சாதனை, பேரிலக்கியம். என் எண்ணம் சரியா தவறா என்று எப்படி நிர்ணயிப்பது? எனக்குத் தெரியவில்லை. நம் எண்ணங்கள் மாறுவது தெரிகிறது. வடிகட்டுதல் நடப்பது தெரிகிறது. ஆனால் எது நிலைத்து நிற்கும் என்று கண்டுபிடிக்க என்ன ஃபார்முலா என்று தெரியவில்லையே?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பின்குறிப்பு: நண்பர் கிருஷ்ணமூர்த்தி

லா.ச.ரா.வின் சிறுகதை – பாற்கடல்

அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து ஒரு சிறந்த சிறுகதை.

இந்த மாதிரி குடும்பங்கள் இன்று இல்லை. ஆனாலும் இது அந்நியமாகத் தோன்றவே இல்லை. என் தலைமுறைக்காரர்களுக்கு கூட்டுக் குடும்பம் என்பதுதான் மனதளவில் – மனதளவில் மட்டுமே, ப்ராக்டிகலாக இல்லை – சரி…

லா.ச.ரா. எப்போதுமே உணர்ச்சிப் பிரவாகம். இதிலும் அப்படித்தான். என் தமிழ் சிறுகதை anthology-யில் இடம் பெறும். அதற்கு மேல் விவரிக்க விரும்பவில்லை, நேராக படித்துக் கொள்ளுங்கள்!