ஜேம்ஸ் பாண்ட் நாவல் – மூன்ரேக்கர்

பதின்ம வயதுகளில் ஜேம்ஸ் பாண்ட் ஒரு பெரிய icon. ரோஜர் மூர், ஷான் கானரி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பேன். ஜேம்ஸ் பாண்டின் தீம் இசை, அரை நிர்வாணப் பெண்கள், வித விதமான gadgets, I am Bond – James Bond என்று சொல்லும் ஸ்டைல் என்று பல அம்சங்கள் மனதை கவர்ந்திருந்தன. ரோஜர் மூரை விடுங்கள், தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கர் படங்களைக் கூட தேடிப் போய் பார்த்த காலம் அது.

பற்றாக்குறைக்கு அப்போதுதான் ஆங்கிலப் புத்தங்களை படிக்க ஆரம்பித்திருந்தேன். த்ரில்லர்கள், ஆக்ஷன் அட்வென்ச்சர் கதைகளை விரும்பிப் படித்தேன். (இப்போதும் படிக்கிறேன்.) இயன் ஃபிளமிங் எழுதிய ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் கிடைக்காதா கிடைக்காதா என்று தேடி இருக்கிறேன். அந்த வயதிலேயே ஒவ்வொரு நாவலையும் படிக்கும்போதும் ஏமாற்றமே அடைந்திருக்கிறேன்.

ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் நல்ல த்ரில்லர்கள் கூட இல்லை. ஒரு ஃபார்முலாவை வைத்து – பாண்ட் என்ன சாப்பிட்டார் (caviar etc.), என்ன மது அருந்தினார் (martini, shaken but not stirred etc.), எத்தனை பெண்களோடு படுத்தார், எத்தனை ஸ்டைலான உடை, கார், சிகரெட் இத்யாதி இத்யாதி – வைத்து ஒரு கதை. மீண்டும் மீண்டும் இவற்றைப் பற்றி வரும்போது, மனதுக்குள் “I get it, move on!” என்று தோன்றும். அப்புறம் ஒரு உலக மகா வில்லன், உலகத்தையே அழிக்கும் அவனால் ஒரு சின்ன துப்பாக்கியோடு அலையும் ஜேம்ஸ் பாண்டை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது, பாண்டை கொல்ல வேண்டுமென்றால் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துத்தான் பிடிப்பார்கள். ஷாக் வால்யூவுக்காக எழுதப்படும் காட்சிகள் (ஸ்காராமாங்காMan with the Golden Gun – ஒரு பாம்பைக் கொன்று அப்புடியே raw-வாக ச்சாப்பிடுவான்) எல்லாம் ரொம்ப ஷாக்கிங்காக ஒன்றும் இருக்காது.

ஆனாலும் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். ஏன் இப்போது சார்லி ஹிக்சன் (Charlie Higson) என்பவர் எழுதும் Young Bond சீரிஸ் நாவல்களைக் கூட – இவற்றில் பாண்ட் ஸ்கூல் போகும் பதின்ம வயதினன் – விடுவதில்லை. சினிமாவாக வந்து அந்த வயதில் பிடித்தவை என்பதைத் தவிர ஒரே ஒரு காரணம்தான் உண்டு. சில சமயம் இந்தக் கதைகளில் வரும் விளையாட்டுக் காட்சிகள் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்டவை. அது அப்போதும் சரி இப்போதும் சரி பிடித்திருக்கிறது.

