பாரதி வாழ்க்கையிலிருந்து ஒரு நிகழ்ச்சி – பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

பாரதி மகள் தங்கம்மா பாரதி எழுதிய புத்தகத்திலிருந்து.

புதுவையில், ஒரு நாள், பாரதியும் அவரது நண்பர் ஒருவரும் ரகசியமாக மேன்மாடியிலிருந்த கீற்றுக் கொட்டகையில் உட்கார்ந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். எப்போதும் இடி போன்ற குரலில் பேசும் சுபாவமுள்ளவர்கள் அன்று மிகச் சன்னமான குரலில் பேசியது ஆச்சரியத்தை விளைவித்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம், இடைப் பகல் சிற்றுண்டி உண்டு, தேநீர் அருந்தி, தாம்பூலம் தரித்து இருவரும் உல்லாசமாக வெளியேறினார்கள். எங்கே செல்லுகிறார் என்று சொல்லவில்லை. சாதாரணமாகப் பாபு அரவிந்தர் வீட்டிற்குப் போனால் கூடச் சொல்லிக் கொண்டுதான் போவது வழக்கம். எனக்கோ அவரை கேட்பதற்குத் தைரியமில்லை. ஆனால், மனம் மட்டும் சஞ்சலமடைந்தது. இன்னதென்று விவரிக்க முடியாத வகையில் குழம்பித் தத்தளித்தது.

இரவு சமையலைத் தயாரித்து விளக்கேற்றி, தேவியை நமஸ்கரித்து விட்டு, அவரின் வருகைக்காகக் காத்திருந்தேன். மணியோ 10, 11, 12 ஆய்விட்டது! அவர் வரவில்லை, நிம்மதியின்றி இரவைக் கழித்தேன். மறுநாள் காலையிலுங்கூட அவர் வரவில்லை. உடனே வேலைக்காரக் கிழவியை அனுப்பி அரவிந்தர், அய்யர், ஸ்ரீநிவாஸாசாரியார் முதலியவர்களை விசாரித்து வரச் சொன்னேன். நண்பர்களுக்கு இச்செய்தி ஆச்சரியத்தையும் பயத்தையும் ஒருங்கேயளித்தது.

“யாருடன் வெளியில் சென்றார்?” என்று கேட்டனர். என் தாயார் மேற்படி நண்பர் பெயரைச் சொன்னதும், திடுக்கிட்டு, “அந்த மனிதர் பிரிட்டிஷ் சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு சுதேசிகளைப் பிரஞ்சு எல்லையிலிருந்து ஏமாற்றியழைத்துச் சென்று, பிரிட்டிஷ் சர்க்காரிடம் பிடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று எல்லாரும் சொல்கிறார்களே, இந்தச் சமயத்தில் அவரை நம்பி அவர் கூடச் சென்றிருக்கிறாரே! என்ன கெடுதி விளையுமோ, தெரியவில்லையே!” என்று கவலைப்பட்டார்கள்.

மறுநாள், அப்பாவை அந்த மோசக்கார நண்பருடன் திருப்பாதிரிப்புலியூர் அருகில் பார்த்துத் திடுக்கிட்டு, நைச்சியமாகப் பேசி, அப்பாவைத் தம்மோடு அழைத்து வந்துவிட்டார் வக்கீல் நண்பர் ஒருவர். இல்லையென்றால் இதற்குள் பாரதி ஜெயிலில் இருந்திருப்பார்.

இரண்டு நாளைக்கெல்லாம் ஏமாற்றியழைத்துச் சென்ற நண்பர் திரும்பி வந்தார். பாரதி அவரிடம் கொஞ்சங்கூட துவேஷம் பாராட்டாமல் வரவேற்று வார்த்தையாடினார். என் தாயாருக்குக் கோபம் பொறுக்க முடியவில்லை. முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டார். அதைப் பார்த்ததும் என் தந்தை,

“பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே, பகைவனுக்கருள்வாய்…” என்று பாடினார்.

மேற்படி மனிதர் எழுந்து, என் தந்தையார் காலில் விழுந்து, “நான் அயோக்கியன்! இன்றுதான் எனக்குப் புத்தி வந்தது. என்னை மன்னிக்க வேண்டும். அம்மணி! தாங்களும் க்ஷமிக்கவேண்டும்” என்று கெஞ்சினார். என் தந்தையார் அவருக்கு ஆறுதல் மொழிகள் கூறி, அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.


வலது பக்கம் இரு குழந்தைகளுக்கு மத்தியில் இருப்பவர்தான் தங்கம்மா பாரதி.