சுப்பிரமணியின் காதல்

இன்றைக்கு நான் எழுதி வைத்திருக்கும் கதைகளில் ஒன்றை அவிழ்த்துவிடுகிறேன். (என் கண்ணிலேயே சுமாரான கதைதான்)

சுப்பிரமணியின் காதல்

இது வரை ஆறு பெண்களை காதலித்திருக்கிறேன். ஒருத்தியாவது என்னை திரும்பிப் பார்த்திருந்தால் இன்று பிரச்சினை இருந்திருக்காது.

இந்த லட்சணத்தில் அம்மாவும் அப்பாவும் கடுப்பேற்றுகிறார்கள். அம்மாவுக்கு நான் எங்கேயாவது ஒரு வெள்ளைக்காரியை கூப்பிட்டுக் கொண்டு வந்து இதுதான் உன் மருமகள் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயம் உள்ளே எரிந்து கொண்டே இருக்கிறது. அதை என்னிடம் நேரடியாக சொல்லவும் தைரியமில்லை. ஒவ்வொரு முறை ஃபோன் செய்யும்போதும் இலைமறைகாயாக சொல்கிறேன் என்று நினைத்துக் கொண்டு ஏதாவது கேட்பாள். முப்பது வயதுக்குள் தொந்தி சரிய மயிரே (அங்கங்கே) வெளிர small talk என்பது கொஞ்சமும் இல்லாத இந்தியன் பின்னால் எவள் வரப் போகிறாள்? அம்மாவுக்கு என்னவோ நான் மன்மதன் என்றும் என்னை கெடுக்க இங்கே ஒரு வெள்ளைக்காரி பட்டாளமே அலைகிறது என்றும் நினைப்பு. பதில் சொல்லி மாளவில்லை.

கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதுதான். இதற்கு மேல் இழுத்தால் மார்க்கெட் வால்யூ குறைய ஆரம்பித்துவிடும். இப்பவே போன வருஷம் இருந்த மார்கெட் வால்யூவை விட குறைவுதான். முடி வெட்டிவிடும் வியட்நாமியப் பெண் என்ன உனக்கு அதற்குள் பின்னால் சொட்டை விழுகிறதே என்று கேட்க ஆரம்பித்துவிட்டாள். கூட தங்கி இருந்த ரூம் மேட் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக கல்யாணம் செய்துகொண்டு தனி அபார்ட்மென்ட் பார்த்துக் கொண்டு போய்விட்டார்கள். மிஞ்சி இருக்கும் ஹர்ஷாவுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. புதிதாக படித்துவிட்டு வருபவன் எல்லாம் கொஞ்சம் சின்னப் பையனாக ரூம் மேட் இருந்தால் நல்லது என்று நினைக்கிறான்கள். இப்படியே போனால் கஷ்டம்.

ஆனால் அரேஞ்ச்ட் மாரேஜ் என்றால் பயமாக இருக்கிறது. வருபவளோடு முப்பது நாற்பது வருஷம் குப்பை கொட்ட வேண்டும். அவள் வழக்கமான தமிழ் குடும்பப் பெண் மதிப்பீடுகளோடு – மாமியாருக்கு சண்டை அழகு, புருஷன் என்பவன் நடமாடும் ATM, ஷாப்பிங்தான் உலகம், ஃபாரின் மோகம் – என்று வந்தால் நான் என்னாவது? எனக்கு வரும் மனைவி நாளைக்கு எனக்கு வேலை போனால் தான் சம்பாதித்து குடும்பத்தை நடத்த வேண்டும். தைரியம் இருக்க வேண்டும். என் பின்னாலேயே அலையக் கூடாது. நான் தனியாக இருக்க விரும்புகிறேன் என்றால் புரிந்துகொண்டு கொஞ்சம் தள்ளிப் போய்விட வேண்டும். அவளுக்கு குடும்பம் தவிரவும் ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும். இப்படி எல்லாம் ஒரு பெண் இருப்பாளா என்று தெரிந்துகொள்ள நமக்கு பெண் பார்க்கும்போது அரை மணி நேரம் தருவாங்களாம், அதில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட வேண்டுமாம்! போங்கடா நீங்களும் உங்க சிஸ்டமும்!

