தமிழில் சரித்திர நாவல்கள்

நாலாம் வகுப்பில் தெரியாத்தனமாக மரியசூசை சாரிடம் “பாபரின் பேரன் அக்பராக இருந்தால் என்ன, அக்பரின் பேரன் பாபராக இருந்தால் என்ன, இதை எல்லாம் தெரிந்து கொள்வதில் வாழ்க்கைக்கு ஏதாவது பயன் உண்டா?” என்று கேட்டுவிட்டேன். வாத்தியார் வீட்டுப் பிள்ளையே இப்படி கேள்வி கேக்குதே, அய்யர் வீட்டுப் பிள்ளைங்கதான் படிப்பாங்க, நீயே இப்படி கேக்கறியே என்றெல்லாம் மூச்சு விடாமல் திட்டினார். நல்ல வேளை, அப்பா அம்மாவிடம் போட்டுக் கொடுக்கவில்லை.

ஆனால் எனக்கு உண்மையிலேயே அந்த சந்தேகம் இருந்தது. அப்போதுதான் சாண்டில்யன் புத்தகங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்திருந்தேன். சும்மா கதைப்புத்தகம் மாதிரி படிக்க வேண்டியவற்றை எதற்காக கஷ்டப்பட்டு உருப்போட்டு பரீட்சை எழுதி அவஸ்தைப்பட வேண்டும் என்று அப்போது புரியவில்லை. இப்போதும் புரியவில்லை. உண்மையில் சாண்டில்யன் நாவல்களில் படித்த சரித்திரம்தான் இன்னும் நினைவிருக்கிறது.

அநேகம் பேர் என் போல்தான் என்று நினைக்கிறேன். ஏதோ படித்தோம், அசோகர் சாலையின் இரு புறமும் மரங்களை நட்டார், அதற்கப்புறம் வந்த ஏதோ ஒரு குப்தர் அந்த மரங்களை பிடுங்கிப் போட்டுவிட்டு வேறு மரங்களை அதே சாலையின் இரு புறமும் நட்டார், அசோகர் வெட்டிய குளங்களை தூர் வாரினார் என்று பரீட்சையில் எழுதினோம், பாசானோம், பத்தாவது முடிந்த பிறகு மறந்துவிட்டோம் என்று இருப்பவர்கள்தான். எங்களுக்கெல்லாம் நல்ல சரித்திர நாவல் என்றால் என்ன? அதற்கும் நல்ல சமூக நாவலுக்கும் என்ன வித்தியாசம்?

எனக்கு (வழக்கம் போல) ரொம்ப சிம்பிளான definition-தான். சரித்திர நாவல் என்றாலும் ஒரு நல்ல நாவலுக்குண்டான எல்லா லட்சணங்களும் இருக்க வேண்டும். அது ஒரு காலகட்டத்தை, அன்றைய உலகத்தை காட்ட வேண்டும். என்றைக்கும் இருக்கக் கூடிய மனித இயல்பை, உச்சங்களை, அதீத உணர்ச்சிகளை, பிரச்சினைகளை, அன்றைய காலகட்டத்தின் வார்ப்புருவில், அன்றைய பிரச்சினைகளை வைத்து காட்ட வேண்டும். சிந்திக்க வைக்க வேண்டும். நல்ல பாத்திரப் படைப்பு இருக்க வேண்டும். சுவாரசியம் இருக்க வேண்டும், அலுப்புத் தட்டக் கூடாது. அப்படி இல்லாவிட்டால் அது ராஜராஜ சோழன் காலத்தில் இருந்தாலும் சரி, கருனாநிதிச் சோழன் காலத்தில் இருந்தாலும் சரி, எனக்குத் தேறப்போவதில்லை.

