எனக்கு மகாபாரதத்தின் மீது பெரிய பித்து உண்டு. மகாபாரதத்தின் வாசனை லேசாக அடித்தாலே போதும் எனக்கு அந்த கதையோ சினிமாவோ பிடித்துவிடும். உண்மையில் மகாபாரதத்தை பின்புலமாக வைத்து வரும் படைப்புகளை சரியாக தரம் பார்க்க எனக்கு தெரியுமா என்பது எனக்கு சந்தேகம்தான். இதை விட சிறந்த இலக்கியம், மனிதர்களை சித்தரிக்கும் காவியம் எங்கும் இல்லை.
ராமாயணம் நல்ல இலக்கியம்தான். ஆனால் அதில் வரும் பாத்திரங்கள் பொதுவாக தெய்வப் பிறவிகள். ஹனுமான் போன்று ஒரு பக்தன் முன்னாலும் இருந்ததில்லை இனி மேலும் வரப் போவதில்லை. லக்ஷ்மணன் போல ஒரு தம்பி, பரதன் போல ஒரு தியாகச்சுடர், சீதை போல ஒரு பத்தினி, கும்பகர்ணன் போல ஒரு வீரன், இந்திரஜித் போல ஒரு ஒரு சாகசக்காரன், ராவணன் போல ஒரு அரசன் கிடையாது. உண்மையில் குறைகள் உள்ள பாத்திரம் ராமன்தான் – வாலியை மறைந்திருந்து கொன்றான், சீதையை நெருப்பில் ஏற்றினான், அப்பாவின் சாவுக்கு அவன்தான் காரணம். துரோணரின் சாவுக்கு முன் யுதிஷ்டிரனின் தேர் எப்போதும் பூமிக்கு இரண்டடி மேலேதான் நிற்குமாம். அவ்வளவு நல்ல மனிதனின் தேர் மண்ணில் படக் கூடாதாம். ராமாயணத்தில் அநேகமானவர்கள் நடக்கும்போது பூமிக்கு இரண்டடி மேலேதான் நடப்பார்கள். அவர்கள் எல்லாம் லட்சிய மனிதர்கள். ஆனாலும் நிஜமானவர்கள். அவர்கள் பிரச்சினைகளை நாமும் இன்று சந்திக்கிறோம். மகாபாரதத்துக்கு அடுத்தபடியாக சொல்லக் கூடிய தொன்மம் இதுதான்.
கிரேக்க காவியங்கள் – இலியட் (Iliad), ஆடிசி (Odyssey), மற்ற தொன்மங்கள் – பற்றி சொல்லவே வேண்டாம். அகிலிசுக்கும், யுலீசசுக்கும், ஹெக்டருக்கும் முன்னாலும் பின்னாலும் இரண்டு கடவுள்கள் நின்று கொண்டே இருப்பார்கள். சண்டையே அவர்களுக்குள்தான். நேராகவே சண்டை போட்டுத் தொலைக்கலாம். எரசும், அதீனாவும், சூசும், ஹேராவும், அப்போலோவும்தான் அடித்துக் கொள்கிறார்கள். வீரமும், விதியும், கடவுளர்களின் விருப்பமும்தான் கதையில் மீண்டும் மீண்டும். நட்பு கூட கொஞ்சம்தான் வருகிறது. எது நடந்தாலும் அதில் ஒரு கடவுளின் பங்கு இருக்கிறது. பாரிசுக்கும் ஹெலனுக்கும் நடுவில் இருப்பது காதலா? இல்லை அது வீனஸ் பாரிசுக்கு தந்த பரிசு. கடவுள்கள் ஆட்டி வைக்கும் பொம்மைகள்தான் இந்த கிரேக்க வீரர்கள்.
பழைய ஏற்பாடு கதைகள் காட்டும் உலகமே வேறு. அவற்றின் ஹீரோ ஜெஹோவாதான். அவர் கை காட்டினால் செங்கடல் பிரியும்; ஜெரிகோவின் சுவர்கள் இடிந்து விழும்; டேவிடின் கவண்கல் கோலியாத்தை சாய்க்கும். ஆனால் அவருக்கு எப்போதும் பால் மீது பொறாமை. அவருக்கு இருக்கும் பெரிய கவலையே பாலை கும்பிடுகிறார்களே என்பதுதான். மனித உணர்ச்சிகளுக்கு அங்கே இரண்டாம் இடம்தான். பழைய ஏற்பாடு என்பது ஒரு மதப் புத்தகம், இலக்கியம் இல்லை. சில இடங்கள் மட்டுமே – நோவா, அப்ரஹாம் ஐசக்கை பலி கொடுக்க துணிவது, ஜேகபின் மகன் ஜோசஃப், மோசஸ், டேவிட் போன்ற சில இடங்கள் மட்டுமே அது தொன்மங்களுக்கு வேண்டிய உச்சத்தை அடைகிறது.
