கணையாழியின் கதை – கஸ்தூரிரங்கன்

கணையாழி தொகுப்பு என்று இரண்டு வால்யூம்கள் என்னிடம் இருக்கின்றன. கஸ்தூரிரங்கன் எழுதிய முன்னுரையில் அவர் கணையாழியை எப்படி ஆரம்பித்தார் என்று விவரிக்கிறார். ஓவர் டு கஸ்தூரிரங்கன்!

புது தில்லி. பொழுது போகாத ஒரு மாலை வேளையில் நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது. இது போன்ற விபரீத ஆசைகள் அவ்வப்போது தோன்றுவது உண்டு. சினிமா எடுக்க வேண்டும்; நாடகம் நடத்த வேண்டும்; மிருந்தங்க வித்வானாக வேண்டும்; மானசரோவர் யாத்திரை போய் வர வேண்டும். சமுதாயத்தை சீர்திருத்த ஒரு இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டு அதை அப்படியே கைவிட்டு விடுவது வழக்கம்.

பத்திரிகை ஆரம்பிப்பது ஒரு செயல்படுத்தக் கூடிய திட்டமாகத் தோன்றியது. அன்றைய விலைவாசியில் ஐநூறு ரூபாய் இருந்தால் 32 பக்கங்களுக்கு ஆயிரம் பிரதிகள் அச்சடித்து விடலாம். ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய் என்று ஒரு ஆயிரம் பேரைப் பிடித்து விடலாம். மேலும் ஐநூறு முதல் ஐயாயிரம் பிரதி வரை ஏஜெண்டுகள் மூலம் விற்று விட பத்தாயிரம், ஐம்பதாயிரம் என்று பெருகி ஐந்து லட்சம் வர கூட எட்டி விடலாம். இதெல்லாம் என்னுடைய அல்நாஷர் கனவு. பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்னார் ரங்கராஜன். தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார்.

தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பத்திரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. அப்போது கலைமகள் தரமான இலக்கிய இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. தி. ஜானகிராமன், லா.ச.ரா., அகிலன் மற்றும் பிறமொழிக் கதைகள் என்று நன்றாக வந்து கொண்டிருந்தது. ‘கலைமகள்’ போல் ஒரு தமிழ் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து ‘கணையாழி‘ என்ற பெயரை வைத்தேன். அதை முறைப்படி பதிவு செய்து முதல் இதழுக்காக விஷயங்களைச் சேகரித்தேன். பாதி நானே எழுதியது. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பேரில் ரங்கராஜன் ஒரு பக்கம் எழுதித் தந்தார். பிற்காலத்தில் அவர் சுஜாதா என்று பிரபலமானார்.

தில்லிக்கு அப்போது வந்திருந்த ஜெயகாந்தனுடன் ஒரு பேட்டி, கலைமகளில் அரசியல் கட்டுரைகள் எழுதி வந்த கே. ஸ்ரீனிவாசன் கட்டுரை, ஓரிரண்டு கதைகள் என்று நாற்பது பக்கத்திற்கு விஷயங்கள் தயாராகி விட்டன. சினிமா, நாடகம் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், ந. பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி ச.து. நளினியின் ஒரு அலசல் என்றெல்லாம் இருந்தன.

தில்லியில் அப்போது தமிழ் அச்சகம் இல்லை. அதனால் சென்னைக்குச் சென்று ஒரு மாதம் தங்கி அச்ச்சகமே கதி என்று உட்கார்ந்தேன். ஆனால் ஒரு மாதத்திற்குள் வேலை முடியவில்லை. என்னுடைய அலுவலகத்தில் அதற்கு மேல் விடுப்பு கிடையாது என்ற எச்சரிக்கையுடன்தான் புறப்பட்டேன். நான் அப்பொழுது அமெரிக்கப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ தில்லி அலுவலகத்தில் ஒரு அமெரிக்கருக்கு உதவி நிருபராக இருந்தேன்.

டெம்மி சைசில் நாற்பது பக்கம் என்று திட்டமிட்டிருந்தது. ஆனால் இருபத்திநாலு பக்கங்கள்தான் அச்சடிக்க முடிந்தது. இரண்டாயிரம் பிரதிகள். பைண்ட் செய்து தில்லிக்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டு என் உறவினர் ஒருவரை அதற்குப் பொறுப்பாக்கி திரும்பி விட்டேன். பிரதிகள் வந்து சேர மேலும் இரண்டு வாரங்களாகின.