என்றாலும் அதன் களம் ஒரு நூறு வருஷம் முன்னாலாவது இருக்க வேண்டும். நூறு வருஷம் முன்னால் என்றால் ஒரு சம்பவத்தின் பரபரப்பு அடங்கி இருக்கும். அதைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி எழுதுவது கொஞ்சம் சுலபம். ருக்மிணி தேவி என்ற இளம் இந்தியப் பெண் அருண்டேல் என்ற வெள்ளைக்காரரை மணந்ததை எதிர்த்து அன்றைக்கு பக்கம் பக்கமாக வ.உ.சி. உட்பட்ட பலர் எழுதித் தள்ளினார்கள். அதில் எவ்வளவு xenophobia, எவ்வளவு தேசபக்தி என்று இன்றைக்கு ஆய்வு மனப்பான்மையோடு எழுதுவது கொஞ்சம் சுலபம். புலிகேசி மகேந்திரவர்மனை வென்றதாகவும், மகேந்திரவர்மன் புலிகேசியை வென்றதாகவும் – இரண்டு விதமாகவும் – கல்வெட்டு இருக்கிறதாம். இந்த முரணை வைத்து மகேந்திரவர்மன் காலத்தில் எழுதினால் தலை போய்விடலாம். இன்றைக்கு ஆய்வு செய்து எழுத முடியும்.

தமிழில் அப்படி நல்ல சரித்திர நாவல் என்று இருப்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதற்கு கல்கி ஒரு முக்கிய காரணம்.

1895-இலேயே முதல் சரித்திர நாவல் (மோகனாங்கி) வந்துவிட்டதாம். இருந்தாலும் தமிழர்களுக்கு 1942-இல் வந்த பார்த்திபன் கனவுதான் முதல் சரித்திர நாவல். தொடர்கதையாக வந்தது. சமீபத்தில் மீண்டும் படித்தேன், திரைப்படமும் பார்த்தேன். வாண்டு மாமா லெவலில் உள்ள நாவல். ரோமியோ ஜூலியட் மாதிரி ஒரு காதல் ஜோடி, சுலபமாக யூகிக்கக்கூடிய முடிச்சுகள், திருப்பங்கள், இன்டர்நெட்டும் ஈமெயிலும் இல்லாத காலத்திலேயே நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் நடப்பதைத் அடுத்த நிமிஷமே தெரிந்து கொள்ளும் சக்கரவர்த்தி, caricature என்ற லெவலில் உள்ள பாத்திரங்கள் என்று பலவிதமான பலவீனங்கள் உள்ள நாவல். எனக்கு இது அவருக்கு ஒரு practice நாவலோ, எழுதிப் பழகி கொண்டாரோ என்று தோன்றுவதுண்டு. Fluff என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் இந்த நாவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாசகர்கள் விரும்பிப் படித்திருக்க வேண்டும். யூகிக்கக் கூடிய கதை என்றாலும் கல்கி அதை சுவாரசியமாகத்தான் எழுதி இருக்கிறார். அவரது சரளமான நடை நிச்சயமாக உதவி இருக்கும். பத்திரிகை பலம் அவருக்கு அப்போது பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கி இருக்க வேண்டும். கல்கி எழுதியது ஒரு முன்னோடி நாவல். அன்றைக்கு அது ஒரு பெரும் சாதனையே. ஒரு கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், காவிரி பற்றிய வர்ணனைகள் என்று அவர் எழுதியதை இன்றும் எட்டு ஒன்பது வயதில் படித்தால் சுவையாகத்தான் இருக்கும். ஒரு முன்னோடி முயற்சிக்கு உண்டான பலங்களும் பலவீனங்களும் அதில் நிறைய இருக்கின்றன. அவரைச் சொல்லியும் குற்றமில்லை, ஏனென்றால் அவரது ரோல் மாடல்கள் அலெக்சாண்டர் டூமாவும், வால்டர் ஸ்காட்டும்தான்.

கல்கி கோடு போட்டார், ரோடு போட இன்னும் யாரும் வரவில்லை. அந்த நாவலின் தாக்கத்தில் இருந்து இன்னும் தமிழகம் முழுதாக வெளிவரவில்லை. அன்று அவர் நிறுவிய parameters-ஐ ஒரு பரம்பரையே தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது. சரித்திரக் கதை என்றால் அது ராஜா-ராணி, இளவரசன், இளவரசி, அவர்களுக்கு உதவி செய்யும் மந்திரிகள், ஒற்றர்கள், போர்கள், அரண்மனைச் சதிகள், அங்கங்கே தமிழ்(இந்திய) கலை+இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பெருமிதம், ஃபார்முலா மனிதர்கள், எம்ஜிஆர் படம் மாதிரி கொஞ்சம் வீரம்+சாகசம்+காதல்+அன்பு+தந்திரம் எல்லாம் கலந்த ஒரு மசாலா என்றே சரித்திரக் கதை ஆசிரியர்களின் புரிதல் இருக்கிறது.கல்கி போட்ட கோட்டிலேயேதான் அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். சரித்திரக் கதைகளில் இருக்கும் எத்தனையோ possibilities பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. உதாரணமாக ராஜராஜ சோழன் பெரிய போர்களில் ஈடுபட்டான். ஆயுதம் தயாரிக்க வேண்டிய இரும்பு எங்கிருந்து கிடைத்தது? ஆழ்வார்க்கடியான் வைஷ்ணவப் பிராமணன். ஜாதி ஆசாரம் மிகுந்திருந்த அந்தக் காலத்தில் அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்தான்? தில்லியிலிருந்து அஹமத் நகர் வர அன்றைக்கு இரண்டு மூன்று மாதம் ஆகி இருக்கும். இன்னும் கொஞ்சம் படை வேண்டும் என்றால் அஹமத் நகரில் இருப்பவன் என்ன செய்வான்? கபீரின் சூஃபியிசம் அன்றைய ஜாதி கட்டுப்பாடுகளை தாக்கி இருக்கும். இதை டில்லி சுல்தான்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? இதை எல்லாம் வைத்து அருமையான கதைகள் எழுதலாம். ஆனால் இங்கே கதாபாத்திரங்களின் பிரச்சினைகள் எப்போதுமே அரண்மனைச் சதிகள்தான்.

கல்கி அடுத்தபடி சிவகாமியின் சபதம் எழுதினார். அதில் மெலோட்ராமா அதிகம். ஆனால் பாத்திரப் படைப்பு, கதையின் சுவாரசியம் எல்லாம் உயர்ந்திருக்கின்றன. நாகநந்தி கொஞ்சம் அதீதம்தான், ஆனால் எல்லா பாத்திரங்களிலும் நம்பகத்தன்மை அதிகம். கார்ட்போர்ட் கட்அவுட் மாதிரி இல்லை. ஆயனருக்கு அரண்மனையை தாண்டி அஜந்தா ஓவியங்களைப் பற்றி கவலைப்பட முடிந்தது. தமிழின் சிறந்த சரித்திர நாவல்களில் ஒன்று. ஒரு விதத்தில் பராசக்தி திரைப்படம் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். மெலோட்ராமாதான், ஆனால் நிச்சயமாக பாருங்கள் என்று சிபாரிசு செய்வேன்.

அவரது சாதனை அடுத்து வந்த பொன்னியின் செல்வன்தான். இதை விட சிறந்த கதைப் பின்னலை நான் அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன். கதாபாத்திரங்கள் மிகவும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கின்றன. நந்தினி அதீதமான பாத்திரம்தான், ஆனாலும் நம்பகத்தன்மை இருக்கிறது. கட்டுக்கோப்பான கதை, பெருமிதம், அருமையான பாத்திரங்கள், கதை முடிச்சுகள், சுவாரசியம், எல்லாம் உண்டு. அரண்மனைச் சதிகள் என்ற genre -இல் இதை விட சிறந்த புத்தகம் இன்னும் வரவில்லை. (எனக்குத் தெரிந்து) ஒரு டூமாவை விட, ஒரு ஸ்காட்டை விட பல மடங்கு சிறந்த நாவல். லே மிசராபில்ஸ் நாவலின் கதைப் பின்னலை இதனுடன் ஒப்பிடலாம். ஆனால் ஹ்யூகோ அந்தக் கதைப் பின்னலின் மூலம் மனித மனதின் உச்சங்களை எல்லாம் காட்டுகிறார், கல்கி அந்தப் பக்கம் போவதே இல்லை. இருந்தாலும் இது இலக்கியமே. மொழிபெயர்க்கப்பட வேண்டிய நாவலே.

தமிழின் சிறந்த சரித்திர நாவல் ஆசிரியர் கல்கியே. அவரது பாணியின் உச்சம் பொன்னியின் செல்வன். அதன் கதைப்பின்னல் மூலம் அது இலக்கியம் என்ற ஸ்தானத்தை அடைகிறது. அடுத்து வந்தவர்கள் பொ. செல்வன் அளவுக்கு இன்னும் போகவில்லை. சி. சபதம் அளவுக்குப் போனவர்களே அபூர்வம்.

ஜெயமோகன் பொ. செல்வன், சி. சபதம் இரண்டையும் தன் historical romances முதல் பட்டியலிலும் பா. கனவை இரண்டாம் பட்டியலிலும் சேர்க்கிறார். எஸ்.ரா. என் கட்சி போலிருக்கிறது. அவருக்கு பொ. செல்வன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று.

ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா பொ. செல்வனை ஆடியோ வடிவத்தில் இங்கே பதிவு செய்து கொண்டிருக்கிறார். மூன்று நாவல்களுமே சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கக் கிடைக்கிறது.

கல்கி ஒரு முன்னோடி, அவரைத் தாண்டி அடுத்தவர்கள் போகாததற்கு அவரைக் குறை சொல்லலாமா என்றும் தோன்றுகிறது. கல்கியின் பாணியை எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு பேர்தான் தாண்டி இருக்கிறார்கள். ஒருவர் பிரபஞ்சன். இன்னொருவர் பாலகுமாரன். முதலில் கல்கி பாணி எழுத்தாளர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதிவிட்டு அவர்களைப் பற்றி ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன். ஏற்கனவே பதிவு ரொம்ப நீளமாகிவிட்டது, பகுதி பகுதியாகத்தான் எழுத வேண்டும்.

தொடரும்…

18 thoughts on “தமிழில் சரித்திர நாவல்கள்

  1. //உதாரணமாக ராஜராஜ சோழன் பெரிய போர்களில் ஈடுபட்டான். ஆயுதம் தயாரிக்க வேண்டிய இரும்பு எங்கிருந்து கிடைத்தது? ஆழ்வார்க்கடியான் வைஷ்ணவப் பிராமணன். ஜாதி ஆசாரம் மிகுந்திருந்த அந்தக் காலத்தில் அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்தான்? //
    I think Udaiyar novel stands out in this. Oru kovil katrathaala,naatla enaalam impact irukumnu theliva oru sketch irukum indha novel-la.

    Like

  2. ஒரு நாவல் எந்த ஒரு அறிவுத்தளத்தையும் தன்னுடைய கதைக்கான களமாக கொள்ளலாம். அறிவிய்லை களமாகக் கொண்டால் அது அறிவியல் நாவல். வரலாற்றை களமாகக் கொண்டால் அது வரலாற்று நாவல்.

    இலக்கியப்படைப்பு எதை களமாகக் கொள்கிறதோ அதை வாழ்க்கையைப்பற்றியும் பிரபஞ்சத்தைப்பற்றியும் அறிந்துகொள்வதற்காக பயன்படுத்துகிறது. அந்நிலையில் அது வரலாற்றையோ அறிவியலையோ குறியீட்டுத்தளத்துக்கு நகர்த்தி விடுகிறது.

