Skip to content

நாராய் நாராய் செங்கால் நாராய்

by மேல் ஏப்ரல் 6, 2011

(மீள்பதிவு)

எனக்கு கவிதை அலர்ஜி உண்டு என்றாலும் சில கவிதைகள் பிடிக்கும். எனக்குப் பிடித்த தமிழ் கவிதைகள் என்று ஒரு லிஸ்ட் கூட போட்டிருந்தேன். அதில் விட்டுப் போன ஒரு கவிதை.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

சிறு வயதிலேயே பிடித்துப்போன ஒரு கவிதை இது. பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் என்ற வரிகளில் இருக்கும் அழகான படிமம், நனை சுவர் கூரை கனைபடு பல்லி, கையது கொண்டு மெய்யது பொத்தி ஆகியவை கொண்டு வரும் வறுமையின் காட்சிகள், பாட்டு பூராவும் இழைந்திருக்கும் சோகம், சந்தத்தை மொழி பெயர்க்க முடியாவிட்டாலும் மொழி பெயர்க்கக் கூடிய கருத்து எல்லாமே மிக அற்புதமாக இருக்கிறது.

கவிதையை எழுதியவர் பெயர் தெரியவில்லை. கவிதையில் சத்திமுத்த வாவி என்று ஒரு இடத்தில் வருகிறது, அதனால் எழுதியவரையும் சத்திமுத்தப் புலவர் என்றே குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் கோனார் நோட்ஸ் இல்லாமல் பாட்டு புரிகிறது. நான் மொழியை கருத்துகளை பரிமாறக் கொள்ள உதவும் ஒரு கருவி என்ற அளவில் மட்டுமே பார்ப்பவன். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் முழங்குப்பா, காது ரொய்ங் என்கிறது என்று சொல்லக் கூடியவன். ஆனால் இதைப் படிக்கும்போது நான் தமிழன், இது என் மொழி, பல நூறு வருஷங்களுக்கு முன்னால் சாரமுள்ள இந்த கவிதையை இன்றும் புரியும் வார்த்தைகளில் எழுதியவன் என் பாட்டன் என்று ஒரு பெருமிதம் ஏற்படுகிறது என்று பீற்றிக்கொண்டேன். உடனே இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்ஸ் (பகவதி பெருமாள்) “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” என்று பாட ஆரம்பித்துவிட்டான். அவன் போன்றவர்களுக்காக எழுதிய நோட்ஸ் கீழே.

வரி பொருள்
நாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே
நீயும் நின் பேடையும் தென் திசைக் குமரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின்
வட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட
பாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம்
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய்
கையது கொண்டு மெய்யது பொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும்
ஏழையாளனை கண்டனம் எனமே உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!

இது சங்கக் கவிதையா தனிப் பாட்டா எதுவும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

ஒரு மங்கலான நினைவு -“எங்கள் வாத்தியார்ஏதோ ஒரு திரைப்படத்தில் நாகேஷ் ரிடையர் ஆன ஏழை வாத்தியார்; ஏதோ பெரிய செலவுக்காக பழைய மாணவர்களிடம் பண உதவி கேட்கப் போவார். அப்போது நாராய் நாராய் செங்கால் நாராய் என்று தொடங்கும் ஒரு பாட்டை பாடுவார்.

தகவல் தந்த சாரதாவுக்கு நன்றி! பாடலில் டைப்போவை திருத்திய ஜடாயுவுக்கும் நன்றி!

Advertisements

From → Poetry

23 பின்னூட்டங்கள்
 1. yathee permalink

  I love this poem in my school days.
  Thanks for posting this.

  With Regards,
  yathee

 2. ஆயிரத்திஐநூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்திற்கருகேயுள்ள சத்திமுத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த கவி ஒருவர் மதுரைக்குப் பயணித்திருந்தபோது அங்கு வலசை (migration) போகும் செங்கால் நாரை ஜதை (pair) ஒன்றைக் கவனித்திருக்கின்றார்.

  சத்திமுத்தப் புலவர் எழுதியதாகக் கூறப்படும் கவிதை இந்த நாரையை வர்ணித்து,மனைவியிடம் தூது போகும்படி கேட்டுக் கொள்கின்றது.

 3. வறுமையோடு காதல் கொண்ட பாடல்…

 4. டியர் ஆர்.வி.
  ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற இப்பாடல் எனக்கும் பிடித்த பாடல். மிகவும் எளிமையாகப் புரியக்கூடியது. புற்நானூற்றுத்தொகுப்பில் இடம் பெற்ற பாடல் என்று தமிழாசிரியர் திரு. வேலையா சொன்னதாக நினைவு. எழுதியவர் ‘சத்திமுற்றப்புலவர்’ என்றே குறிப்பிடப்படுவார்.

  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலும் இத்தொகுப்பில் இடம்பெற்றதே. (சிலர் ‘கேளீர்’ என்று கேளுங்கள் என்ற பொருளில் நீட்டிச்சொல்வர். ஆனால் அது ‘கேளிர்’தான். சொந்தக்காரர்கள் எனப்பொருள் தரும்). இதே புறநானூற்றுத்தொகுப்பில் இடம் பெறும் ‘பல்சான்றீரே பல்சான்றீரே’ என்ற பாடலும் ரொம்ப பிரபலம்.

