ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதை சீரிஸ்

சில வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும், ஓரளவு அந்த வேலைகள் நிறைவேறும்வரை இணையம் போன்ற distraction-களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறேன். இருந்தாலும் இந்த பதிவை எழுதாமல் இருக்க முடியவில்லை.

ஜெயமோகனின் சமீபத்திய நிஜ மனிதர்களை வைத்து எழுதப்பட்ட சிறுகதை சீரிசை விரும்பிப் படித்தேன். தினமும் காலை பதினோரு மணி வாக்கில் எப்படா தளம் அப்டேட் ஆகும் என்று காத்திருப்பேன். கதை வந்தால் ஒரே மூச்சில் படித்துவிடுவேன். (பெருவலி தவிர – அந்தக் கதை வந்தபோது எனக்கும் முதுகுவலி. கதையும் முதுகுவலி என்று ஆரம்பித்ததும் சரி இந்த கதையை மட்டும் நாலு நாள் கழித்துப் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்துவிட்டேன்.) பல கதைகளில் கண் கலங்கியது. கதையைப் படித்து அழுதெல்லாம் பல காலம் ஆகிவிட்டது, புண்யாத்மா எத்தனை பேரை அழ வைத்தாரோ தெரியவில்லை. 🙂

எத்தனையோ பிரச்சினை; குடும்பம், வேலை, பணம், சாப்பாடு, தூக்கம், commute என்று ஒரு முடிவில்லாத வட்டத்தில் (infinite loop) ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை மும்முரத்தில் நாம் மேன்மை சாத்தியம் என்பதையே மறந்துவிடுகிறோம். துனியா க நாரா ஜமே ரஹோ என்று கிளம்பிவிடுகிறோம். டி.எஸ். எலியட் சொன்ன மாதிரி – Here we go round the prickly pear at five o’clock in the morning – அறத்துக்கும் மேன்மைக்கும் ஏது நேரம்? திரும்பிப் பார்த்தால் தொந்தி சரிந்து மயிரே வெளிர்ந்து (என் கேசில் உதிர்ந்து) காலம் ஓடிவிட்டிருக்கிறது.

இந்தக் கதைகளிலிருந்து நான் பெற்றது ஒன்றுதான் – மனிதனுக்கு மேன்மை, அறம், லட்சியவாதம் எல்லாம் சாத்தியமே. எல்லாரும் காந்தி, புத்தன், ராமனுஜன் ஆக முடியாது, அந்த மாதிரி கோடியில் ஒருவர்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் வேண்டாம். நூற்றில் ஒருவராக இருக்கலாம் – முயற்சியாவது செய்யலாம். உண்மை மனிதர்களை மூலமாக வைத்து பாத்திரங்களைப் படைத்து, “small scale” லட்சியவாதிகளை காட்டி, விதவிதமான லட்சியவாதிகளை காட்டி இதைத்தான் சொல்கிறார். என்னால் என்றும் காந்தியாக ஆகமுடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் பணம் போனால் மயிரே போச்சு என்று எண்ணும் கோட்டிக்கார பூமேடையாக இருக்கலாம். முடியாதா, அநீதிக்கு தலை வணங்காத கறுத்தான் நாடாராக இருக்க முயற்சிக்கலாம். முடியாதா, அநீதிகளை அலட்சியம் செய்து தன் தொழிலில் நிறைவு காணும் யானை டாக்டராக இருக்கலாம்; பெருவலியைத் தாண்டி பத்திரிகை நடத்தும் கோமலாக இருக்கலாம். நடக்காதா, மாணவர்களே வாழ்க்கை என்று இருக்கும் பேராசிரியராக இருக்கலாம், பலனை எதிர்பாராத கெத்தேல் சாஹிபாக இருக்கலாம், அட ஒன்றும் வேண்டாம், ஏமாற்றக் கூடாது என்று நினைக்கும் ஆச்சியாக இருக்க முடியாதா?

