சுஜாதாவின் “காயத்ரி”

(இது ஒரு RV பதிவு)

நினைவிலிருந்து எழுதுகிறேன். இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தாலோ, இல்லை எழுதினாலோ ரொம்ப சந்தோஷப்படுவேன்.

காயத்ரி பற்றி எனக்கு இருக்கும் அழியாத ஞாபகம் ஜெயராஜின் படம்தான். எனக்கு அப்போது பத்து வயது இருக்கலாம். சாதாரணமாக நாங்கள் வாங்காத பத்திரிகை எதிலோ தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. தினமணி கதிர் என்று நினைக்கிறேன். யார் வீட்டிலோ பார்த்தேன். வில்லனின் “அக்கா” மிகவும் ரிலாக்ஸ்ட் ஆக பாவாடை பிராவுடன் உட்கார்ந்து கொண்டு இருக்கும் படம். அப்படியே ஷாக் ஆகி ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்! பிறகு யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேக வேகமாக படித்தேன். அதுவோ தொடர்கதையின் நடுவில் வரும் ஒரு சாப்டர். தலையும் காலும் புரியாவிட்டாலும், “அக்கா” காயத்ரியை மரியாதையாக சொன்னதை கேட்டு நடக்க சொல்லு என்று சொல்வாள். அப்புறம் அந்த பத்திரிகை கிடைக்குமா என்று அலைந்து திரிந்து பார்த்தேன், கிடைக்கவில்லை. கடைசி சாப்டர் மட்டும்தான் படிக்க முடிந்தது. அதில் வசந்த் “நாங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டோம், அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” என்று காயத்ரியிடம் சொல்வது நினைவிருக்கிறது.

நாலைந்து வருஷம் கழித்து புஸ்தகம் கிடைத்தது. யாராவது பார்ப்பார்களோ என்ற பயம் அப்போது போய்விட்டது. ஆனால் என் துரதிர்ஷ்டம், அது கிழித்து பைண்ட் செய்யப்பட்டது அல்ல.

விறுவிறுப்பான கதை – காயத்ரியின் டைரியை ஒரு பழைய பேப்பர் கடையில் வசந்த் பார்ப்பார். காயத்ரியின் புகுந்த வீடு ஒரு மர்ம தேசம். விதவையான “அக்கா”, சமையல்காரன், வேலைக்காரி, கணவன், பைத்தியமான மறைத்து வைக்கப்பட்டிருக்கும் முதல் மனைவி, எல்லாரும் ஏதோ ரகசியத்தை மறைக்கிறார்கள். காயத்ரி ஏறக்குறைய ஒரு ஜெயிலில் இருப்பார். அவரால் வெளியே போகவோ, கடிதம் எழுதவோ முடியாது. கணேஷும் வசந்தும் காயத்ரி எங்கே என்று கண்டுபிடிப்பார்கள். காயத்ரியை வைத்து ப்ளூ ஃபில்ம் எடுக்கிறார்கள் என்று துப்பறிந்து அவரை விடுவிப்பார்கள்.

ப்ளூ ஃபில்ம் என்றால் என்னவென்று தெரியாத வயது. எப்படி விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

திரைப்படமாக வந்தது. ரஜினிகாந்த் ஆண்டி-ஹீரோ. ராஜசுலோசனா “அக்கா” அசோகன் அவரது ட்ரேட் மார்க் ஸ்டைலில் நடிப்பார். ஸ்ரீதேவிதான் காயத்ரி. ஜெய்ஷங்கர் கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி வசந்த்!

விமல் அனுப்பியுள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

சுஜாதாவின் “ஒரு விபத்தின் அனாட்டமி”

(RVக்கு முதுகு வலி எனபதால் கொஞ்சம் தொய்வு அடைந்ததாகத் தெரிகிறது . அவன் மீண்டும் ரெகுலராகும் வரை இது போன்ற ஃபில்லர் போஸ்ட்கள் வரும். இதுவும் RV எழுதியது தான். மீள் பதிவு செய்கிறேன்)

ஒரு நீண்ட கதை. குறுநாவல் என்று சொல்லலாம். கணேஷ் இன்னும் டெல்லியில்தான் இருக்கிறார். கதை அறுபதுகளின் இறுதியிலோ எழுபதுகளின் துவக்கத்திலோ எழுதப்பட்டிருக்கவேண்டும். அவரது அசிஸ்டன்ட் நீரஜா.

ப்ராப்ளம் இதுதான். மூன்று சாலைகள் ஒன்றாக கூடி ஒரு சாலையாக (ஒரு சூலம் மாதிரி) மாறும் இடத்தில் ஒரு ஹிட் அண்ட் ரன் ஆக்சிடென்ட். அதிவேகமாக வந்த கருப்பு மாதிரி ஒரு நிறக் கார் ஒரு ஸ்கூட்டரை ராத்திரி பன்னிரண்டரை மணிக்கு இடித்துவிட்டு பக்கத்தில் உள்ள ஏதோ ஒரு நகருக்கு ஓடிவிட்டது. இடித்தது யாரென்று கண்டுபிடிக்கவேண்டும்.

