தேவன் மரணம் – விகடன் தலையங்கம்

எனக்கு எழுத்தாளர் தேவனைப் பற்றி எப்போதும் ஒரு soft corner உண்டு. வணிக எழுத்துகளைத் தவிர வேறு எதுவும் தெரியாத காலத்தில் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் போன்ற ஒரு minor classic-ஐ படித்ததால் இருக்கலாம். துப்பறியும் சாம்பு இன்றும் புன்னகையை வரவழைப்பதால் இருக்கலாம். ஸ்ரீமான் சுதர்சனத்தில் ஒரு மத்தியதர வர்க்க குடும்பத் தலைவனுக்கு என்றென்றும் உள்ள பணப் பிரச்சினைகளில் என்னையே கண்டதால் இருக்கலாம். அவர் வணிக எழுத்தைத் தாண்டி இலக்கியம் கிலக்கியம் எல்லாம் படைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனால் சில சமயம் பத்திரிகை, தொடர்கதை ஆகியவை நிர்ணயிக்கும் எல்லைகளை அநாயாசமாகத் தாண்டி இருக்கிறார்.

தேவன் 5-5-57 -இல் இறந்திருக்கிறார். இறந்தபோது அவர் விகடன் ஆசிரியர். இன்று ஒரு பழைய பதிவு – அவர் மறைவைப் பற்றி விகடனில் எழுதப்பட்ட தலையங்கம் – கண்ணில் பட்டது. அவரது 53-ஆவது நினைவு நாள் என்பதற்காக மீண்டும் பதித்திருக்கிறேன்.

விகடனின் மகத்தான நஷ்டம்!

சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.

அவர் பேனாவிலே பிறந்த துப்பறியும் சாம்புவும், கல்யாணியும், கோமதியின் காதலனும், ஸ்ரீமான் சுதர்சனமும் உயிர் பெற்றுச் சிரஞ்சீவிகளாக உலாவிக்கொண்டிருக்கையில், அவர்களைப் படைத்த பிரமன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள் கூட ஸ்ரீ தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகந்நாதனையும், ஸி.ஐ.டி. சந்துருவையும் படித்துவிட்டுத் தமிழிலும் இப்படிப் புதுமைக் கருத்துக்களுடன் எழுத முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள்.

தேவன் அவர்களின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கே ஈடு செய்ய முடியாதது என்றால், விகடனுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பற்றி எப்படி எழுதுவது? அவருடைய அற்புதமான கதைகளை, எழுத்துக் கோக்கும்போதே படித்துக் களித்த ஆனந்த விகடன் கம்பாஸிடர்கள் அத்தனை பேரும் இன்று அழுது கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆசிரியர் குழாம் அலறித் துடிக்கிறது. கடமை உணர்ச்சியும், அன்பும், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் நற்குணமும் படைத்த உத்தமமான நிர்வாக ஆசிரியரை இழந்து விகடன் கண்ணீர் வடிக்கிறான். 5.5.57 ஞாயிற்றுக்கிழமை பகல் ஒன்றரை மணிக்கு, தேவன் தேவனாகி விட்டார். அவர் பூத உடம்பு மறைந்து விட்டது. புகழுடம்புடன் ஆனந்த விகடன் வாசகர்களின் உள்ளங்களில் குடி புகுந்துவிட்டார்.

தொடர்புடைய சுட்டிகள்:
கல்கியும் தேவனும் – அசோகமித்திரன் ஒப்பிடுகிறார்
ராஜத்தின் மனோரதம்
கோமதியின் காதலன்
துப்பறியும் சாம்பு
ஜஸ்டிஸ் ஜகன்னாதன்

15 thoughts on “தேவன் மரணம் – விகடன் தலையங்கம்

 1. திரட்டிகளில் முதன்மை திரட்டியான — தமிழ் திரட்டியில்— தங்கள் பதிவை இணைத்து
  அதிக வாசகர்களை பெறுங்கள் –தமிழ் திரட்டியின்— முகவரி

  http://tamilthirati.corank.com/

  தங்கள் வரவு இனிது ஆக

  Like

 2. thank u for reminding us about devan .have u not read his masterpiece mr.vedantham…you have not mentioned about this in ur post.kindly give us more
  information about devan,i am very glad to get contact with fellow admirers of
  devan and thi.ja.

