கல்கியின் சிறுகதைகள்

சரித்திர நாவல்களை – குறிப்பாக பொன்னியின் செல்வனை – விட்டால் கல்கியின் எழுத்து அப்படி ஒன்றும் பிரமாதமானது இல்லை. அவர் எழுதியதை “பத்திரிகை எழுத்து” என்று சொல்லலாம். சுலபமாக படிக்கலாம், கொஞ்ச நேரத்தில் மறந்தும் போய்விடும். இன்றைக்கு அவைக்கு இருக்கும் முக்கியத்துவம் எல்லாம் ஒரு ஆவண முக்கியத்துவமே.

குறிப்பாக அவரது சிறுகதைகளில் எதுவுமே நினைவு வைத்துக்கொள்ள வேண்டியவை இல்லை. எந்த சீரியசான தமிழ் சிறுகதை தொகுப்பிலும் அவரது சிறுகதைகளை நீங்கள் பார்க்க முடியாது. நல்ல கதை, கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடிய வெகு சில கதைகளையே எழுதி இருக்கிறார். அவரது சிறுகதைகளில் சில சமயம் வடிவ கச்சிதம் காணக் கிடைக்கிறது. சில சமயம் நல்ல ambience-ஐ உருவாக்குகிறார். ஆனால் உங்களை அறையும் கதை என்று நீங்கள் எதையும் பார்க்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் அவருக்கு சில சமயம் form கை வருகிறது, ஆனால் நல்ல content என்பதை உருவாக்க முடிவதில்லை.

மேலும் காப்பி அடித்திருக்கிறார், பிரச்சார நெடி மட்டுமே இருக்கும் கதைகளை எழுதி இருக்கிறார். ஆனால் அந்த காலகட்டத்தில் சுவாரசியமாக இருந்தன, பரவலாக படிக்கப்பட்டன. அந்தக் கால கட்டத்தைப் பற்றி நாம் புரிந்துகொள்ள – குறிப்பாக மத்தியதர, ஓரளவு படித்த, பிராமணச் சூழலைப் பற்றி புரிந்து கொள்ள – உதவும் ஆவணங்கள். அவருக்குப் பின்னால் தேவன், சுஜாதா என்று ஒரு நீண்ட பாரம்பரியமே அவர் போட்ட ரூட்டில் போயிருக்கிறது.

பொதுவாக அவரது குறுநாவல்கள் – மகுடபதி, சோலைமலை இளவரசி, தியாகபூமி, பொய்மான் கரடு போன்றவை – மெலோட்ராமாவாக இருந்தாலும் சிறுகதைகளை விட உயர்ந்த தரத்தில் இருக்கின்றன. படிக்கலாம். ஆனால் அவரது “பத்திரிகை எழுத்தில்” படிக்க வேண்டியவை அவரது கட்டுரைகளே. ஏட்டிக்குப் போட்டி, ஓ மாம்பழமே போன்ற தொகுப்புகள் இன்றும் கிடைக்கின்றன, படிக்கவும் சுவாரசியமானவை.

சமீபத்தில் அவரது பல சிறுகதைகளை படிக்க முடிந்தது. அவற்றைப் பற்றிய என் குறிப்புகள்:

 1. தப்பிலி கப்: இது அவரது சிறந்த கதைகளில் ஒன்று. மிக கச்சிதமாக எழுதப்பட்ட கதை. கிண்டி ரேசில் பணத்தை விடும் ஒரு எழுத்தாளனும் நடிகனும் ரேசின் தீமைகளைப் பற்றி ஒரு நாடகம் உருவாக்குகிறார்கள். பெரிய ஹிட். எப்படி போகும் என்று யூகிக்கலாம்.
 2. மயிலைக் காளை: இதுவும் மிக கச்சிதமாக எழுதப்பட்ட கதை. கதை பூராவும் நகைச்சுவை இழையோடும். கிருஷ்ணக் கோனானும் பூங்கொடியும் ஒருவர் மேல் ஒருவர் ஆசைப்படுகிறார்கள். பூங்கொடி அவள் மாமாவின் பணத்தை திருடிவிட்டாளோ என்று ஒரு சந்தேகம்.
 3. “தவில் கந்தப்பன்” கதைகள்: நாடகக்காரி, தேரழுந்தூர் சிவக்கொழுந்து, வீணை பவானி என்று மூன்று கதைகள். மூன்றும் அந்த காலத்து இசை, நாடகக் கலைஞர்கள் வாழ்க்கையை பின்புலமாக கொண்டவை. சுவாரசியமான கதைகள், ஆனால் சுலபமாக யூகிக்கக் கூடியவை, கொஞ்சம் வளவளா. நாடகக்காரியில் கணவன்-மனைவி நாடகக் கலைஞர்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள். கொஞ்சம் அதிகமான கற்பனை; வீணை பவானியில் ஒரு “தாசி” குலத்துப் பெண், தான் விரும்பியவனுக்கு உண்மையாக இருக்கும் கதை. பின்புலம் இந்த கதைகளை சுவாரசியமாக ஆக்குகிறது.

