தேவனின் “கோமதியின் காதலன்”

இது ஒரு மீள்பதிவு, சில திருத்தங்களுடன்.

அமெரிக்காவில் வாட்டர் கூலர் டாக் என்று சொல்வார்கள். தண்ணீர் குடிக்கும்போது சக பணியாளர்களிடம் என்ன பேசுவீர்கள்? நம் ஊரில் நான் வேலை செய்த வரைக்கும் சினிமா, கிரிக்கெட், சில சமயம் அன்றைக்கு பரபரப்பான செய்திகள். இப்போது டிவியும் இருக்கும், குறிப்பாக பெண்கள், அதுவும் ஆன்டிகள் பேசும்போது நேற்று சீரியலில் என்ன நடந்தது என்று பேசுவார்கள் என்று நினைக்கிறேன். (யாராவது நாலு பெண்கள் போடா MCP, பெண்களை ஸ்டீரியோடைப் செய்யாதே என்று எழுதுங்கம்மா!)

வாரப் பத்திரிகைகளில் தொடர்கதை என்பது எண்பதுகள் வரைக்கும் கூட மிக பாப்புலரான ஒன்று. அப்போதெல்லாம் டிவி சீரியலுக்கு பதிலாக அதுதான் பேசப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். என் அம்மா பேசியது எனக்கே தெரியும். பாலகுமாரன் இந்த வாரம் கரையோர முதலைகளில் என்ன எழுதினார், சிவசங்கரியின் தொடர்கதையில் அருண் அவன் நண்பனின் மனைவியிடம் தன் “காதலை” சொல்வானா (கதை பேர் நினைவில்லை, ஆனால் இந்த அருண்தாங்க எனக்கு கண்டாலே ஆகாது, ரொம்ப நல்லவரு!), இன்னும் ஒரு பத்து வருஷம் முன்னால் மணியன், அகிலன், நா.பா. என்ன எழுதுவார் என்று பேசியது இன்றைக்கு ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த வாரத் தொடர்கதை formatஐ மீறி இலக்கியம் உருவாவது கஷ்டம். ஒரு ஃபார்முலா இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்பம் இருக்க வேண்டும். அந்த திருப்பம் அடுத்த ஐந்து நிமிஷத்தில் மறந்துவிடுகிற மாதிரி இருக்கலாம், ஆனால் திருப்பம் இருந்தே ஆக வேண்டும். ஒரு வாரம் கழித்துதான் அடுத்த இன்ஸ்டால்மென்ட் வரும், அதற்குள் போன வாரம் படித்தது மறந்துவிடும். அதனால் போன வாரம் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். சாண்டில்யன்தான் இதை ஏறக்குறைய ஒரு மெக்கானிகல் ப்ராசஸ் ஆகவே மாற்றினார். முதல் இரண்டு பக்கம் போன வாரம் என்ன நடந்தது, அடுத்த இரண்டு பக்கம் போன வார திருப்பத்தைப் பற்றி, கடைசி இரண்டு பக்கம் கதவைத் திறந்தான், அதற்கு பின்னால் நின்றவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் (பின்னால் நிற்பவர் ஒரு பைசாவுக்கு பெற மாட்டார்) என்று எழுதுவார். கோப்பெருந்தேவி எங்கே என்று ஒரு சிறுகதை உண்டு. இந்த மாதிரி எழுத்தை பகடி செய்து எழுதப்பட்டது. அது ஒரு தொடர்கதையின் ஒரு வார இன்ஸ்டால்மென்ட் – கதை பூராவும் குதிரை மேல் உட்கார்ந்துகொண்டு கோப்பெருந்தேவி எங்கே எங்கே என்று யோசிப்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. தொடர்கதை முழு நாவலாக வரும்போது இந்த வாரம் ஒரு திருப்பம் ஃபார்முலாவின் குறை மிக நன்றாகத் தெரியும்.