 1. வேகமாக வந்தது ஒரு பணக்கார இளைஞனாக இருக்க வேண்டும் என்று முதல் ஊகம். இளைஞர்கள்தான் வேகமாக வருவார்கள்.
 2. லைசன்ஸ் இருப்பது சந்தேகமே என்பது இரண்டாவது ஊகம்.
 3. திரும்பாமல் நேராக வந்தால்தான் வேகமாக வர முடியும் என்பதால் சூலத்தின் நடுக்கொம்பிலிருந்துதான் வந்திருக்கவேண்டும் என்பது அடுத்த ஊகம்.
 4. சில பூகோளக் காரணங்களால் நடுக்கொம்பில் மூன்று இடங்கள்தான் பாசிபிள். ஒரு தியேட்டர், ஒரு குடியிருப்பு, ஒரு இன்ஸ்டிட்யூட்.
 • தியேட்டரில் படம் 11:45க்கு முடிகிறது, அதனால் தியேட்டர் இல்லை.
 • குடியிருப்பு ஒரு லோயர் மிடில் க்ளாஸ் குடியிருப்பு, அதனால் அங்கிருந்து வர சாத்தியங்கள் குறைவு.
 • இன்ஸ்டிட்யூட் ஐந்து மணிக்கு மூடிவிடுவார்கள்.

பழைய பேப்பர்களை புரட்டிப் பார்த்து விபத்து அன்றைக்கு இன்ஸ்டிட்யூட்டில் ப்ரிட்ஜ் போட்டி 12:15 வரைக்கும் நடந்திருப்பது தெரிகிறது. பிறகு சாதாரணமான லெக்வொர்க், அவ்வளவுதான்.

கணேஷ் ஒவ்வொரு கட்டத்திலும் சாத்தியங்களை குறைத்துக்கொண்டே போவது நன்றாக இருக்கும்.

சுவாரசியமான கதை.

இந்தக் குறுநாவல் இருக்கும் மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.

சுஜாதா தேர்ந்தெடுத்த பத்து புத்தகங்கள்

பதிவு எழுதி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு நாளைக்கு செய்ய வேண்டியது என்று திட்டம் போட்டு வைத்திருக்கும் காரியங்களை முடித்தால்தான் பதிவு எழுதுவது என்று வைத்திருக்கிறேன். (இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, கொஞ்சம் லீவ் விட்டால் பரவாயில்லை என்று நினைக்கிறேன். 🙂 ) பார்ப்போம், இது எத்தனை நாள் என்று.

சுஜாதா என்ற தாக்கம் நிறைந்த எழுத்தாளர் மறைந்து மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன (ஃபெப்ரவரி 27, 2008). அவர் நினைவில் ஒரு பதிவு.

சுஜாதா தேர்வுகள், என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன். (மார்ச் 26, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து, நன்றி விகடன்!):

 1. புறநானூறு ஏதோ இங்கும் அங்கும் கேட்டதுதான். இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம்.
 2. பைபிள் எனக்கு பழைய ஏற்பாடுதான் பிடித்திருக்கிறது. பழைய ஏற்பாட்டு கடவுளுக்கும் புதிய ஏற்பாட்டு கடவுளுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.
 3. பகவத்கீதை என்றைக்காவது படித்து பார்க்க வேண்டும்.
 4. பாரதியார் கவிதைகள் நிறை குறைகளை சீர் தூக்கி பார்ப்பது எனக்கு முடியாத காரியம்
 5. புதுமைப்பித்தன் கதைகள் புதுமைப்பித்தன் நோபல் பரிசு பெறத் தகுதி உள்ளவர். என்றாவது விலாவாரியாக எழுத வேண்டும். இப்போதைக்கு இந்த பதிவை படித்துக் கொள்ளுங்கள்.
 6. திருக்குறள் இதுவும் ரொம்ப தூரம்தான்.
 7. சிவப்புப் புத்தகம் (மா சே துங்) படித்ததில்லை.
 8. தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) இது படிப்பதிற்கில்லை. இதை தொகுப்பதில் பங்கு பெற்ற மு. ராகவையங்காரைப் பற்றி இங்கே காணலாம்.
 9. நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிரித்து பார்த்திருக்கிறேன். கவிதை என்றால் ஓடும் எனக்கே சில கவிதைகள் பிடித்திருந்தன.
 10. Why I Write? – ஜார்ஜ் ஆர்வெல் கட்டுரைகள் பேரை கிளிக்கினால் கட்டுரையை படிக்கலாம். நல்ல கட்டுரை.

மனிதருக்கு புனைவுகளில் புதுமைப்பித்தன் மட்டும்தான் நினைவு வந்திருக்கிறார். 🙂