சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பு – “ஓலைப் பட்டாசு”

சுஜாதா 94-95 கால கட்டத்தில் குமுதம் ஆசிரியராக இருந்தபோது எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். பத்திரிகை அவசரங்களுக்கும் கட்டாயங்களுக்கும் எழுதியது சவாலாக இருந்தது என்று சுஜாதாவே குறிப்பிடுகிறார். முன்பு எழுதிய சில கதைகளையும் மீண்டும் பதித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

எந்தக் கதையும் ரொம்பப் பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் மனிதர்களை சித்தரிப்பது, உண்மையான சுபாவம் எத்தனைதான் மாற்ற முயற்சித்தாலும் மாறாமல் இருப்பது என்றெல்லாம் சில புள்ளிகளில் கலக்கி இருக்கிறார். உதாரணமாக ஆக்கிரமிப்பு என்ற கதையை சொல்லலாம். அறையில் தங்க வரும் நண்பன் மெதுமெதுவாக அறையின் பெரும்பகுதி, வீட்டுக்கார மாமா மாமி தரும் சலுகைகள், சைட் அடிக்கும் பெண் என்று எல்லாரையும் ஆக்கிரமிக்கிறான். அவனைக் கொல்ல வேண்டும் என்று ஒரு வெறி வருகிறது, ஆனால் வழக்கம் போல விட்டுக் கொடுக்கும் ஹீரோ. கதை அந்தக் கால டெல்லியில் நடக்கிறது. சம்பளம் 150 ரூபாய்! (இந்தக் கதை எனக்கு நசீருதின் ஷா, ஃபரூக் ஷேக், தீப்தி நாவல் நடித்து சாய் பரஞ்ச்பே இயக்கிய “கதா” என்ற திரைப்படத்தை நினைவுபடுத்தியது.)

கைது என்ற கதை அடிக்கடி தொகுக்கப்படுவது. போலீஸ் ஸ்டேஷனில் ரேப் செய்யும் இன்ஸ்பெக்டர். அவனைக் கைது செய்ய அனுப்பப்படும் அதிகாரி இன்ஸ்பெக்டரின் மனைவி மீது இரக்கப்பட்டு அவனை தப்பிக்க வைக்க மனைவிக்கு ஐடியா கொடுக்கிறார். மனைவியின் மனநிலையை, ரியாக்ஷனை நன்றாக சித்தரித்திருப்பார்.

ஓலைப்பட்டாசு, சேச்சா, ஜாய் ரைடு, பிசாசு வந்த தினம் நான்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகள். ஸ்ரீரங்கத்துக் கதைகளின் கதைகளை விட அந்த ambience-தான் சிறப்பு. இங்கேயும் அப்படித்தான்.

தாசன், பீட்டர், நட்பு என்ற மூன்று கதைகளும் மனிதர்களின் மாறாத குணத்தை காட்டுகின்றன. குறிப்பாக பீட்டர். மனிதர்களிடம் பழகத் தெரிந்த பீட்டர் நன்றாக படிக்கும் சிவாவுக்கு மேலதிகாரியாக வருவது தினம் தினம் பார்க்கும் நிகழ்ச்சி…

கடவுள் இயந்திரம், அண்ணாசாலை 2094 இரண்டும் SF. 2094-இலும் எல்ஐசி பில்டிங்கைப் பார்க்க நிறைய பேர் வருகிறார்கள். ஏன்? கடவுள் இயந்திரம் ஒரு டாக்டர் ராகவானந்தம் SF. கடைசி வரி நன்றாக இருக்கும் கதைகளில் ஒன்று.

படிக்கலாம். ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.

நியூ புக்லாண்ட்சில் புத்தகம் கிடைக்கிறது. விலை நாற்பது ரூபாய்.

ஓலைப்பட்டாசு சிறுகதையை கீழே கொடுத்திருக்கிறேன். காப்பிரைட் பிரச்சினை வராமல் இருக்கட்டும்!

ஓலைப்பட்டாசு

அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு என்னிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதற்கு முக்கியம்.

பார்த்தீர்களா… ஆரம்பித்த விஷயத்தை விட்டு அலைகிறேனே. காரணம் – என் வயசு இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு. இரண்டு மனைவிகள். ஒரு தேசிய விருது. ஒரு நாள் ஜெயில். ஒரு ப்ராஸ்டேட் ஆபரேஷன். கராஜில் நெருக்கமாக மூன்று கார்கள். உறவினரின் துரோகங்கள். தென் ஆப்பிரிக்கா டர்பனில் இரண்டு வருஷம் இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதை அடைந்து விட்ட ஒருவன் இறந்துபோனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நான்கு வரிகளில் எழுபது வருஷமும் அடங்கி போகும்.

சொல்ல வந்தது, அந்த ஒரு தீபாவளி பற்றி. சீரங்கத்தில் என் பன்னிரண்டாவது வயதில் என் பாட்டியின் கண்காணிப்பில் வாழ்ந்தேன். அதனால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. அந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்க மொத்தம் ஐந்து ரூபாய்தான் தந்தாள். இப்போது என் வீட்டில ஐந்து ரூபாய் தாளை, தரையில் விழுந்தால் வேலைக்காரர்கள் கூட பொறுக்கமாட்டார்கள். அப்போது குறைவான பொருளாதாரத்தில் ஐந்து ரூபாயில் அதிகப்படியாக சந்தோஷம் கிடைக்க… கொள்ளிடக் கரையருகில் ஓலைப்பட்டாசு சல்லிசாக விற்பார்கள். பனையோலையில் சின்னதாக வெடிமருந்தை வைத்து முடிச்சுப் போட்டு மிகச் சின்னதாக திரியுடன், பனையோலை வாலுடன் பிரமாதமாக வெடிக்கும். ஆனால், ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். பற்ற வைப்பதற்குள்ளே வெடித்து கையை உதறவேண்டி வரும். மேலும் ஒரு வாரம் வெயிலில் காயப்போட்டே ஆகவேண்டும். பாட்டி கொடுக்கும் காசில் ஓலைப்பட்டாசு பாதப் பணத்துக்கு வாங்கிக்கொண்டு, மிச்சத்தில் கொல்லன் பட்டறைக்கு போய் ஒரு வேட்டுக் குழாயும் கந்தகப் பொடியும் வாங்கிக் கொண்டேன். இது ஒரு மாதிரி மினி வேட்டுக்குழாய். நீண்ட கம்பியின் இறுதியில் ஒரு குழலும் போல்ட்டும் இருக்கும். குழலில் மஞ்சளான கந்கத்தை கெட்டித்து அதனுள் போல்ட்டை செருகி சுவரில் மடேர் என்று ஒரு அறை அறைந்தால் கேட்கும் வெடிச் சத்தம், நம் காதில் விண்ண்ண்ண் என்று அலறும். வெடியை விட திண்ணையில் சுதேசமித்திரன் படித்து கொண்டிருக்கும் தாத்தாக்களின் பின்பக்கம் மெள்ள நழுவி, ஒரு டமால் அடித்துவிட்டு, கோரதமுட்டியை நோக்கி ஓடுவதில் உள்ள உற்சாகம்தான் மிக சுத்தமானது.

அந்த தீபாவளி ஓலைப் பட்டாசு காயப் போட மாடிக்கு சென்ற போது, பக்கத்து வீட்டு “எடுத்துக்கட்டி”யின் மேல் செருப்பு வைத்திருந்தது. அதில் ஏறினேன். பின்னால் யாரோ கஷ்டப்பட்டு முனகுவது போல் சத்தம் கேட்டது. உதவி தேவையோ என்று நான் சுவர் எகிறி குதித்து அந்தப் பக்கம் போய் பார்த்தபோது சந்தானமையங்கார் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சின்னவை பல இடங்களில் தடவிக் கொடுத்து சிகிச்சை மாதிரி என்னவோ செய்து கொண்டிருந்தார். சந்தானமையங்கார் அடுத்த வீட்டுக்காரர். எங்களையெல்லாம் ஓட ஓட விரட்டுபவர். கிரிக்கெட் பால் உள்ளே போனால் திருப்பி தரமாட்டார். கண்டபடி திட்டுவார். அவர் வீட்டு சுந்தர் எங்களுடன் விளையாட வரமாட்டான். அவர்கள் எந்த விதத்திலோ பணக்காரர்களாம். கொலுவுக்கு சில்க் ஜமக்காளங்கள் போட்டு, பெட்ரோமாக்ஸ் வைப்பார்கள். சின்னா அவர் வீட்டு சமையல்காரி. ரவிக்கை முந்தானையில் அவள் சேகரித்து இருந்த கொய்யாக் காய்கள் சிதறிக் கிடந்தன. தரை எல்லாம் வியர்வையால் ஈரமாக இருந்தது. சந்தானயைங்காரின் செருப்புதான் ‘எடுத்துக்கட்டி’யில் மேல் வைத்திருந்தது. “என்ன மாமா பண்றீங்க “என்று கேட்டபோது அவர் திடுக்கிட்டு “இவளுக்கு உடம்பு சரியா இல்லை. மூச்சு வாங்கறதுன்னா… அதனால, தசமூலாரிஷ்டம் கொடுத்து சரி பண்றேன். போடா போடா… நீ எங்க இங்க வந்து தொலைச்சே… ஓடிப் போ” என்றார்.

“பட்டாசு காயப் போட வந்தேன். மாமியை கூப்பிடட்டுமா” என்றேன்.

“மாமி பெட்டவாத்தலை போயிருக்கா. சுவரேறி குதிச்செல்லாம் வரக்கூடாது. போலீஸ்காரன் புடிச்சுப்பான்” என்றார்.

இதையெல்லாம் கேட்காதது போல், சின்னா ஒரு மாதிரி மயக்கத்தில் கண் மூடிக்கொண்டு சற்றே நெற்றியை சுருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

நான் வீரராகவனிடம் சொன்னேன். வீரராகவன் எங்கள் கிரிக்கெட் காப்டன். “பாவம்டா அவ. மேல்மூச்சு வாங்கிண்டிருந்தது. சந்தான மாமா தடவிக் கொடுத்தார். இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா” என்றேன்.