இலக்கியம் உருவாவது கஷ்டம் என்றாலும் சுவாரசியம் குறையாமல் எழுதுபவர்கள் உண்டு. சுஜாதாவை குறிப்பாக சொல்லலாம். கல்கி இதில் நிபுணர். ரா.கி. ரங்கராஜன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, பி.வி.ஆர். மாதிரி சில மறக்கப்பட்ட எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதக் கூடியவர்கள். அகிலன், நா.பா. போன்றவர்கள் மிக பிரபலமாக இருந்தவர்கள். லக்ஷ்மி, சிவசங்கரி, மணியன், இந்துமதி, பாலகுமாரன் மாதிரி பலர் பெண்கள், அதுவும் ஆன்டிகள் மனதை கவர்ந்தவர்கள்.

தேவன் சில சமயம் இந்த ஃபார்முலாவை தாண்டி இருக்கிறார். அவரது ஸ்ரீமான் சுதர்சனம் எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் பணக் கஷ்டங்களை தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவார். ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஒரு கிளாசிக். துப்பறியும் சாம்பு ஃபார்முலாதான், ஆனால் மிக சுவாரசியமான புத்தகம். தேவன் பி.ஜி. வுட்ஹவுஸ் மாதிரி எழுதக் கூடியவர். ஆனால் வுட்ஹவுஸ் வார்த்தைகளில் விளையாடி நம்மை சிரிக்க வைப்பார். தேவன் சிசுவேஷனல் காமெடி எழுதுகிறார். சில சமயம் புன்னகைக்கிறோம்.

Gomathiyin Kadhalanதேவனின் கோமதியின் காதலன் ஃபார்முலா தொடர்கதைதான். விகடனின் பக்கங்களை நிரப்ப எழுதப்பட்ட ஒரு தொடர்கதை. இலக்கியம் நிச்சயமாக இல்லை. ஆனால் அந்த காலத் தொடர்கதைகள் எப்படி இருந்தன என்று நமக்கு அழகாக காட்டுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு quote உடன் ஆரம்பிக்கிறார். திருப்பம் வாராவாரம் உண்டு.

பல வருஷமாக சொல்லப்படும் கதைதான். ரங்கராஜன் தன் பேரை மாற்றிக் கொண்டு நாயகி வீட்டில் வேலைக்கு சேர்கிறான். அங்கே நான்தான் ரங்கராஜன் என்று சொல்லிக்கொண்டு மணி வருகிறான். ஆள் மாறாட்டம், காதல் என்று கதை போகிறது. உள்ளத்தை அள்ளித் தா படம் பார்த்ததில்லையா நீங்கள்? ஏறக்குறைய அந்த மாதிரி கதைதான்.

கதை முக்கியமே இல்லை. ஆனால் தேவன் காட்டும் ஒரு உலகம் – உயர் மத்திய வர்க்கம், பிராமணக் குடும்பம் (அப்பா மிராசுதார், மாமா ஜட்ஜ் இந்த மாதிரி) உண்மையாக இருக்கிறது. கதையின் சிறப்பான அம்சம் அதுதான். அதில் வரும் சின்ன காரக்டர்கள், அறிவிப்புகளை சொல்லிக் கொண்டே இருக்கும் சிறுவன், எதுகை மோனை பேசி பேசி தட்சணை கேட்கும் பிராமணர், சண்டை போடும் அண்ணன், ஊரிலிருந்து வரும் கணக்குப்பிள்ளை பையன் எல்லாம் சுவாரசியமான காரக்டர்கள்.

கோமதியின் காதலன் டி.ஆர். ராமச்சந்திரன், சாவித்திரி நடித்து படமாகவும் வந்தது. ஓடவில்லை.

தேவனின் புத்தகங்கள் அலையன்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கும். இது கிழக்கு வெளியீடாகவும் இப்போது வந்திருக்கிறது.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

கோ. காதலன் பற்றிய பதிவில் நாவலைப் பற்றி இரண்டு பாரா, பில்டப் பத்து பாரா இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? இதெல்லாம் ஒரு flow-வில் வருவது, இந்த முறை அப்படித்தான் வந்திருக்கிறது. 🙂