கோபால் ராஜாராமின் சிபாரிசுகள்

கோபால் ராஜாராம் திண்ணை இணைய இதழின் ஆசிரியர். ஜெயமோகன் தன் நாவல் சிபாரிசுகளை பத்து வருஷத்துக்கு முன் பதித்தபோது, அதற்கு ஒரு எதிர்வினையாக தன் சிபாரிசுகளை லிஸ்ட் போட்டிருக்கிறார். அவருக்கும் ஜெயமோகன் தன் நாவல்களை சிறந்தவை என்று சொல்லக்கூடாது, தன்னடக்கம் வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. 🙂

  1. ஜெயகாந்தன்ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (மற்றவை: பாரிசுக்குப் போ, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள்): எனக்கும் மிகவும் பிடித்த புத்தகம் ஒ.ம.ஒ.வே.ஒ. உலகம்தான். சி.நே.சி. மனிதர்கள், ஒ.ந.நா. பார்க்கிறாள் ஆகியவையும் எனக்குப் பிடித்த புத்தகங்களே. பேர்களை க்ளிக்கினால் என் பதிவுகளை காணலாம். இவற்றைத் தவிர ஜயஜய சங்கர சீரிசும் பிடிக்கும். பாரிசுக்கு போ புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. படித்தவர்கள் யாராவது எழுதுங்களேன்!
  2. தி. ஜானகிராமன்அம்மா வந்தாள் (மற்றவை: மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே, செம்பருத்தி, மோகமுள், நளபாகம், மரப்பசு): அம்மா வந்தாள் எனக்கும் பிடித்த நாவல்களில் ஒன்று. என்றாவது அதைப் பற்றி எழுத வேண்டும். மோகமுள்ளைப் பற்றி பக்ஸ் எழுதுவான் எழுதுவான் என்று பார்க்கிறேன், இன்னும் அவனுக்கு கை வரவில்லை. மரப்பசு பற்றிய பதிவு இங்கே. அது என் கண்ணில் சுமாரான நாவலே. ஒரு லெவலுக்கு மேல் தி.ஜா.வின் நாவல்கள் அரைத்த மாவையை அரைப்பது போல ஒரு உணர்வு.
  3. லா.ச. ராமாமிர்தம்புத்ர: லா.ச.ரா.வின் சிறந்த படைப்புகளில் ஒன்று. வழக்கம் போல உணர்ச்சிப் பிழம்புதான். ஆனால் இவை போன்றவைதான் தொன்மம் ஆகக் கூடியவை.
  4. பிரபஞ்சன் – மானுடம் வெல்லும்: சிறந்த நாவல் மட்டுமில்லை, சரித்திரக் கதை என்றால் அரண்மனை சதிதான் என்ற trend-ஐ மாற்றும் நாவல். அதனால் முக்கியமான நாவலும் கூட.
  5. வண்ணநிலவன்கடல்புரத்தில்: நல்ல நாவல்தான், ஆனால் ஏதோ குறைகிறது.
  6. அசோகமித்ரன்கரைந்த நிழல்கள் (மற்றவை: தண்ணீர், 18-ஆவது அட்சக்கோடு, இன்று): கரைந்த நிழல்கள் ஒரு tour de force. வாத்யார் ஒரு ஜீனியஸ். தண்ணீர் எனக்கு பிடித்த நாவல்களில் ஒன்று. 18-ஆவது அட்சக்கோடு அனேகமாக எல்லாருக்கும் பிடித்திருக்கிறது, எனக்கு இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று இது வரை புரியவில்லை.
  7. இந்திரா பார்த்தசாரதிகால வெள்ளம்: எனக்கு இ.பா. அவ்வளவாக ரசிப்பதில்லை. படித்ததில் இது ஓரளவு பிடித்திருந்தது. பதிவு இங்கே.
  8. நீல. பத்மநாபன்தலைமுறைகள்: சிறந்த வட்டார நாவல். பதிவு இங்கே.
  9. சுஜாதாஎன் இனிய இயந்திரா: இதுதான் அநேக தமிழர்களுக்கு Science Fiction என்ற genre-ஐ அறிமுகம் செய்து வைத்த நாவல். இதன் தாக்கம் அதிகம், முக்கியமான, ஆனால் ஒரு சாதாரணமான நாவலே.

படிக்காதவை:

  1. பொன்னீலன் – புதிய தரிசனங்கள்
  2. ஆ. மாதவன் – கிருஷ்ணப் பருந்து
  3. தமிழவன் – ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் (மேலும் ஜி.கே. எழுதிய மர்ம நாவல்)
  4. கிருத்திகா – வாசவேஸ்வரம்