ஆனால் வேறு வழியில்லை. ஆஃபீஸில் கிரீன் கார்ட் வேறு ஆரம்பித்துவிட்டார்கள். க்ரீன் கார்ட் வந்தபிறகு கல்யாணம் செய்துகொண்டால் பெண்டாட்டி அமெரிக்கா வர மூன்று நான்கு வருஷம் ஆகிவிடும். இன்னும் ஆறேழு மாதத்தில் கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் கஷ்டம். அம்மா அப்பாவிடம் இந்த மாதிரி கிரீன் கார்ட் ஆரம்பித்துவிட்டது, இன்னும் ஆறேழு மாதத்தில் கல்யாணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டேன். மாட்ரிமோனியல் விளம்பரம் கொடுக்கச் சொன்னேன். ஆனால் வயிற்றுக்குள் ஆசிட் ஊறிக் கொண்டே இருக்கிறது.

அப்பாவிடம் விளம்பரத்தில் caste no bar என்று போடுங்கள் என்று சொன்னேன். அப்படிப்பட்ட விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வரும் பெண் ஒரு வேளை கொஞ்சம் independent ஆக இருப்பாளோ என்று எனக்கு ஒரு எண்ணம். என் அப்பா ஒரு குழப்பவாதி. அவர் கொடுத்த விளம்பரத்தில் அய்யர், பிரஹசரணம் உள் வகுப்பு என்று கூட கொடுத்திருந்தார். Caste no bar மட்டும் காணோம். கேட்டால் தற்செயலாக விட்டுவிட்டது என்கிறார். அதுவும் எப்போது கொடுத்திருக்கிறார்? நான் நாலு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன், அவர் இரண்டு வாரத்துக்கு முன்தான் விளம்பரம் கொடுத்திருக்கிறார். திருப்பி திருப்பி விளம்பரம் கொடுத்தீர்களா என்று கேட்க எனக்கு கூச்சமாக இருந்தது, மனிதர் இதுதான் சாக்கு என்று கிணற்றில் போட்ட கல் பேசாமல் இருந்திருக்கிறார்.

விஷயம் என்ன என்றால் இவருக்கு ஒரு ஜாதகம் வந்திருக்கிறது. பெண்ணின் அப்பா நடராஜ ஐயர் சதர்ன் ரெயில்வேயில் டெபுடி ஜெனரல் மானேஜராக இருந்தவர். ரிடையர் ஆனதும் கும்பகோணத்தில் செட்டில் ஆகிவிட்டார். என் அப்பாவுக்கு பெண் யார், எப்படி என்பதெல்லாம் முக்கியமில்லை. தான் டெபுடி ஜெனரல் மானேஜர் சம்பந்தி என்று சொல்லிக் கொள்ள வேண்டும், அதுதான் முக்கியம். ஏனென்றால் என் அப்பா அதே சதர்ன் ரெயில்வேயில் ஹெட் கிளார்க் ஆக இருந்தவர். இப்படி ஒரு ஜாதகம் வந்ததும் அவருக்கு வேறு எந்தப் பெண்ணையும் என் கண்ணில் காட்ட இஷ்டமில்லை. நான் வருவதற்குள் அம்மாவைக் கூட்டிக் கொண்டு கும்பகோணம் போய் மாலாவை பெண் பார்த்துவிட்டு வேறு வந்திருக்கிறார். நான் திருப்பி திருப்பி சொல்லி இருந்தேன் – ஒரு நாலைந்து பெண்ணையாவது ஷார்ட் லிஸ்ட் பண்ணி வையுங்கள், எனக்கு லீவ் கிடைக்காது, ஒன்று சரியாக அமையாவிட்டால் இன்னொன்றைப் பார்க்க வேண்டும் என்று. இவர் தான் பெருமை அடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக விளம்பரத்தைக் கூட எவ்வளவு லேட்டாக கொடுக்க முடியுமோ அவ்வளவு லேட்டாக கொடுத்திருக்கிறார்.

ஊருக்குப் போய் இறங்கியதும் மாலா வீட்டார் புராணம்தான். அப்பா திருப்பி திருப்பி நடராஜ ஐயர் ரொம்ப நல்ல மாதிரி, ரொம்ப நல்ல குடும்பம் அது இது என்று பேசிக் கொண்டே இருந்தார். நான் கூட என்னடா இவர் பெண் பார்க்கப் போனாரா இல்லை சம்பந்தி பார்க்கப் போனாரா என்று நினைத்தேன். விளம்பரம் பற்றி கேட்டால் எதுவும் ரெஸ்பான்சே இல்லை என்று சொல்லிவிட்டார். துருவி துருவிக் கேட்ட பிறகு வந்திருந்த இரண்டு மூன்று லெட்டரை காட்டினார். அம்மாவிடம் கூட விளையாட்டாக சொன்னேன் – “நீ ஜாக்கிரதையா இரும்மா, விட்டா இவரே அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிண்டுவார் போல இருக்கே! வேற யாரையும் கண்ணிலேயே காட்ட மாட்டேங்கறாரே” என்று. அம்மா இல்லடா அந்த பெண் ரொம்ப பதவிசு, பெரியவங்க கிட்ட ஏக மரியாதை என்று சொல்ல ஆரம்பித்தாள். ஆமாம் மரியாதை எல்லாம் கல்யாணம் செய்து கொண்ட பின் இருக்குமா என்றல்லவா பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வேறு வழி இல்லை. இருப்பதே இரண்டு மூன்று சாய்ஸ்தான். மாலாவின் ஃபோட்டோவிலிருந்து அவள் ஐஸ்வர்யா ராய் இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்தது. ஆனால் நான் மட்டும் என்ன சிக்ஸ் பாக்குடனா இருக்கிறேன்? போய்தான் பார்ப்போமே என்று கும்பகோணம் போனேன்.

மாலாவின் அப்பா ஆசாரத் திலகம். நான் போகும்போது சந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டிருந்தார். அதுவே எனக்கு கொஞ்சம் பகீர் என்றது. இப்படி ஆசாரக் குடும்பத்திலிருந்து வரும் பெண் என் சட்டை பாக்கெட்டை விட்டு வெளியே வரமாட்டாளோ என்று பயம். மாலாவுடன் தனியாக பேசுகிறேன் என்பதற்கே அவர் தயங்கியது தெளிவாகத் தெரிந்தது. இந்தக் காலத்தில் இப்படி ஒருவர். ஆனால் அவர் கொடாக்கண்டன் என்றால் நான் விடாக்கண்டன். கடைசியில் மொட்டை மாடியில் பேச அனுமதி கொடுத்தார். கீழே இருந்து அவ்வப்போது செக் செய்வார் – என்ன ஊர் முழுக்கத் தெரியும் மொட்டை மாடியிலா உம் பெண்ணோடு சரசம் பண்ணப் போகிறேன்?

மாலா பாடப் புத்தகங்களைத் தவிர வேறு அதிகம் படித்ததில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ரமணி சந்திரனை மிகவும் பிடிக்கும் என்று சொன்னாள். ஷா ருக், ஆமிர் படம் பிடிக்கும், அக்ஷய் குமார் தண்டம், இப்படி நினைப்பதால் தான் உயர்ந்த ரசனை உடையவள் என்று கொஞ்சம் பெருமிதப்பட்டாள். நான் குரோசோவா என்றால் காராசேவா என்று கேட்டாள். ஆனால் உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நான் மயங்கிவிட்டேன். நேரில் பார்க்கும்போது ஃபோட்டோவை விட அழகாக இருந்தாள். அவள் கன்னங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. வேறு கவர்ச்சி பற்றி பேசினால் மாலாவுக்கு பிடிக்காது, அதனால் இதோடு விட்டுவிடுவோம். பெண் அழகாக இருக்கிறாள், அப்பாவுக்கு சம்பந்தி மிகவும் பிடித்திருக்கிறது, கல்யாணம் செய்து கொள்வோமே என்று தோன்றியது. சரி என்று சொல்லிவிட்டேன்.

அதற்குப் பின்தான் எரிச்சல்கள் ஆரம்பித்தன. மாலாவின் அப்பாவிடம் நான் சொன்னேன், சிம்பிளாக ஒரு கோவிலில் கல்யாணத்தை வைத்துக் கொள்வோம், எங்களுக்கு உறவுக்காரர்கள் கம்மி, என் நண்பர்கள் யாரும் அமெரிக்காவிலிருந்து வரப் போவதில்லை என்று. அவர் மறுத்துவிட்டார். பிறகு இந்த சடங்கை எல்லாம் குறைத்துக் கொள்ளலாம், நான் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஹோமப் புகையில் உட்கார மாட்டேன் என்று சொன்னேன். தலையை தலையை ஆட்டிவிட்டு கல்யாணத்தின்போது 14 மணி நேரம் ஹோமப் புகையில் உட்கார்த்தி வைத்தார். வேத காலத்தில் கூட இப்படி மந்திரம் சொல்லி ஒரு கல்யாணம் நடந்திருக்குமா தெரியவில்லை. பாஸ்போர்ட் ஏற்கனவே இருந்தது, அதைப் புதுப்பித்து மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தேன். அதை மட்டும் கரெக்டாக மறந்துவிட்டார். மாலாவும் அப்பா பார்த்துக் கொள்வார் என்று இருந்திருக்கிறாள். இந்தப் பெண் எப்படி தன் காலில் நிற்கப் போகிறாள் என்று தெரியவில்லை.

எனக்கு லீவ் முடிந்து நான் தனியாக வர வேண்டியதாயிற்று. ஒரு மாதம் கழித்துதான் இவளுக்கு விசா கிடைத்தது. எப்போது கிளம்புகிறாய் என்று கேட்டால் நான் மீண்டும் வந்து அவளை அழைத்துக் கொண்டு வர வேண்டுமாம். தனியாக வர பயமாக இருக்கிறதாம். கொஞ்சிக்காதே என்று சத்தம் போட்டேன். உடனே அழும் குரல். உங்களுக்கு என்னைப் பிடிக்கலியா என்று ஒரு விம்மல். என் அப்பா அதற்குள் ஃபோனை தான் வாங்கிக் கொண்டு வந்து கூட்டிட்டுப் போ, அதை விட முக்கியமான வேலை எதுவும் இல்லை என்று என்னை கத்துகிறார். மருமகளிடம் ஷோ காட்டுகிறார். நாளைக்கு டெபுடி ஜெனரல் மானேஜர் எதுவும் சொல்லிவிடக் கூடாதே? இதை நான் எப்படிங்க என் அமெரிக்க மானேஜருக்கு புரிய வைப்பேன்? என் மனைவிக்கு தனியாக ப்ளேனில் வர முடியாது, நான் போய் கூட்டிக் கொண்டு வரவேண்டும், இரண்டு வாரம் லீவ் கொடு என்றால் என் தோலை உரித்துவிடுவான். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி ஒரு வாரம் லீவ் வாங்கி இவளை கூட்டிக் கொண்டு வந்தேன்.

இவளுடைய கசின் ஒருத்தி நியூ ஜெர்சியில் இருக்கிறாள். (மாலாவுக்கு கலிஃபோர்னியா வரும் வரை நியூ ஜெர்சி என்பது பக்கத்து வீடு என்று நினைப்பு) தினமும் அவளோடு இரண்டு மணி நேரம் ஃபோன். என் செல் ஃபோனின் ரோலோவர் நிமிஷங்கள் எல்லாம் ஒரே மாதத்தில் காலி! தனக்கென்று ஒன்றுமே தெரியாது. நான் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் அந்த கசின் சொல்ல வேண்டும். நான் என் வாழ்க்கைக்கு ஒரு பார்ட்னர் வேண்டும் என்று நினைத்தேன்; வந்திருப்பது குழந்தை! படுக்கை அறையில் மட்டும்தான் குமரி!

நல்ல வேளை அவளுக்கு கார் ஓட்டத் தெரியும் என்று கொஞ்சம் சந்தோசம். இன்டர்நேஷனல் லைசன்ஸ் வாங்கச் சொல்லி இருந்தேன், அதை உருப்படியாக வாங்கி வைத்திருந்தாள். நான் ஆஃபீசுக்கு ரயிலில்தான் போவது. அதனால் காலையில் என்னை ரயில் நிலையத்தில் டிராப் செய்துவிட்டு மாலையில் பிக் அப் செய்து கொள்வாள். மிச்ச நேரம் எல்லாம் மால்களில் – ஏழெட்டு வருஷம் இங்கே இருந்த எனக்கு எந்த மாலில் எந்த கடை இருக்கிறது என்று தெரியாது. இவளுக்கு ஒரே மாதத்தில் அத்துப்படியாகிவிட்டது. மேசி கடை மட்டும்தான் நன்றாக இருக்கிறது என்று சொல்வாள். (மேசி என்பது நம்மூர் நல்லி மாதிரி ஒரு செயின் – துணிமணி, மேக்கப், இன்ன பிறவும் கிடைக்கும்) ஒரு நாள் ஏன் அப்படி சொல்கிறாய் என்று கேட்டேன். அங்கேதான் விலை அதிகமாக இருக்கிறதாம், விலை அதிகமாக இருந்தால்தான் தரமும் நன்றாக இருக்குமாம். நான் நூலகங்கள் தங்கள் பழைய புத்தகங்களில் சேலில் ஒரு புத்தகம் நாலணா என்று விற்கும்போது மட்டுமே புத்தகம் வாங்குபவன். என்ன பொருத்தம் என்று பாட வேண்டியதுதான்!

பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ மயக்கம் எனக்கு நிறைய இருக்கிறது. ஆனால் இந்த கவர்ச்சி எல்லாம் ஒரு வருஷம் இரண்டு வருஷத்துக்கு மேல் நிற்குமா? மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பார்களே! மயக்கம் வேறு காதல் வேறு இல்லையா? அவளுக்கு மயக்கம் மட்டும் இல்லை என் மேல் காதலும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனக்கு மயக்கம் மட்டும்தானோ என்று தோன்றுகிறது.

ஒரு நாள் அவளை ஹேவர்ட் பல்கலைக்கழகத்துக்கு போய் எம்.பி.ஏ. படிக்க தேவையான விவரங்களை தெரிந்து கொண்டு வா என்று சொன்னேன். நான் தனியாக போகமாட்டேன், நீயும் வா என்றாள். இதற்கெல்லாம் லீவ் போடமுடியாது, நீயே போய் வா என்று திட்டிவிட்டேன். மதியம் ஃபோன் வந்தது. காரில் பெட்ரோல் இல்லை, எனக்கு பெட்ரோல் போடத் தெரியாது, நீ இப்போதே சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து திரும்பி வந்து எனக்கு பெட்ரோல் போட்டுக் கொடு என்று! நானும் வந்து கடுகடு முகத்துடன் போட்டுக் கொடுத்தேன். அன்று இரவு என் மேல் கோபமா என்று ஒரு விம்மல் – அவ்வளவுதான், அடுத்த நாள் லீவ் போட்டுவிட்டு அவளை ஹேவர்ட் பல்கலைக்கழகத்துக்கு கூட்டியும் போனேன் என்றால் எவ்வளவு மயக்கம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்!

என்னை நச்சரித்து நச்சரித்து ஒரு வார இறுதியில் நானும் அவளுடன் மேசிக்கு ஷாப்பிங் போனேன். அங்கே ஒரு அழகான டாப்ஸை எடுத்தாள். பில் போடும்போதுதான் நான் பார்த்தேன். அந்த டாப்ஸ் “Made in India”. நான் மாலாவை கூப்பிட்டு காண்பித்தேன். அமெரிக்கா வந்து Made in India டிரஸ் வாங்கி என்ன பயன்? மேலும் இது இந்தியாவில் சீப்பாக கிடைக்கும் என்று சொன்னேன். அவள் புன்னகைத்தாள். பிறகு சொன்னாள் – எனக்கு டாப்ஸ் பிடித்திருக்கிறது, அது எந்த ஊரில் செய்திருந்தால் எனக்கென்ன? இந்தியாவில் எங்கே கிடைக்கும் என்று தெரிந்தால் வாங்கி அனுப்பச் சொல்லலாம், ஆனால் அது யாருக்குத் தெரியும்? எனக்கு டிரஸ்ஸை பற்றிதான் அக்கறை, அதில் இருக்கும் லேபிளைப் பற்றி இல்லை என்று.

அந்த நொடியில்தான் நான் அவளை காதலிக்க ஆரம்பித்தேன்.