டிக் ஃபிரான்சிஸ் எழுதிய நெர்வ்

ஆசைக்கு ஒரு பதிவு.

எனக்கு பொதுவாக டிக் ஃபிரான்சிஸ் எழுதிய த்ரில்லர்கள் பிடிக்கும்.

ஃபிரான்சிஸ் ஒரு முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. ஆங்கிலேயர். இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் குதிரைகளை எல்லாம் ரேசில் ஓட்டி இருக்கிறார். ஜாக்கி தொழிலிருந்து ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார். எல்லாமே குதிரைப் பந்தய பின்புலம் உள்ள த்ரில்லர்கள். சில சமயம் ஹீரோ ஜாக்கியாக இருப்பார். வங்கி அதிகாரி, பத்திரிகையாளர், துப்பறிபவர், பைலட், குதிரை தரகர், ரேஸ்கோர்ஸ் நிறுவன பங்குதாரர், சமையல் செய்பவர், வைன் வியாபாரி என்று பலதரப்பட்டவர்கள் ஹீரோவாக வருவார்கள். ஆனால் எல்லாருக்கும் குதிரை பந்தய பின்புலம் இருக்கும்.

ஃபிரான்சிசின் ஹீரோக்கள் எல்லாரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள். கூர்மையான மூளை உடையவர்கள். எந்த பிரச்சினை வந்தாலும் கலங்கமாட்டார்கள், அதை தீர்க்க முயற்சி எடுப்பார்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகமாட்டார்கள், ஆனால் உணர்ச்சிகளுக்கு உரிய இடம் தருவார்கள். Strong ethical core உடையவர்கள். எது சரி எது தவறு என்பதை பற்றி உறுதியான கருத்து உடையவர்கள். ஆனால் தண்டனை தருவதை விட, பழி வாங்குவதை விட பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். புத்தகத்தில் எங்கேயாவது ஏறக்குறைய சித்திரவதை அனுபவிப்பார்கள், ஆனால் தன் நோக்கத்திலிருந்து மாறமாட்டார்கள். அலட்டல் இல்லாத புத்திசாலி செயல் வீரர்கள் என்று சொல்லலாம். எனக்கு நானும் அப்படித்தான் என்று ஒரு நினைப்பு. சரி விடுங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு நினைப்பு. 🙂 அதுவே இந்த புத்தகங்கள் என்னை ஈர்ப்பதற்கு பெரிய காரணம் ஆக இருக்கலாம்.

Nerve அவர் எழுதிய சிறந்த நாவல்களில் ஒன்று. 1964-இல் வெளிவந்தது.

சிம்பிளான கதை. ராப் ஃபின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒரு steeplechase ஜாக்கி. நிலையான வருமானம் கிடையாது. கஷ்ட ஜீவனம். அது என்னவோ முதல் படியில் இல்லாத ஜாக்கிகளை துரதிருஷ்டம் துரத்துகிறது. ஆர்ட் மாத்யூஸ் தற்கொலை செய்து கொள்கிறான். பீட்டர் க்ளூனி ஒதுக்குப்புறமான ஒரு மலைப்பாங்கான இடத்தில் கொஞ்சம் சக்திக்கு மீறி வீடு வாங்குகிறான். அவன் வீட்டிலிருந்து வர இருக்கும் ஒரே ரோடில் ஒரு நாள் ஒரு ஆர்மி லாரி கவிழ்ந்து அவனுக்கு லேட்டாகிறது. அடுத்த வாரம் மீண்டும் ஒரு பெரிய கார் ரோட்டை அடைத்து நிற்கிறது, அவனுக்கு மீண்டும் லேட்டாகிறது. அவனுடைய குதிரை ட்ரெய்னர் அவனை வேலையை விட்டு தூக்கிவிடுகிறார். கிரான்ட் புக்கிகளுக்கு டிப்ஸ் தருகிறான் என்ற வதந்தியால் அவனுக்கு வேலை போகிறது, அவனுக்கு நெர்வஸ் ப்ரேக்டவுன். இந்த நிலையில் ஃபின் மீது ஜேம்ஸ் அக்ஸ்மின்ஸ்டர் என்ற ஒரு ட்ரெய்னரின் கண் விழுகிறது. ஃபின்னுக்கு ஓரளவு வேலை கிடைக்கிறது. ஜேம்ஸின் முதல் சாய்ஸ் ஜாக்கி பிப்பின் கால் உடைந்துபோகிறது. ஃபின்னுக்கு மேலும் சான்ஸ்கள் கிடைக்கிறது, வெற்றி மேல் வெற்றி.

