பாலகுமாரனின் சரித்திரக் கதைகள்

பாலகுமாரன் எழுதிய சரித்திர நாவல்களில் உடையார் பெரிதும் பேசப்படுகிறது. நான் இன்னும் படிக்கவில்லை. உடையார் தவிரவும் பல சரித்திர குறுநாவல்களை எழுதி இருக்கிறார். இவை அனேகமாக மாத நாவல் ஃபார்மட்டில் எழுதப்பட்டவை. சில சமயம் மாத நாவல் ஃபார்முலாவை மீறி நல்ல கதைகள் வந்திருக்கின்றன.

பாராட்ட வேண்டிய விஷயம் ஒன்று – பாலகுமாரனின் சரித்திரக் கதைகளில் இளவரசிகளுக்கும், அரண்மனை சதிகளுக்கும், மதியூக மந்திரிகளுக்கும் பெரிய இடம் கிடையாது. (ஆனால் தாசிகளுக்கு பெரிய இடம் உண்டு. 🙂 ) ஒரு கிராமத்தில் ஜாதியின் தாக்கம் என்ன, பெண்கள் மீது போரின் தாக்கம் என்ன, கோவில் வேலை செய்பவனின் ஆசாபாசங்கள் என்று எழுதுவார். சில சமயம் ஒரு கோவில் கல்வெட்டை ஒரு கதையாக மாற்றுவார். அனேகமாக எல்லா கதைகளுமே சோழ அரசு ஓங்கி இருந்த சமயத்தில்தான் – ராஜராஜன்தான் அவருக்கு ஹீரோ என்று நினைக்கிறேன். பிரபஞ்சனுக்கு அடுத்தபடி இவர் ஒருவர்தான் இப்படி சாதாரண மக்களைப் பற்றி எழுதுகிறார் என்று நினைக்கிறேன். தனித்தனி கதைகள் பிரமாதமாக இல்லை என்றாலும் எல்லா கதைகளையும் சேர்த்து வைத்து படிக்கும்போது ஒரு நல்ல ambience இருக்கிறது.

கவிழ்ந்த காணிக்கை: ஆதித்த பெருந்தச்சன் பிரமாண்ட நந்தி சிலை செதுக்குகிறார். அதற்குள் ஒரு தேரை இருக்கிறது, அதை மகன் கண்டுபிடிக்கிறான். தவிர்க்கலாம். இன்னும் இந்த உடைபட்ட பிரமாண்ட நந்தி திருவக்கரை என்ற ஊரில் இருப்பதாக பாலகுமாரன் சொல்கிறார். இது எங்கிருக்கிறது? யாராவது இப்படி ஒரு நந்தியை பார்த்திருக்கிறீர்களா? (ராஜராஜ சோழன் காலம்)

முதல் யுத்தம்: காந்தளூர்சாலையை கலமறுத்தது. காந்தளூர்சாலையை போர்ப்பயிற்சி தரும் ஒரு கடிகையாக காட்டுகிறார். அங்கே படித்த அருண்மொழியே அதை அழிக்க துணை செய்கிறான். நடுவில் பாலகுமாரனுக்கு பிடித்த தாசிகள் வந்து போகிறார்கள். படிக்கலாம், முழு மோசம் என்று சொல்வதற்கில்லை. (ராஜராஜ சோழன் காலம்)

இனிய யட்சிணி: இதிலும் மந்திரம், மாயம் என்று இழுத்தாலும் இதை சரித்திரக் கதை என்றுதான் சொல்ல வேண்டும். சோழர் காலத்தில் வேளாள வீரன் ஒருவன் மயிலை பகுதியில் தலைவனாகிறான். ராஜா, சிற்றரசன், ராணி, சேடி, மந்திரி, ஒற்றன் எல்லாரையும் விட்டுவிட்டு இதை மக்களின் கதையாக எழுதி இருக்கிறார். ஜாதி டென்ஷன்களைப் பற்றி எழுதி இருக்கிறார். பிரச்சினை என்னவென்றால் இந்தக் கதையில் இன்றைய காலத்தைக் கலந்து உச்சிஷ்ட கணபதி மந்திரம், ஆவிகள் என்றெல்லாம் இரண்டு மூன்று கதைகளைக் கலக்கிறார். பிரமாதமான கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் இப்படி முயற்சி செய்ததற்காகவே படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். (ராஜராஜ சோழன் காலம்)

