தமிழ் தெரியாத நண்பர்களுக்கு என்ன புத்தகம் பரிசாகத் தரலாம்?

எனக்கு மனீஷ் ஷர்மா என்று ஒரு நண்பன். இப்போது டெல்லி ஐஐடியில் வேலை பார்க்கிறான். எங்கள் ரசனை கொஞ்சம் ஒத்துப் போகும். அவனுக்கு அவ்வப்போது சில தமிழ் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை கொடுப்பது வழக்கம். ஒரு பத்து புத்தகம் கொடுத்திருந்தால் ஜாஸ்தி, புளியமரத்தின் கதை, அசோகமித்ரனின் சில புத்தகங்கள், ஜெயகாந்தனின் சில புத்தகங்கள் கொடுத்தது நினைவிருக்கிறது.

ஆனால் மொழிபெயர்ப்புகள் கிடைப்பது அபூர்வமே. மேலும் புத்தகமும் நன்றாக இருந்து மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா? உதாரணமாக விஷ்ணுபுரம், யுவன் சந்திரசேகரின் கதை சொல்லும் ஸ்டைல், கி.ரா. போன்றவை மொழிபெயர்ப்பில் நன்றாக வருமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஆனால் இ.பா., அசோகமித்திரன் போன்றவர்களை மொழிபெயர்ப்பது கொஞ்சம் சுலபம்.

உங்களுக்கு தெரிந்த நல்ல மொழிபெயர்ப்புகளை சொல்லுங்களேன்!

New Horizon Media-வின் இந்த சுட்டியில் நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. (தகவல் தந்த சுல்தானுக்கு நன்றி)

நண்பர்கள் குறிப்பிட்டிருக்கும் மொழிபெயர்ப்புகள்:

  1. கே.எஸ். சுப்பிரமணியம் தொகுத்த Tamil New Poetry, Tamil Poetry Today (குறிப்பிட்டவர் பாஸ்கர்) – இவற்றைப் பற்றி வெங்கட் சாமிநாதன் இங்கே எழுதி இருக்கிறார்.
  2. நாஞ்சில் நாடனின் Against All Odds (குறிப்பிட்டவர் சுல்தான்)
  3. ஜெயமோகனின் Forest (தமிழ்ப் பெயர்: காடு) (குறிப்பிட்டவர் சுல்தான்)
  4. அசோகமித்ரனின் தண்ணீர் (குறிப்பிட்டவர் ஜெயமோகன்)
  5. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், கிருஷ்ணா கிருஷ்ணா (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)
  6. பெருமாள் முருகனின் கூளமாதாரி (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)
  7. யுவன் சந்திரசேகரின் கானல்நதி புத்தகம் பத்மா நாராயணால் ஆங்கிலத்தில் Illusory River என்ற பேரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெயமோகனின் குறுநாவல் – லங்காதகனம்

நாலைந்து பாராவுக்குள் தளம் தெளிவாகிவிடுகிறது. ஒரு பழைய மடம். அதற்கு ஒரு தம்பிரான், காரியஸ்தர், போத்தி, ஓரிரு பேரிளம்பெண்கள் (பழைய கால தாசிகளோ?) சமையல்கட்டு, பழைய கால கதகளி ஆட்டக்காரர் ஆசான், நமக்கு கதை சொல்லும், இங்கே தங்கி சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டே காலேஜில் படிக்கும் ராமன். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் மடம் இனி மேல் மாறாது, அதன் சம்பிரதாயங்கள் எல்லாம் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டன, கொஞ்சம் கொஞ்சமாக அது செத்துக் கொண்டிருக்கிறது.

