இந்து சுந்தரேசனின் “இருபதாவது மனைவி”

உள்ளூர் நூலகத்தில் தற்செயலாக கண்ணில் பட்ட புத்தகங்கள் Twentieth Wife மற்றும் A Feast of Roses. இந்து சுந்தரேசன் என்பது இந்தியப் பெயராக இருக்கிறதே என்று எடுத்துப் பார்த்தேன். மொகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹானைப் பற்றிய சரித்திர நாவல் என்றதும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

ஜஹாங்கீர் நூர்ஜஹான் மீது பித்தாக இருந்தார். நூர்ஜஹானின் உருவம் பதித்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. கதையின் கரு இதுதான். நம்மூர் லக்ஷ்மி, சிவசங்கரி போன்றவர்கள் இதை வைத்து கொஞ்சம் பெண்ணியம் கலந்து கதை எழுதினால் எப்படி இருக்கும்? அந்த மாதிரிதான் இருக்கிறது. ஏறக்குறைய மில்ஸ் அண்ட் பூன் பாணி.

Twentieth Wife மெஹருன்னிசாவின் பிறப்பில் ஆரம்பித்து ஜஹாங்கீர்-மெஹருன்னிசா காதல், மெஹருன்னிசா ஷேர் ஆஃப்கனை மணப்பது, விதவை ஆவது, ஜஹாங்கீரை மீண்டும் சந்திப்பது, திருமணத்தோடு முடிகிறது. A Feast of Roses நூர்ஜஹானின் தாக்கம், ஜஹாங்கீர் அவளுக்கு ஏறக்குறைய பணிந்து நடப்பது, வாரிசுப் போட்டி என்று போகிறது.

கதை சரித்திரத்தின் பல நிகழ்ச்சிகளை உண்மையாக பிரதிபலிக்கிறதாம். மெஹருன்னிசாவின் அப்பா உண்மையிலேயே பாரசீகத்திலிருந்து வந்த அகதியாம். விதவை மெஹருன்னிசாவை அரசர் ஜஹாங்கீர் ஒரு புது வருஷக் கொண்டாட்டத்தின்போது சந்தித்தாராம். மெஹருன்னிசா ஜஹாங்கீரின் இருபதாவது மனைவியாம். திருமணத்துக்குப் பிறகு நூர்ஜஹான் என்று பேர் மாறிவிட்டதாம். அடுத்த அரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் நூர்ஜஹானின் அண்ணன் பெண்ணாம்.

Shadow Princess என்று மூன்றாவது நாவல் ஒன்றும் வந்திருக்கிறதாம். இது ஷாஜஹானின் மகள் ஜஹானாரா பேகத்தை நாயகியாக வைத்தாம்.

இப்போது ஒரு fad கிளம்பி இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்திய எழுத்தாளர்கள் இந்தியாவின் கொஞ்சம் exotic பின்புலத்தை வைத்து சாதாரண கதைகளை எழுதி ஓரளவு வெற்றி அடைவது. அடடா இந்திய எழுத்தாளர் எழுதி வெற்றி பெற்றதா என்று ஆசையோடு படிக்கும் நாம் ஏமாற்றம் அடைகிறோம். அடுத்தவர்களை எச்சரிப்பதற்காகத்தான் இந்த பதிவையே எழுதுகிறேன். தவிர்க்கலாம்.

தொடர்புடைய சுட்டி:
இந்து சுந்தரேசனின் தளம்