குழி (சிறுகதை)

ருதா பிக்காக்ஸை தலைக்கு மேல் வாணத்தை நோக்கி தூக்கிப் பிடித்தான். பலத்தை எல்லாம் கையில் திரட்டினான். பலம் கையின் மேற்பகுதியில் சதைகளாக ஒன்று திரண்டது. கற்சிலையின் கைபோல். பிகாக்ஸின் மரப்பிடியில் கை இறுகியது. “ஹம்ப்” என்ற சத்தத்துடன் பூமியை நோக்கி வேகமாக இறக்கினான். ஒரு பெரிய வில்லின் ஆரத்தின் பாதையை தொடர்ந்து வந்த பிக்காக்ஸின் இரும்பு வெட்டி குறுகிய அஸ்திவார பள்ளத்தில் நுழைந்து இறுகிய செம்மண்ணில் பாய்ந்தது. ஆரம் முழுமை பெறாமல் முக்கால் பகுதியில் முடிவடைந்து ஒரு பக்க கூர் இரும்பு முழுமையாக இறங்கியிருந்தது. வழக்கத்திற்கு மாறான பலம். வழக்கத்திற்கு மாறான வெட்டு. வழக்கத்தைவிட அதிக ஆழம் போயிருந்தது. அப்படியே மீண்டும் பலமெல்லாம் திறட்டி தன்னை நோக்கி இழுத்தான். அசையவில்லை. கசகசத்திருந்த உள்ளங்கையை, மடித்துக் கட்டியிருந்த செம்மண் சிகப்பேறியிருந்த வேஷ்டியில் தடவித் துடைத்துக் கொண்டான். வலது துடையை மறைத்திருந்த வேஷ்டியின் ஒரு பகுதியால் மரப்பிடியையும் துடைத்தான். சற்றே கை காய்ந்திருந்தது போலிருந்தது. மறுபடியும் பிடியை தன்னை நோக்கி இழுத்தான். இம்முறை பெரிய செம்மண் பாறை பிய்த்துக் கொண்டு அதே பலத்துடன் மருதாவை அப்படியே பின்னால் தள்ளியது. தடுமாறி அந்த நான்கடி ஆழ குழியில் பின்பக்கமாக விழுந்தான். பின்தலை தரையில் மோதியது. கால்கள் வானத்தை நோக்கி எழுந்து மீண்டும் வந்து தரையில் வந்து அடங்கியது. அனிச்சையாக பின்தலையை தொட்டுப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. வலி பொறுக்கமுடியாமல் முனகினான். சூரியன் முகத்திலைரந்தது. தலை கிறுகிறுவென்றது. அவனுக்கு சவக்குழியில் படுத்திருப்பது போலிருந்தது.

”செத்துட்டோமோ? சவாமாய்ட்டேனா? மேரி மாதா!”

“மருதா ஒளிஞ்சிருந்தா தூங்குத? எல ஆரடி முடியாம நீ கூலி வாங்கிக்கிடமாட்டல.”
”கீழ விழுந்துட்டன்ணே…தலை கிரக்கி மயக்கம் வந்திட்டு”
“தூ…வாய மூட்ல..”

கொத்தன் கார்மேகம் குழியின் மேல் குவிந்திருந்த செம்மண்ணை காலால் உதைத்தான். மருதாவின் நெஞ்சின் மேலும் முகத்தின் மேலும் செம்மண் விழுந்தது.

பெயருக்கு தான் கொத்தனே தவிர ஒருகாலத்தில் மண் வெட்டும் கையாளாகத் தான் தொழிலை ஆரம்பித்தான். படிப் படி முன்னேற்றமெல்லாம் அவன் அகராதிக்கு புரியாத ஒன்று. ஒரே தாவில் இன்று பில்டிங் காண்ட்ராக்ட் எடுக்கத் தொடங்கியிருந்தான். தொடங்கினான், ஆனால் இதுவரை ஒன்றும் உருப்படியாக முடிக்கவில்லை. பஞ்சாயத்து கக்கூஸ் ஒன்று கட்டினான். அவ்வளவுதான். இவனை நம்பி காண்ட்ராக்ட் யார் கொடுத்தார்கள், எப்படி கொடுத்தார்கள் என்பது ஒரு பெரிய புதிர். ஆனால் சில சித்தாள்களை எம்.எல்.ஏ, பஞ்சாயத்து இவர்களை இரவு நேரத்தில் போய் பார்த்து வரச் சொல்லி அனுப்புவதாக ஊர் மக்கள் கேட்டிருக்கிறார்கள். இந்த பெரிய மனித சகவாசம் இருப்பதால் எப்பொழுதும் தன்னையும் ஒரு “பெரிய மனிதனாக” நினைத்துக் கொள்வான். மேலும் சீக்கிரம் சேரியை விட்டு ஊருக்குள் போய் வாழ பஞ்சாயத்தை வசியம் பண்ணி ஐந்து செண்ட் பெரம்போக்கை வளைத்து விட்டான். சீக்கிரம் சேரியை விட்டுப் போய்விடுவோம் என்ற திமிரிலும், தன்னை சேரி மக்களோடு சேர்த்து ஊர் தாழ்வாக பார்த்துவிடுமோ என்ற பயத்திலும் தன் சக சேரிவாசிகளை அவன் மதிப்பதில்லை. ஊருக்கு அவர்களிடமிருந்த தன்னை பிரித்து காண்பிக்க முயற்ச்சிக்க அவர்களை அற்ப புழு போல் நடத்தினான்.