மூன்ரேக்கரில் ஒரு உலக மகா வில்லன் – ஹ்யூகோ ட்ராக்ஸ் – முன்னாள் நாஜி, இப்போது இங்கிலாந்தில் தன் நாஜி வாழ்க்கையை மறைத்து ஒரு பெரிய தொழிலதிபராக இருக்கிறான். ஏவுகணை உற்பத்தி செய்கிறான். இன்னும் நாலைந்து நாளில் ஒரு ஏவுகணை விண்ணில் செலுத்தப்படப் போகிறது. பாண்டின் பாஸ் M சீட்டு விளையாடும் க்ளப்பில் அவனும் ஒரு உறுப்பினன். சீட்டு விளையாடும்போது ஏமாற்றுகிறான் என்று சந்தேகம். M பாண்டை வந்து பார்க்க சொல்கிறார். பாண்ட் அவன் எப்படி ஏமாற்றுகிறான் என்று கண்டுபிடித்துவிடுகிறார். அவனுக்கு புத்தி புகட்ட தான் அவனை ஏமாற்றுவதாக சொல்கிறார்.

என்னைப் பொறுத்த வரையில் அந்த ஏமாற்றும் காட்சிதான் கதையின் உருப்படியான விஷயம். அவர்கள் விளையாடுவது பிரிட்ஜ். பாண்ட் சீட்டுகளை ஒரு வரிசையில் வைத்து ட்ராக்சுக்கு மிகவும் வலிமையான சீட்டுகள் வரும்படி செய்கிறார். ஆனால் பாண்டுக்கு வருவது அந்த வலிமையான சீட்டுகளை தோற்கடிக்கக் கூடிய சீட்டுகள். ட்ராக்ஸ் பெரிய அளவு பந்தயம் வைத்து பணத்தை இழக்கிறான், தான் ஏமாற்றுவது இவர்களுக்கு தெரிந்துவிட்டது என்று அவனுக்கு புரிகிறது.

அப்புறம் வழக்கம் போல அழகான பெண், வழக்கம் போல ஏவுகணையை லண்டன் மேல் செலுத்த ட்ராக்ஸ் திட்டம், வழக்கம் போல பாண்ட் அதை முறியடிப்பது என்று கதை போகிறது.

இந்த புத்தகத்தால்தான் பிரிட்ஜ் எப்படி விளையாடுவது என்று கற்றுக் கொண்டேன். (இன்னும் bidding கொஞ்சம் தகராறு)

கோல்ட்ஃபிங்கரில் வரும் கோல்ஃப் போட்டி எனக்குப் பிடித்த இன்னொரு விளையாட்டு காட்சி. இப்போதும் பிடித்திருக்கிறதா என்று படித்துப் பார்க்க வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடி ஒரு முறை ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் தனக்கு பிடித்தமானவை என்று சொன்னாராம். எனக்கென்னவோ அந்த 15 நிமிஷ புகழ்தான் ஜேம்ஸ் பாண்ட் நாவல்களை படமாக்க உந்துதலாக இருந்தன என்றும் அந்த படங்கள்தான் இந்தக் கதைகளை இன்னும் பிரபலப்படுத்தின என்றும் தோன்றுகிறது.

உங்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் நாவல்களில் பிடித்த அம்சம் ஏதாவது உண்டா? இருந்தால் எழுதுங்கள்!

அனுபந்தம் (இதற்கு ஒரு நல்ல தமிழ் வார்த்தை சொல்லுங்கப்பு!) :

இயன் ஃபிளமிங் மொத்தம் 14 ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவை

 1. கசினோ ராயேல் (1953)
 2. லிவ் அண்ட் லெட் டை (1954)
 3. மூன்ரேகர் (1955)
 4. டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர் (1956)
 5. ஃபரம் ரஷ்யா, வித் லவ் (1957)
 6. டாக்டர் நோ (1958)
 7. கோல்ட்ஃபிங்கர் (1959)
 8. ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1960)
 9. தண்டர்பால் (1961)
 10. ஸ்பை ஹூ லவ்ட் மீ (1962)
 11. ஆன் ஹர் மெஜஸ்டீஸ் சீக்ரட் சர்வீஸ் (1963)
 12. யூ ஒன்லி லிவ் ட்வைஸ் (1964)
 13. மான் வித் தி கோல்டன் கன் (1965)
 14. ஆக்டோபுஸ்ஸி (1966)