ரொவால்ட் டாலின் சிறுவர் புனைவுகள்

மூன்றாவதோ நான்காவதோ வகுப்பில் என் பெண்ணுக்கு BFG என்ற ஒரு புத்தகத்தை படித்து அதைப் பற்றி ஒரு ரிப்போர்ட் எழுதவேண்டும். அதற்கு முன்னால் ரொவால்ட் டாலின் சில கதைகளைப் படித்திருந்தாலும் குழந்தைகளுக்காக நிறைய எழுதுவார் என்று தெரியாமல் போய்விட்டது. BFG ஒரு கிளாசிக், பெரியவர்களுக்கே பிடிக்கும். எட்டு ஒன்பது வயதில் சொல்லவே வேண்டாம்.

சாகி (Saki), ரொவால்ட் டால் (Roald Dahl) குசும்பு நிறைந்த எழுத்தின் சிறந்த பிரதிநிதிகள். டாலின் எழுத்துகளில் எவனாவது மாட்டிக் கொள்வான். திட்டம் போட்டு கவிழ்க்கப் பார்ப்பவன் தானே கவிழ்வான். Underdogs ஜெயிப்பார்கள். அதுவும் டால் சிறுவர்களுக்காக எழுதிய புத்தகங்கள் அபாரமானவை. படிப்பதற்கே ஜாலியாக இருக்கும். தமிழில் இந்த மாதிரி யாருமே எழுதுவதில்லை என்று எனக்கு பெரிய மனக்குறை உண்டு.

Fantastic Mr. Fox, 1970: ஒரு ஏழு எட்டு வயதில் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். மிஸ்டர் நரி மூன்று பெரும் பண்ணையார்களின் கோழி, வான்கோழி எல்லாவற்றையும் தினமும் திருடி தன் குடும்பத்துக்கு விருந்து வைப்பவர். ஒரு நாள் பண்ணையார்கள் மிகவும் கடுப்பாகி இவர் இருக்கும் போனதை உடைத்து இவரை வெளியே தள்ளி இவரை கொல்லப் பார்க்கிறார்கள். பெரிய பெரிய புல்டோசர்களைக் கொண்டு வந்து இவர் போனதை உடைக்கிறார்கள். அப்புறம்? உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், இந்த கதையை படித்துக் காட்டுங்கள், இல்லாவிட்டால் அவர்களை படிக்க வையுங்கள். சமீபத்தில் திரைப்படமாகவும் வந்தது.

Enormous Crocodile, 1978 படிக்கும்போதே யாராவது குழந்தையைப் பிடித்து கதையை சொல்ல வேண்டும் என்று நினைக்க வைத்த புத்தகம். 🙂 கதை கிதை என்றெல்லாம் ஒன்றுமில்லை, ஆனால் படிக்கும்போதும் கேட்கும்போதும் ஜாலியாக இருக்கும்! க்வெண்டின் ப்ளேக் (Quentin Blake) வரைந்த படங்கள் அந்த ஜாலி உணர்வை இன்னும் கூட்டுகின்றன.

Matilda, 1988: Superb! ஒரு புத்திசாலி சிறு பெண்ணுக்கு சில அமானுஷ்ய சக்திகள் ஏற்படுகின்றன. குடும்பத்தினர், கொடுமைக்கார ஸ்கூல் டீச்சர் எல்லாரையும் எப்படி சமாளிக்கிறாள் என்று கதை. கட்டாயம் படியுங்கள், குழந்தைகளை படிக்க வையுங்கள்.
ஒரு நல்ல நாவல் திரைப்படமாக்கும்போது வெகு அபூர்வமாகவே திரைப்படம் நாவலின் தரத்துக்காவது வருகிறது என்பது என் அனுபவம். ஆனால் மடில்டா திரைப்படம் புத்தகத்தை விடவே ஒரு படி மேல்! கட்டாயம் பாருங்கள்! டானி டி விடோ (Danny de Vito) பிரமாதமாக இயக்கி இருக்கிறார்.

BFG, 1982: அந்த Big Friendly Giant பேசும் விதம் ஒன்றே போதும் இந்த புத்தகத்தைப் படிக்க. அதற்கு மேல் ஃப்ராப்ஸ்காட்டில் என்று ஒரு பானம். சோடா கீடா எல்லாவற்றிலும் குமிழ்கள் மேலே போகும், நமக்கு ஏப்பம் வருகிறது. இந்த அபூர்வ பானத்தில் குமிழ்கள் கீழே போகின்றன, என்ன ஆகும்! பெரிய சத்தத்தோடு whizpopperகள்தான்!
இந்த புத்தகம் பிடிக்காத ஏழெட்டு வயதினரை நான் இன்னும் பார்க்கவில்லை. திரைப்படமாகவும் வந்தது.

James and the Giant Peach, 1961: புகழ் பெற்ற இன்னொரு புத்தகம், ஆனால் நான் அவ்வளவாக ரசிக்கவில்லை. குழந்தைகளுக்கு பிடிக்கலாம். திரைப்படமாகவும் வந்தது.

Charlie and the Chocolate Factory, 1964: இன்னொரு புகழ் பெற்ற புத்தகம். சின்ன வயதில் படித்திருந்தால் இன்னும் ரசித்திருப்பேன். திரைப்படமாகவும் வந்தது.

George’s Marvellous Medicine இன்னொரு அருமையான கதை. ஜார்ஜ் தன் நச்சரிப்பு பாட்டிக்காக ஒரு புது மருந்தைத் தயாரிக்கிறான். மருந்தில் சேர்ப்பவை: ஷூ பாலிஷ், பெயின்ட், ஷாம்பூ, சோப், எஞ்சின் ஆயில் இத்யாதி. என்ன ஆகிறது?
மின்னூல் கிடைக்கிறது.

Esio Trot இன்னொரு சிம்பிளான குழந்தைக் கதை. ஆமை வளர்க்கும் பெண்ணை சைட்டடிக்கும் மாமாவின் தந்திரங்கள்.

டால் பெரியவர்களுக்காக எழுதியவை எல்லாம் வணிக எழுத்துதான். சாகி எழுதுவதைப் போல அடிநாதமாக ஒரு தீசத்தனம் தெரியும். எனக்குப் பிடித்த சிறுகதைகள் – Mrs. Bixby and the Colonel’s Coat, Parson’s Pleasure, Way Up to Heaven.
உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் டாலின் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள், சினிமாவாக வரும்போது அழைத்துக் கொண்டு போங்கள்!