பரிகாசப் பறவையை கொல்வது….

யூதர்களுக்கு எதிராக ஹிட்லரின் அட்டகாசங்களை பறைசாற்றிய உலகம், சமகாலத்திலும், காலம் காலமாக நடைபெற்று வந்துக் கொண்டிருந்த பிற அட்டகாசங்களை பற்றியும் எந்தவித குற்றவுணர்ச்சியும் அடைந்ததாகத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக மனசாட்சி உள்ள மக்கள் சிலர் பிரச்சனைகளை பற்றிக் கதறினாலும் அவர்கள் கதறல் அவ்வளவு காதில் விழும்படியாக இல்லாததால் தவறுகள் மறுக்கப்பட்டு வருவதும், மறைக்கப் பட்டு வருவதும் அறிந்ததே. அரசியல் சாசனங்களில் கொடுமைகள் ஆதரிக்கப்பட்டு சட்டங்களாக மாறி கொடுமை புரிபவர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் பாதுகாவல் கவசங்களாகவும் இருந்து வந்திருக்கிறது.

ஹிட்லர் ஒரு தனி மனிதர். கொடுங்கோலர், சர்வாதிகாரி என்று தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர். ஒரு இனத்தை தன் தொலை நோக்கற்ற, மூர்க்கமான நம்பிக்கையால் கொடுமைப்படுத்தினார். ஆனால் ஒரு சமூகமே, ஒரு நாடே, ஏன் ஒரு கண்டமே (இன்னும் சொல்லப்போனால் பல கண்டங்கள்) எந்த வித வெட்கமும், கூச்சமும் இன்றி அடிமைத்தனத்தை ஆதரித்து வந்திருக்கிறது. அடிமைப்படுத்துவது எதோ பிறப்பிரிமை போல் பாவித்து வந்திருக்கிறது. இன்று ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் என்று கூறப்பட்டு வரும் கறுப்பினத்தவர்கள் (அன்றைய கால்கட்டத்தில் “நிக்கர்கள்” என்பது துவேசிக்க பயன்படும் வார்த்தை, “நீக்ரோ”க்கள் என்பது அரசியல்-சரி என்று கருதப்பட்டது. இன்று “நிக்கர்”, “நீக்ரோ”, ”கறுப்பர்கள்” அனைத்துமே தடை செய்யப்பட்ட வார்த்தைகள்) அன்று அமெரிக்க வெள்ளையர்களால் அடிமைகளாக விற்க்கப்பட்டும், அல்லல்களுக்கு ஈடுபடுத்தப்பட்டும், குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், பேச்சு சுதந்திரம், மதச் சுதந்திரம் வேண்டுமென்று ஐரோப்பாவை விட்டு “பில்கிரீம்களாக” வந்து சேர்ந்த வெள்ளையர்கள் வந்தது முதலே அந்த உரிமைகள் தங்களுக்கு மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். ஆப்ரிக்க-அமெரிக்க இனத்திற்கு இந்த உரிமையை அவர்கள் கொடுக்கவில்லை.

”சிவில் வார்”ன் போது ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள் எதோ மனித நேயத்திற்கு பயந்து, கடவுளுக்கு பயந்து, நியாய-அநியாத்திற்கு பயந்து கொடுக்கப்பட்ட உரிமைகள் அல்ல. ஆப்ரகாம் லிங்கனின் பேரத்தை ஏற்றுகொள்ள மறுத்த கான்ஃபெடரேட்ஸை தண்டிப்பதற்க்காக கொடுக்கப் பட்டதே ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் அளவான சுதந்திரம். அவர்களின் சுதந்திரத்தை, சுதந்திரம் கொடுத்த அரசாங்கமே மனதளவில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மக்களைக் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எல்லோரும் சமமாக கருதப்படாத நிலைமை இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியையும் தாண்டி வந்துள்ளது. மார்டின் லூதர் கிங் போராடங்கள் வரை நீடித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் நெல்லி ஹார்ப்பர் லீ, தான் சிறு குழந்தையாக இருந்த போது ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை பார்த்த அனுபவத்தை வைத்து 1959ல் To Kill a Mockingbird என்ற நாவலை எழுதி J.B.Lippincott & Co. என்ற பதிப்பகத்தார் மூலம் 1960 கோடையில் வெளியிட்டார்கள். நாவல் அந்த வருடத்தின் Pulitzer Prizeஐ தட்டிச் சென்றது. சந்தேகமே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு உலகின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக கூறுவேன்.