”தூ”
”எல பதிலுக்கா துப்புத, இதுக்குதான்ல் பொம்பளையால போடனுங்கது. அவளுக ஒழுங்கு மருவாதிய வேலைய செஞ்சுப் போட்டு போவாளுக”
”இல்லண்ணே, வாய்க்குள்ள மண்ணு”
“மண்ணாங்கட்டி”
”இல்லண்ணே மண்ணு தான்…” முனங்கினான்.

மெதுவாக எழுந்தான். முதுகு முழுவதும் படர்ந்திருந்த வேர்வையில் செம்மண் அப்பிக் கொண்டது. தலைதுண்டை கழட்டி முதுகைத் தட்டி விட்டு மறுபடியும் தலையில் ஏற்றிக் கொண்டான். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. மறுபடியும் பிக்காக்ஸை எடுத்தான். கண்கள் செம்மண்னை விட சிவந்திருந்தது.

மருதா குழி விளிம்பில் எடுத்துப் போட்ட மண்ணை மண்வெட்டியால் எடுத்து வட்டச்சட்டியில் நிரப்பினாள் நாகம்மாள்.
“அண்ணே காச்சல் நல்ல அடிக்கும் போலருக்கு. பேசாமா எழவெடுத்த கொத்தன்ட்ட சொல்லாம் வீட்டுக்கு போ. இல்லாட்டக்க விடமாட்டான். அக்காட்ட கஞ்சி வெக்கச் சொல்லு”
“இல்லட்டி. ஏங்காச்சல் வகைக்காவதுட்டி. பாப்பாவை டவுன் டாக்டருக்கிட்ட கூட்டுபோனும். ஆறு நாளாச்சு. பாப்பாக்கு ஜூடு எறங்கல. கொத்தண்ட்ட வாரச் சமபளத்த வாங்கத்தான் வந்தேன் இன்னைக்கு. வேலை முடியாம ஒரு சல்லிக்கூட குடுக்கமாட்டெங்காரு. டாக்டரு சக்கரம் கேப்பாருல்லாட்டி?. சரி வேகமா வெட்டிப்போட்டுர்லாம்னா சவம் பாற வாக்கால்லா இருக்கு. டவுனுக்கு வச்சிருந்த வேட்டியும்லா செம்மண்ணா யிட்டு”
“மருதண்ணே பாப்பாவா ஒழுங்கா இண்ணக்கு டாகடருக்கிட்ட கூட்டுறு. கீலச்சேரில் இசக்கி அஞ்சுநாளா சூட்டில கிடந்தா. முந்தா நாள் போயிட்டா. என்னாமோ கோழி காச்சல்ன்னு சொல்லுதாவோ”. சிக்குன் குன்யா சிக்கனாகி கோழியாகியிருந்தது.
மருதா வெறியுடன் வெட்ட ஆரம்பித்தான்.

நாகம்மாள் சட்டியை தூக்கித் தலைமேல் வைக்க முயன்ற போது செம்மண் சரிந்தது. அடுத்த வினாடி நாகம்மாள் குழியில் கிடந்தாள். நெற்றியில் ரத்தம் கசிந்தது. மருதா தூக்கிவிட்டான். நாகம்மாளை சுற்றி கூலியாட்கள். தூரத்திலிருந்த பார்த்த கொத்தன் வெறியானான். கூட்டத்தை நோக்கிப் பாய்ந்தான்.

“என்ன எழவெடுத்துட்டல? நாகம்மா என்ன அவுத்துப் போட்டா ஆடுதா? எலே எனக்கு மொதலும், கடைசியுமான்னு இந்த சர்ச் காண்ட்ரேக் கெடச்சுருக்கு. கெடுத்திய, நான் மனுஷன் இல்ல ல. பாதிரி இத புனிதன்னு வேற சொல்லிட்டு திரியுதாரு. புனிதம்னா ஒங்களுக்கு தெரியுமால? எவனாவது மண்டையப் போட்டியோ, பாதிரி காண்ட்ரேக்க ரத்து பண்னுவாரு. அப்புறம் ஒருத்தன் இருக்கமாட்டியோல.”

கார்மேகம் ”முதலும்” என்று சொல்வது பொய். இரண்டு முறை பாதிரி நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்ததற்கு ஒரு கல்லை கூட அவன் நகர்த்தவில்லை. அதை குடித்து தீர்த்தான். எப்படி தான் நம்பினாரோ இல்லைக் கார்மேகம் என்ன வசியம் செய்தானோ அவன் நல்ல நேரம் பாதிரி கடைசி சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார். ஆனால் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் காண்டிராக்டை ரத்து செய்துவிடுவதென்று உறுதி பூண்டிருந்தார். “கடைசி” என்பது உண்மை.

“கொத்தண்ணெ… நாகுக்கு கால் தவறிட்டுண்ணே. இதுக்கு போயி..”

