கிரிக்கெட் வீரர்களுக்கு பிடித்த புத்தகங்கள்

எனக்கு கிரிக்கெட் பைத்தியம் உண்டு. புத்தகப் பைத்தியம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

உலகக் கோப்பை தருணத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பிடித்த புத்தகங்கள் என்று ஒரு பதிவு – என்னை கவராமல் இருக்குமா? 🙂

தமிம் இக்பாலுக்கு (பங்களாதேஷ்) ஹாரி பாட்டர் சீரிஸின் முதல் புத்தகமான Sorcerer’s Stone பிடிக்குமாம். என்றாவது ஹாரி பாட்டரைப் பற்றி எழுத வேண்டும். எனக்கு பிடிக்கும் என்பதோடு இப்போது நிறுத்திக் கொள்கிறேன்.

ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), மற்றும் விராட் கோலிக்கு (இந்தியா) டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசியின் சுசசரிதையான ஓபன் (Open) பிடிக்குமாம். அனேகமாக படிக்கமாட்டேன்.

ஜூபின் சர்க்காரிக்கு (கனடா) ரோலிங் ஸ்டோன்ஸ் ராக் இசைக்குழுவை சேர்ந்த கீத் ரிச்சர்ட்சின் சுயசரிதையான Life பிடிக்குமாம்.

இங்கிலாந்தின் லூக் ரைட்டுக்கு ஆர்.எல். ஸ்டைனின் (R.L. Stine) Goosebumps சீரிஸ் பிடிக்குமாம். இவை சிறுவர் சிறுமியருக்கான கதைகள்!

அயர்லாந்தின் எட் ஜாய்ஸ் கொஞ்சம் highbrow போலிருக்கிறது. அவர் விரும்பிப் படிப்பது ஜார்ஜ் ஆர்வெலின் 1984.

கென்யாவின் ஸ்டீவ் டிகொலோவுக்கு பிடித்த புத்தகம் நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையான Long Walk to Freedom.

பாகிஸ்தானின் ஷாஹித் ஆஃபிரிடி கொஞ்சம் religious ஆசாமி போலிருக்கிறது. அவர் சொல்லும் புத்தகம் கண்ட்லாவி ( Muhammad Zakariya Khandlawi) எழுதிய ஃபஸ்லே அமால் (Fazail-e-Amaal) இது குரான், மற்றும் பிற மத புத்தகங்களின் சொல்லப்படும் நீதிகளின் தொகுப்பாம்.

நியூசீலாந்தின் கேன் வில்லியம்சனும் த்ரில்லர்களை விரும்பிப் படிப்பவர் போலிருக்கிறது. அவர் சிபாரிசு செய்வது லீ சைல்டின் ஜாக் ரீச்சர் சீரிஸ். ஜாக் ரீச்சர் புத்தகங்கள் பயணப் படிப்புக்கு ஏற்றவை. படித்துவிட்டு தூக்கிப்போட்டு விடலாம்.

ஸ்ரீலங்காவின் ஏஞ்சலோ மாத்யூஸ் சுய முன்னேற்றப் புத்தகங்களை விரும்புபவர் போலிருக்கிறது. அவர் சிபாரிசு செய்வது ஜான் மாக்ஸ்வெல் எழுதிய Talent is not Enough .

மேற்கிந்தியத் தீவுகளின் சுலைமான் பென் விரும்புபவது முன்னாள் மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் காப்டன் கிளைவ் லாய்டின் சுயசரிதையான Supercat.

ஹாலந்தின் பீட்டர் போரன் இன்னொரு highbrow போலிருக்கிறது. பாஸ்கல் மெர்சியர் (Pascal Mercier) எழுதிய Night Train to Lisbon புத்தகத்தை சிபாரிசு செய்கிறார்.

ஜிம்பாப்வேயின் கிராம் கிரேமர் சைக்கிள் வீரர் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ரான்கின் சுயசரிதையான Its Not About the Bike புத்தகத்தை சிபாரிசு செய்கிறார்.

நிறைய பேர் சுயசரிதைகளைத்தான் விரும்புகிறாற்போல இருக்கிறது. நானும் மண்டேலா, லாயிட், ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியோரின் சுயசரிதைகளை படிக்க விரும்புகிறேன். இவற்றைத் தவிர Talent is Not Enough புத்தகத்தையும் புறட்டியாவது பார்க்க வேண்டும்.