    அவ்வாறுசெய்யாமல் வெறும் வாசக ஈர்ப்பை மட்டுமே இலக்காகக் கொண்டு எழுதப்படும் நாவல்களை இலக்கியமாக கொள்ளலாகாது. ரொமான்ஸ் என்ற வகையிலேயே சேர்க்கவேண்டும்

    தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம்[ நா.பார்த்த சாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும். அக்கால அறிவுலகம் பதிவாகிய நாவல் அது

    என் நோக்கில் தமிழின் முதல் வரலாற்று [இலக்கிய]நாவல் மானுடம் வெல்லும் [பிரபஞ்சன்] தான்

    Like

  3. ஜெயமோகன், // ஒரு நாவல் எந்த ஒரு அறிவுத்தளத்தையும் தன்னுடைய கதைக்கான களமாக கொள்ளலாம். அறிவிய்லை களமாகக் கொண்டால் அது அறிவியல் நாவல். வரலாற்றை களமாகக் கொண்டால் அது வரலாற்று நாவல்.
    இலக்கியப்படைப்பு எதை களமாகக் கொள்கிறதோ அதை வாழ்க்கையைப்பற்றியும் பிரபஞ்சத்தைப்பற்றியும் அறிந்துகொள்வதற்காக பயன்படுத்துகிறது. அந்நிலையில் அது வரலாற்றையோ அறிவியலையோ குறியீட்டுத்தளத்துக்கு நகர்த்தி விடுகிறது. //

    கஷ்டப்பட்டு என்னவெல்லாமோ எழுதியதை ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். 🙂 நன்றி!

    // வெறும் வாசக ஈர்ப்பை மட்டுமே இலக்காகக் கொண்டு எழுதப்படும் நாவல்களை இலக்கியமாக கொள்ளலாகாது. ரொமான்ஸ் என்ற வகையிலேயே சேர்க்கவேண்டும் // சில சமயம் அப்படிப்பட்ட ரொமனாஸ்கள் எப்படியோ இலக்கியம் என்ற அளவுக்கு உயர்ந்துவிடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்த process-ஐ விவரிக்கத் தெரியவில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ், ஹாரி பாட்டர், பொ. செல்வன், ஸ்ரீமான் சுதர்சனம் என்று பல உதாரணங்களை சொல்லலாம். ஏன், எழுதப்பட்ட காலத்தில் ஈடிபஸ் ரெக்சும், மாக்பெத்தும் கூட ரொமான்ஸ் என்றே கருதப்பட்டிருக்கலாம்.

    ரம்யா, உடையார் படிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது…

    Like

  4. எனது மலர்ச்சோலை மங்கையையும் கயலையும் படித்து விட்டு கருத்தை சொல்லுங்களேன்.

    அன்புள்ள
    டாக்டர் எல். கைலாசம்

    Like

    1. டாக்டர் கைலாசம், உங்களுக்கு நல்வரவு!
      உங்கள் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்? மின்வடிவம் இருக்கிறதா?

      Like

      1. Dear,

        My historical novel Mani Makudam is released on the function. Life sketches of Kulasekara Alwar is elaborately brought out in the novel. Vanathi publication has brought out the book very nicely.The book release function to be held at St George Anglo Indian Higher Secondary School, 738 Ponndamalli High Road, (Opp to Pacchiappa College) Chennai 600 030, on 7th January 2012 at 4.00p.m. in the book fair function

        You honourable presence in the function is requested. If you feel inconvenient, Please ignore this message. All my books are available at vanathi. On line could be done through udumalai.com chennaishopping.com

        Yours

        Dr L Kailasam,

        Author : Malarcholai Mangai, Kayal, Mani Makudam

        Like

      2. டாக்டர் கைலாசம், வாழ்த்துக்கள். சென்னையில் இப்போது இல்லாததால் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

        Like

  5. விஷ்ணுப்ரியா என்ற புனை பெயரில் யாரேனும் பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவலை எழுதியுள்ளாரா?

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.