ஆயிரம் தவறு செய்தாலும், எத்தனை வயது ஆகி இருந்தாலும், மேன்மை இன்னும் சாத்தியமே. தளராதீர்கள் என்று இந்தக் கதைகள் எனக்கு சொல்கின்றன. நன்றி, ஜெயமோகன்!

இனி கதைகளைப் பற்றி:
பொதுவாக எல்லா கதைகளிலும் பாத்திரங்கள் மிக நன்றாக படைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கோட்டி கதையின் பூமேடை, அறம் கதையின் ஆச்சி மற்றும் எழுத்தாளர், மத்துறுதயிர் கதையின் பேராசிரியர் மற்றும் குமார், வணங்கான் கதையின் கறுத்தான் நாடார் மற்றும் நேசமணி, யானை டாக்டர் கே, நூறு நாற்காலிகள் கதையின் தர்மா மற்றும் அம்மா ஆகியவை superb!

எல்லாமே படிக்க வேண்டிய கதைகள்தான். என்றாலும் கருத்து, வடிவம் எல்லாமே கச்சிதமாக அமைந்திருப்பது அறம், வணங்கான், யானை டாக்டர் ஆகியவற்றில்தான் என்றே கருதுகிறேன். ஜெயமோகனுக்கும் யானைக்கும் ஏதோ ஒரு ராசி உண்டு. வணங்கான், யானை டாக்டர் இரண்டிலும் உச்சக்கட்டம் யானையோடு நிகழ்வது தற்செயல் இல்லை. 🙂

பூமேடையின் பாத்திரப் படைப்பு, நூறு நாற்காலிகள் தர்மாவின் நாயாடி பின்புலத்தால் அவன் படும் சித்திரவதையின் விவரிப்பு ஆகியவை அவற்றை உயர்த்துகிறது.

Inspiring கதைகள் என்று நான் கருதுவது சோற்றுக்கணக்கு, வணங்கான், யானை டாக்டர், மெல்லிய நூல் ஆகியவை.

சிறப்பான தரிசனம் உள்ளவை என்று நான் கருதுவது மயில்கழுத்து, மெல்லிய நூல், யானை டாக்டர். மயில்கழுத்தில் அழகுக்கான தேடலும், அந்த தேடல் தரும் துயரமும் இல்லாவிட்டால் தான் இல்லை என்று சொல்வது மனித வாழ்க்கையின் சாரத்தையே சுருக்கமாக சொல்கிறது. புதுமைப்பித்தனின் ஒரு கதையில் (கதை பேர் என்ன?) மனிதன் கடவுளை புறக்கணித்து இரும்பை ஊத ஆரம்பிக்கும் ஒரு இடத்தை நினைவுபடுத்தியது. இன்னொரு விதத்தில் மணிக் பந்தோபாத்யாய் எழுதிய ப்ரொகொதிஹாசிக் (Primeval) என்ற கதையை நினைவுபடுத்தியது. மெல்லிய நூல் சமரசங்களைப் பற்றி சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். மிகவும் சிம்பிளான கருத்து, நடைமுறைப்படுத்துவதுதான் உலகமகா கஷ்டமாக இருக்கிறது. யானை டாக்டரில் யானைகள் டாக்டரை உரிமையோடு அணுகக்கூடிய நண்பராக ஏற்கும் உச்சக்கட்டம், எல்லாம் ஒன்றுதான் என்று உணர்த்தும் இடம் மிக அற்புதமானது.

