சுஜாதாவின் “உள்ளம் துறந்தவன்”

சுஜாதா கடைசி காலத்தில் நிறைய சொதப்பலாக எழுதி இருக்கிறார். அப்படிப்பட்ட சொதப்பல்களில் இதுவும் ஒன்று.

பணக்கார வீட்டுப் பெண். தமிழ் சினிமா மாதிரி ஒரு ஹோட்டல் வெயிட்டரைக் காதலிக்கிறாள். அவள் காதலில் விழும் முதல் சந்திப்பு மாதிரி குழப்படியாக என்னைப் போல ஒரு கத்துக்குட்டி கூட எழுதமாட்டான். ஹோட்டலுக்கு போகிறாளாம், யாரோ கலாட்டா செய்கிறானாம், இந்த வெயிட்டர் அவனை துரத்திவிடுகிறானாம், உடனே ஹீரோயின் ஹோட்டல் முதலாளியான அவள் அப்பாவுக்கு ஃபோன் செய்து அந்த வெயிட்டரை வேலையை விட்டு தூக்கிவிடுகிறாள். என்னங்க இது விபரீதம்? வேலையை விட்டு தூக்கிய பிறகு அவளுக்கு அவன் மீது லவ் வந்துவிடுகிறது. இல்லை ஒரு வேளை லவ் வந்துவிட்டதால் வேலையை விட்டு தூக்க சொல்கிறாளோ தெரியவில்லை. அப்பாவிடம் அவனை வேலைக்கு சேர்த்துக்கொள் சேர்த்துக்கொள் என்று நச்சரிக்கிறாள். “நாயை அடிப்பானேன், …” என்ற பழமொழிதான் நினைவு வந்தது. அப்புறம் அந்த வெயிட்டர் தன் அம்மாவோடு ஒரு வீராணம் திட்ட பைப்பில் வசிப்பவனாம். அந்த பைப்பில் டிவி கூட இருக்கிறதாம். Truth is stranger than fiction என்று சொல்வார்கள்தான், ஆனால் இது கொஞ்சம் ஜாஸ்தி ஆக இருக்கிறது. விட்டால் அந்த பைப்புக்கு ஒரு அட்ரஸ் – தபால் தந்தி எல்லாம் கூட வரும் போலிருக்கிறது. அப்படி பைப்பில் வளர்ந்த டைப்பாக இருந்தாலும் (ஆஹா! பைப்பு, டைப்பு! உங்களுக்கு எல்லாம் என்னை ஹைப் செய்து இரண்டு வார்த்தை டைப் செய்ய ஒரு வாய்ப்பு!) நம்ம ஹீரோ எம்ஜிஆர் மாதிரி – தெரியாத வித்தை இல்லை, பெரிய அறிவுஜீவி! எப்படிங்க கற்றுக்கொண்டான்? அந்த பெண்ணின் அப்பாவுக்கு இருதய நோய் – மாற்று இருதயம் தேவை. பிசினஸ் சண்டை, இருதய மாற்று சிகிச்சை பற்றி டெக்னிகல் விஷயங்கள் பற்றி கொஞ்சம். நம்ம அறிவு ஜீவி பையில் எப்போதும் ஒரு கார்டு இருக்கும் – என் எல்லா உறுப்புகளையும் தானம் செய்கிறேன் என்று. புரிஞ்சிருக்கணுமே?

இதுதான் அவர் கடைசியாக எழுதிய தொடர்கதையாம். கல்கியில் வந்திருக்கிறது. அவருக்கும் இதய நோய் இருந்தது என்று கேள்வி. அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஏதாவது படித்திருப்பார், அதை வைத்து ஒரு கதையை எழுதிப் பார்ப்போமே என்று எழுதி இருக்க வேண்டும்.

பெரிய கொடுமை இதை ப்ரூஃப் படிக்கவே இல்லை போலிருக்கிறது. டயலாக் நடு நடுவே ஜம்ப் ஆகிறது. கதாபாத்திரங்கள் பேசுவதில் மட்டுமே சுஜாதா தெரிகிறார். அதையும் விசா பப்ளிகேஷன்காரர்கள் கெடுத்து வைத்திருக்கிறார்கள்.

