Skip to content

எது இலக்கியம்?

by மேல் ஜனவரி 2, 2011

அலைஓசை பற்றி எழுதும்போது இப்படி சொல்லி இருந்தேன் –

ஐம்பதுகளில் இது உயர்ந்த இலக்கியமாகவே கருதப்பட்டிருக்கும். கல்கிக்கு இது இலக்கியம்தான், இதுவே தான் எழுதிய எல்லா கதைகளிலும் சிறந்தது என்று அவர் கருதினார். தொடர்கதையாக வெளிவந்த நாட்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும், வாசகர்கள் சீதா, ராகவன், தாரிணி, சூர்யா ஆகியோரின் வாழ்வில் அடுத்தது என்ன என்று ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். இன்றைக்கு கல்கியின் தீவிர ரசிகர்கள் கூட பொன்னியின் செல்வனைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு இதை ரசிப்பதில்லை. இன்றைக்கு என் புரிதலின்படி தவறான தேர்வு என்றாலும் அந்த காலகட்டத்தில் இதற்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது புரிந்து கொள்ளக் கூடியதே. புரிந்து கொள்ள முடியாத விஷயம் ஒன்றுதான். ஒரு flawed படைப்பு ஒரு தலைமுறை வாசகர்களை எப்படி இந்த மாதிரி கட்டிப்போட்டது? ஒரு தலைமுறை வாசகர்களை கட்டிப்போட்ட படைப்பு எப்படி அடுத்த ஓரிரு தலைமுறையிலேயே தன் ஈர்ப்பு சக்தியை இழந்தது?

ஐம்பதுகளில் அலை ஓசையை ரசித்தவர்கள் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு இதைப் படிடா/படிடி என்று நிச்சயமாக சொல்லி இருப்பார்கள். அது எப்படி அவர்களை அவ்வளவு தூரம் ஈர்த்த ஒரு படைப்பு அடுத்த ஓரிரு தலைமுறையிலேயே தன் வீரியத்தை இழக்க ஆரம்பிக்கிறது? சரி reverse கேள்வியையும் பார்ப்போம் – அத்தனை “சக்தி” இல்லாத படைப்பு ஒரு தலைமுறையினரை எப்படி இவ்வளவு தூரம் கவர்கிறது?

இது அலை ஓசைக்கு மட்டுமே நடந்த அபூர்வ நிகழ்ச்சி இல்லை. மீண்டும் மீண்டும் நடப்பது. மு.வ.வுக்கும், அகிலனுக்கும், நா.பா.வுக்கும் நடந்தது, நடந்து கொண்டிருப்பது.ஒரு காலத்தில் மு.வ. பெரும் இலக்கிய, கலாசார சக்தி. இன்று மு.வ.வை யார் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? சித்திரப்பாவை தவிர வேறு எந்த அகிலன் நாவல் இன்று படிக்கப்படுகிறது? அதுவும் கூட சாஹித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு என்ற காரணத்தால்தானே? எத்தனை அரவிந்தன்களும் பூரணிகளும் அறுபதுகளில் பிறந்தார்கள்? இன்று குறிஞ்சி மலர் நாவலே பெரிதாக யாருக்கும் நினைவிருப்பதில்லையே?மு.வ., அகிலன், நா.பா. மாதிரி பலர் ஒரு காலத்தில் பெரும் இலக்கியம் படைத்தவர்கள் என்று மதிக்கப்பட்டாலும், இந்த உண்மையான பலம் இல்லாத படைப்புகளை பத்து பதினைந்து வருஷங்களில் மெதுமெதுவாக வாசகர்கள் மறக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில், அன்றைய மார்க்கெட்டுக்கு சரியாக இருக்கும் புத்தகங்கள் எல்லாம் என்றும் நிலைத்து நிற்பதில்லை. ஒரு விதமான வடிகட்டுதல் நடைபெறுகிறது.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் சிறு வயதில் சுஜாதா பக்தன். அன்றைக்கு சுஜாதா வாரப் பத்திரிகைகளில் எழுதியவற்றில் மாணிக்கங்கள் உண்டுதான், ஆனால் பாதிக்கு மேல் குப்பை. நான் எப்படி அவற்றால் ஈர்க்கப்பட்டேன்? ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ கதைதான் என்று வைத்துக்கொண்டாலும் அடுத்த தலைமுறையினருக்கும் என்ன சர்க்கரை கிடைத்தது? இன்றைய முப்பது நாற்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு சுஜாதா ஒரு icon. ஆனால் இன்றைய பதின்ம வயதினருக்கு அப்படி இல்லையே? அவர்கள் எப்படி சுஜாதாவை இரண்டாம் வரிசைக்கு தள்ளினார்கள்?

இது இன்று நேற்று மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியும் இல்லை. தமிழில் மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியும் இல்லை. ஆர்.கே. நாராயணின் சிறு வயதில் அவரது மனம் கவர்ந்த எழுத்தாளர் மேரி கோரல்லி என்பவராம். எண்பதுகளில் சேலம் நகர நூலகத்தில் அவர் எழுதிய தூசு படிந்த சில புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். குறைந்தது பத்து வருஷமாக யாரும் தொட்டதில்லை என்று தெரிந்தது. இன்று வரையும் நிலை அப்படித்தான் இருக்கும். சோமர்செட் மாம் புத்தகங்கள் கதி என்ன? நோபல் பரிசு வென்ற நட் ஹாம்சன் புத்தகங்களை இன்று யாரும் சீந்துவதாகத் தெரியவில்லை. பாடமாக இல்லாவிட்டால் பேர்ல் பக், ஜான் ஸ்டீன்பெக் போன்றவர்களின் புத்தகங்களை யாரும் படிக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது.