  Like

 3. தேவன் பற்றி சுஜாதா….

  தேவனின் ‘ஸ்ரீமான் சுதர்ஸனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’ போன்ற தொடர்கதைகள் என் பள்ளியிறுதி, கல்லூரி இளங்கலை நாட்களில் குதூகலமளித்தன. எழுத்தாளனாக வேண்டும் என்கிற ஆசையை உயர்த்தின. தேவன், ஐயங்கார் கதைகள் ஏன் எழுதினார் என்பது இப்போதும் எனக்கு விந்தையே! இன்று அவைகளைப் படித்துப் பார்க்கும்போது தேவனின் சிறந்த புத்தகம் ‘ராஜத்தின் மனோரதம்’ தான் என்ற முடிவுக்கு வர முடிகிறது. அவரது தீபாவளி மலர், மல்லாரி ராவ் கதைகள் உட்ஹவுசின் முல்லினர் கதைகளைப் போல இருப்பதைப் பின்னர்தான் கண்டுகொண்டேன். தேவன், பத்திரிகையின் வாராந்தரத் தேவைகளையும் அவசரங்களையும் புரிந்து எழுதியவர் என்றாலும் அந்தப் பயிற்சி அவரது எழுத்துத் திறமையைத் தீட்டியிருக்கிறது.

  இப்போது தேவனைப் படிக்கையில் பிராமண பாஷையும், பாத்திரங்களும், சூழ்நிலையும் இலக்கிய மதிப்பைக் கட்டுப்படுத்தியிருப்பது தெரிகிறது.

  எஸ்.வி.வி.யின் ஐயங்கார் கதைகளின் யதார்த்தம் தேவனைவிட அதிகமானது. தேவன், எஸ்.வி.வி, கல்கி மூவருமே என் எழுத்தார்வத்தை வளர்த்திருக்கிறார்கள்.

  Like

 4. தேவன் வருவாரா ? — சுஜாதா

  தேவன் அறக்கட்டளையினர் எதிர்பாராத ஒரு காலையில் என்னை விளித்து இந்த வருஷம் தேவன் நினைவாக உங்களை கௌரவிக்க விரும்புகிறோம், சம்மதமா’ எனக் கேட்டனர். எப்படி என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் ? என்று வினவியபோது தற்கால எழுத்தாளர்களில் நீங்கள் ஒருவர்தான் இன்னும் தேவனை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், என்று சாருகேசி சொன்ன காரணத்துடன், முழுவதும் சம்மதமில்லை எனினும் தேவன் நினைவாக ஒரு பாராட்டைப் பெறுவது எனக்குச் சம்மதமே.

  மாணவப் பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களில் தேவன் முக்கியமானவர். அவருடைய ஸ்ரீமான் சுதர்சனம் ஆனந்த விகடனில் தொடர் கதையாக வந்தபோது ஏகப்பட்ட பணமுடையால் அலுவலகத்தில் பணம் கையாடிவிட்டு எப்போது மாட்டிக் கொள்வோமோ என்கிற பரிதாபத்துடன் நகைச்சுவையையும் கலந்து தரும் அவருடைய நடையின் எளிமையையும் சரளத்தையும் வியந்திருக்கிறேன். இறுதியில் ஆபீசில் தீ விபத்தில் வவுச்சர்கள் எல்லாம் எரிந்துவிட தண்டனையிலிருந்து சுதர்சன் தப்பித்தான் என்று நாம் பெருமூச்சு விடும்போது முதலாளிக்கு அவன் பணம் எடுத்தது முதலிலிருந்தே தெரியும் என்று ஒரு அதிர்ச்சி தந்து முடிப்பார்.

  தேவன் ஒரு கால கட்டத்தில் வெகுஜன எழுத்துக்கு முக்கியமான முன்னோடி. கல்கி அளவுக்கு அவருடைய பலதிறமை இருந்திருக்கிறது. அவரும் கல்கியைப் போல ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாடுகளைவிட்டு வெளியே வந்து தனியே ஒரு பத்திரிகை துவங்கியிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.