நேரத்தை வீணடிக்காதீர்கள்.

பிற்சேர்க்கை: உள்ளம் துறந்தவன் நாவல் பற்றி சுஜாதா –

உள்ளம் துறந்தவன் கல்கி இதழில் தொடர்கதையாக வந்தபோது, வாசகர்களின் பேராதரவைப் பெற்றது. ‘உள்ளம் துறந்தவ’னில் இதயமாற்று தொடர்பான செய்திகளில் கற்பனை எதுவும் இல்லை. மாற்றுவதற்கான சூழ்நிலையும், காதலும் அதைச் சார்ந்த இழப்பும்தான் கதைக்கு வலுவூட்டுவது. அழகேசனின் தாயைப் போல், மன வலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.

14 thoughts on “சுஜாதாவின் “உள்ளம் துறந்தவன்”

 1. சுஜாதாவை கேளுங்கள் (2005)
  ===========================
  சௌந்தர்யா, திருச்சி.

  பெண்களை சுவாரசியமாக வர்ணிக்கும் நீங்கள் ஆண்களை அப்படி வர்ணிப்பதில்லையே, ஏன்?

  வர்ணித்திருக்கிறேன். உங்களுக்கு ஞாபகமில்லை அவ்வளவுதான். அண்மையில் எழுதிய உள்ளம் துறந்தவனில் (கல்கி) அழகேசன் ஓர் உதாரணம். என்ன கொஞ்சம் அல்பாயுசாக செத்துப் போய்விடுகிறான். அவ்வளவுதான்.

  Like

 2. ‘உள்ளம் துறந்தவன்’ பற்றி பத்ரி சேஷாத்ரி கூறுகிறார்…..

  எந்த இலக்கிய விமரிசகராலும் எள்ளித் தூக்கியெறியமுடியாதது சுஜாதாவின் மொழித் திறன். தமிழை அவ்வளவு இலகுவாக சமகால எழுத்தாளர் எவரும் கையாண்டு நான் பார்த்ததில்லை. அதில் இலக்கண வழு இருக்கும். ஆனால் சுவாரசியம் குன்றாது. சுஜாதா எப்பொதும் தன் மொழியை இளமையாக வைத்திருந்தார். கடைசியாக கல்கியில் வந்த ‘உள்ளம் துறந்தவன்’ தொடர்கதை வரையில் அவரது கதைமாந்தர்கள் பேசும் மொழி அவ்வளவு இளமையாக, contemporaneous ஆக இருந்தது.

  Like

 3. சுவாரசியமான நடை நல்ல நடை இரண்டுக்குமான வேறுபாட்டை பொதுவாக வாசகர்கள் உணர்வதில்லை. சுஜாதாவின் நடை சுவாரசியமானது. காரணம் சுவாரசியத்துக்காக அது எழுதப்படுகிறது. அதில் புத்திசாலித்தனமான நகைச்சுவை எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அத்துடன் காட்சிகளைச் சித்தரிப்பதில் அவர் ஒரு நிபுணர்

  ஆனால் நல்ல நடை என்று இலக்கியத்தில் ஒரு நடை குறிப்பிடப்பட இதெல்லாம் மட்டும் போதாது. அது விவரணைகளை மிகையோ குறையோ இல்லாமல் அழகாகச் சொல்லவேண்டும். உரையாடல்களை சகஜமாகவும் நம்பகத்தன்மையோடும் அமைக்கவேண்டும். உணர்வெழுச்சிகளை துல்லியமாக பின் தொடர வேண்டும். நுட்பமான சிந்தனைகளை இயல்பாகச் சொல்ல வேண்டும் — இந்த அம்சங்களை நாம் சுஜாதாவில் பார்க்க முடியாது. உணர்வுகளையும் சிந்தனைகளையும் சொல்லுமிடத்தில் அவரது விளையாட்டுத்தனமான நடை நொண்டுவதைக் காணலாம்