ஒரு ரேசில் ஃபின்னின் குதிரை கீழே விழுகிறது, ஃபின்னுக்கு நல்ல அடி, கொஞ்சம் concussion. அதற்கு அடுத்தபடி ஃபின் ஓட்டும் எந்த குதிரையும் தூங்கி வழிகிறது, சரியாக ஓடமாட்டேன் என்கிறது, 28 ரேஸ்களில் ஃபின் வரிசையாக தோற்கிறான். குதிரை சரியாக ஓடவில்லை என்று எந்த ட்ரெய்னரும் நம்ப மறுக்கிறார்கள். ஃபின்னுக்கு குதிரையை வெல்லுமாறு ஓட்டும் தைரியம் போய்விட்டது, Finn lost his nerve என்று எல்லாரும் பேசுகிறார்கள். ஃபின்னும் தளர்ந்துபோகிறான். எப்படியோ சக்தியை வரவழைத்துக்கொண்டு துப்பறிய ஆரம்பிக்கிறான். 28 ரேசிலும் ஒரு பெரிய ஆள் பந்தயத்துக்கு முன் குதிரைக்கு கொஞ்சம் சர்க்கரை கொடுத்திருக்கிறான் என்று கண்டுபிடிக்கிறான். ஜேம்சிடம் உண்மையை நிரூபிக்கிறான். ஜேம்ஸ் அவனுக்கு ஒரு பெரிய ரேசில் நல்ல வாய்ப்பு தருகிறார். ரேசுக்கு முந்தைய நாள் ஃபின் கடத்தப்படுகிறான். அவன் கைகள் கட்டப்பட்டு கூரையிலிருந்து தொங்க விடப்படுகிறான். ஒரு ஏழெட்டு மணி நேரம் அப்படி தொங்கினால் ரத்த ஓட்டம் நின்று கையே துண்டிக்கப்பட வேண்டிய நிலை வரலாம்.

ஃபின் ஹீரோ, அவன் மேல் அணுகுண்டு விழுந்தாலும் பிழைத்துத்தான் தீர வேண்டும். எப்படி தப்பித்தான், யார் அந்த வில்லன், ஜாக்கிகளுக்கு ஏன் பிரச்சினைகள் வருகின்றன, வில்லன் எப்படி பிடிபட்டான் என்பதுதான் மிச்ச கதை.

ஃபின் கட்டி தொங்கவிடப்படும் இடம்தான் கதையின் உச்சக்கட்டம். மிக அருமையாக வந்திருக்கிறது.

விறுவிறுப்பான கதை. இரண்டு மூன்று வருஷத்துக்கு ஒரு முறையாவது படிப்பேன். இன்னும் எடுத்தால் கீழே வைக்க முடிவதில்லை. த்ரில்லர் விரும்பிகள் கட்டாயம் படியுங்கள். மற்றவர்களும் முயற்சி செய்யலாம். ஒரே ஒரு ஃபிரான்சிஸ் புத்தகம் படித்துப் பார்க்கலாம் என்று நினைத்தால் இதை விட Forfeit என்ற புத்தகத்தை படித்துப் பாருங்கள்.

ஃபிரான்சிஸ் ஆங்கிலேயர். அவருடைய புத்தகங்கள் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களில் சுலபமாக கிடைக்கும். இருபது முப்பது புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் ஒரு ஆறேழு நல்ல த்ரில்லர்கள் என்று சொல்லலாம். ஆறேழு புத்தகமாவது சொதப்பியும் இருக்கிறார். எனக்கு இப்போது நினைவு வரும் நல்ல புத்தகங்கள் Forfeit, Whiphand, Odds Against மற்றும் Danger.