மாக்கோலம்: இது wish fullfilment , பகல் கனவு, fantasy கதை. பாலகுமாரன் அநிருத்த பிரம்மராயரின் மகன் அருண்மொழியின் மறு ஜன்மமாம். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி (எழுத்தாளர் திலகவதி மாதிரி இருக்கிறது) இன்னொரு மறுபிறப்பாம். முன் ஜன்மக் கடனை இந்த ஜன்மத்தில் தீர்க்கிறார்களாம். பஸ்ஸில் படிக்கலாம். (ராஜராஜ சோழன் காலம்)

என்னருகில் நீ இருந்தால்: கச்சிதமான, நல்ல கதை. ராஜராஜ சோழனின் படைத்தலைவன் காரி குளிப்பாகை இப்போது தாம்பரத்தில் பிறந்திருக்கிறான். அவனுக்கு ராஜராஜன், மற்றும் அவரது சபையினரின் ஆவிகள் அறிவுரை சொல்லி அவனைப் பிறவி பெருங்கடலிலிருந்து மீட்கின்றனர். இதற்கு நான் எழுதி இருக்கும் கதை சுருக்கம் சரியில்லை, நேராக புத்தகத்தை படித்துக் கொள்ளுங்கள். ஜெம். ஆனால் இதை சரித்திரக் கதை என்று சொல்லலாமா என்று எனக்கு சந்தேகம்தான்.

ஒரு காதல் நிவந்தம்: ராஜேந்திர சோழன் கங்கை கொண்டாயிற்று. ஆனால் இன்னும் வீட்டில் நிம்மதி இல்லை. பெண்களுக்கு போரினால் ஏற்படும் இழப்பை ராஜேந்திரர் புரிந்துகொள்ளவில்லை அதனால்தான் அரண்மனைக்கே வருவதில்லை என்று அத்தைக்காரி குந்தவை நினைக்கிறாள். பெண்களின் மனதை புரிந்துகொள்ள ஒரு அணுக்கியை – தளிச்சேரி பெண், தேவரடியார், தாசியை – ஏற்பாடு செய்கிறார். அந்த தாசி – பரவை – அவரிடம் தைரியமாக பேசி அவருக்குள் இருக்கும் நியாய உணர்வை தூண்டிவிடுகிறாள். பரவை நாச்சியார் ஒரு கோவில் கட்டி இருக்கிறாளாம் – விழுப்புரம் அருகே பனையவரம் என்ற இடத்தில். யாருக்காவது தெரியுமா?

நந்தாவிளக்கு: போர், வென்ற தரப்பு பெண்களைக் கைப்பற்றி அடிமையாகவும், தாசியாகவும் மாற்றுகிறது. போர் புரிந்தால் கிடக்கும் பரிசுகளை எண்ணியும், ராஜா மேல் இருக்கும் முரட்டு பக்தியாலும், ஆண் வர்க்கம் பொதுவாக போரை விரும்புகிறது. பெண்கள் விரும்பவில்லை என்று கதை போகிறது. கதை பிரமாதமாக இல்லை, ஆனால் படிக்கலாம். (ராஜேந்திர சோழன் காலம்)

கல் திரை: சென்னை அருகே திருவிடந்தை என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டை வைத்து இந்தக் கதை. பக்கத்து ஊர் என்பது இந்தக் கதையின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

கடிகை: காந்தளூர்சாலை பற்றி எழுத வேண்டும் என்று ஆசை. பொன்னியின் செல்வனைத் தொடர வேண்டும் என்று ஒரு ஆசை. தாசீல் பண்ண ஆசை இருந்தாலும் கழுதைதான் மேய்த்திருக்கிறார்.

ராஜகோபுரம்: கவி காளமேகம், கோனேரிராஜன் ஆகியோரை வைத்து ஒரு கதை. பாலகுமாரன் கதையைப் பற்றி கொஞ்சமாவது திட்டமிட்டு எழுத வேண்டும். வில்லன் மாதிரி வருபவன் திடீரென்று ஹீரோ மாதிரி நடந்து கொண்டால் எப்படி?

செப்புப் பட்டயம்: ஒரு தேவரடியார் பெண் உடன்கட்டை ஏறிவிட அவள் குழந்தைகளுக்கு அப்பா சொத்தில் பங்கு கிடைத்தது ஒரு செப்பேடாக இருக்கிறதாம். அதை வைத்து ஒரு கதை.

இவை தவிர ஜெம்பை கோவில் கல்வெட்டை பின்னணியிலும் (சோழர் காலம்), சுசீந்திரம் கோவில் பின்னணியிலும் (நாயக்கர் காலம்) இரண்டு கதைகள் நினைவு வருகின்றன. கதை பெயர் மறந்துவிட்டது.

இந்த மாதிரி உள்ள கதைகளை ஒரு தொகுப்பாகப் போட்டால் நன்றாகப் போகும் என்று நினைக்கிறேன். அநேகக் கதைகள் சுமார்தான். ஆனால் ஒரு தொகுப்பாக வருவது நல்ல ambience-ஐ உருவாக்கும்.

தொடர்புடைய சுட்டிகள்:
தமிழில் சரித்திர நாவல்கள்: கல்கி பாணி, கல்கியின் வாரிசுகள், படிக்க விரும்புபவை

பிரபஞ்சனின் மானுடம் வெல்லும்

34 thoughts on “பாலகுமாரனின் சரித்திரக் கதைகள்

 1. உடையார் படியுங்கள். படித்து முடித்தவுடன் தஞ்சாவூர் போக வேண்டும் என்று தோன்றும்:) எனக்குத் தோன்றியது:)

  Like

 2. திருவக்கரை திண்டிவனத்தின் அருகில் உள்ளது இங்கு உள்ள வக்கரகாளி கோவில் மிக பிரபலம் . இதை தவிர பாலகுமாரன் பட்டினத்தார் தாயுமானவர் போன்றோரின் காலத்தை பற்றியும் சரித்திர நாவல் எழுதியுள்ளார் . காந்தளூர் சாலை ரவிதாசன் மற்றும் அவரது கூட்டாளிகள் பற்றியும் தனியாக ஓர் நாவல் எழுதியுள்ளார்

  Like

 3. அன்புள்ள ஆர்வி,

  என்னருகில் நீ இருந்தால் – இது சித்த வைத்தியர் ஒருவரின் மகன் தன் தந்தையின் கைக்கிளைக்காதலுக்கு துணையாய் இருந்து, இறந்து போகும் கதைதானே ?

  அன்புடன்
  முத்து

  Like

   1. நன்றி ஆர்.வி. எனக்கு நன்றாக நினைவில் இருக்கும் பல பாலா நாவல்களுள் அதுவும் ஒன்று. நாயகன், இறக்கும் தருவாயில் பூர்வஜென்ம ஞாபகத்தில் ராஜராஜன் மெய்கீர்த்தி பாட, அவன் யாரென்று குழம்பும் போலீஸ் குனிந்து காதுகுவித்து கேட்டு ஒன்றும் புரியாமல் விழித்து “ஈழ மண்டலமும் ..” என்ற வரி காதில் பட்டதும் “அட இவன் விடுதலைப்புலி, ம் சொல்லு சொல்லு” என்று மகிழும் இடத்தில் வாய்விட்டு சிரித்தேன். இதுபோல நுட்பமான பகடி/நகைச்சுவை கைகூடி வரும் இடங்கள் நிறைய அவரது நாவல்களில்.

    அன்புடன்
    முத்து

    Like

 4. ஆர் வி,

  தங்க வட்டில் என்ற அவரது வரலாற்று புதினம் நினைவுக்கு வருகிறது. எதோ ஒரு ஆழ்வாரை பற்றிய கதை என்று நினைக்கிறேன். ஆனால் முதல் வரி மனசில் பச் என்று ஒட்டி கொண்டது.

  “கமலக்கண்ணன் அகராதியில் சந்தோஷத்திற்கு மனைவி என்று பொருள். மனைவி என்ற அந்த அழகான உறவுக்கு பூங்குழிலி என்று பேர்” என தொடங்கும்.

  அதுவும் பாலகுமாரன் பாணி வரலாற்று நாவல்களுக்கு ஒரு சான்று.

  Like

 5. பாலகுமாரனின் இரும்புக்குதிரைகள். தலையணைப்பூக்கள் மாதிரி வரலாற்று நாவல்கள் சூப்பர் ஹிட் ஆக வில்லை.. 40 % ஹிட்ஸ் குறைந்திருக்கிறது என புத்த்க வெளீயீட்டாளர்கள் சொல்ல கேள்வி.. பால குமாரன் ரசிகர்கள் மன்னிக்க..

  Like

 6. முத்து, நீங்கள் சொல்லும் இடம் நினைவிருக்கிறது, நல்ல இடம்.
  மதன், தங்கவட்டில் படித்ததில்லை. ஆனால் முதல் வரி நன்றாக இருக்கிறது.
  செந்தில்குமார், தகவலுக்கு நன்றி!