அவன் அதைக் கேட்டு கைகொட்டி கண்ணீர் வரச் சிரித்தான். “நீ கொக்கோகப் படம் எதும் பார்த்ததே இல்லையா? மார்கழி மாதம் உற்சவத்தில் விக்குமே?”

“இல்லை…”

அவன் “வா” என்று உள்ளே சென்று பரண் மேல் கத்யத்ரயம் திவ்யபிரபந்தசாரம் போன்ற புத்தகங்களின் நடுவே செருகியிருந்த பழுப்பான புத்தகத்தை எடுத்து பிரித்துக் காட்டினான்.

“ஆமாண்டா, இப்படித்தாண்டா சந்தான மாமாவும் சின்னாவும் இருந்தா…”

அவன் ஒரு வக்கீல் போல பல கேள்விகள் கேட்டு “இது தெரிந்ததா?”, “அது புரிந்ததா?” என்றெல்லாம் கேட்டு, அவவப்போது குபீர் குபீரென்று சிரித்து, “அடிச்சடா லக்கி ப்ரைஸ்” என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை. அவ்வப்போது என் நண்பர்கள் என்னை மரியாதையுடன் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் அந்த காட்சியை விவரிக்க சொல்லியே வதைத்தார்கள்.

“எனக்கு எல்லாம் புரியறது. ஆனா எதுக்குடா தலைல முண்டாசு?” என்றான் பாச்சு.

“அதாண்டா ட்ரிக்கு. அதை கட்டிண்டா அடையாளம் தெரியாதாம். வேற யாரோனு நினைச்சுண்டுருவோமாம்” என்று வீரு விளக்கியது புரிந்தும் புரியாமலும் இருந்ததை அவன் என்னை ஒரு மாதிரி பார்த்து, “நீ ஒண்ணு பண்ணு. அவர்கிட்ட போய் ‘மாமா மொட்டை மாடில ஓலைப்பட்டாசு காயப்போட போயிருந்த போது உங்களையும் சின்னாவையும் பார்த்துட்டேனே. மாமி பெட்டவாத்தலைலேர்ந்து வந்தாச்சா’ன்னு… அவாள்லாம் சீட்டாடிண்டிருப்பா… அங்க போய்க் கேட்டு பாரு…”

“ஐயோ… போடா… தோலை உரிச்சுருவார்…”

“அதான் இல்லை. பாரேன் நடக்கிறதை. எதுக்கும் ஓடத் தயாராவே இரு. ஓரமா நின்னு கேட்டுட்டு வந்துரு. நடக்கிறதைப் பாரேன்.”

அவர்கள் மிகவும் கட்டாயப்படுத்த நான் மெள்ள தைரியம் பெற்று பக்கத்து வீட்டு திண்ணைக்கு நழுவி ஓரத்தில் உட்கார்ந்தேன். வெள்ளி செம்பில் காபியும், பத்தமடை பாயுமாக “ஆஸ்” ஆடிக் கொண்டிருந்தார்கள். புகையிலையை துப்பிவிட்டு வாய் கொப்பளிக்க வரும்போது என்னை பார்த்து சந்தானமையங்கர் திடுக்கிட்டு “என்னடா?” என்றார்.

“மாமா, மாடில ஓலைப் பட்டாசு பெருந்தேவி மாமி வந்தாச்சா பெட்டவாத்தலைலருந்து?” இவ்வாறு ஆரம்பித்தவுடன் “வாடா” என்று என்னை அப்படியே அலாக்காகத் தூக்கி உள்ளே செலுத்தி, என் வாயில் கல்கண்டு, அரிசி பப்ரமுட்டு, லேக்கா உருண்டை என்று இனிப்பான வஸ்துக்களை திணித்துவிட்டு “என்ன பார்த்தே, சொல்லு…”

“நீங்க சின்னாவுக்கு சிகிச்சை எதும் பண்ணலை” என்றேன்.

“பின்ன என்னவாம் அது?”

“வீரு சொல்றான் கொக்கோகமாம் அது…”

“மாமிகிட்ட சொல்லாதே, சொல்லாம இருந்தா உனக்கு என்ன வேணும் சொல்லு? சொல்லுடா கண்ணு…”

நான் யோசித்து “எனக்கு சிங்க மார்க் பட்டாசு ஒரு சரம், ஒத்தை வெடி ஒரு டஜன், ரெட்டை வெடி ஒரு டஜன், கேப்பு துப்பாக்கி, குதிரைவால், தரைச்சக்கரம், ஊசிப்பட்டாசு, ராக்கெட், ஏரோப்ளேன், விஷ்ணு சக்கரம், லட்சுமி வெடி அப்புறம் பத்த வெக்க மட்டிப்பால் வத்தி” என்று என் சக்திக்கேற்ப ஒரு பட்டியல் சொல்லிப் பார்த்தேன்.

அவர் எழுந்து அலமாரிக்குச் சென்று ஒரு காகிதத்தில் எழுதி “இதைக் கொண்டு போய் டி.பி.ஜி. கடையில கொடு. உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ. ஆனால மாடில என்ன பார்த்தே?”

“ஓலைப் பட்டாசு காயப் போடறப்ப உங்களையும் சின்னாவையும்.”

“ஏய்… யாரும் கேட்டா அங்க ஏதும் பார்க்கலைன்னு சொல்லணும்… அப்பத்தான் பட்டாசு.”

“சரி மாமா” என்றேன்.

“சரி மாமா” என்று என் தலையில் நெத்தினார்.

அந்த தீபாவளிக்கு நானும் வீரராகவனும் ஆசை தீர பட்டாசு வெடித்ததும் அல்லாமல், கார்த்திகைக்கும் நிறைய பாக்கி வைத்தோம். பாட்டி “ஏதுரா இத்தனை பட்டாசு?” என்றதற்கு “நாங்கள்லாம் சேர்ந்து சந்தா கட்டி வாங்கினோம் பாட்டி” என்று புளுகினேன்.

அடுத்த தினங்களில் நான எப்போது சந்தானமையங்காரை பார்த்தாலும் “இங்க வாடா” என்று உள்ளே பரிவுடன் அழைத்து “சர்க்கரைப் பொங்கல் சாப்பிடறியா? வறுத்த பாதாம் பருப்பு வேணுமா? அரவணை வேணுமா?” என்று தின்னக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

சில நாட்களில் தைரியம் பெற்று, “மாமா தெற்கு வாசல்ல புதுசா ஒரு பம்பரம் வந்திருக்கு. கோல் எடுத்தா கைல அப்படியே பூனைக்குட்டி மாதிரி தூங்கறது மாமா” என்றால்

“உடனே போய் ரெண்டு பம்பரமா வாங்கிக்கோ. தலையாரில குத்து பட்டா மாத்து பம்பரம் வேணுமோ இல்லையோ?” என்பார். அப்புறம் மேலும் தைரியம் பெற்று நிஜ கிரிக்கெட் பந்து, ஸ்டம்ப் எல்லாம் கேட்டுக் கூடக் கொடுத்துவிட்டார்.

பெருந்தேவி மாமி “என்ன இப்படி இந்தப் பிள்ளைக்குச் செல்லம் கொடுக்கறீங்க?” என்று கேட்டதற்கு “பையன் நன்னா படிக்கறான். அதுக்கு ஒத்தாசை பண்ணலாம்னு” என்றார் என்னைப் பார்த்து கண் சிமிட்டி.

இவ்வாறு இனிதாகக் கழிந்து கொண்டிருந்த தினங்கள் அதிகம் நீடிக்கவில்லை. வீரு “ஒரு பார்க்கர் பேனா கேட்டுப் பார்” என்று சொல்ல சந்தானமையங்கார் வீட்டுக்குள் சுதந்திரமாக நான் நுழைய மரவேலைப்பாடுகள் நிறைந்த கறுப்பு மேசை கண்ணாடியில் தெரிய விறுவிறுப்பாக தன்னை விசிறிக்கொண்டு சந்தானமையங்கார் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பக்கத்தில் அவர் மனைவி பெருந்தேவி கோபத்துடன் அழுதுகொண்டிருக்க, அருகே ஓரத்தில் சின்னா வாயை முந்தானையால் பொத்தி அவளும் அழுது கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் மாமி “வாடா… இந்த பிராமணன் செய்த அநியாயத்தை பார்த்தாயோ… மொட்டை மாடில சின்னாவை கூட்டி வெச்சுண்டு…”

“ஏய் நீ போடா…”

“ஏண்டி அந்த பிராமணன்தான் துப்புக்கெட்டு போய் உன் கையை புடிச்சான்னா உன் புத்தி எங்கடி போச்சு? இடுப்பொடிஞ்ச சக்களத்தி, நீ நல்ல பாம்புக்குட்டி, சக்கை திங்க வந்தவளே” அதன் பின் “உனக்கு குளிர் காய்ச்சல் வர… உனக்கு பாடை கட்ட” என்று பலமாக திட்டியதில் சின்னா, “கிணற்றில் விழப் போகிறேன்” என்று புறப்பட எனக்கு அழுகை வந்து விட… “பாருங்கோ…. இந்த பிள்ளை கூட வருத்தப்படறது. உங்களுக்கு வெக்கமா இல்லை… ஓசிச் சிறுக்கி.”

நான் அழுதது அதற்காக இல்லை. சந்தானமையங்காரிடம் என் ப்ளாக்மெயில் இப்படி திடீரென்று மதிப்பிழந்து போய் விட்டதே என்றுதான்!

அடுத்த தீபாவளிக்கு பழையபடி ஐந்து ரூபாய்க்கு ஓலைப்பட்டாசு, வேட்டுக் குழாய்தான்.

அந்த தீபாவளியை மறக்க முடியாது தான். அந்த வயசிலேயே எனக்கு கொஞ்சம் அவசரப்பட்டுக் கிடைத்த சில சில ஞானங்களால் அறியாச் சிறுவன் அறிந்த சிறுவனாகிவிட்டேன். அது என் பிற்கால வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டது! என் பிழைப்பே இந்த மாதிரி மற்றவர் பற்றி தகவல் அவதூறு சேகரித்து விலை பேசுவதாகி, அதைப் பயன்படுத்திக் கொண்டு பணம் சேர்ப்பதாகி விட்டது. எத்தனையோ பேரை என் நளின மூர்க்கங்களில் பயமுறுத்தி நிறையவே காசு சேர்த்து விட்டேன். இப்போது தீபாவளிக்கு என் இரண்டு மனைவியருக்கும் எட்டாயிரம் ரூபாயில் புடவை எடுக்கிறேன். என் பிள்ளைகள் தொடர்ந்து அறுபது நிமிஷம் வெடிக்கும் ஆயிரம் ரூபாய் சரமெல்லாம் வெடிக்கிறார்கள்.

நான் பண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டு, என் நாய்களுடன் பேசுகிறேன். “சீஸர், ரீட்டா… அந்த தீபாவளியன்று சந்தானமையங்காரை மாடியில் பார்த்திராவிட்டால், நான் எங்காவது பி.காம். படித்து விட்டு ரயில்வே கிளார்க்காக நிம்மதியாக இருந்திருப்பேனே!”

ஆம்! என் முதல் பொய், முதல் பெண் தரிசனம், முதல் பணம் பிடுங்கும் வழி எல்லாமே அந்த தீபாவளியில்தான் துவங்கி திருத்த முடியாமல் விகாரப்படுத்தப்பட்டேன்.

காரணம் – ஓலைப் பட்டாசு!

5 thoughts on “சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பு – “ஓலைப் பட்டாசு”

 1. “நான்கு முடிச்சு”

  -சூர்யகுமாரன்

  அறிமுகம் ஒன்று: வசந்த்

  என் பெயர் வசந்த்.இத்தனை நாள் நன்றாகத்தான் இருந்தேன்.பைக்,கோக்,டிஸ்கோத்தே என்று வழக்கமான இளைஞன் போல இருப்பவனில்லை.யூந்நோ.லென்னனும்,டி.எச்.லாரன்ஸூம் எனக்குப் பிடிக்கும்.சிஸ்டம் ரிஜிஸ்ட்ரியில் டீபக் ப்ரோக்ராமிங் எழுதப் பிடிக்கும்.எப்போதாவது கோவா போய் தியானம் செய்யப் பிடிக்கும்.ஆனால் சிகரட்,தண்ணி,பெண்கள் என்று எதுவூம் கிடையாது.சுத்தமான பாச்சலர் நான்.ஆனால் சில வாரங்களாக எனக்குள் என்னவோ ஆகிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.அப்கோர்ஸ் நான் ‘நானாக’ இல்லை.பங்க் கடையில் போய் சிகரட் வாங்கி கொண்டு வருகிறேன்.அந்த சிகரட்டை ஸ்டைலாக வாயில் துர்க்கிப் போட்டுக் கொள்கிறேன்.என் ரூம்மேட் அடைகாத்து வரும் பெண்ணின் மேல் எனக்கு இன்ஸ்டன்ட்டாக காதல் வருகிறது.
  காதல் என்றால் ஹக் என்று சிரித்து துப்பியிருக்கிறேன்.ஆனால் இப்போது அந்த பெண்ணை அவன் அவளது கல்லுhரியில் போய் அந்தாக்ஷரி போல என்னவோ பாடல் போட்டியில் பாடிவிட்டு வந்ததும் அவர்கள் இரண்டு பேரும் டூயட் போல பாடிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.நான் ஜென்டில்மேனாக அவர்களது காதலுக்கு மரியாதை செய்திருக்க வேண்டாம்?
  எனக்கு அந்த பெண்ணை அனுபவித்தால் என்ன என்று ஆசை வருகிறது.சே.சே.நானொன்றும் பிரகாஷ்ராஜ்,ரகுமான் டைப் ஆளில்லை.ஆனால் என் உயிர் நண்பன் காதலிக்கும் பெண்ணை அனுபவித்து விட வெறித்தனமாக ஆசை வருகிறது.
  தப்புதானே?
  அதனால்தான் டாக்டரை சந்திக்க வந்து விட்டேன்.அவரிடம் துப்புறவாக எல்லாவற்றையூம் சொல்லி விட்டேன்.டாக்டர்எடுத்த எடுப்பிலேயே மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழாங்கிலத்தில் கேட்டார்.
  “யூ பிகம் எ பாரனாய்டு ஜென்டில்மேன்.உனக்கு மனநோய் வந்திருக்கலாம்னு நினைக்கறேன்”
  ஆனாலும் அந்த பெண்ணை நான் அனுபவித்தேன் ஆக வேண்டும்.என் உயிர் நண்பனை கொன்றாவது!

  அறிமுகம் இரண்டு:டாக்டர் விஸ்வநாத்

  நான் டாக்டர்தான்.ஆனால் சாதாரண டாக்டர் இல்லை.ஊசி போட்டு,ஸ்கேன் எடுக்க வைத்து,அலையவிட்டு ஒன்றும் இல்லை என்று சொல்லும் ஸ்பெஷலிஸ்ட் இல்லை.நான் ஒரு மனோதத்துவ டாக்டர்.மேம்போக்காகப் பார்த்தால் நானே ஒரு சைக்கோ போலத்தான் இருப்பேன்.வெளியில் உட்கார்ந்து டைப்அடிக்கும் பெண் கூட சற்று வெடவெடவென்று நடுக்கத்துடன்தான் கம்ப்யூட்டரை தட்டிக் கொண்டிருப்பாள்.என்னிடம் அவன் வந்து சொன்னது கேட்டு எனக்கே தலை-
  பெரிய பணக்கார வீட்டுப் பையன்.வந்து உட்கார்ந்தபோதே சிகரட்டை ஸ்டைலாகத் துhக்கிப் போட்டுப் பிடித்து விட்டு,”டீக் ஹை”என்றான்.சொல்லி முடித்தகையோடு,”டாக்டர் எனக்கு சிகரட் பிடிக்கற பழக்கமே இல்லை”என்றான்.
  “என்னப்பா சொல்ற.ஆர் யூ இன் டிப்ரஷன்”என்றேன்.
  “இல்லை.திடீர்னு நான் வேற மாதிரியாகிட்டேன்.எனக்கு ஒரு நண்பன் இருக்கான்.அவனுக்கு ஒரு காதலி இருக்கா.அவ ஏழையான பொண்ணு.ஒரே அக்காதான்.அவளும் சினிமால துணைநடிகையா இருக்கா.அந்த பொண்ணும் என் நண்பனும் லவ் பண்றதை நான் பார்த்திருக்கேன்.இப்ப கொஞ்சநாளா எனக்கு பொறாமையா இருக்கு.நானே அந்த பொண்ணை அடைஞ்சா என்னன்னு இருக்கு”
  “இதை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லையில்லை பார்த்த மாதிரி இருக்கே சார்”
  “அதுதான் டாக்டர் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.இதே போல ஒரு ஸீன் மூன்று முடிச்சு படத்துல வருது.ரஜனியூம்,கமலும் நடிச்ச படம்.நான்தான் ரஜனி போல நடந்துக்கறேன்.இன்ஃபாக்ட் நான் தமிழ்ப்படங்களே பார்க்க மாட்டேன்.ஹிந்திப்படங்கள்தான் பார்ப்பேன்.அதுவூம் ஆர்ட் ஃபிலிம்ஸ்தான் பார்ப்பேன்.நான் போய் ஒரு தமிழ்ப்படத்துல வர்ற கதாபாத்திரம் மாதிரி நடந்துக்கறேன்னா சம்திங் ஃபிஷி.எனக்குள்ள என்னவோ ஆகியிருக்கு.இது ஏதாவது மனநோயா டாக்டர்”
  “தெரியலை.ரெண்டு சிட்டிங் கவூன்சலிங் தரனும்.சைக்கோதெரபி தேவைப்படலாம்.சமீபத்துல நீங்க எங்கயாவது மூன்று முடிச்சு படத்தை டிவியில இல்லைன்னா டிவிடியில பார்த்திங்களா?”
  “இல்லை டாக்டர்”
  “சரி.நான் யோசிச்சு வைக்கறேன்”என்றபோதே கொரியரில் எனக்கு ஒரு அழைப்பிதழ் வந்தது.அவன் எழுந்து போனதும் எடுத்துப் பார்த்தேன்.அந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பெயரில் என் பெயரை அடுத்து,மைகாட் அந்த பெயர்…
  அது மூன்று முடிச்சு படத்தை இயக்கியவரின் பெயர்.
  அவரிடம் இது பற்றி கேட்கலாமா?தவறாக நினைத்துக் கொள்வாரா அல்லது இது அவருக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை ஏற்படுத்துமா?
  தொலைபேசியை எடுத்தேன்.
  மூன்று முடிச்சு பட இயக்குநர்தான் பேசினார்.
  “உங்களால ஒரு காரியம் ஆகனும்.உங்க படம் பத்தி பேசனும்.ஒரு சுவாரஸ்யமான தகவல்”என்றேன்.
  “சரி வாங்க”என்றார்.

  அறிமுகம் மூன்று:இயக்குநர்:

