சுஜாதாவின் “ஆர்யபட்டா”

சில சமயம் சுஜாதா இத்தனை வெட்டி புனைவுகளா எழுதி இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. பதின்ம வயதில் எனக்கு அவர் ஏறக்குறைய தெய்வம். இன்றும் அவர் ஒரு icon. ஆனால் அப்போதெல்லாம் இந்த மாதிரி புத்தகங்கள் என் கண்ணில் படவே இல்லை. என்ன மாயமோ தெரியவில்லை. ஒரு வேளை அவரது peak எழுபதுகளிலும் எண்பதுகளிலும்தானோ?

ஆனால் அவரை சொல்லியும் குற்றமில்லை. இது திரைப்படமாக எடுப்பதற்காக எழுதப்பட்ட நாவல். கன்னட திரைப்படம். ரமேஷ் அரவிந்த், சௌந்தர்யா நடித்தது. அதன் திரைக்கதையை சுஜாதா நாவலாக மாற்றி இருக்கிறார் என்று நினைக்கிறேன். கல்கியில் 1998-இல் தொடர் கதையாகவும் வந்ததாம். அனேகமாக இயக்குனர் சுஜாதாவுக்கு ஒன் லைனர் கதையைக் கொடுத்து டெவலப் பண்ண சொல்லி இருப்பார். இயக்குனர் “அந்த நாள்‘ சினிமாவைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகி இருக்கிறார் என்று நினைக்கிறேன், அதே ஒன் லைனரைத்தான் சுஜாதாவிடம் கொடுத்திருக்கிறார். அந்த ஒன் லைனரை வைத்து சுஜாதாவும் என்னதான் செய்ய முடியும்?

அந்த நாள் சினிமா போலவே முதல் அத்தியாயத்தில் விஞ்ஞானி கணவன் சுடப்படுகிறான். அவனுக்கு வர வேண்டிய பேர், ப்ரமோஷன், விருது எல்லாம் அவனிடமிருந்தே ஐடியாவை திருடும் சகாவுக்கு போகிறது. போலீசின் பார்வை அந்த சகா, அவனைக் காதலித்த இன்னொரு பெண், மனைவியின் முறைப்பையன் எல்லார் மேலும் விழுகிறது. டைம் பாஸ், அவ்வளவுதான்.

தவிர்க்கலாம். நல்ல அனுபவம் வேண்டுமென்றால் அந்த நாள் திரைப்படத்தைப் பாருங்கள்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை 75 ரூபாய்.