  Like

 7. எனக்கு பாலா – கல்லூரி / இரண்டு கெட்டான் வயதில் அறிமுகம் செய்தது என் நண்பனின் அக்கா. பெண்ணை பற்றிய புரிதல் கொடுத்தது பாலா, நல்ல பெண்களை எப்படி தெரிந்து கொள்வது, பெண் என்ற போதையில் எப்படி நம்மை அழித்து கொள்ளாமல் இருப்பது என்று சொல்லி கொடுத்த நல்ல மனிதன். நல்ல தோழனாக , என்னை யாரென்று புரிந்து கொள்ளவைத்த ஆசான்.

  Like

  1. ரமணன், அவரை நிறைய பேர் இப்படி ஆசானாக மதிக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் என் கண்ணில் பாலகுமாரன் நீர்த்துப் போன ஒரு எழுத்தாளரே. எக்கச்சக்க குப்பைகளை எழுதி இருக்கிறார். அவரது ஆரம்ப கால நாவல்களை மட்டுமே படித்து நான் ஒரு காலத்தில் அவரை தி.ஜா.வுக்கும் மேலாக மதிப்பிட்டேன். மேலும் மேலும் படிக்க படிக்கத்தான் புரிகிறது…

   Like

   1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே – என் கல்லூரி காலம் முடிந்து வேலை தேடும் பருவத்தில், அவரின் சில கதைகளை படித்து தூ என்று துப்பி இருக்கிறேன், என்னடா இந்த ஆள் இப்படி கேவலமாக எழுதுகிறாரே என்று வருத்தப்பட்டேன்.
    ஒன்றை அப்போது புரிந்து கொண்டேன் – நம் எண்ணமும் வளர வளர, அவரும் முதிர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறார் என்று புரிந்தது. மேலும் பாலா போன்ற எழுத்தாளர் – மாத நாவல்கள் எழுத நிர்பந்திக்க படும் போது எழுத்துகளில் கவனம் குறையும்.
    இப்போது “சொர்க்கம் நடுவிலே ” தேடி கொண்டு இருக்கிறேன் – அதில் ஏழு அத்தியாயங்கள் மின் சுட்டியில் படித்தேன், மற்றவை இன்னும் கிடைக்கவில்லை, ஆனால் அதில் பாலாவின் எழுத்துக்கள் மிகவும் ஆழமானவை, முடிந்தால் படிங்கள்.

    Like

 8. ”சொர்க்கம் நடுவிலே புத்தகமாக வந்திருக்கிறதே” விசா பப்ளிகேஷனில் கிடைக்கும், இதை நன்றாகவே எழுதியிருக்கிறார். ”காசும் பிறப்பும்” கூட நல்ல நாவல்.

  ”உடையார்” பிற ஆன்மீக நாவல்கள் எல்லாம் ஒரே வள வள. பொழுது போகாத தாத்தா திண்ணையில் உட்காட்ந்து கொண்டு சாவகாசமாக வெற்றிலையைப் போட்டபடியே சொல்லும் கதைகள் போலிருக்கிறது அவரது தற்போதைய நடை.

  மெர்க்குரிப் பூக்கள், தாயுமானவன் எல்லாம் ஒரு காலம். இப்போதிருப்பது ஒரு காலம்.,

  //நம் எண்ணமும் வளர வளர, அவரும் முதிர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறார் // இது முற்றிலும் உண்மை.

  Like

 9. மிக்க நன்றி ரமணா, நான் இங்கு அமரிக்காவில் வசிக்கின்றேன், இங்கு விசா பதிப்பகம் இருகின்றதா? இல்லை அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அனுப்புவார்களா ?

  Like

 10. அரமணன், அமெரிக்காவில் எங்கே இருக்கிறீர்கள்? நான் வசிப்பது சான் ஃபிரான்சிஸ்கோ அருகே நூவர்க்.

  ரமணன், எனக்கு காசும் பிறப்பும் ஏதோ பகல் கனவை எழுதியது மாதிரி இருந்தது.

