பொருளடக்கத்திற்கு தாவுக

எடிட்டர் எஸ்.ஏ.பி.

by மேல் ஜனவரி 28, 2011

மறைந்த எஸ்.ஏ.பி. அண்ணாமலை குமுதத்தை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கியவர். ஆனால் குமுதம் பத்திரிகையின் தரம் என்பது என் கண்ணில் விகடனை விட, கல்கியை விட, கலைமகளை விட கொஞ்சம் குறைவுதான். என் வீட்டில் எது படித்தாலும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள், அதனால் பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் குமுதம் கொஞ்சம் lowbrow, சிறுவர்கள் படிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். (அய்யய்யோ என் வயசு எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே!)

அவர் எழுதி சின்ன வயதில் ஏதோ படித்திருக்கிறேன். (ஆளவந்தார் என்ற போலி ஆனால் கைராசிக்கார டாக்டர் வரும் கதை ஒன்று யாருக்காவது நினைவிருக்கிறதா? இது ரா.கி. ரங்கராஜன் எழுதியதாம், எஸ்.ஏ.பி. இல்லை. பேர் கையில்லாத பொம்மை) ஆனால் எதுவும் சரியாக நினைவில்லை. ஜெயமோகன் சின்னம்மா, மலர்கின்ற பருவத்தில், பிறந்த நாள் ஆகிய நாவல்களை நல்ல social romances என்று குறிப்பிடுகிறார். அரசு பதில்கள் பெரும் வெற்றி. பூவனம் தளத்தை நடத்தும் ஜீவி எஸ்.ஏ.பி.யை பெரிதும் ரசிப்பவர். எழுத்தாளர் திலகம் என்று இவரை புகழ்கிறார். அவரது நீ என்ற நாவலிலிருந்து ஒரு excerpt-ஐ இங்கே பதித்திருக்கிறார். எழுத்தாளர் கடுகு தன் நினைவுகளை இங்கே பதிவு செய்திருக்கிறார்.

ஆனால் குமுதம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதே தவிர நல்ல சிறுகதைகளையோ (ஆனந்த விகடன் முத்திரைக் கதைகள் மாதிரி), நல்ல இலக்கியத்தையோ தர முயன்றதே இல்லை. (ஆனால் அசோகமித்திரன், லா.ச.ரா. ஆகியோரின் எழுத்துகளை சின்ன வயதில் படித்திருக்கிறேன்). என் சம வயது நண்பர்கள் ஓரிருவர் குமுதத்தில் சில கதைகளைப் படித்து பாலியல் கிளர்ச்சி அடைந்ததை சொல்லி இருக்கிறார்கள். (நான் மிஸ் பண்ணிட்டேனே!) சாண்டில்யன் சில சமயம் (யூஸ்லெஸ்) போர்னோ மாதிரி எழுதுவார், அதை எல்லாம் எடிட் செய்ய முயன்றதாகவே தெரியவில்லை. விஜயமஹாதேவி என்ற நாவலில் நாயகன் நாயகியிடம் கப்பல் உள்ளே போக வேண்டும், போகுமா தெரியவில்லை என்றெல்லாம் பேசுவான். நாயகி வெட்கப்பட்டுக் கொண்டே இருப்பாள். கடைசியில் நீங்க நிஜ கப்பல் கடலுக்குள்ளே போவதைப் பற்றி பேசறீங்களா என்பாள். ஜெயராஜின் “கவர்ச்சி ததும்பும்” படங்கள், நடிகைகளின் ஃபோட்டோக்கள், அட்டைப்படத்தில் தவறாமல் பெண்கள், கிசுகிசு என்று அன்றைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் போனார். இப்படி ஒரு பத்திரிகையை மலினப்படுத்தினார் என்று கூட அவர் மேல் எந்த விமர்சனமும் யாரும் வைத்து நான் பார்த்ததில்லை. அவரது வணிக வெற்றி எல்லா குறைகளையும் மறைத்துவிட்டது போலிருக்கிறது.

அவரைப் பற்றி யாரும் நெகடிவாக சொல்லி நான் பார்த்ததே இல்லை. சுஜாதாவிடம் அவர் “பர்சனாலிட்டி நான் இல்லை, குமுதம்தான்” என்று சொன்னாராம். அப்படி குமுதம் நன்றாக விற்க வேண்டும் என்பதையே குதிரைக்கு கண்ணில் பட்டை கட்டியதைப் போல இலக்காக வைத்துக் கொண்டு ஓடி இருக்கிறார். நிறைய படித்திருந்தும், நல்ல ரசனை இருந்தும், தன் பத்திரிகை ஒரு “பாமரனுக்காக” என்று உறுதியாக இருந்திருக்கிறார், தன் ரசனையை விட்டுவிட்டு சராசரி குமுதம் வாசகன் என்ற ஒரு பிம்பம் என்ன நினைப்பானோ, எதை ரசிப்பானோ அதையே கொடுக்க முயற்சித்திருக்கிறார். உதாரணமாக சோமனதுடி என்ற ஆர்ட் படத்தை பார்த்துவிட்டு மறைந்த சுப்ரமணிய ராஜுவிடம் புகழ்ந்து பேசினாராம். ஆனால் அரசு பதில்களில் இதெல்லாம் ஒரு படமா என்று நக்கல் அடித்தாராம். ஆனானப்பட்ட சுஜாதா எழுதிய தொடர்கதையையே பிரச்சினை என்று வந்ததும் நிறுத்திவிட்டார்.

சமீபத்தில் பிரபஞ்சன் எழுதிய ஒரு கட்டுரை கண்ணில் பட்டது – “பகவத்கீதையும் பலான படங்களும்“. பிரபஞ்சன் குமுதத்தில் பணியாற்றிய காலத்தைப் பற்றி எழுதி இருக்கிறார். ஒழுங்கு ஒழுங்கு என்று பயங்கர ஆபீஸ் rituals நிறைந்த அலுவலகமாம். மீட்டிங்குக்கு போனால் கூட முதலில் பெரிய சீனியர் ரா.கி. ரங்கராஜன் உள்ளே நுழைய வேண்டும், அடுத்தது சின்ன சீனியர் ஜ.ரா. சுந்தரேசன், அப்புறம் சீனியாரிட்டிபடி எல்லாரும், கடைசியில்தான் புதிதாக சேர்ந்த பிரபஞ்சன் அறைக்குள் நுழைய வேண்டுமாம். காலையில் பத்திலிருந்து பத்தரை வரை குமுதம் ஆஃபீஸில் எஸ்.ஏ.பி. தலைமையில் பகவத்கீதை, திருக்குறள் விளக்கமாம். அதற்குப் பிறகு நடிகைகளின் எந்த கவர்ச்சிப் படத்தை இந்த வாரம் போடலாம் என்று பல சைட் போஸ், குனிந்த போஸ் புகைப்படங்களை அளைந்து அளைந்து தேர்ந்தெடுப்பாராம்.

ஆனால் எனக்கென்னவோ இது hippocrisy என்று தோன்றவில்லை. அவர்தான் பகவத்கீதையை புரிந்துகொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது!

தொடர்புடைய சுட்டிகள்:
பிரபஞ்சனின் கட்டுரை – குமுதத்தின் கதை

20 பின்னூட்டங்கள்
 1. >>ஆனால் எனக்கென்னவோ இது hippocrisy என்று தோன்றவில்லை. அவர்தான் பகவத்கீதையை புரிந்துகொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது!

  பிரபஞ்சன் கூறுவது போல் நிஷ்காம்ய கர்மம் என்பது இது தான் போலிருக்கிறது.

  Like

 2. எஸ். ஏ. பி. பற்றி கடுகு கூறுகிறார்…

  http://kadugu-agasthian.blogspot.com/2010/03/blog-post_22.html

  Like

 3. எஸ்.எ.பி. பற்றிய சுட்டிக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்! பதிவில் இணைத்துவிட்டேன்.

  Like

 4. ஆர்வி

  கையில்லாத பொம்மை என்ற நாவல். [அதை எழுதியது ரா கி ரங்கராஜனா?]

  அந்நாவல் ஒரு தழுவலும்கூட

  எஸ் ஏ பி நல்ல வாசகர். அந்த வாசிப்பின் தரம் அவரது எழுத்தில் உள்ள சில மெல்லிய பகுதிகளில் தெரியும். மலர்கின்ற பருவத்தில்தான் நல்ல உதாரணம். சின்னம்மா அவரது செட்டிநாடு உலகின் சித்திரம்

  ஆனால் இதழியலில் அவர் ஒரு நசிவு சக்தி. அதை சிற்றிதழ் சார் விமர்சகர்கள் க.நா.சு, வெசா எல்லாருமே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

  50களில் அப்போதுதான் இங்கே வணிக இதழியல் உருவாகி வலுப்பெற்ற காலம் அப்போது அவர் குமுதத்தை Vogue இதழை முன்னுதாரணமாகக் கொண்டு எந்த விதமான மதிப்பீடுகளும் இல்லாத, பாலியலையும் சினிமாவையும் மட்டுமே நம்பக்கூடிய, ஒரு இதழியலை உருவாக்கினார். அவர் அதில் அடைந்த வெற்றி தமிழ் இதழியலை தவறான திசைக்குக் கொண்டுசென்றது. விகடன்கூட குமுதத்தை பின் தொடர ஆரம்பித்தது.

  அவர்மேல் மிகுந்த வருத்தத்தை உருவாக்கும் செய்தி ஒன்றுதான். அவர் அசோகமித்திரனின் கதைகளின் ரசிகர். ஆகவே பல நல்ல கதைகளை வெளியிட்டும் இருக்கிறார். பல நாவல்களைப்பற்றி பாராட்டி எழுதியிருக்கிறார் – 18 ஆவது அட்சக்கோடு , தண்ணீர் , கரைந்த நிழல்கள் பற்றி. ஆனால் அவர் நினைத்திருந்தால் அசோகமித்திரன் பட்டினி கிடக்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். இம்மாதிரி கலைமேதைகள் ரசிகசிகாமணிகள் ஞானிகளான முதலாளிகள் மண்டிய சென்னையில் நம் காலகட்டத்து இலக்கியமேதை பட்டினிகிடந்தார் என்ற யதார்த்தத்துடன் நாம் சிந்திக்க ஆரம்பிக்கலாம்

  Like

 5. >>கையில்லாத பொம்மை என்ற நாவல். [அதை எழுதியது ரா கி ரங்கராஜனா?]

  கையில்லாத பொம்மை எழுதியவர் ரா.கி.ரங்கராஜன் தான்.
  http://www.newbooklands.com/new/reviews_write.php?panum=1283&&catid=5

  Like

 6. ஜெயமோகன், உங்கள் மறுமொழியைப் பார்த்தபோது கையாலாகாத கோபம் நிறைய வருகிறது. இந்த கோபத்தை எப்படியாவது ஆக்கபூர்வமாக மாற்ற வேண்டும்…

  Like

 7. knvijayan permalink

  ஏற்கனவே மகா மட்டமான தமிழனின் ரசனையை மேலும் கேவலமாக்கிய மேதை sap .பத்திரிக்கையின் விற்பனைக்காக எந்த அளவுக்கும் போன மனிதர்.வயிற்று பசிக்காக உடலை விற்கும் ஏழை பெண் இவர்களைகாட்டிலும் உத்தமி.

  Like

 8. நடிகர் சிவகுமார் கூறுகிறார்…

  ஆக்டர் ஆகி 14 வருஷம் கழிச்சி ஒரு விஐபி-யை கண்டு பேட்டி காணும்னு சொன்னாங்க. நான் குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலையை சந்திக்கணும்னு திட்டமிட்டேன் அவர் சொன்னாரு. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. ஆனால் சிவகுமாருக்கு என்னுடைய நன்றிய சொல்லுங்க. குமுதம்தான் தலையே தவிர எஸ் ஏ பி எல்லாம் வெறும் உடல்தான். மன்னிக்ககணும். நான் யாருக்கும் பேட்டியெல்லாம் தர்றதில்லனுட்டாரு.

  Like

 9. குமுதத்தின் கதை — பிரபஞ்சன்

  http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=138

  Like

 10. முத்து permalink

  “காலையில் பத்திலிருந்து பத்தரை வரை குமுதம் ஆஃபீஸில் எஸ்.ஏ.பி. தலைமையில் பகவத்கீதை, திருக்குறள் விளக்கமாம். அதற்குப் பிறகு நடிகைகளின் எந்த கவர்ச்சிப் படத்தை இந்த வாரம் போடலாம் என்று பல சைட் போஸ், குனிந்த போஸ் புகைப்படங்களை அளைந்து அளைந்து தேர்ந்தெடுப்பாராம்.”

  ஹ்ம்ம்ம்ம் என்ன சொல்ல ? விதி, அவ்வளவே !!

  Like

 11. ஸ்ரீனிவாஸ், சுட்டிக்கு நன்றி!
  முத்து, விஜயன், மறுமொழிக்கு நன்றி!

  Like

 12. புத்தகங்களுக்குக்கான இந்த பிளாக் நன்றாக இருக்கிறது. இனி அடிக்கடி வந்து படிப்பேன்.

  எனது பூவனம் தளம் பற்றி எழுதி தொடர்புச் சங்கிலியும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி, RV Sir!

  Like

 13. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஜீவி சார்!

  Like

 14. குமுதத்தின் கலை சேவைக்கு ஒரு உதாரணம்

  Like

 15. அவர் மட்டும் இல்லையென்றால்…

  `1965 என்று ஞாபகம். `சசி காத்திருக்கிறாள்’ என்ற கதை குமுதத்தில் வெளிவந்தபோது வாசகர்களிடமிருந்து அதைப் பாராட்டி நிறைய கடிதங்கள் வந்தன. ஆசிரியர் எஸ்.ஏ.பி. அதற்கான செக் அனுப்பும் அச்சிட்ட படிவத்தின் ஓரத்தில் `அடிக்கடி எழுதுங்கள்’ என்று பொடிப்பொடியாக ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அந்த சிறுகுறிப்பே எனக்கு உற்சாகமளிக்கப் போதுமானதாக இருந்தது. விளைவு சுஜாதா.

  மகனோ, மகளோ, மனைவியோ, வேலையாட்களோ, நண்பர்களோ, மாணவரோ, யாராயிருந்தாலும் சின்ன விஷயத்துக்குக்கூட தாராளமாக பாராட்டுங்கள். சின்ன தப்புகளைச் சுட்டிக் காட்டுவதுதான் சுலபம். பாராட்டுவது கஷ்டம். அதற்கு தாராள மனசும் தன் திறமையில் நம்பிக்கையும் வேண்டும். கு.அழகிரிசாமியின் `அன்பளிப்பு’ என்ற கதையைத் தேடிப் படித்துப் பாருங்கள். பாராட்டுக்காக ஏங்கும் ஒரு சிறுவன் தன்னைக் கவனிக்காத ஆசிரியரிடம், தானே குறிப்பெழுதிக் கொண்டு கையெழுத்து கேட்டு அன்பளிப்பு பெறுவான்.

  அன்று எஸ்.ஏ.பி. அந்தக் குறிப்பை அனுப்பியிராவிட்டால் இன்று இந்தக் கட்டுரை வரை வந்திருக்கமாட்டேன்.

  பார்வை 360 கட்டுரைத் தொகுப்பில் சுஜாதா, 2007

  Like

Trackbacks & Pingbacks

 1. பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள் | சிலிகான் ஷெல்ஃப்
 2. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள் | சிலிகான் ஷெல்ஃப்
 3. ரா.கி. ரங்கராஜன் | சிலிகான் ஷெல்ஃப்
 4. சுஜாதாவின் “அப்பா அன்புள்ள அப்பா” | சிலிகான் ஷெல்ஃப்
 5. அஞ்சலி – பாக்கியம் ராமசாமி/ஜ.ரா.சு. மறைவு | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: