சுஜாதாவின் குறுநாவல் (கணேஷ்-வசந்த்) – “மலை மாளிகை”

சில சமயம் சுஜாதாவுக்கு ஒரு கான்செப்ட்-ஐ தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோன்றும். அதை வைத்து சின்னதாக ஒரு கதை எழுதுவார். இருதய மாற்று சிகிச்சையை வைத்து “உள்ளம் துறந்தவன்” என்று ஒரு நாவல், muscular dystrophy உள்ள ஒரு சிறுவன் பற்றிய ஆஸ்டின் இல்லம் என்று ஒரு சின்ன நாவல் (அப்பாவின் ஆஸ்டினா? திருத்திய இனியாவுக்கு நன்றி!) என்று சில நினைவு வருகின்றன. இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். Gerontology, Longevity, கூடுவிட்டு கூடு பாய்வது என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு கணேஷ் வசந்த் கதை எழுதி இருக்கிறார்.

சிம்பிளான கதை. கொடைக்கானல். வயதான, longevity பற்றி ஆராயும் செல்வந்தர் செல்வரங்கம். அவருக்கு ஒரு அழகான பெண் அசிஸ்டன்ட் – காஞ்சனா. (பின்னே வசந்த் யாரை சைட் அடிப்பது?) செல்வரங்கம் கணேஷையும் வசனத்தையும் கொடைக்கானலுக்கு அழைக்கிறார். போகிற வழியில் காஞ்சனாவைப் பார்க்கிறார்கள். காஞ்சனா நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் விநோதமாக இருக்கிறது. செல்வரங்கத்தின் வீட்டில் ஆமைகள் (ஆமைகள் நீண்ட நாள் உயிர் வாழும்), மூலிகைகள் என்று என்னவெல்லாமோ தட்டுப்படுகிறது. காஞ்சனாவையும் பார்க்கிறார்கள். உள்ளே போனால் செல்வரங்கத்தின் உயிரற்ற உடல். போலீசுக்கு ஃபோன் செய்கிறார்கள். ஆனால் செல்வரங்கம் உயிரோடுதான் இருக்கிறார். குழப்பம். பிறகு செல்வரங்கம் தான் உயிர் என்றால் என்ன, உயிரை ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு மாற்றுவது எப்படி என்றெல்லாம் கண்டுபிடித்துவிட்டேன் என்கிறார். காஞ்சனாவின் உடலுக்குள் தன் உயிரை செலுத்துவது போல ஒரு காட்சி. காஞ்சனா பேசுவதே இல்லை. என்ன மர்மம்? படித்துக் கொள்ளுங்கள்.

ஒரு quote:
கணேஷ் வசந்தை கேட்கிறார்: “காதல்னா உன் அகராதியின் என்ன அர்த்தம்?”
வசந்த்: “அது வந்து, ஒரு மாதிரி சிலுத்துக்கும் பாஸ். மூக்கு நுனில சில்லுன்னும் காத்து நுனில வெப்பமாகவும் இருக்கும். அப்புறம் இருப்புக் கொள்ளாது. எதையாவது எதாலயாவது பண்ணிக்கிட்டே இருக்கணும் போல… உங்களுக்குப் புரியாது பாஸ்!”

பெரிதாக முடிச்சு போட்டுவிட்டார். அதை எப்படி அவிழ்ப்பது? என்னவோ எழுதி முடித்திருக்கிறார். கதை பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எனக்கு தேறவில்லை. கணேஷ் வசந்த்தின் தீவிர ரசிகர்களுக்காக மட்டும்.

கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது. விலை 30 ரூபாய்.