  இந்தக் காலத்து எழுத்தாளர்களுக்கு தேவன் எழுத்துக்கு ஒரு அறிமுகம் செய்ய என் பட்டியலில் ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சின்னக் கண்ணன் கதைகள், ராஜத்தின் மனோரதம், துப்பறியும் சாம்புவின் சில கதைகள், கோமதியின் காதலன், ஆரம்ப நாட்களில் அவர் ஆனந்தவிகடன் தீபாவளி மலர்களில் எழுதிய மல்லாரி ராவ் கதைகள் முக்கியம். தேவன் அவர்களை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். எம்.ஐ.டியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் தமிழ்ச் சங்கத்தின் கூட்டத்திற்கு வந்திருந்தார். என்னை அறிமுக உரை பேச வைத்தார்கள். சுத்தத் தமிழில் அவையோர்களே, மாணவப் பெருந்தகைகளே என்று ஆரம்பித்தபோது ‘இந்தப் பையன் ஏன் இப்படி கஷ்டப்படறான் ? தினப்படி உங்க ஹாஸ்டல்ல பேசறமாதிரி பேசிட்டுப் போயேன்’ என்றார். கேள்வி நேரத்தில் சின்னக் கண்ணன் பற்றி ஒருவர் கேட்டபோது தனக்குக் குழந்தையே இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார். பிற்காலத்தில் தேவன் அதிகம் பிரபலமாகாததற்குக் காரணம் அவர் சீக்கிரமே இறந்த பின் பல வருடங்கள் அவர் நூல்கள் புத்தகமாக வெளிவராததுதான். இப்போது அறக்கட்டளையினர் அனைத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

  இளம் தலைமுறையினருக்கு தேவன் ஒரு புதிய அறிமுகமாகக் கிடைக்கட்டும். நூற்றாண்டின் இறுதியில் அவர் கதைகள் முழுதும் தமிழ் தகவல் தளத்தில் உள்ளிடப்பட்டு செவ்விலக்கியமாகக் கருதப்படும்போது நகைச்சுவை வறண்டுவிட்ட நாட்களில் வுட்ஹவுசுக்கு ஈடாக தமிழில் நகைச்சுவை எழுதியவர் என்கிற தகுதியில் இலக்கிய வரலாற்றில் அவருக்கு இடம் நிச்சயம் உண்டு. மற்றொரு தேவன் வருவாரா என்று காத்திருப்போம்.

  Like

 5. //அவர் வணிக எழுத்தைத் தாண்டி இலக்கியம் கிலக்கியம் எல்லாம் படைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை..//

  ‘ வணிக எழுத்து’ என்கிற சொல்லே ஆளாளுக்கு இஷ்டப்படி வகைப்படுத்தும் ஒன்று. ‘இதுதான் அது’ என்று இதுவரை யாரும் இதை வரையிறுத்ததில்லை. எழுத்து வணிகமான ஒரு யுகத்தில்,
  (ஒரு பக்கம் ஒன்றரை ரூபாய் என்கிற அளவில் ஒரு புத்தகத்தின் விலை) மனசறிந்து எழுத்தை வணிகமாக நினைத்து எழுதாத ஒரு தலைமுறையே இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாவது தான் காலத்தின் கோலம்.

  Like

 6. அன்புள்ள ஜீவி,
  // ‘ வணிக எழுத்து’ என்கிற சொல்லே ஆளாளுக்கு இஷ்டப்படி வகைப்படுத்தும் ஒன்று. ‘இதுதான் அது’ என்று இதுவரை யாரும் இதை வரையிறுத்ததில்லை. எழுத்து வணிகமான ஒரு யுகத்தில், (ஒரு பக்கம் ஒன்றரை ரூபாய் என்கிற அளவில் ஒரு புத்தகத்தின் விலை) மனசறிந்து எழுத்தை வணிகமாக நினைத்து எழுதாத ஒரு தலைமுறையே இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாவது தான் காலத்தின் கோலம். //
  வணிக எழுத்து என்பது குற்றச்சாட்டு இல்லை. கல்கியும் தேவனும் பத்திரிகை விற்பனையைத்தான் முக்கிய குறிக்கோளாக கருதினார்கள், இலக்கியம் படைக்கிறேன் என்று கிளம்பவில்லை, அப்படி படைக்கவும் இல்லை என்பதே என் எண்ணம். அதில் தவறென்ன? இலக்கியம் படைத்துதான் ஆகவேண்டும் என்று ஏதாவது கட்டாயமா? நாடோடி மன்னன் சிறந்த பொழுதுபோக்குப் திரைப்படங்களில் ஒன்று; ஆனால் ராஷோமானின் தரம் அதை விட உயர்ந்தது. அந்த மாதிரிதான்…

  ஸ்ரீனிவாஸ், விவரங்களுக்கு நன்றி!
  ராதாகிருஷ்ணன், மிஸ்டர் வேதாந்தத்தை விட எனக்கு பிற நாவல்கள் பிடித்திருகின்றன.

