மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் – சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”

மீள்பதிப்பு. (சிறு திருத்தங்களுடன்)

மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் என்ற குறுநாவல்தான் நினைவு வருகிறது. ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மன நிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ‘ என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை என்பதும் ஒரு நல்ல ஜல்லிக்கட்டு சிறுகதை.

உங்களுக்கு நினைவிருக்கும் நல்ல மாட்டுப்பொங்கல், பொங்கல், ஜல்லிக்கட்டு கதைகள் பற்றி எழுதுங்களேன்!

பாலகுமாரனின் சரித்திரக் கதைகள்

பாலகுமாரன் எழுதிய சரித்திர நாவல்களில் உடையார் பெரிதும் பேசப்படுகிறது. நான் இன்னும் படிக்கவில்லை. உடையார் தவிரவும் பல சரித்திர குறுநாவல்களை எழுதி இருக்கிறார். இவை அனேகமாக மாத நாவல் ஃபார்மட்டில் எழுதப்பட்டவை. சில சமயம் மாத நாவல் ஃபார்முலாவை மீறி நல்ல கதைகள் வந்திருக்கின்றன.

பாராட்ட வேண்டிய விஷயம் ஒன்று – பாலகுமாரனின் சரித்திரக் கதைகளில் இளவரசிகளுக்கும், அரண்மனை சதிகளுக்கும், மதியூக மந்திரிகளுக்கும் பெரிய இடம் கிடையாது. (ஆனால் தாசிகளுக்கு பெரிய இடம் உண்டு. 🙂 ) ஒரு கிராமத்தில் ஜாதியின் தாக்கம் என்ன, பெண்கள் மீது போரின் தாக்கம் என்ன, கோவில் வேலை செய்பவனின் ஆசாபாசங்கள் என்று எழுதுவார். சில சமயம் ஒரு கோவில் கல்வெட்டை ஒரு கதையாக மாற்றுவார். அனேகமாக எல்லா கதைகளுமே சோழ அரசு ஓங்கி இருந்த சமயத்தில்தான் – ராஜராஜன்தான் அவருக்கு ஹீரோ என்று நினைக்கிறேன். பிரபஞ்சனுக்கு அடுத்தபடி இவர் ஒருவர்தான் இப்படி சாதாரண மக்களைப் பற்றி எழுதுகிறார் என்று நினைக்கிறேன். தனித்தனி கதைகள் பிரமாதமாக இல்லை என்றாலும் எல்லா கதைகளையும் சேர்த்து வைத்து படிக்கும்போது ஒரு நல்ல ambience இருக்கிறது.

கவிழ்ந்த காணிக்கை: ஆதித்த பெருந்தச்சன் பிரமாண்ட நந்தி சிலை செதுக்குகிறார். அதற்குள் ஒரு தேரை இருக்கிறது, அதை மகன் கண்டுபிடிக்கிறான். தவிர்க்கலாம். இன்னும் இந்த உடைபட்ட பிரமாண்ட நந்தி திருவக்கரை என்ற ஊரில் இருப்பதாக பாலகுமாரன் சொல்கிறார். இது எங்கிருக்கிறது? யாராவது இப்படி ஒரு நந்தியை பார்த்திருக்கிறீர்களா? (ராஜராஜ சோழன் காலம்)

முதல் யுத்தம்: காந்தளூர்சாலையை கலமறுத்தது. காந்தளூர்சாலையை போர்ப்பயிற்சி தரும் ஒரு கடிகையாக காட்டுகிறார். அங்கே படித்த அருண்மொழியே அதை அழிக்க துணை செய்கிறான். நடுவில் பாலகுமாரனுக்கு பிடித்த தாசிகள் வந்து போகிறார்கள். படிக்கலாம், முழு மோசம் என்று சொல்வதற்கில்லை. (ராஜராஜ சோழன் காலம்)

இனிய யட்சிணி: இதிலும் மந்திரம், மாயம் என்று இழுத்தாலும் இதை சரித்திரக் கதை என்றுதான் சொல்ல வேண்டும். சோழர் காலத்தில் வேளாள வீரன் ஒருவன் மயிலை பகுதியில் தலைவனாகிறான். ராஜா, சிற்றரசன், ராணி, சேடி, மந்திரி, ஒற்றன் எல்லாரையும் விட்டுவிட்டு இதை மக்களின் கதையாக எழுதி இருக்கிறார். ஜாதி டென்ஷன்களைப் பற்றி எழுதி இருக்கிறார். பிரச்சினை என்னவென்றால் இந்தக் கதையில் இன்றைய காலத்தைக் கலந்து உச்சிஷ்ட கணபதி மந்திரம், ஆவிகள் என்றெல்லாம் இரண்டு மூன்று கதைகளைக் கலக்கிறார். பிரமாதமான கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் இப்படி முயற்சி செய்ததற்காகவே படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். (ராஜராஜ சோழன் காலம்)

மாக்கோலம்: இது wish fullfilment , பகல் கனவு, fantasy கதை. பாலகுமாரன் அநிருத்த பிரம்மராயரின் மகன் அருண்மொழியின் மறு ஜன்மமாம். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி (எழுத்தாளர் திலகவதி மாதிரி இருக்கிறது) இன்னொரு மறுபிறப்பாம். முன் ஜன்மக் கடனை இந்த ஜன்மத்தில் தீர்க்கிறார்களாம். பஸ்ஸில் படிக்கலாம். (ராஜராஜ சோழன் காலம்)

