தலித்களும் தமிழ் இலக்கியமும்

வெங்கட் சாமிநாதன் தமிழ் ஹிந்து தளத்தில் “தலித்களும் தமிழ் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு சீரிசை பதித்திருக்கிறார். அவரது சில கருத்துகளோடு எனக்கு கடுமையான கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் சீரிஸ் படிக்க வேண்டிய ஒன்று – குறிப்பாக அவர் இன்றைய தமிழ் தலித் இலக்கியங்களைப் பற்றி எழுதி இருப்பவை.

தலித்கள் எழுதுவதுதான் தலித் இலக்கியம் என்று அவர் ஓரிடத்தில் சொல்லி இருந்தார். இதில் உள்ள கருத்து புரிந்தாலும் என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை, குழப்பமாக இருக்கிறது. என் குழப்பத்தை தீர்க்க அவர் கொடுத்த பதில் –

தலித் எழுத்தாளர்கள் தம் அனுபவத்தை எழுதுவதுதான் தலித் இலக்கியமாகும்; மற்றவர்களது மனிதாபிமானமும் எட்டி நின்ற பார்வையுமே ஆகும் என்று எழுதியிருந்தேன். இந்தப் பாகுபாடு ஓர் இடைப்பட்ட காலகட்டத்துக்கே பொருந்துவதாகும். பின்னர் தலித் என்ற அடைமொழி அழிந்து பொது இலக்கியப் பிரவாஹத்தில் அவ்வெழுத்துகள் சேர்ந்து கொள்ளும், அதில் பெருமாள் முருகனும் சோ.தருமனும், இலக்கியாசிரியர்களாகவே அடையாளம் காணப்படுவார்கள். இந்த விளக்கத்தை தலித்துகள் எழுதுவதுதான் தலித் இலக்கியமா? என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்டவர்களுக்கு, கடைசியில் தரலாம் என்று நினைத்தேன். இலக்கியாசிரியர்கள் தம்மை தலித் என்று எண்ணி எழுதுவதில்லை. அவர்கள் வாழ்க்கை தலித் வாழ்க்கையானதால் அது எழுதப்படுகிறது. அப்படித்தான் சோ.தருமன், பூமணி, இமையம் எல்லாம் தம்மை தலித் என்று அடையாளப்படுத்தப் படுவதை விரும்புவதில்லை.

அவர் சொல்வது என்னைப் பொறுத்த வரையில் மிகவும் சரி.

அவரது பதிவுகளிலிருந்து அவர் முக்கியமானவை என்று கருதும் சிறுகதை, நாவல்களை இங்கே லிஸ்ட் போட்டிருக்கிறேன்.

சிறுகதை:

 1. சோ. தர்மன் – நசுக்கம்
 2. பாமா – அண்ணாச்சி
 3. பெருமாள் முருகன் – மேடு
 4. உஞ்சை ராஜன் – சீற்றம்
 5. சுந்தர பாண்டியன் – ஆரோக்கியசாமி
 6. வீழி பா. இதயவேந்தன் – Livelihood (தமிழில் என்ன பேர்?)
 7. அபிமானி – Offering (தமிழில் என்ன பேர்?)
 8. பாவண்ணன் – Well (தமிழில் என்ன பேர்?)

நாவல்:

 1. சோ. தர்மன் – தூர்வை
 2. பூமணி – பிறகு (1976)
 3. இமையம் – கோவேறு கழுதைகள்
 4. பாமா – கருக்கு
 5. பாமா – சங்கதி
 6. பெருமாள் முருகன் – ஏறுவெயில்
 7. சிவகாமி – பழையன கழிதலும்
 8. சிவகாமி – ஆனந்தாயி

பாமா எழுதிய வன்மம் என்ற நாவலையும் நான் நல்ல தலித் படைப்பாக கருதுகிறேன் (பள்ளர்-பறையர் தகராறுகளை பின்புலமாகக் கொண்டது)