  நடையின் இரண்டாவது சிறப்பம்சம் அதன் உருமாறும் தன்மை. இதைவைத்தே நாம் எழுத்தாளனின் தகுதியை அளவிடுகிறோம். ஒரு எழுத்தாளனுக்கு அவனுக்கே உரிய பொதுத்தன்மை ஒன்று உண்டு. அதற்குள் அவன் தன் கதைக்கருவுக்கும் கதாபாத்திரங்களுக்கும் சூழலுக்கும் ஏற்ப நடையை மாற்றிக்கொள்ளவேண்டும். உரையாடல்கள், எண்ண ஓட்டங்கள், சித்தரிப்பு மொழி எல்லாமே மாறவேண்டும். சுஜாதாவில் எப்போதும் ஒரே நடைதான். எல்லாருக்கும் ஒரே நடைதான்.

  தமிழின் சிறந்த முன்னுதாரணம் புதுமைப்பித்தன். கபாடபுரம் அன்றிரவு செல்லம்மாள் மூன்றையுமே அவர்தான் எழுதியிருக்கிறார். மூன்றும் மூன்று உலகங்களைச் சேர்ந்த ஆக்கங்கள். புளியமரத்தின் கதைக்கும் ஜெ ஜெ சிலகுறிப்புகளுக்கும் இடையேயான தூரம்தான் சுந்தர ராமசாமியை அடையாளம் காட்டுகிறது.

  சுஜாதா சுவாரசியமான எழுத்தாளர் — ஆனால் அந்த இடம் மட்டுமே அவருக்கு. சில நல்ல சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். ஆகவே தமிழிலக்கியத்தில் அவருக்கு ஒரு இடம் உண்டு. ஆனால் அவரது எழுத்தும் நடையும் 90 சதவீதம்’டெம்ப்ளேட்’ தன்மை கொண்டவை. பெரும்பாலும் எல்லா கேளிக்கை எழுத்தாளர்களுக்கும் இந்த அம்சம் உண்டு.

  சுஜாதாவை ஒரு முன்னுதாரணமாக மேலே தூக்கும் முயற்சி இப்போது சில இலக்கியரசனை அற்றமேலோட்டமான வாசகர்களால் செய்யப்படுகிறது. அது இலக்கியத்திற்கு ஒரு தவறான வழிகாட்டலாக ஆகும். இலக்கிய உலகம் வேறு. அங்கே புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் அசோக மித்திரனும் கு அழகிரிசாமியும் கி ராஜநாராயணனும்தான் என்றும் முன்னுதாரணங்கள். ஒருபோதும் அவ்வரிசையில் சுஜாதாவை வைக்கக்கூடாது.

  இந்த வேறுபாட்டை உறுதியாக கைக்கொள்ளாவிட்டால் நவீன இலக்கிய மதிப்பீடுகளை தக்கவைக்க முடியாது. ஆகவேதான் இதை மீண்டும் வலியுறுத்துகிறேன்

  Like

  1. // சுஜாதாவில் எப்போதும் ஒரே நடைதான். எல்லாருக்கும் ஒரே நடைதான் // இது இலக்கியம் படைக்க தடையாக இருப்பதில்லையே? அசோகமித்ரனும் அப்படித்தான். இ.பா.வும் அப்படித்தான். சுப்ரபாரதிமணினும் அப்படித்தான். திலீப்குமாரும் அப்படித்தான். ஜி. நாகராஜனும் அப்படித்தான். அதுவும் வட்டார வழக்கு என்று வந்துவிட்டால் நாஞ்சிலைப் பற்றி, உங்களைப் பற்றிக் கூட இப்படி சொல்லலாம். நீங்கள் இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா?

   // அங்கே
   புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் அசோக மித்திரனும் கு
   அழகிரிசாமியும் கி ராஜநாராயணனும்தான் என்றும் முன்னுதாரணங்கள். ஒருபோதும்
   அவ்வரிசையில் சுஜாதாவை வைக்கக்கூடாது. // எனக்கு இப்போதெல்லாம் எழுத்தாளர்களை விட எழுத்துகளைத்தான் முன் வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி வைத்தால் மனித இயந்திரமும், கோவில் காளை உழவு மாடும், புலிக்கலைஞனும் அன்பளிப்பும் கோமதியும் அப்பா அன்புள்ள அப்பாவும்தான் முன்னுதாரனனகள் என்று சொல்ல வேண்டி இருக்கும், அதுவே பெட்டர் என்று தோன்றுகிறது. புதுமைப்பித்தன் எழ்தினாலும் வேதாளாம் சொன்ன கதை எனக்கு தேறவில்லை, துன்பக்கேனிய நீங்கள் ரசிக்கவில்லை இல்லையா?

   Like

 4. நான் கல்கியில் வந்த தொடரை படிக்கவில்லை.அதனால் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் சுஜாதாவின் ரசிகன் என்ற முறையில் உங்கள் கருத்தை ஏற்க முடியவில்லை. ஆனால் உங்க கருத்தை வெளியிடும் உரிமை உங்களுக்குண்டு.. படிச்சுட்டு மறுபடி வந்து பின்னூட்டம் போடறேன்

  Like

 5. //மூன்றையுமே அவர்தான் எழுதியிருக்கிறார். மூன்றும் மூன்று உலகங்களைச் சேர்ந்த ஆக்கங்கள். //

  3ம் வாசித்ததில்லை (பொறுப்பு துறப்பு)

  ஆனால், நான் படித்த மட்டும், அசோக மித்திரனும் கி ராஜநாராயணனும் தங்களின் எல்லா படைப்புகளிலும் ஒரே மாதிரி டெம்பிளேட் வைத்திருந்ததாக தோன்றுகிறது.

  அதே சமயம்… Coetzeeயோட நடை, ருஷ்டியின் சிலம்பாட்டம்னு – அவங்களோட பிரத்யேகத்திற்காக உருகுபவர் நிறைந்த உலகம்.

  Like

 6. ‘உள்ளம் துறந்தவன்’ கதை வெகு சாதாரணம் என்பதுதான் என் எண்ணமும். இப்போது கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. ஸ்பெல்லிங் தவறுகளை பெரும்பாலும் ஒழித்துவிட்டோம் என்றே நினைக்கிறேன். சில ஜம்ப்களை முடிந்தவரை ஒழுங்காக்கியிருக்கிறோம் என்றும் நினைக்கிறேன். கதை தொடர்பான உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

  Like

 7. >>சுஜாதாவை ஒரு முன்னுதாரணமாக மேலே தூக்கும் முயற்சி இப்போது சில இலக்கியரசனை அற்றமேலோட்டமான வாசகர்களால் செய்யப்படுகிறது.

  இது மிக மிகத் தவறான குற்றச்சாட்டு. இதற்கு எந்த அவசியமும் இல்லை. சந்தேகத்திற்கே இடமில்லாமல் இன்னும் எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா தான்.

  பத்ரி சேஷாத்ரி கூறுகிறார்…

  சென்ற புத்தகக் கண்காட்சியில்தான் முதன்முதலாக சுஜாதாவின் சில புத்தகங்களைப் பதிப்பித்து விற்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஐந்து புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தோம். ஆஸ்டின் இல்லம், தீண்டும் இன்பம், மீண்டும் ஜீனோ, நில்லுங்கள் ராஜாவே, நிறமற்ற வானவில்.

  புத்தகக் கண்காட்சியின்போதுதான் இந்தப் புத்தகங்களில் சில பிரதிகள் அச்சாகி வந்திருந்தன. அவை அடுக்கப்படும் முன்னரேயே விற்பனையும் ஆகிக்கொண்டிருந்தன. நில்லுங்கள் ராஜாவே, மீண்டும் ஜீனோ தவிர மற்றவை அதிகம் கேள்விப்படாத புத்தகங்கள். அதன்பின் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டுவந்துவிட்டோம். இவை அனைத்தும் பிரம்மாண்டமாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் காண, வாங்கக் கிடைக்கும்.

  கடந்த சில மாதங்களிலேயே சுஜாதாவின் ஈர்ப்பு சக்தி எத்தகையது என்பதை அறிந்துகொண்டுள்ளோம். சுஜாதா இன்னும் தமிழக மக்களுக்கு ஒழுங்காகப் போய்ச்சேரவே இல்லை. புத்தகக் கடைகள் தாண்டி தெருவோரக் கடைகளில், டிபார்ட்மெண்டல் கடைகளில் எல்லாம் வைக்கப்படும்போது அங்கு வரும் மக்கள் ஆர்வத்தோடு வாங்குகிறார்கள்.
  இந்த ஆண்டில் நான் வேலை செய்த பல புத்தகங்களுக்கிடையே சுஜாதா புத்தகங்கள் அனைத்தும் என்னைப் பொருத்தவரையில் திருப்தி தரக்கூடியவை.

  நான் படித்தே இராத பல கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் பலமே உரையாடல்கள் மூலம் படு வேகமாகக் கதையைக் கொண்டு செல்வது. எப்போதே படித்திருந்தாலும் இப்போது கையில் எடுக்கும்போதும் மீண்டும் மீண்டும் படிக்கவைக்கும் கதைகள். முடிவுகள் பெரும்பாலுமே திருப்தியற்றவையே. ஆனால் தொடர்கதைகளை எழுதும்போது வேறு வழி இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். பெரும்பாலான கதைகள் தொடர்கதைகள் என்றால், சில மாத நாவல்களும் உண்டு. சுஜாதா என்றாலே கணேஷ் – வஸந்த் என்றுதான் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவற்றையும் தாண்டி பல மர்மக் கதைகள் முதல் மனித மனங்கள் பற்றிய கதைகள் உண்டு.

  Like

 8. ஜெயமோகன் நல்ல எழுத்தாளர். ஒப்பு கொள்கிறேன்.
  அதற்காக இன்னொருவரை மட்டம் தட்ட வேண்டிய அவசியம் அவர்க்கு எதற்கு ?
  எனக்கு புரியவில்லை ?

  அதாவது சுஜாதவை மட்டம் தட்டி அதன் மூலம் பெயர் வாங்க முயற்சி செய்யும் பலருள் ஜெயமோஹனும் விதிவிலக்கல்ல.

  ஜெயமோகன் கதை எழுதுவதோடு நிறுத்தி கொண்டால் பரவயில்லை.

  அதற்காக அடுத்தவரை விமர்சிப்பதை கொஞ்சம் நிறுத்தினால் நல்லது.

  Like

 9. ஸ்ரீனிவாஸ், நீங்கள் சுஜாதா பக்தர் என்பது தெரிந்ததே. ஆனால் இங்கே அவர் புத்தகங்கள் எப்படி விற்கின்றன என்பதைப் பற்றி ஜெயமோகன் பேசவில்லை, தரத்தைப் பற்றி பேசுகிறார். விற்பனை என்று பார்த்தால் ரமணி சந்திரன்தான் பத்து வருஷமாக டாப்பாம். அதனால் அவர் எழுதுவதை இலக்கியம் என்றா சொல்லப் போகிறீர்கள்? நீங்கள் மேற்கோள் காட்டும் அதே பத்ரி சேஷாத்ரி முந்திய மறுமொழியில் // உள்ளம் துறந்தவன்’ கதை வெகு சாதாரணம் என்பதுதான் என் எண்ணமும். // என்கிறாரே, கவனித்தீர்களா?

  பத்ரி, உங்கள் வருகை ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கிழக்கு பதிப்பகமும் வெளியிட்டிருக்கிறது என்பதையும் பதிவோடு இணைத்துவிட்டேன். எனக்கு ஒரு ஆசை உண்டு. ஒரு புத்தகத்தைப் பற்றி இங்கே எழுதினால் அதை வாங்கக் கூடிய சுட்டி ஒன்றை கூடவே தர வேண்டும் என்று. அப்படி கிழக்கு பதிப்பகத்தின் விவரங்கள் கிடைக்க ஏதாவது வழி உண்டா? உதாரணமாக உ. துறந்தவன் சுட்டி கிழக்கில் கிடைக்குமா என்று தேடினேன், கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேட கஷ்டமாக இருக்கிறது.

  விமல், // ஜெயமோகன் நல்ல எழுத்தாளர். ஒப்பு கொள்கிறேன். அதற்காக இன்னொருவரை மட்டம் தட்ட வேண்டிய அவசியம் அவர்க்கு எதற்கு ? // நான் எழுதியது எதுவும் உங்கள் கண்ணில் படவில்லையா? சொதப்பல், கத்துக்குட்டி கூட இப்படி எழுதமாட்டான் என்றெல்லாம் காட்டமாக விமர்சித்திருக்கிறேனே! விமல், தன கருத்தை உண்மையாக எழுதாவிட்டால், போலியான மரியாதை பார்த்து பொய் சொன்னால், சுஜாதாவே ஜெயமோகனையும் என்னையும் மன்னிக்கமாட்டார். அவர் எத்தனை காட்டமாக எழுதி இருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன் – (சிவாஜி) முக்கால் வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார். அல்லது கை கால் கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிக சிலவே!…” உங்களைப் போல ஒருவர் அன்று சுஜாதா நல்ல எழுத்தாளர், ஆனால் சிவாஜியை என் மட்டம் தட்டுகிறார் என்று கிளம்பி, அதற்கப்புறம் சுஜாதாவும் அடக்கி வாசித்திருந்தால் இன்று நீங்கள் சுஜாதாவை மட்டம் தட்டுகிறாரே என்று பொங்கமாட்டீர்கள். சுஜாதாவாக இருந்தாலும் நன்றாக இல்லாத எழுத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கில்லை.

  Like

 10. >>ஸ்ரீனிவாஸ், நீங்கள் சுஜாதா பக்தர் என்பது தெரிந்ததே.
  ஆர்.வீ, இதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் ஜெ.மோ. பக்தர் ஆகி விட்டீர்கள் என்று நான் சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா 🙂

  நண்பர் சந்திரமௌளீஸ்வரன் குறிப்பிடுவது போல் ஜெ.மோ பற்றிக் குறிப்பிடாத உங்களது பதிவைப் பார்ப்பதே வர வர அபூர்வமாகி விட்டது. சரி தானே ?

  மேலும் ரமணி சந்திரனோடு நீங்கள் சுஜாதாவை ஒப்பிடுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை 😦

  ‘உள்ளம் துறந்தவன்’ கதை வெகு சாதாரணம் என்று சொல்ல பத்ரிக்கும், ‘சொதப்பல்’ என்று சொல்ல உங்களுக்கும் முழு உரிமை உள்ளது. சுஜாதா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று நான் சொல்லவோ, வாதாடவோ இல்லை. அதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

  மீண்டும், ஜெ,.மோவின் முக்கிய குற்றச்சாட்டுக்கு வருகிறேன்.
  >>சுஜாதாவை ஒரு முன்னுதாரணமாக மேலே தூக்கும் முயற்சி இப்போது சில இலக்கியரசனை அற்ற மேலோட்டமான வாசகர்களால் செய்யப்படுகிறது.

  என்னுடைய கேள்வி என்னவென்றால், வாசகர்களை, ‘மேலோட்டமானவர்கள்’ ‘இலக்கிய ரசனை அற்றவர்கள்’ என்றெல்லாம் விமர்சிக்கும் உரிமையை யார் ஜெ,மோவுககுக் கொடுத்தது ?