நான் படித்த வரையில் இவைதான் ஓரளவாவது நினைவு வைத்துக் கொள்ளக்கூடிய கதைகள். மிச்சம் எல்லாம் டைம் பாஸ், வேஸ்ட் என்றுதான் பிரிக்க வேண்டும். செயற்கைத்தனம், பகல் கனவு, நம்பகத்தன்மை இல்லாதது என்று பல குறைகள் தெரியும். இங்கே நான் லிஸ்ட் போட்டிருப்பது அவற்றை மற்றவர்கள் தவிர்க்கலாமே என்ற ஆசையினால்தான்.

 1. தெய்வயானை: சாராயக் கடை குத்தகைக்காரர் ஆசைப்படும் பெண் சாராயம் குடிக்கிறாள் என்று தெரிந்து தொழிலுக்கு முழுக்கு போட்டுவிடுகிறார். டைம் பாஸ்.
 2. அரசூர் பஞ்சாயத்து: எனக்கு இந்த கதை புதுமைப்பித்தனின் “துன்பக் கேணியை” நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் மெலோட்ரமாடிக்கான மதுவிலக்கு பிரச்சாரக் கதைதான், ஆனால் படிக்கலாம்.
 3. கவர்னர் வண்டி: இன்னும் ஒரு மதுவிலக்கு பிரச்சாரக் கதை. டைம் பாஸ்.
 4. தீப்பிடித்த குடிசைகள்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! ஒரு தேர்தல் வேட்பாளர் நடத்தும் ட்ரிக். டைம் பாஸ்.
 5. வஸ்தாத் வேணு: பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கும் போலீஸ்காரனை வீட்டை விட்டு துரத்த வேணு எடுக்கும் முயற்சிகள். டைம் பாஸ்.
 6. என் தெய்வம்: சாம்பமூர்த்தியின் அம்மா கணவன் இறந்தபிறகு ஒரு சிறு குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கிறாள். சாம்பமூர்த்தியின் காதலில் அம்மாவின் “கற்பு” பிரச்சினையாகிறது. நல்ல நடை.
 7. எஜமான விசுவாசம்: விசுவாசமான வாட்ச்மன், வேலையை விட்டு தூக்கிய பிறகும் ஆஃபீஸ் தீ விபத்தில் எரியாமல் காப்பாற்றுகிறான். ஆனால் இன்ஷூரன்சுக்காக தீ வைத்ததே முதலாளிதான். டைம் பாஸ்.
 8. மயில்விழி மான்: டைம் பாஸ் சிறுகதை. எங்கோ ஒரு தீவில் இன்னும் வாழும் சங்க காலத்து தமிழர்கள்
 9. ஜமீந்தார் மகன்: டைம் பாஸ் கதை. பர்மாவிலிருந்து வரும் அகதிகளுக்குள் காதல்
 10. பிரபல நட்சத்திரம்: கணவன் மனைவி பிரிய, மனைவி சினிமா ஸ்டார் ஆகிறாள். டைம் பாஸ்.
 11. ஒற்றை ரோஜா: டைம் பாஸ். தன் கூந்தலில் இருக்கும் ரோஜாவில் ஒரு வைரத்தை வைத்திருக்கும் நாயகி.
 12. இது என்ன சொர்க்கம்: சொர்க்கத்தில் இருக்கும் இரண்டு பேர் பூமியின் காப்பி, டிஃபன், செய்தித்தாளுக்காக ஏங்குகிறார்கள். டைம் பாஸ்.
 13. சினிமாக் கதை: புருஷன் பெண்டாட்டி சண்டை. டைம் பாஸ்.
 14. எங்கள் ஊர் சங்கீதப் போட்டி: இதை விவரிப்பது கஷ்டம். டைம் பாஸ்.
 15. ரங்கதுர்க்கம் ராஜா: வேஸ்ட். ஆள் மாறாட்டம் அப்படி இப்படி என்று போகிறது.
 16. புது ஓவர்சியர்: பிரேம்சந்தின் சால்ட் இன்ஸ்பெக்டர் கதையின் அப்பட்டமான காப்பி. பிரேம்சந்த் நன்றாக எழுதி இருப்பார்.
 17. பாங்கர் விநாயகராவ்: மதுவிலக்கு பிரசார நெடி அடிக்கும் நாடகம்.
 18. கோவிந்தனும் வீரப்பனும்: வேஸ்ட். மது விலக்கு பிரச்சாரக் கதை.
 19. சின்னத் தம்பியும் திருடர்களும்: வேஸ்ட். காக்கா நரி ஸ்டைலில் ஒரு மதுவிலக்கு பிரச்சாரக் கதை.
 20. விதூஷகன் சின்னமுதலி: சின்னமுதலிக்கு மது உள்ளே போகாவிட்டால் கோமாளி வேஷம் போடமுடியாது. இன்னும் ஒரு மதுவிலக்கு பிரச்சாரக் கதை.
 21. சுயநலம்: வேஸ்ட். இன்னும் ஒரு மதுவிலக்கு பிரச்சாரக் கதை.
 22. கைலாசமய்யர் காபரா: ரயிலில் சக பயணி ஒரு கொலை செய்துவிட்டதாக கைலாசமய்யரை பயமுறுத்துகிறான்.
 23. லஞ்சம் வாங்காதவன்: லஞ்சம் வாங்கும் பராங்குசத்தின் கதி.
 24. தூக்குத் தண்டனை: தவறான தீர்ப்பால் தூக்குக்கு போகும் இளைஞன் சாகும் முன்னால் ஜட்ஜை ஆவியாகச் சந்திக்கிறான்.
 25. ரங்கூன் மாப்பிள்ளை: ஒரு யுத்தப் பைத்தியத்தின் கதை.