  Like

 7. அன்புள்ள ஆர்வி,

  கல்கி விகடனை விட்டு வெளியேறியதும், விகடனுக்குக் கிடைத்தவர் தேவன். அதனாலேயே கல்கி பாணியிலேயே அவர் விட்டுச் சென்ற அன்றைய விகடன் போக்கை அவர் தொடர்ந்திருக்கலாம். தேவன், கல்கி மாதிரி சரித்திரக் கதை மட்டும் எழுதி, தன் எழுத்தைப் பரிட்சித்துப் பார்க்கவில்லை! எதை எழுதினாலும் வாசகர்களை மகிழ்விக்க வேண்டும் என்கிற எண்ணம் இந்த இருவரிடம் தூக்கலாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

  பத்திரிகைகளுக்கு எழுதும் சுதந்திரமான எழுத்தாளருக்கு எப்போதுமே அந்தப் பத்திரிகையின் பிராபல்யத்தின் துணையில் தனக்கு அதிகபட்ச வாசகர்களைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். பத்திரிகை அதிபருக்கோ நீங்கள் குறிப்பிடுகிற விற்பனையின் அதிகரிப்பு முக்கியமாகப் படும். இந்த இரண்டு பேர் அபிலாஷைகளும் ஒரு புள்ளியில் ஒன்று கூடும் போது, இயல்பாகவே அது பத்திரிகையின் விற்பனை அதிகரிப்பில் கொண்டு போய் முடியும். அவ்வளவு தான். அந்தக் காலத்தில் தமிழகத்தில் வெளிவரும் அத்தனை பருவ இதழ்களும் அரசு நூலகங்களில் கிடைக்கும். பத்திரிகையை காசு கொடுத்து வாங்காத பெருவாரியான வாசகர்கள், இவற்றை நூலகங்களிலேயே படித்து குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் பிரிய வாசகர்களானார்கள். இது பத்திரிகையின் விற்பனை சம்பந்தப்படாத, அதே நேரத்தில் எழுத்தாளனுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்பதால் சொல்ல வந்தேன்.

  பத்திரிகைகளுக்கு பொறுப்பாசிரியராக செயல்படும் எழுத்தாளனுக்கு வேண்டுமானால், பத்திரிகையின் விற்பனை குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் இயல்பாகவே இருக்கலாம். இங்கு தான் இந்த வணிகம் வருகிறது.

  இந்த வணிக எழுத்தாளர் என்கிற சொல்லை இலக்கியம் படைப்பதாக கற்பிதம் கொண்டுள்ளோர், தங்கள் ரேன்ஜூக்கு ஒருபடி கீழே என்கிற மாதிரி ஒருவித இளக்காரத்தோடையே உபயோகிப்பதை நீங்கள் பார்க்கலாம்.

  என்னுடைய ‘மறம்’ என்னும் சிறுகதை (உங்களின் பதிவு ஒன்றும் இந்தக் கதை பற்றி இந்தத் தளத்தில் உண்டு) இந்த வணிக எழுத்தாளர் சப்ஜெக்டை லேசாகத் தொட்டுச் செல்கிறது. வணிக எழுத்தாளர் என்று கூகுளில் தேடிப்பார்த்தால், இந்த சொற்றொடர் பற்றி ஒரு தீர்மானம் கொள்கிற மாதிரி உங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைக்கலாம்.

  Like

  1. அன்புள்ள ஜீவி,
   வணிக எழுத்து என்ற வார்த்தை பிரயோகம் உங்களை வருத்துகிறது என்று தெரிகிறது. பொழுதுபோக்கு எழுத்து என்பது எனக்கு சரிப்படவில்லை. நீங்களேதான் வேறு ஏதாவது மாற்று சொல்லுங்களேன்! எனக்கும் பிடித்திருந்தால் அதையே பயன்படுத்திவிடுகிறேன்!

   Like

 8. ‘வணிக எழுத்து’ என்று அடையாளப்படுத்துவதில் எந்த வருத்தமும் இல்லை. சகட்டுமேனிக்கு பெரும்பாலான எழுத்தாளர்களை இந்த சட்டத்தில் அடைப்பது தான் புரியவில்லை. எல்லோரும் ஏற்றுக் கொள்கிற சில வரையறைகளை ஏற்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

  எந்த எழுத்துக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்,இல்லையா? எழுத்தாளன் எழுதுவது சமூகத்தின் சீர்கேடுகளுக்கு தீர்வு சொல்கிற மாதிரி, படிப்பவரை நல்லதுக்குக் கைபிடித்து அழைத்துச் செல்கிற மாதிரி, தீமையான கருத்துக்களைச் சுட்டுப் பொசுக்குகிற மாதிரி, ஒரு பொன்னுலகம் அமைக்கத் தோள் கொடுக்கிற மாதிரி இருந்தால் அதெல்லாம் நல்ல நோக்கமுள்ள எழுத்து என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  அவணிக எழுத்தை இனம் கண்டுகொள்வதிலும் இப்படியான வரையறைகளை கொள்ளாமையால், வணிக எழுத்துக்களையும் தீர்மானிக்க முடியாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  Like

 9. அன்புள்ள ஜீவி,

  // எழுத்தாளன் எழுதுவது சமூகத்தின் சீர்கேடுகளுக்கு தீர்வு சொல்கிற மாதிரி, படிப்பவரை நல்லதுக்குக் கைபிடித்து அழைத்துச் செல்கிற மாதிரி, தீமையான கருத்துக்களைச் சுட்டுப் பொசுக்குகிற மாதிரி, ஒரு பொன்னுலகம் அமைக்கத் தோள் கொடுக்கிற மாதிரி இருந்தால் அதெல்லாம் நல்ல நோக்கமுள்ள எழுத்து // உங்கள் வரையறை எனக்கு ஒத்துவராது. நீங்கள் விரும்பும் தேவனும் எஸ்.ஏ.பியும் கரிச்சான் குஞ்சும் தி.ஜா.வும் கூட அப்படி எழுதவில்லை என்றே கருதுகிறேன்.

  Like

 10. அன்புள்ள ஆர்வி,

  பொதுவாக நல்ல நோக்கமுள்ள எழுத்துக்கு அடையாளமாக பலரால் சொல்லப்படும் கருத்துக்கள் தாம் அவை. அது போகட்டும்.

  எனது பதிவில் எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது, நினைவில் நிற்கிற சில தமிழ் எழுத்தாளர்களை நினைத்துப் பார்க்கிற ஒரு பகுதி தான். இன்னும் நிறையப் பேரைப் பற்றி எழுத வேண்டி இருக்கிறது.

  தொடர்ந்து சில கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ள வழிவகுத்தமைக்கு மிக்க நன்றி, ஆர்வி! வணிக எழுத்து, வணிக எழுத்து என்று சொல்லிச் சொல்லி அவணிக எழுத்தை புரிந்து கொள்ள முடியாமல் போய்விடக்கூடாது. அதான் முக்கியம். வாய்ப்பு வாய்த்தால், அந்த வகையில் நீங்கள் படித்து ரசித்த தமிழ்ப்புதினங்களை இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தினால் மிகவும் பயனளிப்பதாக இருக்கும்.அப்பொழுது நிறைய பகிர்ந்து கொள்ளலாம்.

  மிக்க நன்றி, ஆர்வி!

  Like

  1. அன்புள்ள ஜீவி,

   // அந்த வகையில் நீங்கள் படித்து ரசித்த தமிழ்ப்புதினங்களை இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தினால் மிகவும் பயனளிப்பதாக இருக்கும் // உங்களுக்கு அவணிக எழுத்து எது என்பது எனக்கு சரியாகப் புரியவில்லை. நான் அவணிக எழுத்து என்று கருதும் புதுமைப்பித்தன், எம்.வி.வி., கு.ப.ரா. போன்று பலரை ரசிக்கிறீர்கள். பொதுவாக இன்றைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறை வணிக/அவணிக எழுத்துகளை ரசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

   உங்கள் தளத்தில் நீங்கள் அவ்வளவாக குறிப்பிடாதவர்களின் எழுத்து என்றால் அசோகமித்திரன், ஜெயமோகன், இ.பா., போன்ற பக்கங்களை இந்தத் தளத்தில் புரட்டிப் பார்க்கலாம். கிருஷ்ணன் நம்பி, சிதம்பர சுப்பிரமணியன், க.நா.சு., சுப்ரபாரதிமணியன் போன்றவர்களின் புத்தகங்களைப் பற்றிய பதிவுகளைப் பார்க்கலாம்.

   இன்னும் எழுத வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பொதுவாக வணிக எழுத்துகளைப் பற்றி கிடுகிடு என்று எழுதிவிட முடிகிறது; அவணிக எழுத்துக்கு நேரம் ஆகிறது. நான் கொஞ்சம் சோம்பேறி, அதனால் வணிக எழுத்து பற்றி கொஞ்சம் நிறையவே எழுதுகிறேன்.

   Like

 11. அன்புள்ள ஆர்வி,

  இலக்கியம், நச்சு இலக்கியம் என்று வரைப்படுத்திக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. பின்னாலான நா.பா. காலத்தில், எழுத்து வியாபாரி என்கிற சொல் புழக்கத்தில் வந்தது. அது தான் வணிக எழுத்து என்றாயிற்றோ என்று நான் எண்ணிக் கொண்டிருக்கையில், ‘வணிக எழுத்து’ பற்றிய திரு. ஜெயமோகனின் சில கட்டுரைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கட்டுரைகளில் ‘இவையெல்லாம் வணிக எழுத்துக்கள்’ என்று அவர் இலக்கணம் வகுத்த மாதிரி எழுதியிருக்கிறார். ‘வணிக எழுத்தை’ விலாவாரியாக எடுத்துச் சொன்னவர், ‘வணிக எழுத்தாளர்கள்’ என்று சிலரை இனம் காட்டியது எனக்கு ஏற்புடையதாக இல்லை. அதற்கு பிறகு தான் அதுபற்றிய ஒரு தொடர் யோசிப்பாக ‘மறம்’ கதையை எழுதினேன். திரு. ஜெயமோகனின் கட்டுரைகளை நீங்களும் படித்திருப்பீர்கள் என்கிற எண்ணத்தில் தான் ‘மறம்’ கதையை உங்களைப் படிக்கக் கேட்டுக்கொண்டேன். அடுத்த தேடலாக ஜெ.மோ.வின் பார்வையில் வணிக எழுத்துக்களை அறிமுகப்படுத்திக் கொண்டவன், அதற்குப் புறம்பான அவணிக எழுத்துக்களையும், அவணிக எழுத்தாளர்களையும் அறிய ஆசைப்பட்டேன். அதனால் தான் அதுபற்றி உங்களிடம் கேட்டேன்.

  உங்கள் பதில்களிலிருந்து வணிக எழுத்துக்கள் என்று நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டிருப்பது வேறு என்று தெரிகிறது. நீங்களும் ஜெ.மோ.வின் அதுபற்றிய கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். அவர் சொல்லும் கருத்துக்கள் உங்களுக்கு உடன்பாடாக இருப்பின், நீங்களும் கறாராக இவையெல்லாம் வணிக எழுத்துக்கள் என்று வரையறுக்கலாம். இல்லையென்றால், அவர் எழுதியவற்றிக்கு மாறாக யோசிக்கலாம். அந்த யோசிப்பு இனி எழுதும் பதிவுகளுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

  இந்த விஷயத்தை இந்தப் பதிவின் தலைப்பின் கீழ் தொடர சங்கடமாக இருக்கிறது. வணிக எழுத்துக்கள் என்று குறிப்பிடுகிற மாதிரி வேறு பதிவுகள் ஏதேனும் நீங்கள் எழுதினால் அங்கு மேற்கொண்டு தொடரலாம்.

  மிக்க அன்புடன்,
  ஜீவி

  Like

  1. அன்புள்ள ஜீவி,
   எனக்கும் ஜெயமோகனுக்கும் வணிக எழுத்து என்று கருத்தில் வேறுபாடு என்ன என்று எனக்குத் தெரியவில்லையே! விரைவில் தனியாகவே ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன்.

   Like

 12. அன்புள்ள ஆர்வி,

  ரொம்ப நல்லது. அதுதான் செளகரியம். தனிப்பதிவில் நிறையவே பேசலாம். நிறைய விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள அது வசதியாகவே இருக்கும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.