கால ஓட்டத்தில் ஒரு வடிகட்டல் நடந்துகொண்டே இருக்கிறது. அதில் ஒரு ஜனநாயகம் இருக்கிறது. பலரும் தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக சொல்லி வரும் படிப்புகள் சிலவே. எனக்குத் தெரிந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து இன்னும் பரவலாக இலக்கியம் என்று சொல்லப்படும் படைப்புகள் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மட்டுமே. (நான் கவிதைகளை, காப்பியங்களை இதில் சேர்க்கவில்லை)

இப்படி இருக்கும்போது இன்றைக்கு வரும் எழுத்துகளை நாம் இலக்கியம், இலக்கியம் இல்லை என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? எனக்கு விஷ்ணுபுரம் ஒரு சாதனை, பேரிலக்கியம். என் எண்ணம் சரியா தவறா என்று எப்படி நிர்ணயிப்பது? எனக்குத் தெரியவில்லை. நம் எண்ணங்கள் மாறுவது தெரிகிறது. வடிகட்டுதல் நடப்பது தெரிகிறது. ஆனால் எது நிலைத்து நிற்கும் என்று கண்டுபிடிக்க என்ன ஃபார்முலா என்று தெரியவில்லையே?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பின்குறிப்பு: நண்பர் கிருஷ்ணமூர்த்தி

From → Reading

18 பின்னூட்டங்கள்
 1. சுஜாதா சொல்லியிருந்த 15 நிமிடப் பிரபல்யம்தான் ஞாபகம் வருகிறது.

  சமூக, அரசியல், குடும்ப நிலைப்பாடுகள் மாறிக்கொண்டே இருப்பதால் அவற்றை மையமாக வைத்து எழுதப்படும் படைப்புகள் சில வருடங்களுக்குப் பிறகு மறக்கப்பட்டுவிடும். அவற்றைக் காட்டிலும் வரலாறு சம்மந்தப்பட்டவை கொஞ்சம் அதிக நாட்கள் படிக்கப்படலாம். ஆனால் வாழ்க்கைத் தேடல், தத்துவம் போன்றவற்றை மையமாகக் கொண்ட நூல்கள் எப்போதும் படிக்கப்படும் என்று தோன்றுகிறது.

  Like

 2. வாழ்க்கைத் தேடலும், தத்துவமும் எல்லாவிதமான கதைக்களனிலும் இருக்கலாம். அதனால் அவற்றைத் தொடாமல், வெறும் சம்பவங்களை மட்டுமே கோர்த்துப் பின்னப்பட்ட நூல்கள் சீக்கிரம் மறக்கப்படும்.

  நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் அலையோசையும் அப்படிப்பட்ட ஒரு நூல் போலத்தான் தெரிகிறது

  Like

 3. விமல் permalink

  டியர் ஆர்.வீ,

  தொடர்ச்சியான அலுவல் பணி காரணமாக அதிகம் பின்னூட்டம் எழுத முடிவதில்லை.

  அலைஓசை பதிவையும், இந்த பதிவையும் நான் முழுமையாக படித்து உள்ளேன்.

  அலை ஓசை நாவலை நானும் படித்துள்ளேன். படிக்கும் போது என் மனம் அந்த கால கட்டத்திற்கு சென்று விடும்.
  அருமையான நாவல். அந்த சுகமே தனி. அது கல்கியுன் மாஸ்டர் பீஸ் என்பது என் கருத்து.

  கல்கியுன் சிவகாமியுன் சபதம், பார்த்திபன் கனவு,
  பொன்னியுன் செல்வன் போன்ற கதைகளை படித்த காலத்தில் அந்த சரித்திர கால கட்டங்களுக்கு உள்ளே செல்வது போல எனக்கு இருக்கும். இந்த கதைகளை நான் இது வரை 30 – 40 தடவைகள் படித்து உள்ளேன்.

  எந்த ஒரு நாவலையுமே நாம் படிக்கும் போதும், விமர்சிக்கும் போதும் அது எழுதப்பட்ட கால கட்டங்களை பற்றி மனதில் எடுத்துகொள்ள வேண்டும். (இது சினிமாவுக்கும் பொருந்தும).

  ஜெயமோகனின் எழுத்துக்களை ஆனந்த விகடனில் எழுதும் களத்தில் இருந்து இன்று வரை எனக்கும் பிடிக்கும்.

  அதற்காக, நீங்கள் எழுதும் அனைத்து நாவல் விமர்சனங்களிலும்,
  ஜெயமோகன் இந்த நாவலை பற்றி அப்படி சொன்னனர், இப்படி சொன்னார் என்று எழுதுவது படிக்கும் நமக்கு கொஞ்சம் ஆயாசத்தையும், சலிப்பையும் ஏற்படுத்துகிறது.

  இதை பற்றி ,கிருஷ்ணமூர்த்தி அதில் சொல்ல வருவது கொஞ்சம் சரியாகத்தான் எனக்கு படுகிறது.

