கணையாழி கஸ்தூரிரங்கன் மறைவு

கஸ்தூரிரங்கன் மறைந்தார் என்பது வருத்தமாக இருந்தது. இத்தனைக்கும் எனக்கும் கணையாழிக்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது.

நான் கிராமங்களில் வளர்ந்தவன். வீட்டில் குமுதம் விகடன் புழங்கும். கல்கி, கலைமகள், துக்ளக் பற்றி பிரக்ஞை இருந்தது. உள்ளூர் நூலகத்தில் மஞ்சரி, கலைக்கதிர் (தமிழில் எனக்குத் தெரிந்து வந்த ஒரே ஒரு விஞ்ஞானப் பத்திரிகை) , செங்கோல் (இதுதான் ம.பொ.சி. நடத்திய பத்திரிகை என்று நினைக்கிறேன்), திட்டம் என்றெல்லாம் பத்திரிகைகளைப் பார்த்திருக்கிறேன். என் உறவினர் ஒருவர் தீபம் பத்திரிகையை அச்சடித்தாரோ என்னவோ, அதனால் அந்தப் பத்திரிகையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கணையாழி? அதைப் பற்றி கேள்விப்படும்போது எனக்கு இருபது வயது இருக்கலாம். அப்போது பத்திரிகையே நின்று போய்விட்டது என்று நினைக்கிறேன்.

ஆனால் கணையாழி ஒரு பெரும் இயக்கம். விடுதலைக்கு முற்பட்ட ஒரு தலைமுறைக்கு மணிக்கொடி என்றால் இரண்டு மூன்று தலைமுறைக்கு கணையாழிதான். சரஸ்வதி, எழுத்து, தாமரை என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இந்த இரண்டு பத்திரிகைகளின் தாக்கம் வேறு எதற்கும் இருந்ததாகத் தெரியவில்லை. இவை இரண்டும் இல்லாவிட்டால் வணிக எழுத்து நல்ல இலக்கியத்தை விழுங்கி இருக்கும்.

என்னிடம் கணையாழி தொகுப்புகள் என்று இரண்டு வால்யூம்கள் இருக்கின்றன. அவற்றைப் புரட்டிப் பார்த்தபோது முன்னுரையில் கஸ்தூரிரங்கன் எந்தக் காலத்திலும் கணையாழியின் விற்பனை மூவாயிரத்தைத் தாண்டியதில்லை என்று குறிப்பிடுகிறார். ஆயிரம்தான் சராசரி விற்பனை போலத் தெரிகிறது. மிஞ்சிப் மிஞ்சிப் போனால் ஒரு பத்தாயிரம் பேர் ரெகுலராக படித்திருப்பார்களா? இத்தனை குறைவான விற்பனை உள்ள ஒரு பத்திரிகை எப்படி இவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கியது? என் கண்ணில் அதுதான் கஸ்தூரிரங்கனின் சாதனை.

மணிக்கொடி, வாசகர் வட்டம், கணையாழி, சுபமங்களா போன்றவற்றை நான் நல்ல எழுத்துகளை விரும்பும் லட்சியவாதிகளின் சாதனைகள் என்று கருதுகிறேன். கஸ்தூரிரங்கனுக்கு என் மனமார்ந்த நன்றி!