பியோவுஃல்ப் (Beowulf) போன்ற நார்டிக் தொன்மங்கள் (இன்றைய நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க் நாடுகள்) வீரத்தை, இல்லை இல்லை உடல் பலத்தை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றன. பீமன் இந்த ஸ்காண்டிநேவிய கேளிக்கைக் கூடங்களில் தூள் கிளப்பி இருப்பான்.
ஆர்தர் ராஜா மற்றும் அவரது வட்டமேஜை வீரர்கள் (King Arthur and the Round Table Knights) போன்றவை ஒரு லட்சிய வீரனை உருவகப்படுத்துகின்றன. மனிதர்களின் ஒரு சிறு பகுதியையே அது காட்டுகிறது.
அரேபிய ஆயிரத்தொரு இரவுகளில் சில கதைகள் மட்டுமே சுவாரசியமானவை. அலிபாபா, அலாவுதீன், சிந்துபாத் கதையின் சில இடங்கள் மாதிரி. பொதுவாக போர் அடிக்கும் கதைகள்.
பாரசீகத்தின் தொன்மம் ஆன ஷாநாமா (Shahnama)வும் பொதுவாக போர்தான். ருஸ்தம் சோராபின் கதை மட்டுமே அதில் இலக்கியம்.
மகாபாரதம் இப்படி இல்லை. ஒவ்வொரு பாத்திரமும் அங்கே இரண்டு சரியான வழிகளில் ஒன்றை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். பீஷ்மர் நியாயத்தை தன் பிரதிக்னைக்காக பலி இடுகிறார். துரோணர் துருபதனிடம் தான் பட்ட அவமானத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறார். அதுவே அவரை செலுத்துகிறது. கர்ணனைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. திருதராஷ்டிரனுக்கு சரியோ தவறோ என் மகன் என்ற உணர்வுதான் வாழ்க்கை பூராவும். கிருஷ்ணன்! விதிகள் தெரியும், தர்ம நியாயம் தெரியும், அதை எப்போது மீற வேண்டும் என்றும் தெரியும். அய்யா நீரே ஆதர்ச புருஷர். சின்ன சின்ன காரக்டர்கள் கூட கலக்குகிறார்கள். சாத்யகியின் கையில் அநியாயமாக செத்த பூரிஸ்ரவஸ், கண்ணுக்கு மேல் விழும் சதையை துணியால் கட்டிக்கொண்டு போரிடும் பகதத்தன், பிறந்தவுடன் விட்டுவிட்டுப் போன அப்பாவுக்காக வந்து போரிடும் அரவான், மருமகன்களுக்கு எதிராக போரிடும் சல்யன் என்று மறக்க முடியாத காரக்டர்களால் நிரம்பியது இந்த இலக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரமும் உண்மையான, சதையும் ரத்தமும் உள்ள மனிதன். ஒவ்வொரு பாத்திரமும் எடுக்கும் முடிவுகளை நாம் இன்றும் நம் வாழ்க்கையில் தினமும் எடுக்கிறோம். எல்லா கதைகளும் மகாபாரதத்திலிருந்துதான் வருகிறது என்று லோகிததாஸ் சொன்னாராம். மிகவும் சரி. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். எத்தனை முறை படித்தாலும் போதவில்லை.
நாட்டார் தொன்மங்கள் பற்றி தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் உண்டு. மதுரை வீரன், முத்துப்பட்டன், காத்தவராயன், நல்லதங்காள் எல்லாமே ஏதோ ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து அ.கா. பெருமாள் நாட்டார் தொன்மங்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.
உங்களுக்கு தொன்மங்களில் ஆர்வம் உண்டா? பிடித்த தொன்மம் என்று ஏதாவது உண்டா? ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்களேன்!