என்னை சிந்திக்க வைத்த கதை ஓலைச்சிலுவை. டாக்டர் சாமர்வெலின் சேவை மகத்தானது. ஆனால் பிணத்தை புதைக்க வேண்டுமென்றால் கூட அதை கிருஸ்துவப் பிணமாக மாற்றித்தான் புதைக்க வேண்டும் என்று நினைப்பதில், இல்லை அப்படி நினைக்கும் லண்டன் மிஷனை ஏற்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. குழந்தைகளோடு சாகப் போகிறவளைக் காப்பாற்ற வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் என்ற நிலையைப் பற்றி அவரிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஒரு superiority complex – காட்டுமிராண்டி கும்பலை கடைத்தேற்ற வந்தவர் என்ற நிலையில்தான் இருக்கிறார் என்று தோன்றியது. அவரது சேவை இந்த அணுகுமுறையை மறைக்கக்கூடாது. அவரும் அவர் காட்டும் ஏசுவும் சோற்றுக்கணக்கு பார்ப்பவர்கள். அவருடைய மனமாற்றம் சுட்டப்படுகிறது (அவர் மெல்ல மெல்ல இந்தியராக மாறிக்கொண்டே இருப்பது), ஆனாலும் அது இன்னும் விவரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சாமர்வெல் என்ற உண்மை மனிதரின் வாழ்க்கையில் அப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தது, அவர் மதமாற்ற முயற்சிகளையே கடைசி வருஷங்களில் நிறுத்தினார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா தெரியாது. அப்படி இல்லை என்றால் ஒரு எழுத்தாளர் இவ்வளவுதான் அவரது மாற்றத்தைப் பற்றி சொல்ல முடியும் என்பதையும் உணர்கிறேன்.

என்னுடைய டாப் மூன்று கதைகள் – வணங்கான், அறம், யானை டாக்டர்

அத்தனை கதைகளிலும் சிறந்த வரி“இல்ல, போன மாசம் பணம் கெட்டி மாத்தியாச்சு. இப்பம் தோட்டியாக்கும்’ (கோட்டி)

என்னை மிகவும் inspire செய்த வரிகள்“சமரசங்களில் வெல்வது நமது பலவீனம். சமரசங்களுக்குப் பிறகு நாம் கோபமும் துவேஷமும் கொண்டவர்களாகிறோம். வன்முறை அவ்வுணர்வுகளின் வெளிப்பாடுதான். பிறர் மீது மட்டுமல்ல, நம் மீதே அவ்வன்முறை திரும்புகிறது.” (மெல்லிய நூல்)

நான் கண்ட குறைகள்:
பத்திரிகைகளுக்கு எழுதுவதில் ஒரு லாபம் உண்டு. யாராவது ப்ரூஃப் பார்ப்பார்கள். இணையத்தில் தானே ராஜா தானே மந்திரி. இதனால் சில பிழைகள் தப்பிவிடுகின்றன. அவை typo-க்களாக இருக்கலாம். (உலகம் யாவையும் கதையில் ஓம் என்பது ஆங்கிலத்தில் ohm என்று எழுதப்பட்டிருக்கிறது) வார்த்தைப் பிழைகளாக இருக்கலாம். (அதே கதையில் “நடராஜகுரு ஆவதற்கான கூட்டுப்பருவத்தில் இருந்தார்.” என்பது “நடராஜகுரு ஆவதற்கான கூட்டுப்புழுப் பருவத்தில் இருந்தார்.” என்று இருக்க வேண்டும். அறம் கதையில் முதலில் செட்டியார் 25000 ரூபாய் தரவேண்டும் என்று எழுதி இருந்தார், அதை ஐம்பதுகளுக்கு பொருத்தமாக மூவாயிரம் என்று திருத்தினார். ஆனால் பியூனின் சம்பளம் நூறு ரூபாய் என்று எழுதி இருந்ததை மாற்ற மறந்துவிட்டார். சில இடங்களில் வட்டார வழக்கு சரியாக இல்லை. (பிராமண வழக்கில் கழுவி-அலம்பி, அத்தை-அம்மா பற்றி நானே அவரிடம் குறை சொன்னேன், அவரும் அதற்கு பதில் சொன்னார். இருந்தாலும் நான் convince ஆகவில்லை. 🙂 ) ஜெயமோகன் எங்கோ பிராமண மொழி அழிந்துகொண்டிருக்கிறது, அதைத்தான் தன் கதைகளில் பிரதிபலித்திருக்கிறேன் என்று விளக்கம் சொன்னார். அவர் ஐம்பதுகளில் அமைத்திருக்கும் தாயார் பாதம், மயில் கழுத்து கதைகளுக்கு அந்த விளக்கம் பொருந்தாது, இன்றைக்கு நடப்பதாக ஒரு கதை எழுதினால்தான் அந்த விளக்கத்தைத் ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்த குறைகள் எல்லாம் ப்ரூஃப் பார்ப்பவர் அளவில் உள்ள குறைகளே. பெரிய விஷயம் இல்லை. nitpicking-தான். இருந்தாலும் இவையும் இருக்கக்கூடாது என்றுதான் விரும்புகிறேன்.

