உலகின் சிறந்த மூடிய அறை மர்மம் (லாக்ட் ரூம் மிஸ்டரி)

துப்பறியும் கதைகளில் locked room mystery என்பது ஒரு sub-genre. அதாவது இழுத்து தாழ்ப்பாள் போடப்பட்ட அறைக்குள் ஒரு பிணம். பிணத்தைத் தவிர வேறு யாரும் அறையில் கிடையாது. எப்படி மரணம் நடந்தது?

இந்த வகைக் கதைகள் அனேகமாக ஒரு புதிர் மாதிரி இருக்கும். நம்பகத்தன்மை என்பதெல்லாம் பற்றி ரொம்ப யோசிக்கக்கூடாது. Probable இல்லாவிட்டாலும் possible என்று இருந்தால் போதும். பாத்திரப் படைப்பு, கருத்து, தரிசனம், இலக்கியம் என்று தேடுபவர்கள் எல்லாம் இந்தப் பக்கம் வராதீர்கள்.

ஜான் டிக்சன் கார் (John Dickson Carr) இந்த வகை நாவல் எழுதுபவர்களில் தலை சிறந்தவர் என்று கருதப்படுகிறார். அவர் எழுதிய அத்தனை நாவல்களிலும் த்ரீ காஃபின்ஸ் (Three Coffins) மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

கதையின் மர்மங்களை எடுத்துக் கொள்ளுங்களேன்; எங்கோ ஹங்கேரி, ட்ரான்சில்வேனியா பக்கத்திலிருந்து தப்பி ஓடி வந்த அகதி க்ரிமாட். இப்போது லண்டனில் ஒரு இளைஞிக்கு அப்பா. ஓரளவு வசதியாக இருக்கிறார். ஒரு நாள் இரவு நண்பர்களுடன் ஒரு மதுச்சாலையில் (pub) பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே ஒரு மாஜிக் காட்டுபவன் வந்து அவரை மிரட்டுகிறான். க்ரிமாட் அசரவில்லை. ஆனால் நாலைந்து நாளில் க்ரிமாட் தனது தாழ்ப்பாள் போடப்பட்ட அறையில் சுடப்பட்டு இறந்து கொண்டிருக்கிறார். அன்று பனி (snow) பெய்துகொண்டிருக்கிறது. ஜன்னல் வழியாக தப்பித்தால் அங்கே கால் சுவடுகள் இருக்க வேண்டும், எதுவும் இல்லை. சுட்டது க்ரிமாடை மிரட்டிய மாஜிக் நிபுணன் என்று நினைக்கிறார்கள், அந்த மாஜிக் நிபுணன் க்ரிமாடின் சகோதரன் என்றும் யூகிக்கிறார்கள்.

அந்த சகோதரன் க்ரிமாடை சுடப்பட்ட அதே துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான். அவன் இறப்பது ஒரு தெருவின் நடுவில். எங்கும் பனி. போஸ்ட்மார்ட்டம் துப்பாக்கியை ஏறக்குறைய அவன் மீது வைத்து சுட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறது. அவன் தெரு நடுவில் இறக்கும்போது அவனை இரண்டு சாட்சிகள் பார்க்கிறார்கள். அவன் அருகில் யாருமில்லை. பனியில் கால் சுவடுகளும் இல்லை.

டாக்டர் கிடியன் ஃபெல் துப்பறிகிறார். மர்மத்தை கண்டுபிடிக்கிறார். அனேகமாக யாராலும் யூகிக்க முடியாத தீர்வு என்று நினைக்கிறேன். ஆனால் improbable தீர்வுதான்.

கதாபாத்திரங்கள் கொஞ்சம் போர்தான். அதுவும் ஃபெல் உலக மகா போர். மர்மத்துக்காக மட்டும்தான் படிக்க வேண்டும்.

நடுவில் ஃபெல் locked room mysteries பற்றி ஒரு லெக்சர் கொடுக்கிறார். அது ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை.

துப்பறியும் கதை பிரியர்களுக்காக மட்டும்.