வுனில் இருந்து வரும் சாக்கடைக்கு, கீழச்சேரிக்கு கிழக்கே சமீபத்தில் தேக்கம் வைத்திருந்தார்கள். இதுநாள் வரை கடலுடன் கலந்துக்கொண்டிருந்த நீருக்கு எப்பொழுதும் ஒரு எதிரி உண்டு. சாக்கடை நீர் கடலோடு சேருமிடத்தின் 200 அடி அருகாமையில் டவுன் எம்.எல்.ஏ. பினாமியின் பேரில் உப்பளம் வைத்திருந்தார். அதனால் சாக்கடை-கடல் சங்கமத்தை சற்றே வடக்காக ஒரு மைல் தூரத்தில் மாற்றி விட போராடிக்கொண்டிருந்தார். கடந்த தேர்தலில் எதிர் கட்சி வேட்பாளராக நின்று தன்னிடம் மயிரிழையில்  தோல்வியடைந்த பசப்பாடி பண்ணைக்கு தொகுதியில் தனக்கு சமமான செல்வாக்குமிருந்தது, சாக்கடை போக்கை மாற்றி அமைக்கச் சொன்ன பகுதியில் ரைஸ்மில்லும், நன்செய்யுமிருந்த்து. பண்ணை விடுவாரா? அவருடைய செல்வாக்கு எம்.எல்.ஏக்கு பெரிய முட்டுக்கட்டை. தன் அரசியல் பலத்தை வைத்து பஞ்சாயத்தை மசிய வைத்து ஒருவழியாக சந்தோஷப்பட்ட எம்.எல்.ஏக்கு செக் வைத்தார் பண்ணை. தன் பண பலத்தாலும், கோர்ட்டாரின் சினேகிதத்தாலும் கோர்ட்டில் ஓடையை மாற்றச் சொன்ன பஞ்சாயத்து ஆணைக்கு ஸ்டே வாங்கி விட்டார் பண்ணை. ஆனால் ஸ்டே வருவதற்கு முன்னரே எம்.எல்.ஏவின் பணம் பாய்ந்திருந்தது. பாதி வாய்க்காலை பஞ்சாயத்து அவசரம அவசரமாக அடைத்து விட்டது. மிச்சமிருந்த ஓடையின் போக்கை மூணு லாரி மண்ணை போட்டு சீர் குலைத்துவிட்டார்கள். விளைவு கடலுக்கு இரண்டு மைல்கள் முன்னரே நீர் தேங்கிவிட்டது. பண்ணைக்கு சாக்கடை தன் பக்கம் வராத வரை பிரச்சனையில்லை. அதே சமயம் பழைய நிலைக்கு கொண்டு வரவும் அழுத்தம் கொடுக்கவில்லை. அடுத்த தேர்தலுக்கு ஆதாயமாக இருக்க அந்த நீர்த் தேக்கம் குடியிருப்புகளை பாதிக்க வேண்டும் என்று விரும்பினார்.
கடைசியாக பாதிக்கப்பட்டது கீழச்சேரியிலிருந்த கூலிக் குடும்பங்கள். பெருகி வந்த கொசுக்கள் உணவுக்காக கீழச்சேரி குடியிருப்புகளை படையெடுத்தன. கீழச்சேரி சிக்குன் குனியாவுக்கு பலியாகியது.

ருதா குழியைவிட்டு வெளியே வரும் பொழுது மணி இரண்டை தொட்டிருந்தது. குழி நாற்ப்பதடி நீளத்திற்க்கு ஆறடி ஆழம் ஆகியிருந்தது. வேஷ்டியை கழட்டி தடால் தடால் என்று உதறினான் மருதா. செம்மண் பறந்தது. சிவப்பாக இருந்த வேஷ்டி ஆங்காங்கே தன் சுய நிறத்தை காட்டியது. டிரவுசரில் அய்யனார் சிலைப் போல் இருந்தான் மருதா. மீண்டும் தன் கால்சட்டையின் மேல் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு தலையில் இருந்த துண்டை அவிழ்த்து தன் மேலிருந்து கீழ்வரை தன் உடல் வேர்வையைத் துடைத்துக் கொண்டான். பின்னர் தன் தலையில் கட்டிக் கொண்டான்.