  எதற்கு எடுத்தாலும் அவர் கருத்தை பார்க்க
  ஜெயமோகன் ஒன்றும் ஒரு dictionary அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

  இதை எழுதுவதினால் தங்கள் மனம் புண்பட்டால் அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

  – விமல்

  Like

 4. natbas permalink

  என் அற்ப அறிவுக்குத் தோன்றுவது-

  Shakespearaeஐ எடுத்துக் கொண்டால் அவர் தன் காலத்தில் எழுதிய அனைவரையும் represent செய்கிறார். அவர் எழுதாத எதையும் யாரும் எழுதி இருப்பார்கள் என்று தெரியவில்லை. டிக்கென்ஸ் பற்றியும் அப்படி சொல்லலாம் என்று நினைக்கிறேன். இவர்கள் எழுதியதைத் தவிர்ப்பது எளிதல்ல.

  குறிப்பிட்ட படைப்புகள் என்று எடுத்துக் கொண்டால், அது எவ்வளவுதான் உயர்ந்ததாக இருந்தாலும் வாசகர்கள் அது குறித்து என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமாக இருக்கிறது. அலை ஓசை மாதிரி ஒரு பத்து இருபது பேர் வேறு நல்ல நாவல்கள் எழுதி இருந்தால் அலை ஓசை எக்காலத்திலும் மறக்கப்பட முடியாததாக ஆகி விடுகிறது. அல்லது அலை ஓசையின் அருமை பெருமைகளை யாராவது விலாவாரியாக எழுதியிருந்தால் அது முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

  இந்த மாதிரி இன்னும் பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை, எந்த ஒரு நல்ல இலக்கியப் படைப்பும் மார்க்கண்டேயன் போல் என்றும் பதினாறாகவே இருக்கிறது. அந்தந்த காலகட்டத்தில் அதை எதிர்கொள்பவர்கள், “இந்த பிள்ளை எவ்வளவு அழகாக இருக்கிறது, இதனுள் எத்தனை திறமைகள் போதிந்திருக்கின்றன” என்று கொண்டாடி அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அது சிறப்பு சேர்ப்பதாக இருக்கும். ஆனால் அதை அலட்சியபடுத்தினால் என்ன செய்ய முடியும்? “முத்துக்களின் பெருமை தெரியாத பன்றிகளா! கற்பூர வாசனை தெரியாத கழுதைகளா! வீணாய்ப் போன முட்டாள்களா!” என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

  //“ஆனால் எது நிலைத்து நிற்கும் என்று கண்டுபிடிக்க என்ன ஃபார்முலா என்று தெரியவில்லையே?“// என்று சொல்லியிருக்கிறீர்கள். நிலைத்து நிற்கக்கூடிய இலக்கியம் எது என்பதைக் கண்டு பிடிக்க ஒரு பார்முலாவும் இருப்பதாகத் தெரியவில்லை- ஆனால் நீங்கள் இலக்கியம் என்று கண்டுகொண்டதை நிலையாய் நிறுத்தி வைக்க காரண்டியாக ஒரு வழி இருக்கிறது- படித்து முடித்த உடனேயே அது பற்றி நீங்கள் விபரமாக அதன் சிறப்பியல்புகளைப் பதிவு செய்து வைப்பதுதான் அது.

  பண்பாட்டின் வாழ்வு ஒரு தலைமுறைப் பொழுதுதான் என்பார்கள்- கைமாற்றிக் கொடுக்கத் தவறி விட்டால் அது அழிந்து போய் அகழ்வாய்வு செய்ய வேண்டிய நிலைக்குப் போய் விடும், இல்லையா?

  “எனக்கு விஷ்ணுபுரம் ஒரு சாதனை, பேரிலக்கியம். என் எண்ணம் சரியா தவறா என்று எப்படி நிர்ணயிப்பது?”- உங்கள் எண்ணம் சரியானது என்பதை நீங்கள் உங்கள் எழுத்தின் மூலம்தான் சாதித்துக் காட்ட வேண்டும்!

  அதையும் இந்த ஆண்டே செய்து முடிக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்!

  Like

 5. //அதற்காக, நீங்கள் எழுதும் அனைத்து நாவல் விமர்சனங்களிலும்,
  ஜெயமோகன் இந்த நாவலை பற்றி அப்படி சொன்னனர், இப்படி சொன்னார் என்று எழுதுவது படிக்கும் நமக்கு கொஞ்சம் ஆயாசத்தையும், சலிப்பையும் ஏற்படுத்துகிற//

  எழுத்தாளராக மட்டுமல்லாது விமர்சகராகவும் ஜெயமோகன் இருப்பதாலும் , ஜெவின் தேர்வுகள் தனக்கு பொருந்தி போவதாலுமே ஆர்வி தொடர்ந்து குறிப்பிடுகிறார் ,

  தமிழில் விமர்சகர் என்ற இடத்தை நிரப்ப இன்று யாரும் இருப்பதாக தெரியவில்லை , எனவே வேறு வழியின்றி ஜெமோ.