ஆசானுக்கும் ராமனுக்கும் கொஞ்சம் நட்பு இருக்கிறது. ஆனால் அங்கே தண்டச்சோறு சாப்பிடும் ஆசானைக் கண்டால் எல்லாருக்கும் கொஞ்சம் இளக்காரம். ஆசான் அனுமன் வேஷம் போடுபவர். லங்காதகனம் காட்சியில் கலையின் உச்சத்தை அடைந்தவராக இருக்கலாம். எப்போதாவது கலையின் உச்சத்தை அடைந்தால் தானே அந்த க்ஷணத்தில் அனுமன் ஆவோம் என்று நம்புகிறார். எப்போதும் அனுமன் தியானம்தான். லங்காதகனத்தை இன்று யாரும் பார்ப்பதில்லை, எவருக்கும் அக்கறை இல்லை. அவருடைய நளின நடையைக் கண்டு தம்பிரானும் நண்பர்களும் சிரிக்கிறார்கள். தம்பிரான் தன் நண்பர்களுக்காக அவரை ஆடிக் காட்டக் கூப்பிட்டால் ஆசானே தான் சீப்படப்போவதை உணர்ந்து தன்னிடம் சிநேகமாக இருக்கும் ஒரு பிறவியான ராமனை அங்கே வராதே என்று தடுக்கிறார்.

திருவிழாக்காலம். பத்து நாள் கதகளி. பல செட்டுகள் வருகின்றன. ஆசானின் பயிற்சி உக்ரமாகிக் கொண்டே போகிறது. ஆசான் அனுமனாகவே மாறிவிடுவாரோ என்று பழைய கதகளி ஆட்டக்காரர் ஒருவர் பயப்படுகிறார். கடைசி நாள். கூட்டம் எல்லாம் போய்விட்டது. எப்போதும் கலையின் உச்சத்தை அடைந்து தானே பாத்திரமாகிவிடக் கூடாது (அதற்காகத்தான் திருஷ்டிப் பொட்டு) என்று மேக்கப் போடும் வைத்தியரிடம் திருஷ்டிப்பொட்டு, இன்னும் ஒரு குறையை வைக்க சொல்கிறார். ஆசான் குரங்காகவே மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ராமனின் முயற்சிகளையும் மீறி ஆசான் தன் மேக்கப் குறைகளை களைகிறார். அவர் லங்காதகனம் ஆட மேடைக்கு பாய்ந்து வருவதோடு கதை முடிகிறது.

ஒரு காலாவதியாகும் கலைஞனின் நிலை; கலையின் உச்சத்தை அடையும்போது எது நிஜம், எது நிழல் என்று ஒரு கலைஞனால் உணர முடியுமா என்ற கேள்வி; எல்லாவற்றையும் விட அன்று மடம் தகனம் ஆனதா இல்லையா என்ற கேள்வி. புத்தகத்தை மூடிய பிறகும் மண்டைக்குள் ஓடுகின்றன. அந்த மடத்தின் சித்திரம் அருமையாக இருந்தது. மடத்தைப் பற்றி அவர் சொன்னது கொஞ்சம்தான், ஆனால் இந்த மடம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு பெரிய சித்திரம் மனதில் உருவாகிறது. ஆசானின் பாத்திரப் படைப்பு அபாரம். அவர் படும் அவமானங்கள், சோற்றுக்காக அங்கே இருக்க வேண்டிய நிலை, கலை, கலையின் உச்சத்தைப் பற்றி அவர் பேசுவது எல்லாமே மிக நன்றாக இருந்தது. ஜெயமோகன் எங்கோ நல்ல இலக்கியம் தொன்மம் ஆகக் கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இது நிச்சயமாக தொன்மம் ஆகக் கூடியதுதான். (அவரே டெஸ்ட் பேப்பர் வச்சு அவரே பதில் எழுதிக் கொள்கிறாரோ? :-))

ஆனால் எழுத ஆரம்பித்ததின் விளைவோ என்னவோ, கதையின் உத்திகள் எனக்கு உறுத்துகின்றன. குறியீடுகள் மீண்டும் மீண்டும் வருவது எனக்கு கதையின் ஓட்டத்தில் குறுக்கிடுவது போல இருக்கிறது. அடிக்கடி சிவப்பு நிறம், தீ, கொழுந்து விட்டெரிவது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இத்தனை அழுத்தி சொல்ல வேண்டுமா என்று தோன்றியது. மடம் அன்று எரிந்ததா இல்லையா என்பதை வாசகர்கள் யூகத்துக்கு விட்ட உத்தியும் பிடித்திருந்தாலும், கதையில் மூழ்கி இருப்பவனை கொஞ்சம் மேலே தூக்கிவிடுவது போல ஒரு உணர்வு.

இதை ஜெயமோகனின் குறுநாவல்கள் என்ற தொகுப்பில் படித்தேன். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.