”அண்ணே, ஒரு அம்பது மேல போட்டு குடுங்கண்ணே. பாப்பாவுக்கு ஜூடுண்ணே. டவுன் ஆஸ்பத்திரிக்கு போணுனே.”
“அதுக்கு என்ன என்னல பண்ணச் சொல்லுத. சவத்த சேரில உள்ள கம்போண்டர்ட்ட காமில. மொகறைக்கு டவுன் ஆஸ்பத்திரில்லா கேக்குது”
”இல்லண்ணே. பாப்பவுக்கு ரொம்பா ஜூடு. கம்ப்போண்டர் தான் டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டி கொண்டு போகச் சொன்னாரு”
“கூட்டிட்டு போகச் சொன்னாரா, கூட்டிக் குடுக்கச் சொன்னாரோ, ஒரு பைசா தரமாட்டேன்.”
“அண்ணே பாபாவ பத்தி அப்டி பேசாதீங்கண்ணே”
“ஏலே என்ன மெரட்டுத,  நாளைக்கு வேல வேணுமா வேண்டாமா?. சோலியப் பாத்துட்டுப் போல. வந்துட்டான் பெரிய சினிமாக்காரிய பெத்த மாதிரி. வேணுன்னா அவளையும் நாளைக்கு கூட்டிட்டு வா. சித்தாளாக்கு சித்தாளாவும் ஆச்சு. எனக்கும் வசதியாப் போச்சு.”
”யோவ் மனுஷனாயா நீ” நாகம்மாள் சீறினாள்.
“அப்ப நீ வாட்டி” கொத்தன் எக்காளமாக சிரித்தான்.
“தூ. விளங்கமாட்ட நீ. பாப்பாக்கு மட்டும் நல்லாகல ஒன்ன ஒரு கை பாக்கேன்”
“என்னல சொன்ன கூலிக்கார நாயே. ஒன்னால ஒன்னும் புடுங்க முடியாது. காண்ட்ராக் முடிஞ்சப்பிறவு பாருல்ல நான் யாருன்னு. போலீஸ் கூட எம்மேல கை வக்காதுல. அப்ப ஒன்ன கொலப் பண்ணிருதேன் ”

மருதா அதற்கு மேல் போராட விருமபவில்லை. நேரம் ஆகிக்கொண்டிருந்தது. பாப்பாவை பற்றி சிந்தனை வந்துவிட்டது. சைக்கிளை கீழச்சேரியை நோக்கி வெறியுடன் மிதித்தான்.

சைக்கிளை குடிசை முன் ஸ்டாண்டில் நிறுத்தினான். குடிசையின் வாசலின் இரண்டு பக்கத்திலும் திண்ணை. மொத்தக் கீழச்சேரியிலும் திண்ணை வைத்துக் கட்டப் பட்டிருந்த குடிசைகள் அவன் இருக்கும் தெருவில் மட்டும் தானிருந்தது. அனேக நாட்கள் அவன் படுக்கும் இடம் வலது திண்ணைதான். இடது திண்ணையை சைக்கிள் அடைத்துக் கொள்ளும். சுற்றி இருக்கும் வயல் வெளிகளாலும், அருகிலிருக்கும் கடலினாலும், சேரியில் காற்று நன்றாக வீசும். கோடை இரவுகளில் சேரித் தெருக்கள் உடல் உழைப்பினால் களைத்திருக்கும் சேரிவாசிகளுக்கு ஒரு சொர்க்கம். ஆனால் இந்த கொசுக்கடி இப்பொழுது அந்த சுகங்களை துரத்திவிட்டது.

உள்ளே நுழைந்தவுடம் தன் பெண்ணிடம் சென்றான். ”பாப்பா எப்படிம்மா இருக்க? போலாமா?. அப்பா சம்பளம் வாங்கிட்டு வந்துட்டேனலா. இனிமா எல்லாஞ் செரியா போயிரும்”
“காலேலிருந்தே ஒரக்கத்திலல்லா இருக்கா” பரி மகளின் நிலைமையை சொன்னாள்
“கஞ்சி யுடிச்சாலா?”
”ஆமாங். அரச் சட்டி. இட்டெலி கேட்டா. அதுக்கு எங்கப் போறது?. அப்பா சம்பளம் வாங்கிட்டு வரட்டும். டவுன்ல போய் பாக்கலாம்”
தொட்டுப் பார்த்தான். கையை சுட்டது.
“என்ன இம்ம்புட்டு ஜூடா கிடக்கு”
“ஆமா. நான் தான் நாலு நாளா சொல்லிட்டே இருக்கன்ல். சீக்கிரமா டாக்டருக் கிட்ட கூட்டிட்டு போகச் சொல்லி”
”சமபளம் வரவேண்டாமாட்டி? இப்ப ஏன் சொணக்கம்? விரசால வா”
“நாணுமா? எப்டி மிதிக்கப் போறீக?”
”பரவாயில்லட்டி, மிதிக்கேன். நீ வந்தா மனசுக்கு தெம்பு. அந்த கேரியல் பலகைய எடுட்டி”
“சரி சீலைய மாத்திகிடுதேன். என்ன பாவப்பட்ட செம்மமால்ல போயிட்டோம். பிள்ளைக்கு வந்து ஆறு நா ஆச்சு. இன்னக்கு தான் மகமாயி கண்ணத் தொறந்தா. நீங்க ஒரு வாயி கஞ்சி குடிக்கேளா? ஒங்களுக்கும் காச்ச அடிக்கில்லா? டவுனுக்கு போயிட்டு வர ராத்திரி எட்டாயிருமுள்ளா?”
“சவத்த கிடக்கட்டுமுட்டி. டவுன்ல் போய் சரஸதி பவான்ல பாப்பாக்கு இட்டெலி வாங்குவோமுட்டி. அப்ப ரெண்டு நானும் திங்கேன். நீயுந்தான்”
டவுனுக்கு போகப் போகிறோம், கணவனுடன் சைக்கிளில் போகப் போகிறோம், சரஸ்வதி பவனில் இரவுச் சாப்பிடப் போகிறோம் என்ற எண்ணம் வந்ததும் பரிக்கு மனதில் சந்தோஷம். ஒரு பத்து முறைதான் பரியும், மருதாவும் டவுனுக்கு சேர்ந்து சென்றிருக்கிறார்கள். திருமணம் ஆன முதல் வருடத்தில் அடிக்கடி சினிமாவுக்கு கூட்டிச் சென்றான்.

“ஏட்டி, பாக்கையா?  எம்புட்டு வேகமாட்டி போட்டும்? பத்து மைலை அரை மணில போய் காமிக்கட்டாட்டி?”
“ஏ வேண்டா. இந்தா சொன்னா கேக்கியளா? விரசலா போகாதீக”- பின்னால் உட்கார்ந்திருந்த பரி மகிழ்ச்சி கலந்த பயத்தில்.
“அட ஏமுட்டி பயந்து சாவுத. சும்மா ஜாலியா வாட்டி”
“சாலிதான். ஆனா விழுந்துராதிய, இப்ப என்ன அவசரன்னுட்டு இப்டி பறக்கிய?. பெரிய ரிக்‌ஷாக்காரென் எம்ஜியாராக்கும்?” வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் பரி.
“ஆமாட்டி. தலவரு மாதி தான். பாருட்டி” இன்னும் வேகமாக மிதித்தான் மருதா. காற்றில் பரியின் முடி பின்னால் பறந்தது. பரிக்கு சந்தோஷமாக இருந்தது. அன்பான கணவன் கிடைத்தது, தன்னை சைக்கிளில் வைத்து கொண்டு டவுணுக்கு செல்வது பல்லக்கில் போவது போலிருந்தது.

”ஏட்டி, பலகைய எடுட்டின்னா, பறக்கபாத்துட்டு நிக்க. மணி மூனாச்சில்லா”
திடுக்கிட்ட பரி அடுப்படியிலிருந்த நீள பலகையை எடுத்து வந்தாள். ”என்ன பிள்ளைக்கு காச்சலாக் கெடக்கு. இப்பம்லா எனக்கு கனவெலவு வருது” என்று வருத்தப் பட்டாள். பாப்பா பிறந்தவுடன் அவளுடைய டவுண் பிக்னிக் நின்று போயிற்று.
“சீக்கிரமா பாப்பவக் கூட்டிட்டு வாட்டி” என்று சொல்லிவிட்டு சைக்கிள் காரியரரிலிருந்த கயிற்றை அவழ்த்து ”கேரியல்” பலகையை அதன் மேல் வைத்து கட்ட தொடங்கினான். மேலே சூரியன் முகிலுக்குள் மெதுவாக ஒளிந்துக் கொண்டிருந்தான்.
“ஏட்டி கருகல்லா செய்து”
“சரி போவம். வந்துட்டேன்.”

பாப்பாவை எழுப்பினாள்.
“என்னங்க எந்திரிக்க மாட்டேங்காளே. நீங்க வாங்க”
மருதா பாசமாக பார்த்தான். “பாப்பா எந்திரிம்மோவ்…எந்திரிச்சா டாக்டருகிட்ட போயிரலாமுல்லா…” பலமுறை சொல்லியும் பாப்பா அசையவில்லை.
”சரிட்டி. பாப்பாவ எழுப்பாண்டாம். நீ மொதல்ல ஒக்காரு”
பரி குடிசையின் முன்னால் தயாராக நின்று கொண்டிருந்த சைக்கிளில் காரியரில் நீண்டுக் கொண்டிருந்த ”கேரியல்” பலகையில் ஏறி பக்கவாட்டில் உட்கார்ந்தாள். மருதா உள்ளே சென்று பாப்பாவை கையில் தூக்கி கொண்டு வந்தான்.
“ஏட்டி பாப்பா கணமேயில்லாமல்லா இருக்கா. பதினஞ்சு வயசு கணக்காவா இருக்கா? பின்னால தள்ளி இரி”
மெதுவாக பலகையின் பின் புறத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தாள் பரி. சைக்கில் முன் வீல் சற்றே தூக்கியதை மருதா பாப்பாவைத் தாங்கிக் கொண்டே முன்கையின் அடிபாகத்தால் சீட்டை அழுத்தி பிடித்துக் கொண்டான். பாப்பாவை பக்க வாட்டில் உட்கார்ந்தவாறு வைத்து பரியை பிடித்துக் கொள்ளச் சொல்ல, பரி அசையாமல் பிடித்துக் கொண்டாள். ஹான்டில் பாரை பிடித்துக் கொண்டு மெதுவாக ஸ்டாண்டை விடுவித்தான். ஒரு காலை முன்னால் பாரின் மேல் தூக்கி மறுபக்கம் போட்டு சீட்டில் அரைகுறையாக உட்கார்ந்தவாறு மற்றொரு காலை தரையில் எத்தினான். சைக்கிள் நகரத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் எத்தியவாறு சீட்டின் மேல் நன்றாக ஏறி உட்கார்ந்து பெடல்களை மிதிக்க ஆரம்பித்தான். சைக்கிள் வேகமுற்றது.
“ஏங்க காச்சல் கொஞ்சம் கொரஞ்ச மாதிரி இருக்கு. சூடு கொறஞ்சுருக்கு.” பாப்பாவின் தலை சைக்கிள் சென்ற வேகத்தில் எல்லா திசைகளிலும் ஆடியது.
“நல்லதாப்போச்சு. இன்னும் ஒரு மண் நேரத்தில டவுணுக்கு போயிரலாம். பாப்பாவ நல்ல பிடிச்சுக்கட்டி. அவத் தலையை எம் மேல சாச்சுக்க. நீயும் சீட்ட நல்ல பிடிச்சுக்க”
“ஆன். நல்லாத்தான் பிடிச்சிருக்கேன்”
”கீழச்சேரியை தாண்டி, மேலச்சேரி வழியா தெக்குத் தெரு அப்புறம் வயக்கால் குளம் ஒத்தையடிப்பாதை வரதாமுட்டி கஸ்டம். அப்புறம் மெயின் ரோடு. தார் ரோடுட்டி”
இருபது நிமிடங்களில் மெயின் ரோட்டைப் பிடித்து விட்டார்கள்.
”மெயின் ரோடு இப்பத் தார் ரோடா? எப்பப் போட்டாக?”
”போன வருஷந்தானட்டி போட்டாக. மறந்துட்டியா? மாரிம்மா கூட தார் ரோடு சித்தாள் வேலக்கு வந்தாள்ளா. நீயுந்தான் போட்டான்னு கேட்டிய. தெரியும்லாட்டி உனக்கு?. நீ போகலேல்லா”
“ஆமா. புள்ளய பாத்துக்க, பாத்துக்கன்னுட்டு என்னெ தான் வேலக்கு விடலிய நீங்க”
“அப்படி இருந்தாலும் பாப்பாவுக்கு காச்சல் வந்துட்டுல்லா. இப்ப ஜூடு எப்படி இருக்குட்டி?”
“அட காச்சல் நல்ல கொறஞ்சுட்டு. சூட்டக் காணோமே.”
“ அப்பா, கடைசியா மகமாயி வழி விட்டா”
“ இன்னொரு வழியுமுல்லா விட்டுருக்கா. மள தூருல்லா.”
“பாத்தேண்ட்டி. கைல தண்ணி தெரிக்கில்லா. முந்தானெல பாப்பா தலய மூடுட்டி”

வேகமாக சைக்கிளை மிதிக்கத் தொட்ங்கினான்.சீட்டை விட்டு முன்னால் விலகி பெடலின் மேல் எழுந்து நின்று மிதித்தான்.
”செத்த மல வெரிக்க வர நிக்கலாமா?”
”இல்லட்டி போயிரலான். வேகமா மிதிக்கேன்”

மருதா மழை சாரல் கண்ணில் அடிக்க, சற்றே பக்கவாட்டில் முகத்தை திருப்பிக் கொண்டே சைக்கிள் பெடலை மிதித்தான்.
”காரு காரு” பரி முன்னால் வந்துக் கொண்டிருந்த பஸ்ஸைப் பார்த்து கத்தினாள். அவசரமாக தார் ரோட்டைவிட்டு சைக்கிளை பக்கவாட்டில் மண்ணில் கிழே இறக்க முயன்ற மருதா அங்கே இருந்த ஒரு சின்ன பாறையை பார்க்கவில்லை. சைக்கிள் அதன் மேல் ஏறி இறங்கியதில் அதன் பார் அவன் அந்தரங்கத்தில் இடித்தது. அப்படியும் சைக்கிள் சரியாமல் பார்த்துக் கொண்டான்
“ஆ…”
“என்னாச்சு…மெதுவாத் தான் போங்களேன்.”
“கீழ இடிச்சுட்டுட்டி…பரவால்ல. முதல்ல ஆஸ்பத்திரி போனாத்தான் நிம்மதி”

பிள்ளையார் கோவிலைத்தாண்டி போஸ்ட் ஆபிஸ்ஸை நெருங்கும் போது மணி நான்கு. மழை நின்ற பாடில்லை. ஆஸ்பத்திரி வாசலை அடைந்த பொழுது முழுவதுமாக நனைந்திருந்தார்கள். மெதுவாக காலை ஊன்றினான். பாப்பாவை பிடித்தவாறு பரி வழுக்கி கொண்டு சைக்கிளை விட்டு கீழே இறங்கினாள். மருதாவும் மெதுவாக சைக்கிள் சாயாமல் இறங்கினான். ஸ்டாண்டை போட்டுவிட்டு குனிந்து பாப்பாவை தோளோடு சாய்த்து தூக்கினான்.
”பரி, காச்சல் முளுசா போயிட்டுட்டி”
“அதான் சொன்னன்லா”
”அப்ப டாக்டர் கிட்ட காச்சல் பொய்ட்டுன்னு சொல்லுவோம். அவரு குடுக்க மருந்த வாங்கி குடுப்போம். மருடியும் வந்துர கூடாதுல்லா”

ரி டாக்டர் அரையினுள் சென்ற மருதாவையும், பாப்பாவையும் எதிர்ப்பார்த்து காத்திருந்தாள். ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டான். பாப்பா இன்னும் தோளை விட்டு இறங்கவில்லை.
“என்ன சொன்னாஹ?”
மருதா ஒன்றும் பேசாமல் முன்னால் நடந்தான்.
“என்ன சொன்னாஹன்னேன்?”
“காச்சல் தான் விட்டுட்டுல்லா. மருந்து ஒன்னும் வேண்டாண்ட்டாரு”
“எவ்வளவு துட்டு கேட்டாரு?”
“துட்டும் வேண்டானுட்டாரு”
”அட இந்த காலத்துல யாரு துட்டில்லாம வைத்தியம் பாப்பா?”
”இவரு பாத்தாரு. சரி ஸரஸதி பவான் போயிட்டு ஒனக்கு இட்டிலியும் வடையும் வாங்கிட்டு வாரேன்.”
“புள்ளைக்கு? இட்டெலி வாங்குங்க. உங்களுக்கு?”
“அட எல்லாத்துக்கும் தான் பரி”

சரஸ்வதி பவனில் இட்லி வடை பார்சல் வாங்கி கடையின் முன்னாள் பாப்பாவை சைக்கிளில் வைத்துக் கொண்டு காத்திருந்த பரியிடம் கொடுத்தான்.
”கோய்ல் வேல செய்த இடத்தில போய் சாப்பிடுவோண்ட்டி. இப்ப வாரென். கொத்தனெ உரக்கடைல பாத்தேன். என்னான்னு கேட்டு வாரேன்”

காலையில் சர்ச்சில் வெட்டிய குழியின் முன்னால் வந்து அமர்ந்தார்கள்.
“புள்ளைய எழுப்பவா?”
“நம்ம மொதல்ல சாப்பிட்டுட்டு பாபாவுக்கு குடுக்கலாண்ட்டி.”
இட்லியை சந்தோஷமாக சாப்பிட்டாள்.
“இப்படிச் சாப்ட்டு எம்புட்டு நாளாச்சு” காரம் நாக்கில் இறங்க கண்களில் கண்ணீர் நிறைந்தது. ”ஆனா ஸரஸதி பவான் சாப்பாடு முன்ன மாதி இல்லேல்லா. மருந்து கணக்கால்லா இருக்கு.”
மருதா அவளையே பார்த்தான்.
“என்ன பாக்கியோ?”
”ஒண்ணுமில்லட்டி”
”கொஞ்ச தண்ணி குடுக்கேளா?…நெஞ்சை அடைக்க…எனக்கு என்னவோ…”அடுத்த கணம் பரி இட்லியை நுரையாக வாய்வலியாக அனுப்பினாள். கண்கள் மேலே சொருகியது. மருதா பரியை மடியில் போட்டுக் கொண்டான்.

பரி அடங்க ஆரம்பித்தாள். அமைதியானாள். நிசப்தம். மடியிலிருந்து உரக்கடையில் வாங்கிய பாட்டிலை எடுத்தான் மருதா. பாப்பாவுக்கு வைத்திருந்த பார்சலை திறந்து பாட்டிலில் மிச்சமிருந்த டிமக்ரானை அதன் மேல் கவிழ்த்தான். கண்ணீர் வழிந்தது. பரியை கட்டிக் கொண்டான். வேக வேகமாக இட்லியை அள்ளி வாயில் திணித்தான். பின்னர் ஒரு கையால் பரியின் உடலையும், மற்றொரு கையால் பாப்பாவின் உடலையும் கெட்டியாக அணைத்துக் கொண்டான்.

“பரி பாப்பா போய் ரெண்டு மண் நேரம் ஆச்சுட்டி. ஒண்ட்ட பாப்பா போனத சொல்ல எனக்கு நெஞ்சில வலு இல்லட்டி. டாக்டரு உச்சைக்கு கொண்டு போயிருந்தோம்னா காப்பாத்திருப்பாராம்ட்டி.  ஆனா கொத்தன் விடமாட்டேண்ட்டானேட்டி.” கதறினான் மருதா. “கொத்தன் என்னால ஒன்னும் புடுங்க முடியாதுன்னான்ல. இப்ப புடுங்கிட்டேண்ட்டி. பாப்பாவை கொத்தன் கொன்னுட்டான். அவன, இனிமே ஒருத்தங் கூட கண்ட்ராக்கு என்னா, கொத்து வேலைக்கு கூட  சேக்கமாட்டாண்ட்டி”

பரியுடனும், பாப்பாவுடனும் மருதா மெதுவாக குழியில் சரிந்தான்.

8 thoughts on “குழி (சிறுகதை)

 1. கதை உண்மையிலேயே நன்றாக வந்திருக்கிறது- கொஞ்சம் ப்ரெடிக்டிபிளாக இருக்கிறது: கதை எங்கே போகிறது என்பது பாதியிலேயே தெரிந்து விடுகிறது. இதை ஒரு குறையாக சொல்லத் தோன்றினாலும், முடிவில் ஒரு திருப்பம் இருந்திருந்தால் கதையில் ஒரு செயற்கைத்தனம் வந்திருக்கும்- அப்படி வராதது யதார்த்தமாக இருக்கிறது.

  ப்ரெடிக்டிபிளாகவும் இருக்கக் கூடாது, நம்பும்படியும் இருக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட கதையை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.

  ஒரு வேளை, கதையை விரித்துச் செல்லும்போது கொடி காட்டப்பட்ட பாத்திரங்களின் குணபேதங்கள் கதையின் பிற்பகுதியில் நம் நினைவில் முன்னிலை பெற்று நிற்பது ஒரு உத்தியோ என்னவோ, தெரியவில்லை.

  இந்தக் கதையில் டீடெயில்களுக்கு நிறைய முக்கியத்துவம் தந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது எனக்குப் பிடித்திருந்தது.

  நன்றி.

  Like

  1. நட்பாஸ் நன்றி. கதையின் ப்ரெடிக்டபிலிடி பற்றி நான் கவலையில்லாமல் தான் எழுதினேன். ஆனாலும் ஒரு subtle ட்விஸ்ட் இருந்தது. பாப்பா முன்னரே இறந்திருந்தது மற்றும் குடும்பமாக தற்கொலை செய்வது. மற்றபடி நீங்கள் சொல்வது போல் இலக்கியத்தின் இலக்கணத்தை தொட துணிந்துதான் டீடெய்ல்ஸ்க்குள் புகுந்தேன். ஒரளவு டென்ஸிட்டி இருக்கிறது. நன்றி.

   Like

 2. பிற்சேர்க்கை:

  மருதா தன் மகள் இறந்து விட்டது தெரிந்து அதை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மறைத்திருக்கிறார்- தன் மனைவி சாப்பிட்டபின் வேறு வழி இல்லாமல்தான் அதை சொல்கிறார்.

  இவரது இந்த இயல்பு கதையின் முற்பகுதிகளில் கொஞ்சம் போல கோடிட்டு காட்டப்பட்டிருந்தால், கதையின் இறுதி கட்டத்தில் மருதாவின் குணம் பளிச்சென்று வெளிச்சத்துக்கு வந்து கதை கிளிக்கென்று முழுமை பெற்றிருக்கக் கூடும். 🙂

  Like

 3. \\டவுனில் இருந்து வரும் சாக்கடைக்கு, கீழச்சேரிக்கு கிழக்கே சமீபத்தில் தேக்கம் வைத்திருந்தார்கள்….. \\

  இந்தப் பாரா தேவையில்லை என்று நினைக்கிறேன். அல்லது இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்லி இருக்கலாம்.

  எதிர்பார்த்த முடிவுதான். அதுவும் ஒரு பலவீனமோ:)

  கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  பரி டவுனுக்குப் போவதை நினைத்து மகிழ்வது, மருதா வெட்டும் குழி அவனுக்கே மரணக் குழி ஆவது (ஏற்கனவே ஒருமுறை அவன் அதற்குள் விழுந்து அது பூடகமாகத் தெரியவருவதும் வெகு சிறப்பு), நாகா, கார்மேகம் பாத்திரப் படைப்பு ஆகியவை மிக அருமை.

  மனிதன் மரணத் தருவாயில் கெடுதல் செய்ய நினைப்பதில்லை. ஆனால் ஒருவர்மேல் அளவற்ற வெறுப்பு இருக்கும் பட்சத்தில் அந்த நிலையிலும் கெடுதல் செய்வான் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. கரமசாவ் பிரதர்ஸ் நாவலில் மரண வாக்குமூலம் (நான் அந்த நாவலைப் படித்ததில்லை. பிறர் சொல்லக் கேள்வி) பற்றி வரும் பகுதி ஞாபகம் வருகிறது.

  Like

  1. நானும் ”பிரதர்ஸ் கரமஸவ்” படித்ததில்லை. (கிரைம் அண்ட் பனிஷ்மெண்ட் பாதியில் நிற்கிறது).

   உங்களுக்கு வந்த மாதிரி, பல இடங்களில் தனிப்பட்ட திருப்தி இருந்தாலும், மொத்தத்தில் இம்ப்ரூவ் செய்ய எவ்வளவோ வேலை இருக்கிறது. ஆனால் இது தான் இந்த கதையின் விதி. எதிர்காலத்தில் வருபவற்றில் முயற்சி செய்கிறேன்.

   Like

  1. நன்றி RV. இது பற்றியும் சுப்ரமணியின் காதல் பற்றியும் நாம் பேச சமாச்சாரம் உள்ளது.வீக் எண்டில் பேசுவோம்.

   Like

 4. பக்ஸ், நன்றாக ஆரம்பித்து .விறுவிறுப்பாகப் போகும் கதை, இறுதியில் கொஞ்சம் தொய்வடைகிறது. குடும்பமே இறந்து போவதை என்னைப் போன்ற சாதாரண வாசகனால் கணிக்க முடியாது என்று நினைக்கிறேன். வட்டார மொழி ரசித்துப் படித்தேன். நீங்கள் இந்தக் கதையைப் புத்தமாகக் கொண்டு வரும் போது நன்றாக “ப்ரூப்” பாருங்கள். நிறைய தட்டச்சுப் பிழையும் உள்ளது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.