  இப்போது சினிமா: நீங்கள் குறிப்பிட்ட அந்தப்படம் ‘எங்கள் வாத்தியார்’. அதில் ஏழை வாத்தியார் நாகேஷ், தன் மகளின் (கவிதா) திருமணத்துக்காக, தன்னிடம் படித்த பழைய மாணவர்களிடம் உதவிகேட்டுச் செல்வார். பழைய மாணவர்களாக தேங்காய், ஷ்ரீகாந்த், ஜெயமாலினி போன்றோர். ‘சமுத்திர ராஜகுமாரி’ என்ற இனிய பாடல் நினைவிருக்கிறது.

 5. // நீயும் நின் பேடையும் தென் திசைக்கு மரியாடி

  நீயும் உன் பெட்டையும் தென் திசைக்கு சென்ற பிறகு மீண்டும் //

  மரியாடி என்று ஒரு சொல்லே தமிழில் கிடையாது சுவாமி.

  தென்திசைக் குமரியாடி என்று பிரிக்கவேண்டும்… அதாவது தென் திசையில் உள்ள குமரியில் ஆடி (குளித்து).

  கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
  கொங்குதண் குமரித்துறை ஆடிலென்
  ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
  எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே

  என்பது அப்பர் தேவாரம்.

 6. அண்ணாமலை permalink

  அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிவு நன்றாக இருந்தது.

  “நாராய் நாராய் செங்கால் நாராய்
  பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
  பவழக்கூர் வாய் செங்கால் நாராய்
  நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி
  வடதிசைக் கேகுவீராயின்
  எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
  நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
  பாடு பார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
  எங்கோன் மாறன் வழுதி கூடலில்
  வாடையின் மெலிந்து
  கையது கொண்டு மெய்யது பொத்தி
  காலது கொண்டு மேலது தழீஇப்
  பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
  ஏழையாளனைக் கண்டனம் எனுமே.”

  இந்த பாட்டு http://kumarananthan.blogspot.com/2010/07/39.html
  என்ற வலைத்தளத்திலும் வந்திருக்கிறது .
  அதில் “ஆடையின்றி ” என்ற சொல் வரவில்லை .
  எது சரி .தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .(பிழையான பாட்டுக்கு பாண்டிய மன்னனிடம் காசு வாங்கிக்கிட்டு போயிரக்கூடாதில்ல)

 7. ஜடாயு, பிடிச்சிட்டீங்களே! இப்போது திருத்திவிட்டேன்.

  அண்ணாமலை, “ஆடையின்றி” என்று வராவிட்டால் சந்தம் உதைக்கிறது. அதனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

  சாரதா, கலக்கிட்டீங்க போங்க! இந்த பாட்டுக்கு வீடியோ, ஆடியோ ஏதாவது கிடைக்குமா?

  யாத்தீ, கொல்லன், ஸ்ரீனிவாஸ், ரத்னவேல், மறுமொழிக்கு நன்றி!

 8. முதன்முறையாக இப்பாடலை இங்கே படிக்கிறேன்.. நல்லா இருக்கு 🙂 🙂 🙂 மனனம் செய்துவிட்டேன்..
  நாங்கள் படிக்கும் போது இப்பாடல் இல்லை..

  • நாராய் நாராய் பாட்டு உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி, சுபத்ரா!

   • K. Sankaran permalink

    In this “Naaraay Naaraay” poem , not only the poor status of the pulavar ,but ” Birds migration”
    is also narrated. In the peak winter season, the birds [Sengaal Naaai ]are moving from south to north , returning to home. This shows that “Birds migration” is a natural wonder , even from
    Puranaanuru days.

 9. This was written by Satthi Muttrathu pulavar. He hails from Satthi Muttram which is a small village outside Kumbhakonam.

  • UK, சத்திமுத்தப் புலவர் பற்றிய விவரங்களுக்கு நன்றி!

 10. a.s. murali permalink

  idai pondra matroru paadal pisarandaiyar ezhudiyullar, anna cheval anna cheval endru kopperunchozhanukkaga paadappatta paadal adhu

  • முரளி, ஆம் அன்னச்சேவல் அன்னசேவலும் நல்ல பாட்டுதான்.

 11. Chella permalink

  en palli kaalangalil padithathu.. neenda naatkal kazhithu padithathil mikka mahizhchi.. Nanri

  • செல்லா, “நாராய் நாராய்” பாட்டின் இன்னொரு ரசிகரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!

 12. srinivasagopalan permalink

  தங்கள் உரையில் ‘ஆடையின்றி வாடையில் மெலிந்து’ என்ற அடி விடுபட்டுள்ளதை கவனிக்கவும்.

  • ஸ்ரீனிவாச கோபாலன், நன்றி இப்போது திருத்திவிட்டேன்.

 13. Sesh permalink

  Very happy to get the full poem forgotten by me in the past 5 decades plus. Thank you so much.

  • Sesh, “நாராய் நாராய்” பாட்டின் இன்னொரு ரசிகரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!

Trackbacks & Pingbacks

 1. செல்லம்மா பாரதியின் வானொலிப் பேச்சுகள்+ஒரு முன்னுரை « இசையினி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: