சுஜாதாவின் “உள்ளம் துறந்தவன்”

சுஜாதா கடைசி காலத்தில் நிறைய சொதப்பலாக எழுதி இருக்கிறார். அப்படிப்பட்ட சொதப்பல்களில் இதுவும் ஒன்று.

பணக்கார வீட்டுப் பெண். தமிழ் சினிமா மாதிரி ஒரு ஹோட்டல் வெயிட்டரைக் காதலிக்கிறாள். அவள் காதலில் விழும் முதல் சந்திப்பு மாதிரி குழப்படியாக என்னைப் போல ஒரு கத்துக்குட்டி கூட எழுதமாட்டான். ஹோட்டலுக்கு போகிறாளாம், யாரோ கலாட்டா செய்கிறானாம், இந்த வெயிட்டர் அவனை துரத்திவிடுகிறானாம், உடனே ஹீரோயின் ஹோட்டல் முதலாளியான அவள் அப்பாவுக்கு ஃபோன் செய்து அந்த வெயிட்டரை வேலையை விட்டு தூக்கிவிடுகிறாள். என்னங்க இது விபரீதம்? வேலையை விட்டு தூக்கிய பிறகு அவளுக்கு அவன் மீது லவ் வந்துவிடுகிறது. இல்லை ஒரு வேளை லவ் வந்துவிட்டதால் வேலையை விட்டு தூக்க சொல்கிறாளோ தெரியவில்லை. அப்பாவிடம் அவனை வேலைக்கு சேர்த்துக்கொள் சேர்த்துக்கொள் என்று நச்சரிக்கிறாள். “நாயை அடிப்பானேன், …” என்ற பழமொழிதான் நினைவு வந்தது. அப்புறம் அந்த வெயிட்டர் தன் அம்மாவோடு ஒரு வீராணம் திட்ட பைப்பில் வசிப்பவனாம். அந்த பைப்பில் டிவி கூட இருக்கிறதாம். Truth is stranger than fiction என்று சொல்வார்கள்தான், ஆனால் இது கொஞ்சம் ஜாஸ்தி ஆக இருக்கிறது. விட்டால் அந்த பைப்புக்கு ஒரு அட்ரஸ் – தபால் தந்தி எல்லாம் கூட வரும் போலிருக்கிறது. அப்படி பைப்பில் வளர்ந்த டைப்பாக இருந்தாலும் (ஆஹா! பைப்பு, டைப்பு! உங்களுக்கு எல்லாம் என்னை ஹைப் செய்து இரண்டு வார்த்தை டைப் செய்ய ஒரு வாய்ப்பு!) நம்ம ஹீரோ எம்ஜிஆர் மாதிரி – தெரியாத வித்தை இல்லை, பெரிய அறிவுஜீவி! எப்படிங்க கற்றுக்கொண்டான்? அந்த பெண்ணின் அப்பாவுக்கு இருதய நோய் – மாற்று இருதயம் தேவை. பிசினஸ் சண்டை, இருதய மாற்று சிகிச்சை பற்றி டெக்னிகல் விஷயங்கள் பற்றி கொஞ்சம். நம்ம அறிவு ஜீவி பையில் எப்போதும் ஒரு கார்டு இருக்கும் – என் எல்லா உறுப்புகளையும் தானம் செய்கிறேன் என்று. புரிஞ்சிருக்கணுமே?

இதுதான் அவர் கடைசியாக எழுதிய தொடர்கதையாம். கல்கியில் வந்திருக்கிறது. அவருக்கும் இதய நோய் இருந்தது என்று கேள்வி. அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஏதாவது படித்திருப்பார், அதை வைத்து ஒரு கதையை எழுதிப் பார்ப்போமே என்று எழுதி இருக்க வேண்டும்.

பெரிய கொடுமை இதை ப்ரூஃப் படிக்கவே இல்லை போலிருக்கிறது. டயலாக் நடு நடுவே ஜம்ப் ஆகிறது. கதாபாத்திரங்கள் பேசுவதில் மட்டுமே சுஜாதா தெரிகிறார். அதையும் விசா பப்ளிகேஷன்காரர்கள் கெடுத்து வைத்திருக்கிறார்கள்.

நேரத்தை வீணடிக்காதீர்கள்.

பிற்சேர்க்கை: உள்ளம் துறந்தவன் நாவல் பற்றி சுஜாதா –

உள்ளம் துறந்தவன் கல்கி இதழில் தொடர்கதையாக வந்தபோது, வாசகர்களின் பேராதரவைப் பெற்றது. ‘உள்ளம் துறந்தவ’னில் இதயமாற்று தொடர்பான செய்திகளில் கற்பனை எதுவும் இல்லை. மாற்றுவதற்கான சூழ்நிலையும், காதலும் அதைச் சார்ந்த இழப்பும்தான் கதைக்கு வலுவூட்டுவது. அழகேசனின் தாயைப் போல், மன வலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.