ஜெயமோகனின் குறுநாவல் – லங்காதகனம்

நாலைந்து பாராவுக்குள் தளம் தெளிவாகிவிடுகிறது. ஒரு பழைய மடம். அதற்கு ஒரு தம்பிரான், காரியஸ்தர், போத்தி, ஓரிரு பேரிளம்பெண்கள் (பழைய கால தாசிகளோ?) சமையல்கட்டு, பழைய கால கதகளி ஆட்டக்காரர் ஆசான், நமக்கு கதை சொல்லும், இங்கே தங்கி சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டே காலேஜில் படிக்கும் ராமன். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் மடம் இனி மேல் மாறாது, அதன் சம்பிரதாயங்கள் எல்லாம் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டன, கொஞ்சம் கொஞ்சமாக அது செத்துக் கொண்டிருக்கிறது.

ஆசானுக்கும் ராமனுக்கும் கொஞ்சம் நட்பு இருக்கிறது. ஆனால் அங்கே தண்டச்சோறு சாப்பிடும் ஆசானைக் கண்டால் எல்லாருக்கும் கொஞ்சம் இளக்காரம். ஆசான் அனுமன் வேஷம் போடுபவர். லங்காதகனம் காட்சியில் கலையின் உச்சத்தை அடைந்தவராக இருக்கலாம். எப்போதாவது கலையின் உச்சத்தை அடைந்தால் தானே அந்த க்ஷணத்தில் அனுமன் ஆவோம் என்று நம்புகிறார். எப்போதும் அனுமன் தியானம்தான். லங்காதகனத்தை இன்று யாரும் பார்ப்பதில்லை, எவருக்கும் அக்கறை இல்லை. அவருடைய நளின நடையைக் கண்டு தம்பிரானும் நண்பர்களும் சிரிக்கிறார்கள். தம்பிரான் தன் நண்பர்களுக்காக அவரை ஆடிக் காட்டக் கூப்பிட்டால் ஆசானே தான் சீப்படப்போவதை உணர்ந்து தன்னிடம் சிநேகமாக இருக்கும் ஒரு பிறவியான ராமனை அங்கே வராதே என்று தடுக்கிறார்.

திருவிழாக்காலம். பத்து நாள் கதகளி. பல செட்டுகள் வருகின்றன. ஆசானின் பயிற்சி உக்ரமாகிக் கொண்டே போகிறது. ஆசான் அனுமனாகவே மாறிவிடுவாரோ என்று பழைய கதகளி ஆட்டக்காரர் ஒருவர் பயப்படுகிறார். கடைசி நாள். கூட்டம் எல்லாம் போய்விட்டது. எப்போதும் கலையின் உச்சத்தை அடைந்து தானே பாத்திரமாகிவிடக் கூடாது (அதற்காகத்தான் திருஷ்டிப் பொட்டு) என்று மேக்கப் போடும் வைத்தியரிடம் திருஷ்டிப்பொட்டு, இன்னும் ஒரு குறையை வைக்க சொல்கிறார். ஆசான் குரங்காகவே மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ராமனின் முயற்சிகளையும் மீறி ஆசான் தன் மேக்கப் குறைகளை களைகிறார். அவர் லங்காதகனம் ஆட மேடைக்கு பாய்ந்து வருவதோடு கதை முடிகிறது.

ஒரு காலாவதியாகும் கலைஞனின் நிலை; கலையின் உச்சத்தை அடையும்போது எது நிஜம், எது நிழல் என்று ஒரு கலைஞனால் உணர முடியுமா என்ற கேள்வி; எல்லாவற்றையும் விட அன்று மடம் தகனம் ஆனதா இல்லையா என்ற கேள்வி. புத்தகத்தை மூடிய பிறகும் மண்டைக்குள் ஓடுகின்றன. அந்த மடத்தின் சித்திரம் அருமையாக இருந்தது. மடத்தைப் பற்றி அவர் சொன்னது கொஞ்சம்தான், ஆனால் இந்த மடம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு பெரிய சித்திரம் மனதில் உருவாகிறது. ஆசானின் பாத்திரப் படைப்பு அபாரம். அவர் படும் அவமானங்கள், சோற்றுக்காக அங்கே இருக்க வேண்டிய நிலை, கலை, கலையின் உச்சத்தைப் பற்றி அவர் பேசுவது எல்லாமே மிக நன்றாக இருந்தது. ஜெயமோகன் எங்கோ நல்ல இலக்கியம் தொன்மம் ஆகக் கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இது நிச்சயமாக தொன்மம் ஆகக் கூடியதுதான். (அவரே டெஸ்ட் பேப்பர் வச்சு அவரே பதில் எழுதிக் கொள்கிறாரோ? :-))

ஆனால் எழுத ஆரம்பித்ததின் விளைவோ என்னவோ, கதையின் உத்திகள் எனக்கு உறுத்துகின்றன. குறியீடுகள் மீண்டும் மீண்டும் வருவது எனக்கு கதையின் ஓட்டத்தில் குறுக்கிடுவது போல இருக்கிறது. அடிக்கடி சிவப்பு நிறம், தீ, கொழுந்து விட்டெரிவது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இத்தனை அழுத்தி சொல்ல வேண்டுமா என்று தோன்றியது. மடம் அன்று எரிந்ததா இல்லையா என்பதை வாசகர்கள் யூகத்துக்கு விட்ட உத்தியும் பிடித்திருந்தாலும், கதையில் மூழ்கி இருப்பவனை கொஞ்சம் மேலே தூக்கிவிடுவது போல ஒரு உணர்வு.

இதை ஜெயமோகனின் குறுநாவல்கள் என்ற தொகுப்பில் படித்தேன். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

4 thoughts on “ஜெயமோகனின் குறுநாவல் – லங்காதகனம்

  1. எனக்கு வனப்பிரஸ்தம் நினைவிற்கு வருகிறது. மோகன்லால் கதகளியில் அர்ஜூனன் வேடம் ஏற்கும் பொழுது மட்டும் சுஹாசினிக்கு(சுபத்ரா) அவர்மீது ஈர்ப்புயிருக்கும். அவர் அதே வேடத்தில் உறவும் கொள்வார்கள். வேடம் கலைத்து சுஹாசினியை சந்திக்க செல்லும் மோகன்லாலை பார்க்க மறுப்பார்.

    மோகன்லால் கதகளி ட்ரூப் பாடகர் தொண்டையில் புற்று நோயுடன் அவதிப்படுவார். நோயின் வலியைப் போக்க ரோஸ் வாட்டர் கலந்த மருந்து ஒன்றை குடித்துவிட்டு கணீர் என்று பாடுவார். கடைசி நிகழ்ச்சியின் முடிவிலோ நடுவிலோ இருந்துவிடுவார். அவருக்கும் மோகன்லாலுக்குகாக வாழ்நாள் முழுதும் பாட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது.

    கதகளி கலைஞர்கள் பலரும் கலையை ஆழ்ந்து நேசித்துள்ளனர். அதற்காக வாழ்நாளை அர்ப்பனிப்பதுடன் அமானுஷ அல்ல தெய்வீக இடத்தை அடைய முடியும் என்று நம்புகிறார்கள் என நினைக்கிறேன்.

    Like

  2. ஆர் வி , நன்றாக சொன்னீர்கள் . லங்காதகனம் கலையின் உச்சத்தை அடையும் ஒரு கலைஞனின் முழுமையான கதை. சமீபத்தில் வெளிவந்த Black Swan திரைப்படமும் இதை நினைவுபடுத்துகிறது..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.