  Like

 6. எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்பதை சமகால பிரபலத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிட்டால் அது சரியாக இருக்குமா தெரியவில்லை.சுஜாதாவும் கல்கியும்தான் இன்னமும் பெஸ்ட் செல்லர்கள் [புத்தகக் கண்காட்சி பதிவுகளைப் பாருங்கள்]பரமபதம் போல சில புத்தகங்கள் மறக்கப் பட்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுமென மாறி மாறி வருவதுண்டு.[பா சிங்காரம் போல..]என் காலத்தில் எரிக்கா யுங்கை பெண்ணியர் எல்லாரும் விழுந்து விழுந்து படித்தார்கள்.இப்போது அவர் பேரே நிறைய பேருக்குத் தெரிவதில்லை.ஆனால் அவர் மீண்டும் ஒரு நாள் படிக்கப் படலாம்.என்னைப் பொறுத்தவரை கிளாசிக்குகள் எனப் படும் எக்காலத்திற்கும் படிக்கக் கூடிய நூல்களின் காலம் முடிந்துவிட்டது.This is the age of plenty.இலக்கியத்திலும்தான்.இன்று எல்லாவற்றின் ஆயுளும் அற்பமே.அடுத்த அலை, அடுத்த மெகா நாவல் வரும்வரைதான் அதனது இலக்கிய முக்கியத்துவம்.

  Like

 7. இலக்கியம் பற்றி பேசும் போது வெங்கட் சாமிநாதன் திண்ணையில் ஒரு கட்டுரையில் எழுதிய இந்த வரிகள் தான் நினைவிற்கு வருகிறது:

  “யார் என்னதான் சொல்லிக்கொண்டாலும், கூட்டம் கூட்டிப் பேசினாலும், பாராட்டுரைகளைச் சேகரித்துக்கொண்டாலும், தருமு சிவராமூ ஒரு முறை சொன்னது போல, “அவர்கள் சொல்வதெல்லாம் அபிப்ராயங்களே, நான் சொல்வது judgement” என்று தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டாலும், எல்லாம் அபிப்ராயங்கள் தான். ஒரே ஒரு மனிதரது, தனி மனித அபிப்ராயங்கள் தாம். காலம் நிர்ணயிக்கும் என்று சொல்வது கூட, அந்தந்தக் காலத்தின் குணம் நிர்ணயிப்பது தான். இதில் ஏதும் judgements கிடையாது. “

  Like

 8. போகன், உங்களுக்கு விற்பனை என்ற அளவுகோல் இருப்பது தெரிகிறது. அது பிரபலத்தை மட்டுமே அளக்கும். பிரபலம் என்பது சாமானிய மக்களின், கூர்ந்து வாசிக்காதவர்களின், சுவாரசியத்துக்காக மட்டும் வாசிப்பவர்களின், வாசிப்பை ஒட்டியது. அது சட் சட்டென்று மாறும். காலந்தோறும் புதியதை கண்டுபிடிக்கும். கிளாஸிக் என்பது அப்படி அல்ல. எக்காலத்திலும் அது பெரும்பரபரப்பை உருவாக்காது. ஏராளமாக விற்கவும் விற்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் பிரிக்கமுடியாத அம்சமாக இருக்கும். என்றும் அதன்மேல் தரமான வாசகர்களின், பண்பாட்டை கவனிப்பவர்களின் ஆர்வம் குன்றாது இருந்துகொண்டிருக்கும். எழுதப்பட்ட நாட்கள் முதல் தஸ்தயேவ்ஸ்கியும் தல்ஸ்தோயும் அங்கேதான் இருக்கிறார்கள். அப்படி உலக இலக்கியத்தில் ஒரு 300 படைப்பாளிகளை சொல்ல முடியும். இந்தியமொழிகளில் அந்தந்த மொழிகளுக்கு கிளாஸிக் எழுத்தாளார்கள் உள்ளனர். பஷீர் அல்லது புதுமைப்பித்தன் போல

  கிளாசிக் என்ற அம்சம் இல்லாது போனால் இலக்கியமே இல்லை. கிளாஸிக்கை நோக்கிச் செல்வதே இலக்கியத்தின் உயர் இலக்கு. கிளாஸிக் தான் அடுத்தகட்ட பெரும்படைப்பை உருவாக்குகிறது. அடுத்தகட்ட இலக்கியங்களை அளக்க அளவுகோல்களை உருவாக்குகிறது. எந்தமொழியிலும் கிளாஸிக்குகள் அழிவதில்லை. கல்கியும் சுஜாதாவும் பொழுதுபோக்கு எழுத்துக்குள் வருபவர்கள். தமிழின் ரசனை மாறாமலிருப்பதனால் அவர்கள் நீடிக்கிறார்கள் அவ்வளவுதான். எல்லாமொழிகளிலும் அத்தகைய எழுத்தாளார்கள் உண்டு. ஆங்கிலத்தில் பல துப்பறியும் எழுத்தாளர்கள் மறக்கப்பட்டாலும் 50களில் எழுதிய ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் இன்னமும் மிகப்பெருவாரியாக விற்கப்படுகிறார்

  Like

 9. 2005ல் டைம்ஸ் லிட்டரரி சப்ளிமெண்ட் ஆசிரியர் கொடுத்த பேட்டி ஒன்று ஹிண்டுவில் வந்தது. விற்பனை என்று பார்த்தால்கூட 100 வருடத்தில் என்றும் விற்றுக்கொண்டிருப்பவை தல்ஸ்தோயின் நாவல்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் தேர்ந்த வாசகர்கள் அனேகமாக அனைவருமே அவரை வாசித்துவிடுகிறார்கள். இதுதான் கிளாஸிக்குகளின் இயல்பு.

  Like

 10. காலம் தாழ்ந்து மறுமொழி எழுதுவதற்கு எல்லாரும் என்னை மன்னிக்க வேண்டும்.

  மோகன், 15 நிமிடப் பிராபல்யம் ஆண்டி வார்ஹால் என்பவர் சொன்னது. சுஜாதா அதை மேற்கோள் காட்டி இருக்கலாம்.

  // சமூக, அரசியல், குடும்ப நிலைப்பாடுகள் மாறிக்கொண்டே இருப்பதால் அவற்றை மையமாக வைத்து எழுதப்படும் படைப்புகள் சில வருடங்களுக்குப் பிறகு மறக்கப்பட்டுவிடும். அவற்றைக் காட்டிலும் வரலாறு சம்மந்தப்பட்டவை கொஞ்சம் அதிக நாட்கள் படிக்கப்படலாம். ஆனால் வாழ்க்கைத் தேடல், தத்துவம் போன்றவற்றை மையமாகக் கொண்ட நூல்கள் எப்போதும் படிக்கப்படும் என்று தோன்றுகிறது…சம்பவங்களை மட்டுமே கோர்த்துப் பின்னப்பட்ட நூல்கள் சீக்கிரம் மறக்கப்படும். // இதிகாசங்கள், கிரேக்க கிளாசிக் நாடகங்கள் இன்னும் படிக்கப்படுகின்றன. அவை அன்றைய சமூக, அரசியல், குடும்ப நிலைப்பாடுகளை மையமாக வைத்து எழுதப்பட்டவைதானே? சம்பவக் கோர்வை மறக்கப்படலாமோ என்று தோன்றுகிறது…

  விமல், // அலை ஓசை நாவலை நானும் படித்துள்ளேன். படிக்கும் போது என் மனம் அந்த கால கட்டத்திற்கு சென்று விடும். அருமையான நாவல். அந்த சுகமே தனி. அது கல்கியுன் மாஸ்டர் பீஸ் என்பது என் கருத்து. கல்கியுன் சிவகாமியுன் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியுன் செல்வன் போன்ற கதைகளை படித்த காலத்தில் அந்த சரித்திர கால கட்டங்களுக்கு உள்ளே செல்வது போல எனக்கு இருக்கும். இந்த கதைகளை நான் இது வரை 30 – 40 தடவைகள் படித்து உள்ளேன். எந்த ஒரு நாவலையுமே நாம் படிக்கும் போதும், விமர்சிக்கும் போதும் அது எழுதப்பட்ட கால கட்டங்களை பற்றி மனதில் எடுத்துகொள்ள வேண்டும். (இது சினிமாவுக்கும் பொருந்தும). //
  நீங்கள் சொல்வது போல காலகட்டத்தை மனதில் கொள்ள வேண்டியது அவசியமே, அதுவும் முன்னோடி முயற்சிகளுக்கு அது இன்றியமையாதது. ஆனால் காலகட்டத்தைத் தாண்டி நிற்பதுதான் உண்மையான இலக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது.

  // அதற்காக, நீங்கள் எழுதும் அனைத்து நாவல் விமர்சனங்களிலும், ஜெயமோகன் இந்த நாவலை பற்றி அப்படி சொன்னனர், இப்படி சொன்னார் என்று எழுதுவது படிக்கும் நமக்கு கொஞ்சம் ஆயாசத்தையும், சலிப்பையும் ஏற்படுத்துகிறது. இதை பற்றி ,கிருஷ்ணமூர்த்தி அதில் சொல்ல வருவது கொஞ்சம் சரியாகத்தான் எனக்கு படுகிறது. எதற்கு எடுத்தாலும் அவர் கருத்தை பார்க்க ஜெயமோகன் ஒன்றும் ஒரு dictionary அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. இதை எழுதுவதினால் தங்கள் மனம் புண்பட்டால் அதற்காக மிகவும் வருந்துகிறேன். //

  அப்படி எல்லாம் என் மனம் எளிதில் புண்பட்டுவிடாது, மனதில் தோன்றுவதை நேர்மையாக எழுதுவது ஒன்றே பதிவுகள்+பின்னூட்டங்களின் அவசியமான குணாதிசயம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். நான் எழுதும் முறை உங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. பிடிக்கவில்லை என்று சொல்வதில் என்ன தவறு?

  எனக்கு ஜெயமோகன் ஒரு reference. ஜெயமோகன் மட்டுமல்ல, எஸ்.ரா.வையும் அடிக்கடி மேற்கோள் காட்டுவதைப் பார்த்திருக்கலாம். மேற்கோள் காட்டுவது என்றால் அவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்வது என்று அர்த்தம் இல்லை; அவர்கள் கருத்தோடு இசைவு இருக்கும்போதும் இல்லாதபோதும் அதைப் பற்றியும் எழுதி இருக்கிறேன். ஜெயமோகன் லிஸ்ட் மட்டும் போடவில்லை, அவற்றைப் பற்றி விவரமாக எழுதி இருக்கிறார், அதனால் மேற்கோளும் பெரிதாக இருக்கிறது. அவரைப் போல சுஜாதாவும், க.நா.சு.வும், சுந்தர ராமசாமியும், அசோகமித்ரனும், ஜெயகாந்தனும் லிஸ்ட் போட்டிருந்தாலோ, இல்லை தங்கள் கருத்துகளை விவரமாக எழுதி இருந்தாலோ அவற்றையும் மேற்கோள் காட்டி இருப்பேன்.