ஜூலை 1965, விலை 40 காசு என்று முதல் பக்கத்தில் அச்சடித்து வந்த கணையாழி ஆகஸ்ட் 15-ஆம் தேதிதான் வெளி வந்தது. அட்டைப் படமாக இந்தியா தேசம். அதற்குள் நேருவும் சாஸ்திரியும். அதுதான் அட்டைப்படக் கட்டுரை. ஜவஹர்லால் நேரு காலமாகி லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்திருந்தது. நாடு சிறப்பாக முன்னேறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சாஸ்திரிக்கு ஆலோசனைகள் வழங்கி இருந்தேன். அவற்றை செயல்படுத்த வாய்ப்பில்லாமலேயே அவர் அடுத்த சில மாதங்களுக்குள் இறந்து போய் விட்டார். இரண்டாயிரம் பிரதிகளை என்ன செய்வது? சென்னையில் ஒரு ஏஜென்ட் ஐநூறு பிரதிகள் வாங்கிக் கொண்டார். தில்லியில் கன்னாட் பிளேசில் இருந்த சௌத் இந்தியா ஹோட்டலில் ஆயிரம் காப்பிகள் விற்பனைக்குக் கொடுத்தேன். சென்னையில் நூறு பிரதிகளும் தில்லியில் ஐம்பது பிரதிகளும் விற்றன. ஐநூறு பிரதிகளை இலவசமாக பலருக்கு அனுப்பினேன். ஆனாலும் உற்சாகம் குறையவில்லை. படித்தவர்கள் நன்றாக இருக்கிறது, வித்தியாசமாக இருக்கிறது, நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாராட்டினார்கள்.

சந்தாக்கால் வரத் தொடங்கின. அதற்கு மேல் எழுத்தாளர்களின் படைப்புகளும் வரத் துவங்கின. தில்லிவாசிகளான சுப்புடு, பி.எஸ். ரங்கநாதன், பூர்ணம் விஸ்வநாதன், லா.சு.ர. (லா.சு. ரங்கராஜன்) போன்றவர்கள் எழுதினார்கள். அதன் பிறகு இந்திரா பார்த்தசாரதி, தி. ஜானகிராமன், என்.எஸ். ஜகன்னாதன், கே.எஸ். ஸ்ரீனிவாசன் என்று ஒரு ஐந்து நட்சத்திரத் தரத்தில் படைப்புகள் கணையாழியில் வெளி வரத் துவங்கின.

இளம் எழுத்தாளர்கள் ஆதவன், சம்பத், மாலன், பாலகுமாரன் ஆகியோர் ஆர்வத்துடன் எழுதினார்கள். ஞானக்கூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தி.ஸௌ. வேணுகோபாலன், சி. மணி முதலான ‘எழுத்து‘க் கவிஞர்கள் புதுக் கவிதைகள் எழுதினார்கள். முக்கியமாக அசோகமித்திரன் கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிருந்து செயல்பட்டார். முகவும் பொறுப்புடன் பிரதிபலன் எதிர்பார்க்காது மாதாமாதம் கணையாழியை அச்சடித்து தில்லிக்கு அனுப்பி வைத்தார். அவருடைய கட்டுரைகள், கதைகள், தொடர்கதை என்று ஒவ்வொரு இதழிலும் ஏதாவது உண்டு. விமர்சனக் கட்டுரை, சுஜாதாவின் கடைசிப் பக்கம், சுப்புடுவின் சங்கீத வித்வான்கள் அறிமுகம் என்று இதழ் தவறாமல் வெளிவந்தன. நேர்முகப் பேட்டிகள். இந்திரா காந்தி, மொரார்ஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் புள்ளிகளுடன், கணையாழிக்கு ஒரு அந்தஸ்து கிடைத்தது. ஆனால் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது.

முப்பது ஆண்டுகள் நடத்திய பின் கணையாழியின் பொருளாதாரமும் என் உடல் நிலையும் நலிந்து போக பத்திரிகை நடத்தும் பொறுப்பை ‘தசரா’ அறக்கட்டளைக்கு மாற்றிய கட்டத்தில் அதன் உச்ச கட்ட விற்பனை மூவாயிரம் பிரதிகள்தான். அறிவார்த்தமான ‘சீரியஸ்’ படைப்புகளுக்கு தமிழக வாசகர்களிடமிருந் ஆதரவு அதிக அளவில் எப்போதுமே இருந்ததில்லை.