  Like

 11. // ஆர்.வீ,… ஆனால் நீங்கள் ஜெ.மோ. பக்தர் ஆகி விட்டீர்கள் என்று நான் சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா // நிச்சயமாக முடியும். ஆனால் நான் பக்தனா இல்லையா என்பதற்கும் இந்த பதிலுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.
  // நண்பர் சந்திரமௌளீஸ்வரன் குறிப்பிடுவது போல் ஜெ.மோ பற்றிக் குறிப்பிடாத உங்களது பதிவைப் பார்ப்பதே வர வர அபூர்வமாகி விட்டது. சரி தானே ? // சரியே. ஆனால் நான் எழுதுவது புத்தகங்களைப் பற்றி. நல்ல புத்தகங்கள் என்று ஜெயமோகன் போட்டிருக்கும் லிஸ்ட் எனக்கு ஒரு reference. எஸ்.ரா. போட்டிருப்பது இன்னொரு reference. நான் எழுதும் புத்தகங்களைப் பற்றி இவர்கள் ஏதாவது சொல்லி இருந்தால் அதை மறக்காமல் குறிப்பிடுவேன். எல்லாருக்கும் ஜெயமோகனை மேற்கோள் காட்டுவது தெரிகிறது, எஸ்.ரா. கண்ணில் படுவதில்லை. 🙂 இவர்கள் இருவர் மட்டுமல்ல, இந்த புத்தகங்களைப் பற்றி ஜெயகாந்தன், சுரா, சுஜாதா போன்றவர்கள் ஏதாவது எழுதி இருந்து அது சுலபமாக கிடைக்கவும் கிடைத்தால் அதையும் தவறாமல் சேர்ப்பேன்.
  // மேலும் ரமணி சந்திரனோடு நீங்கள் சுஜாதாவை ஒப்பிடுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை // இலக்கியத் தரம் பற்றி ஜெயமோகன் பேசினால் நீங்கள் அல்லவோ சுஜாதா புத்தகம் விற்கிறது என்று வாதிடுகிறீர்கள்? புத்தக விற்பனைக்கும் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லவே சுஜாதாவை விட அதிகமாகா விற்கும் ரமணி சந்திரனைப் பற்றி குறிப்பிடுகிறேன்.

  // ‘உள்ளம் துறந்தவன்’ கதை வெகு சாதாரணம் என்று சொல்ல பத்ரிக்கும், ‘சொதப்பல்’ என்று சொல்ல உங்களுக்கும் முழு உரிமை உள்ளது. சுஜாதா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று நான் சொல்லவோ, வாதாடவோ இல்லை. அதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன். // நீங்கள் ஒரு நாளும் அப்படி சொல்லமாட்டர்கள் என்று நான் அறிவேன். இருந்தாலும் சில சமயம் நாம் icon என்று கருதுபவர்களைப் பற்றி நெகடிவாக கமென்ட் வருவது நம் மனதை புன்படுத்திவிடுகிறது. அந்த பயத்தில்தான் நீங்கள் சுஜாதா பக்தர் என்று தெரிந்தும் இதை எழுத வேண்டி இருக்கிறது என்று ஆரம்பித்தேன்.

  // >>சுஜாதாவை ஒரு முன்னுதாரணமாக மேலே தூக்கும் முயற்சி இப்போது சில இலக்கியரசனை அற்ற மேலோட்டமான வாசகர்களால் செய்யப்படுகிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால், வாசகர்களை, ‘மேலோட்டமானவர்கள்’ ‘இலக்கிய ரசனை அற்றவர்கள்’ என்றெல்லாம் விமர்சிக்கும் உரிமையை யார் ஜெ,மோவுககுக் கொடுத்தது ? // என்னங்க ஸ்ரீனிவாஸ், பொது தளத்தில் எது வந்தாலும் அதை விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு. ஆனானப்பட்ட சுஜாதாவையே நான் விமர்சிக்கிறேன், எனக்கு இந்த உரிமை எங்கிருந்து வந்தது என்று கேட்டால் என்ன சொல்ல? யாரோ வாசகர்கள் எங்கோ எழுதியதைப் படித்த ஜெயமோகன் avarkaL இலக்கியரசனை அற்ற மேலோட்டமான வாசகர்க என்கிறார். அந்த வாசகர்கள் படித்ததை என்றாவது நானும் படிக்கலாம், அப்படி படிக்கும்போது எனக்கு ஜெயமோகனின் கருத்து சரி என்றோ தவறு என்றோ தோன்றலாம். இன்று எனக்கு அதைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. அவர் இவ்வாறு எழுதியதைப் படிக்கும் நீங்கள் திமிர் பிடித்த, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஜெயமோகன் என்று எழுதலாம். அதை நான் மறுப்பேன், ஆனால் அப்படி எழுத உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.