அஞ்சலி – எஸ்.வி. ராமகிருஷ்ணன்

எஸ்.வி. ராமகிருஷ்ணன் மறைந்த செய்தியை சொல்வனத்தில் படித்தேன். புகைப்படமும் அவர்கள் தயவுதான். அஞ்சலி என்றால் எனக்கு அவரது எழுத்தைப் பற்றி பேசுவதுதான்.

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் எனக்கு உள்ளூர் நூலகத்துக்கு கொஞ்சம் தமிழ் புத்தகம் வாங்கிப் போடலாம் என்று தோன்றியது. திலீப்குமாரையே புத்தகங்களை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள், இதுதான் பட்ஜெட் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவர் ராமகிருஷ்ணன் எழுதிய இரண்டு புத்தகங்களையும் அனுப்பி இருந்தார்.

வைஸ்ராயின் கடைசி நிமிஷங்கள், அது அந்தக் காலம் என்ற இரண்டு புத்தகங்களும் நாஸ்டால்ஜியா புத்தகங்கள். அந்தக் காலத்தில் ரயிலில் போனது, மவுண்ட்பாட்டன் போகும்போது இந்த ராஜாவுக்கு 21 துப்பாக்கி மரியாதை கொடுக்கலாம் என்ற ஆணையில் கையெழுத்துப் போட்டது என்று அவர் பார்த்த, கேட்ட, அனுபவித்த பலவற்றை பல நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திருப்பார். ராமகிருஷ்ணன் எழுபத்து நான்கு வயதானவர். நிறைய பார்த்திருக்கிறார், கேட்டிருக்கிறார், நினைவும் கூர்ந்திருக்கிறார். டைம் பாஸ் புத்தகங்கள்தான், என்றாலும் இவற்றுக்கு ஒரு ஆவணம் என்ற முறையில் முக்கியத்துவம் உண்டு. உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 65 ரூபாய். இணையத்தில் பதிவாக போட்டால் பலரும் விரும்பிப் படிப்பார்கள். அவர் எழுதிய சில கட்டுரைகள் இங்கே கிடைக்கின்றன. எனக்குப் பிடித்த இரண்டு – ஆரணி குப்புசாமி முதலியாரின் புத்தகங்களைப் பற்றி அவர் எழுதிய “விளையாட்டு சாமான் அல்லது விபரீதக் கொலை” என்ற கட்டுரையும், 1946 தேர்தல் பற்றி அவர் எழுதிய “மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு” என்று கட்டுரையும்.

அசோகமித்திரன் இவரது ரசிகர் போலிருக்கிறது. அவர் வார்த்தைகளில் –

ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் 1940கள் காலத்தை ஜீவனுடன் சித்தரிக்கின்றன. அந்தக் காலத்தில் வாழ்ந்த எனக்கும் என்னை ஒத்த வயதுக்காரர்களுக்கும் இக்கட்டுரைகள் நினைவூட்டல் மூலம் ஓர் இலக்கிய அனுபவத்தைத் தந்தால், இளைஞர்களுக்கு இவை வியப்பு கலந்த இலக்கிய அனுபவம் தரும். இந்த நூலைச் சமீப காலத்தில் வெளிவருபவைகளில் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இதிலுள்ள வரலாறு நகமும் ரத்தமும் சதையுமுடைய மனிதர்களை உள்ளடக்கியது. இதிலுள்ள மனிதர்களுக்குப் பிரதிபலிப்பாக இன்றும் இருக்கிறார்கள்.

வைஸ்ராயின் கடைசி நிமிஷங்கள், அது அந்தக் காலம் இரண்டு புத்தகங்களும் நூவர்க் நூலகத்தில் கிடைக்கும்.

என்னுடைய கருத்தில் எஸ்.வி.ஆருக்கு தமிழ் இலக்கிய உலகில் இடமில்லை. ஆனால் ஆவண உலகில் இடமுண்டு.