பா. ராகவன் எழுதிய ஒரு பதிவு இது – ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம் மற்றும் மதம் என்ற புத்தகத்திலிருந்து ஒரு excerpt-ஐ எடுத்துப் போட்டிருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருந்தது.
விவேகானந்தர் தியானம் செய்த பாறை; அவரது நூற்றாண்டின்போது அங்கே ஒரு நினைவுச்சின்னம் கட்டலாமே என்று யோசனை வந்திருக்கிறது.
பிரச்சினை அது புனித ஃபிரான்சிஸ் சேவியரும் ஜபம் செய்த பாறை என்பதால். (கிருஸ்துவ) மீனவர்கள்தான் அதை இளைப்பாற பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஒரு லோகல் பாதிரியார் கிருஸ்துவர்களைத் தூண்டி விட்டிருக்கிறார். ராவோடு ராவாக அங்கே ஒரு சிலுவை வந்துவிட்டது. (எப்படி 1947-இல் “தானாக” ராமஜன்மபூமி-பாபரி மசூதியில் ராமர் விக்ரகம் வந்ததோ அதே மாதிரி)
பக்தவத்சலம்தான் அப்போது முதலமைச்சர். பாறையிலிருந்து சிலுவையை அப்புறப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். அவர் ரம்ஜான் கஞ்சி குடித்துக் கொண்டே ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான் என்று கேட்கும் டைப் இல்லை என்று தெரிகிறது. ஆனால் நினைவுச்சின்னமும் வேண்டாம், வீணாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று சொல்லிவிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பியது. ரானடே பக்தவத்சலத்தையும் சமாளிக்க வேண்டும், சின்னம் கட்டுவதை எதிர்த்த அன்றைய பண்பாட்டு அமைச்சர் ஹுமாயூன் கபீரையும் சமாளிக்க வேண்டும். ஹுமாயூன் கபீர் மேற்கு வங்காள எம்.பி. அவரை விவேகானந்தர் வங்காளி, அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்ப ஒரு வங்காள எம்.பி.யே தடை போடுவதா என்ற அஸ்திரத்தை எடுத்து சமாளித்தார். இந்தப் பக்கம் அண்ணாதுரையின் ஆதரவைப் பெற்றார். நாடு பூராவும், குறிப்பாக கிருஸ்துவர்கள் அதிகம் உள்ள நாகாலாந்து மாநிலம், கம்யூனிஸ்ட் ஜோதிபாசு என்று பலரின் ஆதரவைப் பெற்றார். நினைவுச்சின்னம் எழும்பிவிட்டது!
கடைசியில் இப்படி ஒரு வரி வருகிறது.
பாறையின் இடத்தில் மசூதி. கிறிஸ்தவர்களின் இடத்தில் முஸ்லிம்கள். ரானடேவின் இடத்தில் அத்வானியும் வாஜ்பாயும் பரிவாரக் கூட்டங்களும். சந்தேகமில்லை. அயோத்தி, ஆர்.எஸ்.எஸ்ஸைப் பொறுத்தவரை ஒரு பரிமாண வீழ்ச்சி.
பா.ரா. சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கன்யாகுமரியில் நினைவுச்சின்னம் எழுப்புவது மட்டுமே குறிக்கோள். ராமன் பேரை வைத்து ஓட்டு அரசியல் நடத்துவதுதான் இங்கே குறிக்கோள். பா.ஜ.க.வின் அரசியல் strategists எல்லாருக்கும் கேஸ் முடிந்துவிட்டது ஒரு பிரச்சினைதான்!
புத்தகத்தை இந்த சுட்டியில் வாங்கலாம். கிழக்கு வெளியீடு. விலை 75 ரூபாய்.