உண்மை, பிரபல மனிதர்களை வைத்து எழுதப்படும் கதைகளில் ஒரு பிரச்சினை உண்டு. பாத்திரத்துக்கும் உண்மை மனிதரை எவ்வளவு தூரம் பிரதிபலிக்க வேண்டும்? எழுத்தாளருக்கு poetic license என்பது எவ்வளவு உண்டு? கோமல் எட்டடி உயரம் என்று எழுத முடியாது. ஆனால் கோமலுக்கு பூண்டு ரசம் உண்மையில் பிடிக்குமோ பிடிக்காதோ, பிடிக்கும் என்று எழுதலாம் என்று நினைக்கிறேன். அதாவது யாராலும் ஆதாரங்களோடு மறுக்க முடியாத மாதிரி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கதை என்று வந்துவிட்டால் அவர்கள் கதாபாத்திரங்களே, உண்மை மனிதர்கள் இல்லை. கோமலுக்கும் ஜெயமோகனுக்கும் நடுவே நெருங்கிய நட்பு இல்லை, ஆனால் ஒரு bond இருந்தது, அதனால் ஜெயமோகனிடம் (மட்டும்) அவர் தன் தரிசனத்தை பகிரிந்துகொண்டார் என்பது நிஜ வாழ்க்கையில் உண்மையாக இருக்கலாம். அந்த bond-ஐ படிப்பவர்கள் யூகத்துக்கு விட்டுவிடக்கூடாது, அதை கதையில் விளக்கியாக வேண்டும். இல்லாவிட்டால் கதையின் நம்பகத்தன்மை குறைவாகத்தான் இருக்கும். என் கருத்தில் இதை ஜெயமோகனே புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டப்படுகிறார். கதையின் நம்பகத்தன்மை குறைவு என்று நான் சொன்னதை ஏறக்குறைய தனது நம்பகத்தன்மை குறைவு, தான் பீலா விடுகிறேன் என்று நான் சொன்னதாக புரிந்துகொண்டு எனக்கு பதில் அளித்திருந்தார்.

பல கதைகளை என்னால் யூகிக்க முடிந்தது. சோற்றுக்கணக்கு கதையில் ராமலக்ஷ்மி என்று வந்ததும் சரி இவன் ராமலக்ஷ்மியைத்தான் மணக்கப் போகிறான் என்று புரிந்துகொள்ள முடிந்தது. தாயார் பாதத்தில் அலம்பி விட்டுக்கொண்டே இருக்கும் பாட்டி என்று படித்ததும் எப்போதோ தாத்தா சாக்கடையில் தள்ளி இருப்பார் என்று யூகிக்க முடிந்தது. யானை டாக்டர் அந்த யானையில் காலிலிருந்து பியர் புட்டியை எடுத்ததும் Androcles and the lion மாதிரி யானை மீண்டும் இவரை சந்தித்து இவரை அடையாளம் கண்டு இவருக்கு உதவி செய்யும் இல்லை கேட்கும் என்று தெரிந்தது. உலகம் யாவையும் கதையில் கொஞ்ச தூரம் போனதும் சரி டேவிஸ் அடுத்த லெவலுக்கு – ஒரே பிரபஞ்சம் – என்று சொல்லப்போவதுதான் தரிசனம் என்று தெரிந்தது. சில சமயம் கதை எப்படிப் போகும் என்று தெரிந்தாலும் (அறம் நிகழ்ச்சியை ஜெயமோகனே நான் உள்ளிட்ட சில நண்பர்களிடம் நேரடியாக சொல்லி இருக்கிறார்; யானை டாக்டர்) கதை இத்தனை powerful ஆக இருந்தால் அது ஒரு பிரச்சினையாக இல்லை. ஆனால் யூகிக்க முடிவது பொதுவாக கதையின் சுவாரசியத்தை குறைத்தது.