  Like

  1. நான் சிகாகோவில் வசிக்கின்றேன், மிக நாட்களுக்கு பிறகு தமிழ் படைப்புக்களை நான் இப்போது படிக்க ஆரம்பித்து உள்ளேன்.
   நான் அது கதைதான் என்றாலும் அதில் ஒரு உண்மை அல்லது ஒரு பாடம் அல்லது ஒரு அனுபவம் தேடுவேன், அது இது வரை பாலாவின் கதைகளில் பார்த்து இருக்கிறேன். சுஜாதா, ஜானகிராமன், கல்கி படித்து இருக்கிறேன், ஆனால் கற்றது பாலாவிடம் மட்டுமே . காசும் பிறப்பும் நான் படிக்கவில்லை உங்களிடம் மின்சுட்டியில் இருந்தால் பகிரவும். எனக்கு புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும். இப்போது ஒரு ஆங்கில புத்தகம் ” Scammed ” படித்து கொண்டு இருக்கிறேன், நாம் எப்படி எல்லாம் இங்கு இருக்கும் சந்தையில் ஏமாற்ற படுகிறோம் என்பது பற்றிய புத்தகம்.

   Like

  1. சித்திரவீதிக்காரன், பாலகுமாரனின் சரித்திரக் கதைகள் படித்தே ஆக வேண்டும் என்ற தரத்தில் இருப்பதில்லை. ஆனால் அரசாங்க சதி என்ற தளத்திலிருந்து விலகி இருக்கின்றன. தமிழில் இது அபூர்வம் இல்லையா?

   Like

 11. திருவக்கரை போயிருக்கிறேன். வெளீயே வக்ர காளியம்மன், உள்ளே சந்த்ர மௌலீஸ்வரர், வக்ர விஷ்ணு என எல்லாம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. நந்தி ஏனோ நினைவில் இல்லையே.. 😦

  //பாலகுமாரன் அநிருத்த பிரம்மராயரின் மகன் அருண்மொழியின் மறு ஜன்மமாம். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி (எழுத்தாளர் திலகவதி மாதிரி இருக்கிறது) இன்னொரு மறுபிறப்பாம். முன் ஜன்மக் கடனை இந்த ஜன்மத்தில் தீர்க்கிறார்களாம். //

  அடேடே.. எனக்கு பிடிச்ச சப்ஜெக்ட். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் போல இருக்கே. வாங்கிப் படித்து விடுகிறேன்.

  இனிய யட்சிணி… //இந்தக் கதையில் இன்றைய காலத்தைக் கலந்து உச்சிஷ்ட கணபதி மந்திரம், ஆவிகள் என்றெல்லாம் இரண்டு மூன்று கதைகளைக் கலக்கிறார்//

  அடடே.. யட்சிணி ஆசாமிகளைச் சந்தித்து உரையாடிய அனுபவம் இருக்கிறது. அதுபோல ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்பவர்களையும் (!) சந்தித்திருக்கிறேன். அது மாதிரி விஷயங்களெல்லாம் இதில் இருக்குதுன்னா படிக்கலாம் போல இருக்குதே. 😉

  என்னருகில் நீ இருந்தால்.. // ராஜராஜன், மற்றும் அவரது சபையினரின் ஆவிகள் அறிவுரை சொல்லி அவனைப் பிறவி பெருங்கடலிலிருந்து மீட்கின்றனர்.// எனக்குத் தெரிந்த ஒரு ஆவி ஆசாமி ஆவிகளிடம் ஆலோசனை கேட்டு விட்டுத்தான் அன்றைய டிபனையே சாப்பிடுவார். அவர் ஞாபகம் வந்து விட்டது, இதைப் படித்ததும் 🙂

  //பரவை நாச்சியார் ஒரு கோவில் கட்டி இருக்கிறாளாம் – விழுப்புரம் அருகே பனையவரம் என்ற இடத்தில். யாருக்காவது தெரியுமா?// தெரியலையே… ஆனால் கூகிளிட்டத்தில் கிடைத்த இந்த லிங்க் ஆமாம் என்கிறது : http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/ALPH_211.HTM

  ராஜேந்திரசோழன் பற்றிபாலகுமாரன் எழுதிய புதிதான ஒரு நூலை சமீபத்திய புத்தகச் சந்தையில் பார்த்தேன். ஆனால் வாங்கவில்லை 😉

  Like

  1. ரமணன், பாலகுமாரனின் சரித்திரக் கதைகளின் தரம் பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல ambience-ஐக் கொடுக்கின்றன.

   Like

 12. தோழர்களே நானும் சொர்க்கம் நடுவிலே தேடி கொண்டு இருக்கின்றேன், நண்பர் கொடுத்த மின் சுட்டியில் சரியாக படிக்க முடியவில்லை

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.