என் பொறுப்பில் முப்பது ஆண்டுகள் வெளிவந்த கணையாழியின் தொகுப்ப்களை வெளியிட வேண்டும் என்ற ஆசை வெகு காலமாகவே எனக்கு இருந்தது. ஆனால் அதற்கும் ஊக்கத்துடன் ஆதரவு தர யாரும் முன்வரவில்லை. திட்டத்தை கைவிட்டு விடலாம் என்று முடிவு செய்தபோது கடவுளே அனுப்பியது போல ‘கலைஞன்’ நந்தா முன் வந்தார். பத்தாண்டுகளுக்கு ஒரு தொகுப்பாக மூன்று தொகுப்புகளை வெளியிடுவதாக அவர் சொன்னபோது நான் வியப்படைந்தேன். அவருடைய தன்னம்பிக்கையைப் பாராட்டிவிட்டு என்னுடைய சம்மதத்தையும் கொடுத்தேன். முதல் பத்தாண்டுத் தொகுப்புகள் காணாமல் போய்விட்டன. யாரிடமோ கொடுத்துத் திரும்பி வரவில்லை. இந்நிலையில்தான் வே. சபாநாயகம் கிடைத்தார். ஆரம்பத்திலிருந்து இன்று வரை ஓர் இதழ் விடாமல் சேர்த்து பைண்ட் செய்து வைத்திருக்கும் சபாநாயகம் ஓர் இலட்சிய வாசகர். சிறந்த படைப்பாளியும் கூட. கணையாழியில் குறுநாவல், கட்டுரைகள் என்று எழுதி இருக்கிறார். எனவே அவரை விட பொருத்தமான தொகுப்பாசிரியர் வேறு யாரும் இருக்க முடியாது என்று நந்தாவிடம் சொன்னேன்.

முத்த பத்தாண்டு கணையாழியில் வெளிவந்த ஏராளமான படைப்புகளிலிருந்து மிகவும் அக்கறையுடன் தேர்வு செய்து தந்திருக்கிறார். ஆரம்ப கால நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த முதல் தொகுப்பு அமைந்திருக்கிறது. அரசியல் முதல் இலக்கியம் வரை பலதரப்பட்ட விஷயங்கள். பிற்பாடு கணையாழியில் இலக்கிய மணம் அதிகமாக கமழ ஆரம்பித்து அரசியல் வாடை அமுங்கி விட்டது. இதற்குக் காரணம் தமிழில் புதிது புதிதாக இலக்கியம் எழுத ஆரம்பித்திருக்கும் இளைஞர்கள். இவர்களில் பலர் கணையாழியில்தான் முதலில் எழுதி அதனாலேயே ஒரு இலக்கியப் படைப்பாளி என்று முத்திரை பெற்று வேறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருப்பவர்கள். கணையாழியின் ஒரு சாதனை என்று சொல்ல வேண்டுமானால் புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களை இலக்கிய உலகுக்கு உரிய முறையில் அறிமுகம் செய்து வைத்ததைச் சொல்லலாம்.

முப்பது ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்த கணையாழி இக்கால கட்டத்தில் தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குரிய பெருமை என்னுடன் ஒத்துழைத்த நண்பர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் பரந்து விரவி இருக்கும் கணையாழி வாசகர்களையே சேர வேண்டும்.

இந்தத் தொகுப்பில் காணப்படும் படைப்புகள் பல பல்வேறு படைப்பாளிகளின் தனி வெளியீடுகளிலும் இடம் பெற்றுள்ளன. முதல் ஒன்பது ஆண்டு கணையாழி கதைகள் மற்றும் கவிதைகள் 1986-இலேயே பிரசுரமாகி இருக்கின்றன. அவற்றிலுள்ள படைப்புகளை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கிறோம். மேலும் இரண்டு தொகுப்புகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. இன்டர்நெட்டிலும் முப்பதாண்டு கால கணையாழியின் உள்ளடக்கம் ஒன்று கூட விடாமல் பதிவாகி இருக்கிறது. http://www.ambalam.com என்ற முகவரியிலிருந்து பெறலாம்.

அம்பலம் டாட் காம் என்ற இணைய முகவரி இப்போது வேலை செய்யவில்லை. யாருக்காவது புதிய முகவரி தெரியுமா?

மூன்று வால்யூம்கள் வரும் என்று சொல்லி இருக்கிறார். மூன்று வந்ததா இல்லை இரண்டோடு நின்றுவிட்டதா?

கஸ்தூரிரங்கன் குறிப்பிட்டிருக்கும் பி.எஸ். ரங்கநாதன் கடுகு என்ற புனைபெயரில் பிரபலமானவர்.

தொகுப்பாசிரியர் வே. சபாநாயகத்தின் ப்ளாக் இங்கே.

தொடர்புடைய சுட்டி:
கஸ்தூரிரங்கன் மறைவு
கணையாழி அனுபவம் – வே. சபாநாயகம்