நா. ரகுநாதனின் (ரசிகன்) சிறுகதை – பலாச்சுளை

பலாச்சுளை

இந்தக் கதையை சிறு வயதில் எப்போதோ படித்திருக்கிறேன். ஆனால் இப்போது நா. ரகுநாதன் யாரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்தான் ரசிகன் என்ற பேரில் எழுதியவர் என்று ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். ரசிகன் கதைகளை சிறு வயதில் ரசித்திருக்கிறேன், ஆனால் இப்போது எதுவும் நினைவில்லை. தமிழினி பதிப்பகம் இவரது கதைகளை வெளியிட்டிருக்கிறதாம்.

பிராமண பின்புலத்தை தத்ரூபமாக கொண்டு வருகிறார். ஒரு எளிய கதை, சுலபமாக யூகிக்கக்கூடிய கதை அந்த பின்புலத்தால்தான் நல்ல கதை என்ற அளவுக்கு வருகிறது. கலைமகள் மாதிரி ஒரு பத்திரிகையில் வந்திருக்கலாம். இந்த கதை காட்டும் வாழ்க்கை முறை, இந்த மாதிரி கதைகளை பிரசுரிப்பது என்ற காலமே முடிந்துவிட்டது. இருந்தாலும் அதை ஆவணப்படுத்தவாவது இந்த மாதிரி கதைகள் வேண்டுமே!

கதையை அனுப்பிய கௌரி கிருபானந்தன் இதை தெலுங்கில் மொழிபெயர்க்க விரும்புகிறார் மொழிபெயர்த்திருக்கிறார். “விபுலா” என்ற தெலுங்கு பத்திரிக்கையில், ஜூன் 2012 மாத இதழில் வெளியாக உள்ளது. யாருக்காவது நா. ரகுநாதனைத் தெரியுமா? அவரது வாரிசுகள்? அவர் கதைகளைப் படித்திருக்கிறீர்களா? ஏதாவது தெரிந்தால் கௌரிக்கு தெரியப்படுத்துங்களேன்!

கௌரி உங்களுக்கு நன்றி!

நண்பர் ராதாகிருஷ்ணன் துரைசாமி தரும் தகவல்:

ரஸிகன் என்னும் நா.ரகுநாதன் ஹிந்து நாளிதழில் நீண்டகாலம் உதவியாசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் நிறைய எழுதியுள்ள இவர் தமிழிலும் எழுதியுள்ள அருமையான சிறுகதைகள் மற்றும் நான்கு அருமையான நாடகங்கள் ஒரு தொகுப்பாக அ.சதீஷ் என்பவரால் (பதிப்பாசிரியர்) தொகுக்கப்பட்டு யுனைடட் ரைட்டர்ஸால் நவம்பர் 2006ல் வெளியிடப்படுள்ளது. தஞ்சை மாவட்டப் பின்னணியில் அமைந்த கதைகள். நான்கு நாடகங்களும் மிக அருமையான குடும்ப சித்திரங்கள். யுவன் சந்திரசேகர் முன்னுரை வழங்கியுள்ளார். அவசியம் படிக்க வேண்டியவை.