(திருத்தப்பட்ட மீள்பதிப்பு)
லா.ச.ரா.வின் அபிதா படிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நண்பர் ராஜன் புண்ணியம் கட்டிக்கொண்டார்.
சின்ன வயதில் அம்பி சகுந்தலா மீது ஆசைப்படுகிறான். ஆனால் ஊரை விட்டு ஓடிப் போகிறான். அங்கே கல்யாணம் ஆகி இப்போது “கிழவன்” ஆகியாயிற்று, ஆனாலும் சகுந்தலாவின் நினைவு அடிமனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. பல வருஷம் கழித்து ஊருக்கு திரும்புகிறான். சகுந்தலா மேலே போயாச்சு, ஆனால் சகுந்தலாவின் மகள் அபிதாவைக் கண்டு அவன் மனம் தடுமாறுகிறது. அபிதாவின் பாய்ஃபிரெண்டைக் கண்டால் கோபம் வருகிறது. என்ன நடக்கிறது என்பதுதான் கதை. கதை முக்கியமில்லை.
அபிதாவின் பலம் அதன் மொழி. சொகுசான நடை. லா.ச.ரா.வின் நடையை விவரிப்பது கஷ்டம். மிக அற்புதமான படிமங்களை கொண்டு வருகிறார். சில உதாரணங்கள்.
“நேற்றிரவே மின்சாரம் தோற்றுவிட்டது” (பவர் கட் ஆகிவிட்டதாம்)
“வாய்க்கால் வளைந்து தன் தலையை தேடும் பாம்பு போல ஓடிற்று.”
“கல் வடித்த கண்ணீர்” (கல் திட்டுக்களுக்கு அடியில் ஒரு ஊற்று கசிகிறது)
“(வெற்றி) இருவரில் ஒருவருக்கு துரோகம் செய்தே ஆக வேண்டும்.”
மீண்டும் மீண்டும் படிக்கலாம். கவனிக்க தவறிய வார்த்தைகள், படிமங்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர் சொல்வாராம், நெருப்புன்னு எழுதினா படிக்கறவனுக்கு சுடணும் என்று.(சரியான வார்த்தைகள் ஞாபகம் இல்லை, ஆனால் இந்த அர்த்தத்தில்தான்) யோசித்து யோசித்து செதுக்கி இருக்க வேண்டும்.
சில சமயம் யோவ் கிழவா, என்னய்யா சொல்றே என்று ஒரு கடுப்பும் கிளம்புகிறது.
கதையின் பலவீனமும் மொழிதான். மொழி மட்டுமே போதுமா? லா.ச.ரா. படிமங்கள், அழகு இல்லை இல்லை ஸௌந்தர்யம், அதை தாண்டி போக பிரயாசைப்படுவதில்லை. அவருக்கு கதையே அவரது வார்த்தைகளை, படிமங்களை மாட்டும் ஒரு சட்டம்தானோ(frame) என்று தோன்றுகிறது.
புத்தகத்தை பதிப்பித்த வாசகர் வட்டத்தை பற்றி ஒரு வார்த்தை. புத்தகம் வெளியிட்டு 40 வருஷம் ஆகிவிட்டது. இன்னும் கருக்கு குலையாமல் அப்படியே இருக்கிறது. இந்த கால புத்தகம் கூட நாலு முறை படித்தால் பைண்டிங் கிழிந்து விடும், பக்கம் கசங்கிவிடும். வாசகர் வட்டம் காலத்தில் நான் இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது. நல்ல முறையில் அச்சிடப்பட்ட புத்தகத்தை படிப்பதும் ஒரு சுகம்!
அபிதா ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவர் லிஸ்டிலும் இடம் பெறுகிறது.
டாக்டர் ருத்ரன் இதை நாடகமாக ஆக்கி இருக்கிறார். அந்த அனுபவத்தை இங்கே விவரிக்கிறார்.
கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை 75 ரூபாய்.
அழியாச்சுடர்களில் ஒரு excerpt-ஐ படிக்கலாம்.
படிக்க வேண்டிய நாவல். ஆனால் நாவல் முழு வெற்றி பெறவில்லை.
>>நல்ல முறையில் அச்சிடப்பட்ட புத்தகத்தை படிப்பதும் ஒரு சுகம்!
மிக அழகாகக் கூறியுள்ளீர்கள்.
LikeLike
ஸ்ரீனிவாஸ், வாசகர் வட்டம் புத்தகங்கள் எல்லாமே மிக நேர்த்தியாக வெளியிடப்பட்டவை.
LikeLike
நான் நேத்துதான் எழுதினேன்
http://ramamoorthygopi.blogspot.com/2011/11/blog-post_17.html
LikeLike
அபிதாவைப் படித்ததால் நம் மனத்துல்லேயே இருக்கும் நாமறியாத ஒரு நினைவின் புதை குழிக்குள் திணற வைக்காமல் முகிழ்க்கும் ஓட்டம் இந்த நாவல். அற்புதமான படைப்பு. கரடி மலையைச்சுற்றி செல்லும் ரயிலை ‘லாடமடித்தது போல” என்பார். மேலும் ஒரு முறை குளத்திற்கு சென்று மிக சன்னமான அலையடித்துக் கொண்டிருக்கும் குளத்தை நிச்சலனம் செய்ய வேண்டாம் என்று திரும்பி விடுவதாக ஒரு இடம் வரும். அந்த அளவுக்கு நுணுகி கவனித்திருப்பார்.
மேலும் அவர் வைக்கும் ஒன்றைச் சொல். ஆணி அடித்தது போலிருக்கும். ஒரு இடத்தில் மனைவி கைவிளக்கைக் கொண்டு வைத்துவிட்டு காலடியில் வந்து அமர்வாள். அதை
காலடியில் வந்து உட்கார்ந்தாள்.
புலி – என்று அடுத்த வரியில் ஒற்றைச் சொல்லாய் வைத்து அசரவைப்பார். (இந்த வாக்கியங்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் விஷயம் அதுதான்) . இந்த நாவலை எந்தப்பக்கத்தில் பிரித்தாலும் அதிலிருந்து படித்துக்கொண்டே போகலாம் – முன்னுக்கோ பின்னுக்கோ. எழுத்தை ரசிப்பவர்களுக்கு அபிதா தரும் போதை தவிர்க்கவியலாதது.
LikeLike
ரமேஷ் கல்யாண், ஆம், லா.ச.ரா.வின் விசேஷமே இப்படிப்பட்ட சித்தரிப்புகள்தான்.
LikeLike
லா.ச.ராவின் அபிதா பற்றிய விமர்சனம் இங்கே படிக்கலாம்: http://wp.me/p2NYDZ-6M.
LikeLike