  பாஸ்கர் (நட்பாஸ்), உங்கள் மறுமொழி சரியாகப் புரியவில்லை. புரிந்த பிறகு மறுமொழி எழுதலாம் என்றுதான் மறுமொழி எழுதுவதே தள்ளிப் போய்விட்டது. இன்னும் புரியவில்லை… 🙂

  அரங்கசாமி, // விமர்சகராகவும் ஜெயமோகன் இருப்பதாலும் , ஜெவின் தேர்வுகள் தனக்கு பொருந்தி போவதாலுமே ஆர்வி தொடர்ந்து குறிப்பிடுகிறார் , தமிழில் விமர்சகர் என்ற இடத்தை நிரப்ப இன்று யாரும் இருப்பதாக தெரியவில்லை , எனவே வேறு வழியின்றி ஜெமோ. // ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் வேறு வழி இருந்தாலும் ஜெயமோகனை மேற்கோள் காட்டி இருப்பேன் என்று நினைக்கிறேன். பொதுவாக ஜெயமோகனின் “இலக்கியத் தேர்வுகள்” எனக்கும் ஒத்து வரும். அவரது “வணிக எழுத்துத் தேர்வுகள்” பல நேரம் சரி வருவதில்லை. எனக்கு புத்திசாலித்தனமான கதைகள் (Lady or the Tiger?, Catbird Seat, Open Window , Gift of the Magi, 108 வடைகள் மாதிரி) பிடிக்கும். அப்படி எனக்குப் பிடிக்கும் கதைகளில் அவருக்குப் பல gimmick ஆக தோன்றுவது உண்டு.

  போகன், // This is the age of plenty.இலக்கியத்திலும்தான்.இன்று எல்லாவற்றின் ஆயுளும் அற்பமே.அடுத்த அலை, அடுத்த மெகா நாவல் வரும்வரைதான் அதனது இலக்கிய முக்கியத்துவம். // இது நாளை உண்மையகாலாம். ஆனால் இன்று அற்ப ஆயுள் இல்லாத இலக்கியம் (மகாபாரதம், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய் மாதிரி) இருக்கத்தான் செய்கின்றன.

  பாஸ்கர், // எல்லாம் அபிப்ராயங்கள் தான். ஒரே ஒரு மனிதரது, தனி மனித அபிப்ராயங்கள்தாம். // உண்மையே. ஆனால் // காலம் நிர்ணயிக்கும் என்று சொல்வது கூட, அந்தந்தக் காலத்தின் குணம் நிர்ணயிப்பதுதான். // காலங்கள் தாண்டி சில இலக்கியங்கள் (இதிகாசங்கள், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய்) நிற்கின்றனவே?

  ஜெயமோகன், // விற்பனை என்று பார்த்தால்கூட 100 வருடத்தில் என்றும் விற்றுக்கொண்டிருப்பவை தல்ஸ்தோயின் நாவல்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் தேர்ந்த வாசகர்கள் அனேகமாக அனைவருமே அவரை வாசித்துவிடுகிறார்கள். இதுதான் கிளாஸிக்குகளின் இயல்பு. // நானும் வழிமொழிகிறேன். சரி சார், உங்களுக்கு இந்த படைப்பு நூறு ஆண்டுகளுக்கு மேல் தாங்கும்/தாங்காது என்று கண்டுபிடிக்க ஃபார்முலா ஏதாவது தெரிகிறதா?

  Like

 11. நூறாண்டு தாங்கும் படைப்பு எது? இதுவரை தாங்கிய படைப்புகளை வைத்து இப்படிச் சொல்லலாம். 1. தொன்மமாக மாறும் படிமத் தன்மை கொண்டது. 2 கலாச்சாரம் சம்பந்தமான பேச்சுகளில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது3 எளிதில் வாயால் சொல்லத்தக்கது 4 நடை, உத்தி போன்றவற்றை நம்பாமல் பண்பாட்டின் சாராம்சமான ஒன்றை வரையறுத்து கூறும் கருவாலேயே நிலைநிற்கும் படைப்பு

  Like

 12. கல்கியின் எழுத்து ஐம்பதாண்டுகள் தாக்குப் பிடித்துவிட்டதே!ஆனால் அவருடன் எழுதிய மற்ற வணிக இலக்கிய பெருமக்களை நாம் அறியோம்.கிளாசிக்குகள் பற்றிய ஜெமோவின் கருத்தும் அதன் மீதான அவரது பிரேமையும் அறிந்ததே.டால்ஸ்டாய் பற்றி அவர் சொன்னது சரியே.அவர் புத்தகங்கள் இனமும் செலவாணி ஆகத்தான் செய்கிறது.ஆனால் நான் சொல்ல வந்தது தொழில் யுகத்தோடு க்ளசிக்குகளின் தேவை முடிந்துவிட்டது என்பதையே.குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக புறச் சூழல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருந்தாலும் அடிப்படை மனித உணர்வுகள் மாறவில்லை.இதனாலேயே கிளாசிக்குகள் காலம் மீறி நின்றன.ஆனால் இன்று நமது அடிப்படை அறங்களே வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன.புறச் சூழல்கள் அதைவிட மிக வேகமாய்.மார்க்சியம் போன்ற நவீன யுக சிந்தனைப் போக்குகளே திணறுவது இதனால்தான்.இலக்கியத்தில் மட்டுமல்ல தத்துவம் இசை,மதம் இவை எல்லாவற்றிலுமே நீண்ட நாள் நிலைத்திருக்கும் சிந்தனையாளர்கள்,ஆளுமைகள் இனி வருவார்களா என்பது சந்தேகமே.கல்கி சுஜாதா போன்றோரின் பிரபலத்துக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.சென்ற யுகத்தின் ஏக்கத்தை திரும்ப மீட்டு எடுக்கும் முயற்சியாக.nostalgia .மேலும் அவர்கள் அவர்களது வகை அல்லது genre ன் பிரதிநிதிகள்.அல்லது முன்னோடிகள்.உதாரணமாக உலோகம் அந்த வகையில் தமிழில் எழுதப் பட்ட எந்த நூலையும் விட சிறந்தது.ஆனால்நாளை அது அந்த வகையில் கிளாசிக்காக கருதப் படுமா என்றால் சந்தேகமே.அதே போல்தான் பொன்னியின் செல்வனும்.உத்தியிலும் தருக்கத்திலும் ஆராய்ச்சிப் பின்புலத்திலும் உடையார் செல்வனைவிட பல படி உயர்ந்தது.ஆனால் அது அந்த வகையில் க்லாசிக்காய்க் கருதப் படுமா என்பது ஐயம்.க்லாசிக்குகளின் பொதுவான தன்மையாக நான் கருதுவது அவை திரும்ப திரும்ப வேறு வேறு கால கட்டத்தில் வேறு வேறு நபர்களால் பிரதி எடுக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதே.எத்தனை ராமாயணம்!எத்தனை மகாபாரதம்!அவை நேரடியாக மட்டுமல்ல இது போன்ற பிரதிகள் மூலமாகவும் ஜீவித்திருக்கின்றன.பொன்னியின் செல்வனுக்கே எத்தனை பிரதிகள்!நந்திபுரத்து நாயகி முதல் உடையார் வரை.அல்லது மணிரத்தினம் வரை![இதற்கு ஜெமோ வசனம் என்பது முரண் நகையா எனத் தெரியவில்லை]ஆனால் நவீன இலக்கியம் புதுப் புது மோஸ்தர்களை ஏற்கனவை உருவாக்கப் பட்டவை முழுதாய் முதிரும் முன்பே உருவாக்கி உருவாக்கிக் கலைக்கிறது.ஒரு கலைடாஸ்கோப் போல…ஒரு schizhophrenic frency ஒட்டு மொத்தமாக சமூகத்தில் பரவி இருக்கிறது.சாரு போன்றவர்களின் செலவாணி ரகசியம் இதுதான்.[முரண் நகையாக இந்த போக்கை தமிழில் ஆரம்பித்தது சுஜாதாதான் என்பது என் கருத்து]ஜெமோ போன்றோர் இந்த அலையை விரும்பாது எதிர்த்து நீந்துகிறார்கள்.ஆனால் அவர்களும் அந்த அலையைப் புறக்கணிக்க முடியாது உலோகம் எழுதுகிறார்கள்.

  Like

  • natbas permalink

   கல்கி, சுஜாதா இவர்களின் வணிக வெற்றி அவர்களின் எழுத்தின் தரத்தை மறைத்து விட்டது என்று நினைக்கிறேன். கல்கியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது, ஆனால் சுஜாதாவின் எழுத்தில் நிச்சயம் complexity இருக்கிறது. ஒரு புத்தகத்தைத் திரும்பத் திரும்ப ஒரு கூட்டம் படிக்கிறதென்றால் அதில் ஏதோ இருக்கிறதென்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்தானே?

   பிரெஞ்ச் எழுத்தாளர் Georges Simenon இருநூறு முன்னூறு நாவல்கள் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரோடு ஒப்பிட்டால் சுஜாதா பில்டர் பண்ணி எழுதி இருக்கிறார் என்று சொல்லவேண்டும். நம் ஊரில் என்றால் அந்த பிரஞ்சுக்காரர் குப்பையாக எழுதிக் குவித்திருக்கிறார் என்று சொல்வோம். ஆனால் அங்கே அவருக்கு ஒரு நல்ல பேர் இருக்கிறது. இங்க நாம் ஒரு உலோகத்துக்கே சோரம் போய் விட்ட மாதிரி கவலைப்படுகிறோம். ஓரிடத்தில் ஒரு வாசிப்பனுபவம் மிகுந்த ஒரு விமரிசகர்கூட, ராஜேஷ் குமார் நாவல் மாதிரி விற்கிறதாமே என்று நக்கல் செய்திருந்தார். வணிக வெற்றி என்பது தரக்குறைவு என்று அர்த்தமாகி விட்டது.

   நாம் இன்று உலகெங்கும் கொண்டாடுகிற ஷேக்ஸ்பியர் நாடகங்கள் கரடி வித்தை காட்டிய இடத்தில்தான் அரங்கேற்றப்பட்டன. கரடி வித்தையை விசிலடித்துப் பார்த்தவர்கள்தான் அவரது நாடகங்களையும் கை தட்டி கண்ணீர் விட்டு பார்த்தார்கள். பொதுபுத்தி என்பது ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல. ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் அந்த நாடகங்களைத் திட்டிய விமரிசகர்களை விட தேர்ந்த ரசனை இந்தக் கும்பலுக்கு இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த மாதிரி இன்னொரு கும்பல்தான் மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்களையும் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறது.

   —–

   பொன்னியின் செல்வன், நைலான் கயிறு, உலோகம் இதெல்லாம் இலக்கியத்தின் தடம் புரண்ட விபத்துகள் என்பது தவறான எண்ணம் என்று நினைக்கிறேன்- சொல்லப்போனால் இவை போடும் தடங்களில்தான் தரமான இலக்கியம் உருவாகும் வாய்ப்பு அமைகிறது.

