விருதுகள் (பத்மஸ்ரீ, கலைமாமணி)

ஜெயகாந்தன், இ.பா. ஆகியவர்களுக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் கிடைத்தது ஒரு நல்ல ஆரம்பம், தொடரும் என்று நினைத்தேன். அதுவும் இந்த வருஷம் நாஞ்சில் நாடன், ஆ. மாதவன், திலீப்குமார், அசோகமித்திரன் ஆகியோருக்கு வேறு வேறு கௌரவங்கள் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த வருஷ லிஸ்டிலும் அசோகமித்திரன், ராஜநாராயணன், பூமணி, சா. கந்தசாமி யாரையும் காணோம். தகுதி உள்ளவர்களுக்கு விருது வழங்கப்படாதது பெரிய துக்கம். அதுவும் இவர்களுக்கெல்லாம் வயதாகிக் கொண்டே போகிறது. எப்படி இவர்களை எல்லாம் நம் அரசை கண்டுகொள்ள வைப்பது? ஏற்கனவே விருது வாங்கிய இ.பா., ஜெயகாந்தன், மணிரத்னம் இந்த மாதிரி யாராவது பரிந்துரைக்க முடியுமா? அவர்களுக்கு யார் சொல்வது என்பது அடுத்த விஷயம். 🙂 procedure என்ன என்று தெரியுமா?

விருது கிடைக்காதது ஒரு துக்கம் என்றால் மலினமான கலைமாமணி விருது சா. கந்தசாமிக்கும் நாஞ்சில் நாடனுக்கும் கொடுக்கப்பட்டிருப்பது இன்னொரு துக்கம். என்ன சார் மிமிக்ரி செய்யும் ரோபோ சங்கரும் கலைமாமணி, சாயாவனம் எழுதியவரும் கலைமாமணி என்றால் எப்படி? அதுவும் இரண்டாயிரம் ரூபாயாம். நாஞ்சில் கோவையிலிருந்து சென்னை வந்து போகும் செலவே இதை விட அதிகமாக இருக்குமே!

நம்மூரில் சரியானவருக்கு சரியான விருது கிடைத்தது என்று சந்தோஷப்படுவது அபூர்வமாகவே இருக்கிறது.