ஜான் கார்லினின் “ப்ளேயிங் தி எனிமி”

ஒரு தலைவனால் என்ன கிழித்துவிட முடியும்? எந்த ஒரு நாட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள், இருக்கும் பிரச்சினைகள் அநேகம். எந்த ஒரு தனி மனிதனாலும் தீர்க்கக்கூடியதில்லை இந்த பிரச்சினைகள். அப்படி இருக்க நாம் ஏன் ஒரு தலைவனை தேடுகிறோம்?

எந்த நல்ல தலைவனாலும் செய்யக் கூடியது ஒன்றுதான். பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தமுடியும். காலம் காலமாக நடந்து வரும் அநியாயங்களை உணர்த்த முடியும். அநியாயங்களுக்கு எதிராக போராடுவதில் long term vision கொண்டுவர முடியும். அவ்வளவுதான். இவை அனைத்தையும் ஒரு symbolic லெவலில்தான் செய்யமுடியும்.

காந்தி அதைத்தான் செய்தார். ஜாதி என்ற பேரில் நடந்த அடக்குமுறையை கண்டிக்க தானே மலம் வாரிப் போட்டார். தன் மனைவியை அப்படி செய்ய கட்டாயப்படுத்தினார். உப்பு என்னங்க பெரிய விஷயம்? எத்தனை பேர் உப்பு எடுத்திருப்பார்கள்? அரசு அதை உதாசீனப்படுத்தி இருந்தால் காந்தியின் நோக்கம் நிறைவேறி இருக்குமா?

நெல்சன் மண்டேலாவும் அதைத்தான் செய்திருக்கிறார். அவரது அணுகுமுறையை விளக்கி எழுதப்பட்ட புத்தகம்தான் John Carlin எழுதிய Playing the Enemy.

மண்டேலா எப்போதுமே வன்முறையை ஒதுக்கியவர் இல்லை. ஆஃப்பிரிக்க தேசிய காங்கிரசின் (African National Congress – ANC) ஆயுதம் தாங்கிய அமைப்பை அவர்தான் உருவாக்கினார். அதனால்தான் அவர் ஜெயிலுக்கு போக நேர்ந்ததே. இருபத்தேழு வருஷம் ஜெயில். அரசோடு பேச்சுவார்த்தை நடத்திய கடைசி சில வருஷங்களைத் தவிர மிச்ச நாளெல்லாம் சின்ன ரூம், இல்லாவிட்டால் தனிமைச்சிறை, கடின உழைப்பு என்றுதான் வாழ்க்கை.

ஆனால் அரசு பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே அவர் மனதில் ஒரு விஷயம் உறுதியாக இருந்திருக்கிறது. அதிகாரம் எண்ணிக்கை அதிகமான கறுப்பு ஆப்ரிக்கர்களிடம் மாறுவது வெள்ளை ஆப்ரிக்கானர்களை பழிவாங்க கிடைத்த லைசன்ஸ் இல்லை என்று தெளிவாக இருந்திருக்கிறார். தென்னாப்ரிக்கா எல்லாருக்கும் சொந்தமானது, அங்கே அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், அதற்காக தேவைப்பட்டால் கறுப்பர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் எப்படி உருவானது என்று தெரியவில்லை, ஆனால் உருவாகி இருக்கிறது.

அதே நேரத்தில் அவருக்கு தன் எண்ணம் பெரும்பான்மை கறுப்பர்களால் ஏற்க முடியாதது என்று தெரிந்திருக்கிறது. மெதுவாக மெதுவாகத்தான் தன் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த symbol ரக்பி.

ரக்பி அன்றைக்கு பெரும்பாலும் வெள்ளை ஆஃப்ரிக்கானர்களால் விளையாடப்பட்டது. இந்தியர்களுக்கு கிரிக்கெட் எப்படியோ அப்படித்தான் அவர்களுக்கு ரக்பி. பிற நாடுகளை எதிர்த்து விளையாடும்போதெல்லாம் கொடியை ஆட்டி தேசிய கீதம் பாடி கும்மாளம் போடுவார்கள். Apartheid கொள்கையால் பல வருஷங்களாக பிற நாடுகளுடன் விளையாட முடியாத நிலை. பிற நாடுகளுடன் விளையாடக்கூடாது என்று மும்முரமாக கறுப்பர்கள் போராடினார்கள்.கறுப்பர்களுக்கு ரக்பி அடக்குமுறையின் சின்னம். ரக்பி விளையாட்டு, பழைய தென்னாப்பரிக்க கொடி, பழைய தென்னாப்பரிக்க தேசிய கீதம், ரக்பி டீமை ஸ்ப்ரிங்பாக் என்று அழைப்பது இவை எல்லாமே பெரும்பான்மை கறுப்பர்களுக்கு கடுப்பேற்றுபவை.

புதிய அரசியல் சட்டம் உருவாகிவிட்டது. முதல் முறையாக எல்லாரும் ஓட்டு போடும் தேர்தல். மண்டேலா நாட்டின் அதிபர் ஆகிவிட்டார். கொடியை மாற்ற வேண்டும் என்று பெரும்பான்மை கறுப்பர்கள் கிளம்பினார்கள். கொடி மாற்றப்பட்டது. பழைய கொடியோடு, ANC-யின் கொடியை சேர்த்து ஒரு கொடி.

தேசிய கீதம் மாற்றப்பட வேண்டும் என்று ஒரு போராட்டம். மண்டேலா பழைய தேசிய கீதம் தேசிய கீதமாக தொடரும், புதிதாக ந்கொசி சிகொலேலே என்ற கறுப்பர்கள் வந்தேமாதரம் போல பாடிக்கொண்டிருந்த பாட்டும் தேசிய கீதமாகும், இரண்டுமே எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடப்படும் என்று அறிவித்தார். நூற்றுக்கு தொண்ணூறு வெள்ளையர்களுக்கு இந்த புதிய தேசிய கீதத்துக்கு வார்த்தைகள் தெரியாது.

ஸ்ப்ரிங்பாக் பேரை மாற்ற மண்டேலா ஒத்துக்கொள்ளவில்லை.

ரக்பி உலகக் கோப்பை தென்னாப்ரிக்காவில் நடக்க இருக்கிறது. ஃபிரான்ஸ்வா பீனார் (Francois Pienaar) அப்போதைய ரக்பி கேப்டன். மண்டேலா அவரை அழைத்துப் பேசுகிறார்.

வெள்ளையர்களுக்கு ஆச்சரியம். எப்படி ரக்பியை, இத்தனை நாள் எதிர்த்த ஒரு விளையாட்டை, கறுப்பர்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பு இல்லாத விளையாட்டை, தங்களுக்கு விட்டுத் தருகிறார்கள்? மெதுவாக மெதுவாக அவர்கள் மண்டேலாவும் பெரும்பான்மை கருப்பர்களும் தங்களை பழி வாங்கத் துடிக்கவில்லை என்று உணர்கிறார்கள். கருப்பர்களோ மண்டேலா தரும் அழுத்தத்தால் ரக்பியோடு மேலும் மேலும் ஒன்றுகிரார்கள்.

மண்டேலா திட்டமிட்டு சின்ன சின்ன காரியங்கள் மூலம் ஊக்கம் தருகிறார். ஒரு காலத்தில் நானும் ரக்பியை எதிர்த்தவந்தான், ஆனால் இன்றைக்கு ரக்பி விளையாடுபவர்கள் என் தேசத்து மக்கள் என்று பேட்டி கொடுக்கிறார். விளையாட்டுக்கு முன்பு பயிற்சி முகாமுக்கு போய் ரக்பி வீரர்களை சந்திக்கிறார். முதல் ஆட்டத்தை உட்கார்ந்து பார்க்கிறார்.

ஆனால் அன்றைக்கு தென்னாப்பரிக்கா அவ்வளவு வலிமையான டீம் இல்லை. நியூசிலாந்துதான் வலிமையான டீம். அவர்கள்தான் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ கடுமையாக போராடி தென்னாப்பரிக்கா இறுதி ஆட்டத்துக்கு வருகிறது. நியூசிலாந்தோடு விளையாட வேண்டும். கோப்பையை வென்றால் அது தென்னாப்ப்ரிக்காவை ஒன்றாக இணைக்கும், நிற வேறுபாடுகள், பழைய அநீதிகள் அனேகமாக மறக்கப்படும் என்பதை மண்டேலா உணர்ந்திருக்கிறார்.

ரக்பி டீம் மண்டேலாவை அடைத்து வைத்திருந்த சிறை அறையைப் போய் பார்க்கிறது. பத்தடிக்கு பத்தடி கூட இல்லாத அறை. பீனார் எப்படி இந்த அறையில் பதினைந்து இருபது வருஷம் தங்கி இருந்த மனிதரால் வெள்ளையர்களை மன்னிக்க முடிகிறது என்று திகைக்கிறார்.

மண்டேலா இறுதி ஆட்டத்தை பார்க்கப் போகிறார். அவர் போட்டிருப்பது பீனாரின் நம்பர் உள்ள பச்சை மற்றும் தங்க நிற ஜெர்சி. அவர் தலையில் ஸ்ப்ரிங்பாக் தொப்பியை அணிந்திருக்கிறார். பயிற்சி அறைக்கு எதிர்பாரதவிதமாக போய் டீமை உற்சாகப்படுத்துகிறார். ஆட்டத்தைப் பார்க்க வந்த வெள்ளையர்கள் “நெல்சன்! நெல்சன்!” என்று கூவுகிறார்கள். நாடு முழுவதும் கறுப்பர்கள் டிவி முன் உட்கார்ந்திருக்கிறார்கள்.


ரக்பி டீம் முதல் முறையாக ந்கொசி சிகொலேலே என்று புதிய தேசிய கீதத்தை பாடுகிறது. கேப்டன் பீனாருக்கு கண்ணீர், அவரால் வாயைத் திறந்து பாடமுடியவில்லை.

தென்னாப்பிரிக்க டீமுக்கு புதிய பலம் பிறந்திருக்கிறது. விடாகண்டன் கொடாக்கண்டனாக இரண்டு டீமும் மோதுகின்றன. கடைசியில் தென்னாப்ரிக்கா வெல்கிறது. கறுப்பர்களும் வெள்ளையர்களும் வித்தியாசங்களை மறந்து ஒரே நாட்டு மனிதர்கள் ஆகிறார்கள். புதிய தென்னாப்ரிக்கா பிறக்கிறது என்றே சொல்லலாம்.

ஜான் கார்லின் இந்த நிகழ்ச்சிகளை அருமையாக எழுதி இருக்கிறார். புத்தகத்தின் excitement என் வார்த்தைகளில் வராமல் இருக்கலாம், அது கார்லினின் தவறு இல்லை. கட்டாயம் படியுங்கள். வித்தியாசங்களை, அநீதிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று மண்டேலா செய்து காட்டி இருக்கிறார்.

புத்தகம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் திரைப்படம் இதை விட பிரமாதம். Invictus என்று இது திரைப்படமாக வந்திருக்கிறது. மார்கன் ஃப்ரீமன் (Morgan Freeman) மண்டேலாவாக நடித்திருக்கிறார். மாட் டேமன் (Matt Damon ) பீனாராக. கிளின்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood) இயக்கம். புத்தகத்தை படிக்க சோம்பேறித்தனப்படுபவர்களும் திரைப்படத்தையாவது பாருங்கள்.

திரைப்படத்தில் மண்டேலா தன் இருண்ட நாட்களில் ஒரு கவிதை – வில்லியம் ஹென்லி எழுதிய இன்விக்டஸ் – தனக்கு புத்துணர்ச்சி தந்தது என்று சொல்வார். அதை பீனாருக்கும் எழுதி கொடுப்பார். என்னைக் கூட அந்த கவிதை கவர்ந்தது. (எனக்கும் இப்போது இருண்ட நாட்கள்தான்.)

Out of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.
In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.
Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds, and shall find, me unafraid.
It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.