   மானுட மனம், சமூகக் கட்டமைப்புகள்- இவை தன்னியல்பு இழக்காமல் மாறிக் கொண்டே இருப்பவை: அதனால் இவற்றின் ஆழம் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாததாக இருக்கிறது. இதை எளிமையாக அணுகும் நல்ல எழுத்து, நன்றாக விலை போகிறது. அதற்காக வணிக வெற்றி பெரும் ஆக்கங்கள் எல்லாமே மேம்போக்கான எழுத்து என்று சொல்ல முடியுமா என்ன?

   இலக்கியத்துக்கான ஒரே பிரதான அளவுகோல் complexityதான். பொன்னியின் செல்வன், நைலான் கயிறு பற்றி இங்கு எவ்வளவு சொன்னாலும் யாரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஆனால் எவ்வளவுதான் வணிக வெற்றி பெற்றாலும் அதனால் உலோகம் இலக்கியமாக இல்லாமல் போய் விடாது- இலக்கியத்துக்குத் தேவையான complexity அதில் இருக்கிறதென்று நினைக்கிறேன். அதனால் அதுவும் இன்னும் முப்பது நாற்பது ஆண்டுகள் ஆனாலும் இலக்கியமாகப் படிக்கப்படக் கூடும்.

   இவற்றை எல்லாம் இலக்கியமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பது விமரிசனத்தின் அடிப்படை அளவுகோல்கள் குறித்த புரிதலின் குறையே இன்றி இந்தப் படைப்புகளின் குறையல்ல. 🙂

   Like

 13. உலோகம் நிச்சயமாக ராஜேஷ்குமார் தரம் அல்ல.அதே சமயம் ஜெமோவின் மற்ற படைப்புகளின் ஆழம் உடையதும் அல்ல.அதன் ஒப்பீட்டளவில் உள்ள எளிமையினால் ஈர்க்கப் பட்டு வாங்குபவர் மேலும் சற்று சீரிய இலக்கியத்துக்குள் செல்ல வழி வகுக்கும் எனில் அவ்வாறு அவ்வப்போது எழுதுவது ஒன்றும் தவறில்லை.

  Like

 14. போகன், கல்கியின் படைப்புகள் ஐம்பதாண்டுகள் தாக்கு பிடித்துவிட்டதுதான். ஆனால் நூறு ஆண்டுகள் தாங்குமா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். அலை ஓசை, பா. கனவு, சிறுகதைகளுக்கு, என் பொ. செல்வனுக்கு கூட இருந்த வரவேற்பு குறைந்து கொண்டே போவதை நானே கடந்த இருபது முப்பது வருஷங்களில் பார்க்கிறேன். அவர் நாவல்களை பிரதி எடுப்பவர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள் என்பதும் தெளிவு. இன்றைய சாண்டில்யன், ஜெகசிற்பியன், விக்ரமன், கோவி எங்கே? பாஸ்கர் (நட்பாஸ்), சுஜாதாவைப் பற்றியும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. அவரது எல்லா எழுத்துகளையும் கண்மூடித்தனமாக ரசித்த நான் இன்று பாதிக்கு மேல் குப்பை என்று தள்ளுகிறேன். அவர் காலத்திலேயே பாலகுமாரன் அவரைப் பின் தள்ளி வாரப் பத்திரிகைகளின் சூப்பர்ஸ்டார் ஆகவில்லையா?

  சிமனோன் என்ன, ஜேம்ஸ் ஹாட்லி சேசுக்கு கூட ஒரு இடம் இருக்கிறது. ஆனால் யாரும் சிமனோன் விகடர் ஹ்யூகோ போல உயர்ந்த இலக்கியம் படைத்தவர் என்றோ, அவரது புத்தகங்கள் காலம் தாண்டி நிற்கும் இலக்கியம் என்றோ சொல்வதில்லை. நான் உலோகத்தை முழுமையாக படிக்கவில்லை. ஆனாலும் உலோகத்தை காடு போன்ற நாவல்களோடு ஒப்பிடமாட்டேன்.

  ஜெயமோகன், நன்றி! மீண்டும் இந்த மறுமொழிகளை எல்லாம் சேர்த்து இந்த பதிவை திருத்தி எழுத வேண்டும்…

  Like

 15. சிவாஜி கணேசன் நடிப்பை கொண்டாடிய நாம் இன்று அதே படத்தை பார்க்கும்போது ஏன் இவ் வளவு மிகை படுத் தபட்டுஉள்ள து என்கிறோம் ..சுழ்நிலைதாக்கங்களால் ஏற்பட்ட .மன ஓட்டங்களின் பரிணாம வளர்ச்சியே …இதற்கு அடிப்படை

  ..கல்கியின் பொன்னியின் செல்வன் பொழுது போக்கு நூல் என்று சொல்வ தை ஏற்க மனம் ஒப்பவில்லை
  .காலம் கடந்தும் நிற்கும் இலக்கியமே அது
  உண்மையிலே அது வரலாறு நவினங்களுக்கு ஒரு முன்னோடி இலக்கியமே ஆகும்

  Like

  • சோமையா, வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி!
   பொ. செல்வன் எனக்கு இலக்கியமே. இந்தத் தளத்தின் சக பொறுப்பாளன் பக்ஸ் உட்பட்ட பலருக்கு அது இலக்கியம் இல்லை. அவர்கள் சொல்ல வருவதும் புரிகிறது, ஆனால் அதில் எனக்கு இசைவில்லை.

   Like

   • என் கருத்தோடு இசைந்தமை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: