வைக்கோ – தமிழ் கதைகள் வரலாறு

(மீள்பதிப்பு)

வைக்கோவின் ஒரு பேச்சை சமீபத்தில்தான் படித்தேன். இது 2006-07 காலத்தில் ஆற்றப்பட்ட சொற்பொழிவு. குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டு தமிழ் புத்தகங்கள் பற்றி அவர் சொல்லும் தகவல்கள் பல எனக்குத் தெரியாதவை. மனிதருக்கு படிப்பில் நிறைய இண்டரஸ்ட் இருக்கிறது. கட் பேஸ்ட் செய்ய முடியாததால், என் வார்த்தைகளில் அவரது பேச்சு.

தமிழ் நாட்டில் கதைகள் எப்போது வந்தது? 1822-இல் சென்னை கல்வி சங்கம் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகளை முதன் முதலாக புத்தகமாக அச்சேற்றி வெளியிட்டது. 1826-இல் வில்லியம்பாக்கம் தாண்டவராய முதலியார் பஞ்ச தந்திரக் கதைகளை வெளியிட்டார். 1853-இல் ஈசாப் கதைகள், 56-இல் மதன காமராஜன் கதைகள், 58-இல் மயில் ராவணன் கதைகள், 69-இல் 32 பதுமை கதைகள், 1886-இல் பண்டித நடேச சாஸ்திரி தொகுத்த திராவிட பூர்வ கால கதைகள்.

1840,50,60-களில் தெலுங்கில் மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகள் பதிப்பிக்கப்பட்டன. அவற்றை உதய தாரகை என்ற பத்திரிகையில் சதாசிவம் பிள்ளை தமிழில் மறுபதிப்பு செய்தார். 92-இல் சாமிநாத ஐயரின் விவேக சிந்தாமணி வர ஆரம்பித்தது. அதில் மாதவய்யா, டி.எஸ். ராஜம் போன்றவர்கள் எழுதினார்கள்.

1910-இல் ஹிந்து பத்திரிகையில் மாதவய்யா வாரம் ஒரு கதை எழுதினர். 12-இல் ஹிந்துவே அதை குசிகர் குட்டி கதைகள் என்று வெளியிட்டது. (மாதவய்யா தமிழில் எழுதினாரா, ஆங்கிலத்திலா? ஹிந்துவில் தமிழ் கதைகள் வந்தனவா?) 22-இல் கல்கி கடலூர் சிறைச்சாலையில் இருந்து விமலா என்ற நாவலை எழுதினர் (கேள்விப்பட்டதே இல்லை) 23-31 காலத்தில் நவசக்தி, விமோசனம் ஆகிய பத்திரிக்கைகளில் எழுதினார். (அவரது விமோசனம் அனுபவங்கள் பற்றி இங்கே.) 31-41 வரை விகடன். பிறகு கல்கி பத்திரிகை.

1933-இல் மணிக்கொடி ஆரம்பித்தது. புதுமைப்பித்தன், கு.ப.ரா., வ.ரா., பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா, டி.எஸ். சொக்கலிங்கம், மணிக்கொடி ஸ்ரீனிவாசன் இன்னும் பலர் மணிக்கொடி தலைமுறையை ஸ்தாபித்தார்கள்.

வைக்கோவின் கல்லூரி காலத்தில் அவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் அகிலன், மு.வ., கல்கி, காண்டேகர். பிறகு அண்ணா. அண்ணாவின் கொக்கரக்கோ என்ற கதை விகடனில் வந்தது. 49-இல் செவ்வாழை என்ற புகழ் பெற்ற கதை எழுதப்பட்டது. (ப்ராபகண்டாதான், ஆனால் படிக்கக் கூடிய நல்ல கதை). இது பிற்காலத்தில் ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

அண்ணாவைத் தவிர கலைஞர், ராதாமணாளன், ஆசைத்தம்பி, டி.கே. ஸ்ரீனிவாசன், தில்லை வில்லாளன், எஸ்.எஸ். தென்னரசு ஆகிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் வைக்கோவின் கண்ணில் குறிப்பிட வேண்டியவர்கள். விகடனில் ஜெயகாந்தனின் முத்திரை கதைகள் வந்தபோது நம்முள் பலரும் சுஜாதா தொடர்கதை எப்போது வரும் என்று காத்திருந்தது போல விகடன் எப்போது வரும் என்று வைக்கோவும் தன் மாணவப் பருவத்தில் காத்திருந்திருக்கிறார்.

வைக்கோவின் இந்த உரைக்கு ஒரிஜினல் URL கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் கொடுங்கள்!