3 thoughts on “கல்கியின் சிறுகதைகள்

 1. மன்னிக்க வேண்டும். நீங்கள் மிகவும் biased என்றுதான் தோன்றுகிறது. கல்கியின் சிறுகதைகள் இன்றும் பேசப்படுகின்றன. நான் பலருடன் அவரது கதைகளைப் பற்றி ஆவலோடு பேசியது ஞாபகம் இருக்கிறது. நான் அவரது எல்லாக் கதைகளையும் படித்ததில்லை. ஆனால் படித்த வரையில் அவரது சிறுகதைகள் அற்புதமானவை என்றே தோன்றுகிறது.
  கேதாரியின் தாயார் படித்துவிட்டுச் சொல்லுங்கள். என் வரையில் இப்படி சொல்ல வந்ததை சம்மட்டியால் அடித்தது போல், அதே சமயம் சொல்ல வந்ததே தெரியாத படி சொல்பவர்கள் மிக அரிது.

  Like

  1. பிருந்தாபன்,

   என் கண்ணில் இது சுமாரான கதையே. சரளமான நடையே இந்த சிறுகதையின் சிறப்பான விஷயம். இதை விட சிறந்த சிறுகதைகளை கல்கியே எழுதி இருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். வேஸ்ட் இல்லை என்று நிச்சயமாக சொல்லலாம், அவ்வளவுதான். உங்கள் எண்ணம் வேறு என்பதை உணர்கிறேன்.

   ஆனால் கல்கியின் பல சிறுகதைகளுக்கு ஒரு லிங்க் கொடுத்திருக்கிறீர்கள், அதற்கு மிக்க நன்றி!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.