மத்துறுதயிர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும் போன்ற கதைகளில் தரிசனம்/உச்சக்கட்டம் கதையின் பில்டப் அளவுக்கு சிறப்பாக இல்லை.

பெருவலியில் கோமல் முதுகுவலியை மீறி பத்திரிகை நடத்தியதும், இமயம் வரை நடந்ததும்தான் என்னை கவர்கின்றன. அவரது தரிசனம் இல்லை. எனக்கு அது அற்புதமான தருணம் என்று தெரிந்தாலும், அது ஒரு மாதிரி theoretical ஆக தெரிவது.

கதைகளின் உண்மை மனிதர்கள்:

 1. அறம்எம்.வி. வெங்கட்ராம் எழுத்தாளர்; கரிச்சான் குஞ்சு, ஜெயமோகன் அவரவர் பேரிலேயே வருகிறார்கள். பழனியப்பா பிரதர்ஸ் புத்தக பதிப்பாளர்கள். சாமிநாதன் யார்?
 2. சோற்றுக்கணக்குகெத்தேல் சாஹிப்
 3. மத்துறு தயிர் – பேராசிரியர்-ஜேசுதாசன்; ராஜம் – ராஜ மார்த்தாண்டன்; குமார்-வேதசகாயகுமார்; டெய்சிபாய் – ஹெப்சிபா ஜேசுதாசன்; பச்சைமால், ஜெயமோகன், சுந்தர ராமசாமி, அ.கா. பெருமாள் அவரவர் பேரில்; , குமாரபிள்ளை யார்?
 4. வணங்கான்மார்ஷல் நேசமணி
 5. தாயார் பாதம் – ராமன்-தி. ஜானகிராமன்; பாலு-சுந்தர ராமசாமி
 6. யானை டாக்டர் – டாக்டர் கிருஷ்ணசாமி கிருஷ்ணமூர்த்தி (திருத்திய தியாகராஜனுக்கு நன்றி!) அவர் பேரிலேயே; கதைசொல்லி யார்?
 7. மயில்கழுத்து – ராமன்-தி. ஜானகிராமன்; பாலு-சுந்தர ராமசாமி; மதுரை சுப்பு ஐயர் – மதுரை மணி ஐயர், சந்திரா-சந்திரலேகா, கிருஷ்ணன் – கிருஷ்ணன் நம்பி cameo
 8. நூறு நாற்காலிகள் – கதைசொல்லி யார்? சுந்தர ராமசாமி, ஜெயமோகன் cameos
 9. ஓலைச்சிலுவை – டாக்டர் சாமர்வெல் அவர் பேரிலேயே. ஜேம்ஸ் யார்?
 10. மெல்லிய நூல் – காந்தி, அய்யன்காளி அவர்கள் பேரிலேயே. சிண்டன், சோகன்ராம் யார்?
 11. பெருவலிகோமல், ஜெயமோகன்
 12. கோட்டிபூமேடை ராமையா. கதைசொல்லி யார்?
 13. உலகம் யாவையும்காரி டேவிஸ், நடராஜகுரு, ஜெயமோகன்

இங்கே நிஜ மனிதர்கள் என்று நான் குறிப்பிட்டிருப்பவர்கள் எல்லாம் என் யூகங்களே. ஜெயமோகனே வெளிப்படையாக சொன்னால்தான் அது செய்தி. இந்த விளக்கம் எல்லாம் தேவை இல்லை, எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் என்று நினைத்திருந்தேன். எதற்கு வம்பு?