தி.ஜா. பற்றி சொல்வனம் சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறது என்றதும் தி.ஜா. பற்றி எழுதலாமே என்று எனக்கும் தோன்றியது. ஆனால் நண்பர் பாலாஜி சமீபத்தில் இப்போதெல்லாம் தி.ஜா.வை படிக்க முடியவில்லை என்று சொல்லி இருந்தார், மோகமுள்ளையும் அம்மா வந்தாளையுமாவது மீண்டும் படித்துவிட்டுத்தான் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். சாரதாவின் பதிவையாவது மீள்பதிவு செய்கிறேன்.
எங்கள் சினிமா ப்ளாக் அவார்டா கொடுக்கறாங்க தளத்தைப் படிப்பவர்களுக்கு சாரதா பற்றிய அறிமுகம் தேவை இல்லை. அவருடைய சில சினிமா விமர்சனங்களை அவார்டா கொடுக்கறாங்க தளத்தில் பதிப்பித்திருக்கிறேன். தி. ஜானகிராமன் மற்றும் சிட்டி இணைந்து எழுதிய travelogue – பயண நூல் – “நடந்தாய் வாழி காவேரி” தமிழில் எழுதப்பட்ட பயண அனுபவங்களிலேயே மிகச் சிறந்தது எனக் குறிப்பிடப்படும் புத்தகம். தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரைக்கும் காவிரிக் கரையோரமாக பயணம் செய்து எழுத்தாளர்கள் சிட்டியும் தி.ஜாவும் எழுதியிருக்கிறார்கள். வாசகர் வட்டம் பதிப்பித்த புத்தகம். இப்போது காலச்சுவடு மறுபதிப்பு செய்திருக்கிறதாம். ஓவர் டு சாரதா!
சென்னை தி.நகர் ‘வாசகர் வட்டம்’ குழுமத்தைச் சேர்ந்த திருவாளர்கள் சிட்டி, மற்றும் தி.ஜானகிராமன் இணைந்து எழுதிய இது போன்ற அற்புத நூலுக்கு மதிப்புரை எழுதும் தகுதியெல்லாம் எனக்கு வந்துவிடவில்லையாதலால், இதை மதிப்புரை எனக் கொள்ள வேண்டாம். நூலைப் படித்து வியந்த (வியக்கும்) ஒரு வாசகி/ரசிகையின் எண்ணத்தில் உருவான சில வரிகள் எனக் கொள்ளலாம். இந்நூல் என்னை வந்தடைந்ததே ஒரு சுவையான கதையென்றாலும், அதை பின்னூட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நேரடியாக உள்ளே.
முன்பு வெளிநாட்டு பயணக் கட்டுரைகள் என்றாலே விரும்பிப் படிக்கும் ஆர்வம் கொண்ட எனக்கு சிறிது காலத்திலேயே அவை கிட்டத்தட்ட ஒரே நோக்கில் (தமிழில்: ஸ்டீரியோடைப்) பயணித்து சலிப்பைத் தருகின்றனவோ என்று தோன்றத் துவங்கிவிட்டது. பிரம்மாண்டமான விமான நிலையங்கள், உயரமான கட்டிடங்கள், கட்டுரையாளர் உணவகங்களில் சைவம் கிடைக்காமல் அவதிப்பட்டது, அங்குள்ள தமிழ்க் குடும்பங்களின் ஆதரவு, உபசாரம் மற்றும் உதவிகள், அவற்றுக்கு நன்றிக்கடனாக அவர்களைப் பற்றி சில வரிகள் அல்லது சில பக்கங்கள் (உதவியின் அளவைப் பொறுத்து), இப்படியாக சலிப்பைத் தந்த வேளையில், தமிழ்நாட்டுக்குள்ளேயே (மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில்) பயணித்து எழுதப்பட்ட, வழக்கமான வரைமுறைகளை மீறி, சரியாகச்சொன்னால் அவற்றுக்கு அப்பாற்பட்டு, கையில் எடுத்தால் கீழே வைக்க மனமில்லாத அளவுக்கு ஒரு தேர்ந்த நாவலையும் தோற்கடிக்கும் சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ எனும் இந்நூலின் துவக்கமே அருமை.
சில இடங்களின் வர்ணனைகள் நூல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை சார்ந்தது, இப்போது மாறியிருக்கலாம். ‘மாயவரத்தின் பிரதான சாலையிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் ஒரு மண் சாலையில் ஒரு கைகாட்டி ‘காவேரிப்பட்டினம்’ என்று காட்டிக் கொண்டிருக்க அது சோழர்களின் துறைமுகமான ‘காவிரி புகும் பட்டினம்’ செல்லும் சாலையெனத் தெரிகிறது. ஒரு காலத்தில் துறைமுகத்திலிருந்து தலைநகர் உறையூர் செல்ல அமைக்கப்பட்ட நேர் சாலை இப்போது மணல் சாலையாக, இரு பக்கமும் கருவேல மரங்கள் தோரணம் கட்டி நிற்க, சிள்வண்டுகளை இரைய விட்டிருக்கிறது’ என்ற துவக்கமே நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. காவிரியை, தலை முதல் கால் வரை நேரில் கண்டு ரசிக்கும் ஒரு பயணம் மேற்கொண்டால் என்ன என்று தோன்றியதாகச் சொல்லும் நூலாசிரியர்கள், ‘செயற்கைக் கோள்கள் சந்திரனையும் சுக்கிரனையும் வலம் வந்துகொண்டிருக்கும் இந்த விஞ்ஞான யுகத்தில் இதென்ன விபரீத எண்ணம்?’ என்று தோன்றியதையும் ஒப்புக் கொள்கிறார்கள். சென்னையிலிருந்து தனி வாகனத்தில் நண்பர்கள் சிலருடன் புறப்படும் அவர்கள் நேராகச் செல்வது சீரங்கப்பட்டணத்துக்கு. அதிலிருந்து காவிரிக் கரையூடாகவே செல்லும் அவர்கள் குடகு மலையை அடைந்து, மெர்க்காராவில் தலைக் காவிரியிலிருந்து, பயணித்து வருவதாக சம்பவம்.
ஆனால் அதை அவர்கள் வரி வரியாக விளக்கும் முறையில், நாம் நூலைப் படிப்பதாகத் தெரியாது. அந்த வாகனத்தின் முன்வரிசையில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டே வருவதான உணர்வு நம்மை ஆட்கொள்ளும். அங்கங்கே வரம்பு மீறாத இயல்பான நகைச்சுவை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும். தலைக்காவிரியை நோக்கிப் போகும்போது, ‘சித்தாப்பூர் என்னும் ஊரில் வர்ணா பாம்புகள் அதிகம்’ என்று ஒரு புத்தகத்தில் படித்துவிட்டு பயந்துகொண்டே அந்த ஊருக்குள் நுழைய, வர்ணாவும் இல்லை பாம்பும் இல்லை. வர்ணம் அடித்த வீடுகளும் கடைகளும் தென்பட, காருக்கு தீனி வாங்கும் இடத்தில் அங்கிருந்தவனிடம் வர்ணா பாம்பு எங்கே என்று கேட்க, அவன் பேந்த பேந்த விழித்துவிட்டு, தான் பிறந்ததிலிருந்து ஒரு பாம்பைக் கூட அங்கு பார்த்ததில்லை என்றும், பாம்பாட்டியின் கூடையில்தான் பார்த்திருப்பதாகவும் விளக்கும் இடம் ஒரு உதாரணம். அதைப் படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். மெர்க்காராவில் மேகமூட்டங்களுக்கு மத்தியில் நுழைந்து பயணம் செய்யும்போதும், திடீரென பிடித்துக் கொள்ளும் மழையில் நனைந்து கொண்டே பொருட்களை இறக்கும்போதும், நாமும் நனைகிறோம். ஆடுதாண்டு காவிரியைக் காணும்போதும், பண்ணேர்கட்டா பண்னையில் தங்கும்போதும் அப்படியே. ஒகேனக்கலில் ஒரு மன்னார்குடி மாமியின் குடிசை உணவகத்தில் மிளகாய் வத்தல் குழம்பு சாப்பிடும்போதும் நாமும் அதை அனுபவிக்கிறோம். நூலாசிரியர்களின் எழுத்து வன்மை அத்தகையது. அவற்றின் சுவையை பாமரத்தியான எனக்கு சொல்லத் தெரியவில்லை. காவிரித் தாயின் இதயமான மேட்டூர் அணை பற்றி மட்டுமல்ல, அங்கங்கே உள்ள தடுப்பணைகள் பற்றியும் கூட சுவையான தகவல்கள். வழியில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடிலில் பெறும் சுவையான அனுபவங்கள். எதைச் சொல்வது, எதை விடுவது. காவிரியோடு கொள்ளிடம் கண்ட அனுபவங்களைச் சொல்லும்போது, அருகே அமைந்துள்ள கங்கைகண்ட சோழபுரத்துக்கும் ஒரு கிளைப்பயணம் (‘விஸிட்’ என்று சொன்னால் சட்டென விளங்கும் அளவுக்கு ஆங்கிலம் நம் மீது அமர்ந்துவிட்டது). அந்த அத்தியாயம் துவங்குவதே ஒரு அழகு.
‘தொலைவில் நரைநிறத்தில் கோபுரம் தெரியும்போதே மனம் நெகிழத் துவங்கிவிடும். அங்கே செல்லும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் அனுபவம். ராஜேந்திர சோழன் ஏன் இதைக் கட்டினான்? தஞ்சையில் ராஜராஜேச்சுரத்தை தந்த தந்தையை மிஞ்சவா? அப்படியானால் அபாரமாகத் திட்டமிட்ட கோபுரத்தை ஏன் பாதியில் மழித்துக் குட்டையாக்கினான்? எந்த தோல்வி, அல்லது உணர்வு அவனைத் தடுத்தது? வளமான காவிரிக்கரையை விட்டு வறண்ட இப்பகுதியில் ஏன் இதைக் கட்டினான்? இப்பகுதி மக்களுக்கும் ஒரு அக வாழ்வைத் தரவா?’ இப்படி நீண்டு செல்லும் நூலாசிரியர்களின் விளக்கம், பின்னர் கொள்ளிடத்தில் மேலணை கீழணை கட்ட கற்களூக்காக பிரிட்டிஷ் அரசாங்கம், இக்கோயிலின் ராஜ மதிலைத் தகர்த்து கருங்கற்களை எடுத்துச் சென்ற சோகத்தைச் சொல்லும்போது நம் மனமும் அழும். (இன்றைக்கும் ராஜ மதிலின்றி, திறந்த கோயிலாகத்தான் நிற்கிறது கங்கை கொண்ட சோழீச்சுரம்).
கல்லணையில் துவங்கி பிரியத் துவங்கிய காவிரியின் கிளையாறுகள், தண்ணீரைப் பிரித்து எடுத்துச்செல்ல, கும்பகோணம் வரும்போதே காவிரி சிறுத்துவிடுகிறது. எனவே, கும்பகோணத்துக்கு கிழக்கே வீரசோழன் கிளைக்கும்போது, ‘காவிரி தந்து, தந்து மெலிந்துகொண்டே போவதைப் பார்க்கும்போது நம் மனதில் சோகம் தலை தூக்குகிறது’ என்று நூலாசிரியர்கள் எழுதும்போது நம் மனதையும் அந்த உணர்வு அழுத்துகிறது. காவிரிக் கரையில் வளர்ந்த கலாச்சாரம்தான் எத்தகையது, பண்பாடுதான் எவ்வளவு உன்னதமானது! குழாயிலும்தான் தண்ணீர் வருகிறது. அதுவே ஆற்றில் ஓடும்போது இப்படியா பாட்டாகக் கேட்கும், இசையாக மலரும், பண்பாடாக வளரும், கோயிலாக உயரும்!
ஆயிரம் தடுப்புக்களில் இன்று காவிரி சிறைப்பட்டிருக்கலாம். ஆனால் அன்றைக்கு கல்லணை கூட கட்டப்படாத நிலையில் கரை புரண்டு ஓடிய காவிரியைப் பார்த்து இளங்கோவடிகள் ஆர்ப்பரித்தது போல இந்நூலைப் படித்த பின் நமக்கும் ஆர்ப்பரிக்கத் தோன்றுகிறது.
‘காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும்’
“நடந்தாய் வாழி காவேரி” புத்தகத்தை சாரதா வாங்கிய அனுபவமும் சுவையாக இருக்கிறது. வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் நேராக வாங்கி இருக்கிறார்.
தொடர்புடைய பதிவுகள்:
சிட்டியின் ப்ளாக் – அவர் மறைவதற்கு ஒரு ஆறேழு மாதம் முன்னால்தான் எழுத ஆரம்பித்திருக்கிறார்.
சிட்டியைப் பற்றி ஹிந்து நாளிதழில்
சாரதா இந்தப் புத்தகத்தை லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து நேரடியாக வாங்கினார்