ஜெம், ஸ்கௌட் (ஜீன் லூயிஸ்) என்ற பள்ளிசெல்லும் சிறார்கள். மேகோம் கவுண்டியின் பிரபல வக்கீல் அட்டிகஸ் ஃபிஞ்ச் இவர்களின் தந்தை. மன்ரோ நகரம் சிறியது. அதில் ஒரு சிறிய தெருவில் வசித்து வருகிறார்கள். தாய், ஜெம் சிறுவயதாக இருக்கும் பொழுதே இறந்துபோகிறார். கல்பூர்னியா என்ற ஆப்ரிக்க-அமெரிக்கர்  வேலைக்காரி. டில் என்னும் சிறுவன் மிஸிஸிப்பியில் உள்ள மெரிடியன் கிராமத்தில் பெற்றோர்களின் பராமரிப்பு சரியில்லாமல் உறவினர்களிடம் வளருகிறான். ரேச்சல் என்ற தன் அத்தையின் வீடு மேகோம்மில் ஸ்கௌட்டின் வீட்டருகில் இருக்கிறது. கோடை விடுமுறைக்கு அங்கு வந்து தங்குகிறான். ஜெம், ஸ்கௌட், டில் மூவருக்கும் எதிர் வரிசையில் கடைசி வீட்டில் இருக்கும் மர்மமான பூ ரேட்லி என்ற மனிதரைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்ப்படுகிறது. அதன் மர்மத்தை ஒட்டி ஏற்படும் சம்பவங்கள், டூபோஸ், மாடி என்ற அண்டைவீட்டு மாதர்களுடன் ஏற்படும் சம்பவங்கள், இவைகளுடன் அந்த வருடக் கோடை முடிகிறது. அடுத்த வருடக் கோடை மிகவும் பயங்கரமாகி விடுகிறது. டில் மீண்டும் மெரிடியனிலிருந்து மேகோம் வருகிறான், ஸ்கௌட்டின் தந்தையை நீதிபதி ஜான் டெய்லர், டாம் ராபின்ஸன் என்ற ஒரு ஆப்ரிக்க-அமெரிக்க இளைஞருக்குகாக டிஃபன்ஸ் தரப்பில் ஆஜராகும்படி உத்தரவிடுகிறார். டாமின் மேல் சுமத்தப்பட்ட குற்றம் கற்பழிப்பு. மெயெல்லா இவல் என்ற பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக அந்தப் பெண்ணும், தந்தை பாப் இவெல்லும் சாட்சி கூறுகிறார்கள். அட்டிகஸ் ஃபிஞ்ச், டாமுக்காக வாதிடுகிறார்.வழக்கு நடக்கும் பொழுது ஸ்கௌட், ஜெம், டில் மூவரும் “கறுப்பினத்தவர்”களுடன் அமர்ந்து வழக்கை கேட்கிறார்கள். பின்னர் நடக்கும் சம்பவங்களை உங்கள் வாசிப்பணுபவத்திற்கு விட்டு விடுகிறேன்.

இதன் அனேக பகுதிகள் ஹார்பர் லீயின் சொந்தக்கதை தான். கதையை தன்மையில் (first person) ஸ்கௌட் சொல்லுகிறார். ஹார்ப்பர் லீ தான் நாவலில் ஸ்கௌட். பிரபல் அமெரிக்க நாவல் ஆசிரியர் ட்ருமேன் கபோட்டே (Truman Capote – In Cold Blood) தான் டில் என்ற மெரிடியன் சிறுவன். பிரான்ஸிஸ் கன்னிங்ஹாம் ஃபிஞ்ச் (ஹார்ப்பர் லீயின் உண்மையான தந்தை – வழக்கறிஞர்) தான் அட்டிகஸ் பிஞ்ச். நல்ல இலக்கியம் வாழ்வனுபவம் சார்ந்தே இருக்கும் என்று சொல்கிறார்கள். சொந்தக் கற்பனை என்று பறை சாற்றாமல் இந்த அனுபவத்தை எதையும் மறைக்காமல் ஹார்ப்பர் லீ தன் நாவலில் இடம்பெறச் செய்கிறார். சட்டங்கள் நியாமாக இல்லாவிட்டாலும் ஒரு சாரார் மனதில் எப்பொழுதும் நியாங்கள் இருந்து கொண்டே இருக்கும் என்பதும் , அதற்காக போராடத் துணிவார்கள் என்பதும் வெளிப்படுகிறது.

ரிச்மண்ட் பள்ளி மாவட்டம் (விர்ஜீனியா மாநிலம்) “டு கில் எ மாக்கிங்பேர்ட்” நாவலை தடை செய்ய படாத பாடு பட்டிருக்கிறது. காரணம் – தகாத இலக்கியமாம்.

பரிகாசப்பறவையை கொல்வது மிகப் பாவமான ஒரு செயல். ”பரிகாசப்பறவையை கொல்வது” என்பது என் தமிழாக்கம். இந்த புத்தகம் உண்மையில் தமிழில் டிரான்ஸ்லேட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அவசியம் படியுங்கள்.

இது கிரகரி பெக் நடித்து திரைப் படமாக வந்துள்ளது.

One thought on “பரிகாசப் பறவையை கொல்வது….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.