என்னருகில் நீ இருந்தால்: கச்சிதமான, நல்ல கதை. ராஜராஜ சோழனின் படைத்தலைவன் காரி குளிப்பாகை இப்போது தாம்பரத்தில் பிறந்திருக்கிறான். அவனுக்கு ராஜராஜன், மற்றும் அவரது சபையினரின் ஆவிகள் அறிவுரை சொல்லி அவனைப் பிறவி பெருங்கடலிலிருந்து மீட்கின்றனர். இதற்கு நான் எழுதி இருக்கும் கதை சுருக்கம் சரியில்லை, நேராக புத்தகத்தை படித்துக் கொள்ளுங்கள். ஜெம். ஆனால் இதை சரித்திரக் கதை என்று சொல்லலாமா என்று எனக்கு சந்தேகம்தான்.

ஒரு காதல் நிவந்தம்: ராஜேந்திர சோழன் கங்கை கொண்டாயிற்று. ஆனால் இன்னும் வீட்டில் நிம்மதி இல்லை. பெண்களுக்கு போரினால் ஏற்படும் இழப்பை ராஜேந்திரர் புரிந்துகொள்ளவில்லை அதனால்தான் அரண்மனைக்கே வருவதில்லை என்று அத்தைக்காரி குந்தவை நினைக்கிறாள். பெண்களின் மனதை புரிந்துகொள்ள ஒரு அணுக்கியை – தளிச்சேரி பெண், தேவரடியார், தாசியை – ஏற்பாடு செய்கிறார். அந்த தாசி – பரவை – அவரிடம் தைரியமாக பேசி அவருக்குள் இருக்கும் நியாய உணர்வை தூண்டிவிடுகிறாள். பரவை நாச்சியார் ஒரு கோவில் கட்டி இருக்கிறாளாம் – விழுப்புரம் அருகே பனையவரம் என்ற இடத்தில். யாருக்காவது தெரியுமா?

நந்தாவிளக்கு: போர், வென்ற தரப்பு பெண்களைக் கைப்பற்றி அடிமையாகவும், தாசியாகவும் மாற்றுகிறது. போர் புரிந்தால் கிடக்கும் பரிசுகளை எண்ணியும், ராஜா மேல் இருக்கும் முரட்டு பக்தியாலும், ஆண் வர்க்கம் பொதுவாக போரை விரும்புகிறது. பெண்கள் விரும்பவில்லை என்று கதை போகிறது. கதை பிரமாதமாக இல்லை, ஆனால் படிக்கலாம். (ராஜேந்திர சோழன் காலம்)

கல் திரை: சென்னை அருகே திருவிடந்தை என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டை வைத்து இந்தக் கதை. பக்கத்து ஊர் என்பது இந்தக் கதையின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

கடிகை: காந்தளூர்சாலை பற்றி எழுத வேண்டும் என்று ஆசை. பொன்னியின் செல்வனைத் தொடர வேண்டும் என்று ஒரு ஆசை. தாசீல் பண்ண ஆசை இருந்தாலும் கழுதைதான் மேய்த்திருக்கிறார்.

ராஜகோபுரம்: கவி காளமேகம், கோனேரிராஜன் ஆகியோரை வைத்து ஒரு கதை. பாலகுமாரன் கதையைப் பற்றி கொஞ்சமாவது திட்டமிட்டு எழுத வேண்டும். வில்லன் மாதிரி வருபவன் திடீரென்று ஹீரோ மாதிரி நடந்து கொண்டால் எப்படி?

செப்புப் பட்டயம்: ஒரு தேவரடியார் பெண் உடன்கட்டை ஏறிவிட அவள் குழந்தைகளுக்கு அப்பா சொத்தில் பங்கு கிடைத்தது ஒரு செப்பேடாக இருக்கிறதாம். அதை வைத்து ஒரு கதை.

யானைப்பாலம்: யானைகளின் முதுகில் கட்டைகளை வைத்து பாலமாக்கி மகாநதியைக் கடந்ததாக ஒரு கதை.

இவை தவிர ஜெம்பை கோவில் கல்வெட்டை பின்னணியிலும் (சோழர் காலம்), சுசீந்திரம் கோவில் பின்னணியிலும் (நாயக்கர் காலம்) இரண்டு கதைகள் நினைவு வருகின்றன. கதை பெயர் மறந்துவிட்டது.

இந்த மாதிரி உள்ள கதைகளை ஒரு தொகுப்பாகப் போட்டால் நன்றாகப் போகும் என்று நினைக்கிறேன். அநேகக் கதைகள் சுமார்தான். ஆனால் ஒரு தொகுப்பாக வருவது நல்ல ambience-ஐ உருவாக்கும்.

தொடர்புடைய சுட்டிகள்:
தமிழில் சரித்திர நாவல்கள்: கல்கி பாணி, கல்கியின் வாரிசுகள், படிக்க விரும்புபவை

பிரபஞ்சனின் மானுடம் வெல்லும்