ஏசுவின் தோழர்கள்

எனக்கு பொதுவாக இந்திரா பார்த்தசாரதி அவ்வளவாக பிடிப்பதில்லை. எல்லாரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆங்கிலத்தில் அதிகமாக பேசுவார்கள். ஜெயகாந்தனைப் பற்றியும் எனக்கு இப்படி ஒரு நினைப்பு உண்டு. ஆனால் ஜேகேயின் படைப்புகளில் ஒரு அழுத்தமான நீதி, கொள்கை ஏதாவது இருக்கும். இ.பா.வின் படைப்புகளிலோ அங்கதம்தான் அடித்தளம். அவரது அங்கதம் எனக்கு புன்முறுவலைக் கூட வரவழைப்பதில்லை, அதுதான் பிரச்சினை. அதனால்தான் அவரது எந்த படைப்புமே எனக்கு நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. அவரது புகழ் பெற்ற குருதிப்புனல் (கீழ்வெண்மணி சம்பவத்தை பின்புலமாக வைத்து எழுதப்பட்டது) கூட எனக்கு பிரமாதம் என்று படவில்லை.ஏசுவின் தோழர்களும் அப்படித்தான். பிரமாதம் என்று சொல்வதற்கில்லை.

கும்பகோணத்து பிராமணப் பையன் படித்து ஒரு போலந்துப் பெண்ணை மணமுடித்து போலந்திலேயே செட்டில் ஆகிவிடுகிறான். குடும்பமே வழக்கம் போல அறிவுஜீவி. மனைவிக்கு இந்தியாவில் ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவத்தால் தன் இந்திய வேர்களை அறுக்கும் முயற்சியில் இருக்கிறார். அவரது மகள் ஆஷா இந்தியாவுக்கு திரும்பி தன் உறவினர்களை பார்க்கப் போகிறாள். அப்பா படிக்க, முன்னேற உதவி செய்த அத்தையை தன் அப்பா அம்போ என்று கைவிட்டதும், இன்று தன்னுடைய அத்தை பெண் விபசாரம் செய்து குடும்பத்தை நடத்துவதும் தெரிகிறது. கசின் ஆஷாவை நிராகரித்தாலும் அத்தை முழு மனதோடு ஆஷாவை ஏற்கிறாள். ஆஷாவுக்கு ஒரு குங்குமச் சிமிழை பரிசாகத் தருகிறாள். ஆஷா திரும்பிப் போய் அப்பாவிடம் விஷயத்தை சொன்னதும் அப்பா குற்ற உணர்ச்சியில் இறக்கிறார்.

கதை எனக்கு பெரிதாக தேறவில்லை. இப்படி நடக்காது என்று சொல்ல வரவில்லை, ஆனால் எல்லாம் கொஞ்சம் மெலோட்ராமாவாக இருக்கிறது – குறிப்பாக அத்தையின் பெண் விபசாரம் செய்துதான் பிழைக்க வேண்டி இருக்கிறது என்ற நிலை. அங்கங்கே தெரியும் அங்கதமும் கொஞ்சம் forced ஆக இருக்கிறது. உதாரணமாக போலந்தில் விவாகரத்து ஆன பிறகும் கணவன் மனைவி வீடு பற்றாகுறையால் ஒரே வீட்டில் இருக்க வேண்டிய நிலையை விவரிப்பது.

90 ரூபாய் விலையில் கிழக்கு தளத்தில் வாங்கலாம்.

தவிர்க்கலாம். பிறகு எதற்கு இந்த பதிவு என்கிறீர்களா? ஏசுவின் தோழர்கள் நான் ஃப்ரீமான்ட் நூலகத்துக்கு நன்கொடையாக கொடுத்த புத்தகங்களில் ஒன்று. சான் ஃப்ரான்சிஸ்கோ அருகே இருந்தால் நீங்கள் சுலபமாக படிக்கலாம். நூலகத்துக்கு நன்கொடை கொடுத்தது பெரிய கதை. அதை இன்னொரு நாள் விபரமாக எழுதுகிறேன்.

ஜீவியின் “மறம்”

நண்பர் ஜீவி வாரப் பத்திரிகை எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் பெரிய விசிறி. வணிக எழுத்துக்கு ஆதரவாக தன் கருத்துகளை மறம் என்ற கொஞ்சம் நீளமான கதையில் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4) சொல்லி இருக்கிறார். உண்மையில் இது கட்டுரைதான், கதை என்ற போர்வை போர்த்தி இருக்கிறார்.

நான் ஜீவியின் கருத்துகளை முழுமையாக ஏற்கவில்லை. அவருக்கு வணிக, வாரப் பத்திரிகை எழுத்து என்றால் கல்கியும் தேவனும் நா.பா.வும் அகிலனும் லக்ஷ்மியும் அனுத்தமாவும் நினைவு வருகிறார்கள். எனக்கு சுஜாதாவும் புஷ்பா தங்கதுரையும் சாண்டில்யனும் சிவசங்கரியும் பாலகுமாரனும் நினைவு வருகிறார்கள். எங்கள் தலைமுறைகள் வேறு. என் லிஸ்டில் சிவசங்கரியைத் தவிர்த்த அனைவரும் காமம் என்பதை வாசகர்களை கவரும் ஒரு உத்தியாக பயன்படுத்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. புஷ்பா தங்கதுரையை என் பதின்ம பருவத்தில் விரும்பிப் படிக்க ஒரே காரணம் செக்ஸ் வருணனைகள்தான்.

ஆனால் அர்ப்பணிப்புடன் எழுதியவர்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. நா.பா. ஒரு நல்ல உதாரணம்.

கதை என்ற விதத்தில் தோல்விதான் என்றாலும் அவரது வாதங்களுக்காக படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.