  நான் வழக்கம் போல வெள்ளை சட்டை,வெள்ளை பான்ட்டில் இருந்தேன்.இப்போது நான் அதிகம் படம் இயக்குவது கிடையாது.படத்தயாரிப்பை என் கம்பெனியினர் பார்த்துக்கொள்கிறார்கள்.டிவியில் எப்போதாவது சீரியல் இயக்குகிறேன்.என்னை சந்திக்க ஒரு டாக்டர் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்;.லேசாக கோடிட்டிருக்கிறார்.முப்பது வருடத்திற்கும் மேல் ஆகி விட்டது.நான் அந்தப் படத்தை எடுத்து.அதில் நடித்தவர்கள் இப்போது சூப்பர் ஸ்டார்களாக ஆகிவிட்டார்கள்.அந்த படத்தில் வரும் வில்லன் போல அவரது பேஷன்ட் நடந்து கொள்கிறானாம்.அந்த படத்தில் வருவது போலவே அவன் நண்பனின் காதலியை அனுபவிக்கத் துடிக்கிறானாம்.
  டாக்டர் வந்தார்.என்னுடைய ஆரம்பகால படங்களில் நடிக்கும் குணச்சித்திர நடிகரைப் போலவே இருந்தார்.ஆங்கிலத்தில் சொன்னதையே தமிழில் மறுபடி சொன்னார்.கனத்த குரல்.என் முகத்தையே பார்த்தவாறு இருந்தார்.
  “என்ன பார்க்கறிங்க?”என்றேன்.
  “எப்படி அந்த தீம் தோன்றியது உங்களுக்கு.ஒரு முடிச்சு.இன்னொரு முடிச்சுன்னு அடுக்கிட்டே போவிங்களே.அந்த படத்தை வசந்த் பார்த்தானா இல்லையான்னு தெரியலை.அவன் சொன்னது முழுக்க பொய்னுதான் நினைச்சேன்.ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ்வை வைச்சு அவனை கண்காணிக்க வைச்சேன்.அவன் பொய் சொல்லலை.அவனோட ரூம்மேட் லவ் பண்ற பொண்ணை இவன் டாவடிக்கறான்.வர்ற வீக் என்ட் அவங்க ஒரு படகு சவாரி போறாங்க.அங்க வைச்சு இவன் அந்த காதலனை தண்ணியில தள்ளி விட்டு கொன்னுடுவானோன்னு பயமா இருக்கு.பயம் எனக்கு மட்டுமில்லை.அவனுக்கும் இருக்கு.அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா அவனை கொன்னுட்டு அவளை அடைஞ்சிடுவேன்னு சொல்றான் டைரக்டர் சார்”
  “நான் எடுத்தது ஒரு படம்.அது எடுத்து ஒரு முப்பது வருஷத்துக்கு மேல ஆயிடுச்சி.படத்துல நடிச்சவங்களுக்கே இப்படி வாலிப பயசுல பசங்க இருக்காங்க.அந்த படத்தால பாதிப்பு வரும்னு சொன்னிங்கன்னா நான் என்ன சொல்றது.இட்ஸ் நாட் எ மிராக்கிள்.இது ஒரு செயற்கையான நம்பிக்கை.படம் வேற வாழ்க்கை வேற”
  “இது கற்பனை இல்லைன்னு சொல்றான் அந்த வசந்த்.உண்மையை பேசவங்க எழுதற ஒரு வரி வசனம் கூட சத்தியமான வாக்காக ஆகிடும்னு சொல்வாங்க.நீங்க எழுதின ஸ்கிரிப்ட் இருக்கா.அதை பாக்கலாமா”என்று கேட்டார் டாக்டர் விஸ்வநாத்.
  “அந்த காலத்துல ஜெராக்ஸ் வசதி கூட கிடையாது.எங்க கிடக்குன்னு பாக்கனும்.கலாகேந்திரால கேட்கனும்”
  “எனக்கென்னவோ ஒரு கொலை நடந்திரக் கூடாதேன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது சார்”
  “அப்ப அந்த வசந்துக்கு ட்ரீட்மன்ட் கொடுங்க.அடைச்சு கூட வையூங்க.ஸாரி.அடைச்சு எல்லாம் வைக்காதிங்க.இது வியாதி மாதிரி தெரியலை.சும்மா ஃபான்டஸிக்காக அப்படி கற்பனை பண்ணிக்கறான்.எங்கிட்ட அழைச்சுட்டு வாங்க நான் வேணா பேசறேன்”
  பாதியளவூ திருப்தி அவரது கண்களில் தெரிந்தது.இப்போது எனக்கே சுவாரஸ்யம் வந்து விட்டது.அந்த ஸ்கிரிப்ட் எங்கே இருக்கிறது என்று என் பெண்ணிடம் கேட்க வேண்டும்.ஒரு பதிப்பகத்தில் கூட அந்த திரைக்கதையை வெளியிடுகிறேன் என்று கேட்டிருந்தார்கள்.

  அறிமுகம் நான்கு: தேவி

  என்னைப் பார்க்கிற எல்லாரும் சொல்கிற முதல் வார்த்தை,நீ நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமா என்பதுதான்.நானென்ன ஸ்ரீதேவி மாதிரியா இருக்கிறேன்.எனக்குப் பிடித்த நடிகை ஜூடிபாஸ்டர் மட்டும்தான்.தமிழ்படங்கள் எல்லாம் நான் பார்ப்பதே இல்லை.இன்றைக்கு என் வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலுக்கு ஒரு டாக்டர் வந்திருந்தார்.யாரையோ பார்ப்பதற்கு வந்திருக்கிறார் என்று நினைத்தேன்.என்னை வார்டன் அழைத்தபோதுதான் அவர் என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று புரிந்தது.
  “சொல்லுங்க டாக்டர்.ஏதாவது ப்ளட் டொனேஷன் காம்ப் நடத்தனுமா.நீங்க எந்த க்ளப் லயன்ஸா இல்லை ரோட்டரியா”
  “ஒருத்தரை பாக்க உன்னை அழைச்சிட்டுப் போகனும்”
  “யாரை”என்று கேட்டதற்கு அவர் சொன்ன பெயர் எனக்கு அதிர்ச்சி தந்தது.அவர் ஒரு பிரபலமான டைரக்டர்.அவரது படங்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஒரு ஹிந்திப்படம் மட்டும் பார்த்திருக்கிறேன்.கமலும்,ரத்தியூம் நடித்தது என்று நினைக்கிறேன்.பார்த்து விட்டு மணிக்கணக்காக அழுதிருக்கிறேன்.இரண்டு பேரையூம் அம்போ என்று சாகடித்து விடுவார் அந்த இயக்குநர்.இப்போது அவரையா நான் நேரில் போய் பார்க்கப் போகிறேன்.பரவசமாக இருக்கிறது.இதை முதலில் அவரிடம் சொல்ல வேண்டும்.அவர் நண்பர சரியில்லை என்பதையம் சொல்ல வேண்டும் என்று என் காதலனுக்கு செல்போனில் அழைத்தேன்.அவன் என் செல்ல ராஸ்கல்.ஆனால்அப்பாவி.தன் நண்பன் வசந்த்தை முழுமையாக நம்புபவன்.எனக்கு ஆசையாக அவன் வாங்கிக் கொடுத்த புடவையைக் கூட அந்த வசந்த் சிகரட்டால் சுட்டு ஓட்டை போட்டு வைத்திருந்தான் என்பதை இப்போது சொல்லலாமா.வேண்டாம்.அவனை மூட் அவூட் செய்ய வேண்டாம்.சொன்னால் நம்பவா போகிறான் என் செல்ல ராஸ்கல்!

  மறுபடியூம் டாக்டர் விஸ்வநாத்:

  நான் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு இயக்குநரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.இந்தப் பெண்ணை ப்ரொஃபைலில் பார்த்தால் ஸ்ரீதேவி போலத்தான் இருக்கிறாள்.சற்று மேக்அப் போட்டுப் பார்த்தால் நிச்சயம் அந்த படத்து கதாநாயகி போலத்தான் இருப்பாள்.
  டைரக்டர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.எங்களை அமரச் சொன்னார்.இப்போதும் அதே வெள்ளுடையில் ஐஏஎஸ் ஆபீசர் போல இருந்தார்.மூக்கு கண்ணாடியை சரிசெய்து கொண்டவாறே சொன்னார்.
  “ஸ்கிரிப்ட் கிடைச்சாச்சு”
  “நான் சொன்ன பொண்ணு இதுதான்.அந்த பையன் கொஞ்சம் முரட்டுத்தனமா இருப்பான்.அதனாலதான் அவனை அழைச்சிட்டு வரலை”
  “சொல்லும்மா.நீ லவ் பண்ற பையனோட நண்பன் உங்க காதலைப் பாத்து பொறாமைப்படறானா”என்றார்.
  “ஆமா”
  “பயப்படாத.படகு சவாரி போறிங்களாமே இந்த வீக் என்ட்”
  “அதை தள்ளிப்போட்ரலாம்னு அவர்கிட்ட சொன்னா கேட்க மாட்டார்.போயே ஆகனும்.ஏன் சார்.எனக்கு எதுவூமே புரியலை.சார் அந்த படத்துல ஏன்சார் ரத்தியை கொன்னுட்டிங்க.பக்குனு ஆகிப்போச்சு எனக்கு”
  “ஆல்ரைட்.உன் காதலனுக்கு ஆபத்து வராது.பயப்படாம போய்வா”என்றார்.
  “என்ன சார் பண்ணினிங்க”
  “ச்சும்மா”என்றார் அவா; அறிமுகப்படுத்திய பிரபல நடிகன் மாதிரியே.அந்தப்பொண்ணை அழைத்துக் கொண்டு போய் அவளது ஹாஸ்டலில் விட்டு விட்டு நான் என் கிளினிக்கிற்கு போய் விட்டேன்.அந்த வசந்த அதன்பின் வரவேயில்லை.
  பிரச்சனை சுமுகமாக தீர்ர்ர்ந்திருக்கும் என்று நினைத்த நேரத்தில் என் இரண்டு ஃபோனும் அலறின.முதலில் செல்போனை எடுத்தேன்.
  “டாக்டர் தப்பு நடந்து போச்சு.நான் வேண்டாம்னு சொன்னதை கேட்காம படகு சவாரிக்கு அவர் அழைச்சுட்டுப் போனார்.அவனும் கூட வந்திருந்தான்.அவர் தண்ணியில தவறி விழுந்திட்டப்ப அவரை காப்பாத்தாம
  ‘வசந்த காலநதிகளிலே வைரமணி நீரலைகள்’னு பாட்டு பாடிட்டு இருந்தான்”என்ற பதறினாள்.
  “மைகாட் என்ன ஆச்சு”என்று லான்ட்லைனை எடுத்தேன்.சிரித்தபடி இயக்குநர் பேசினார்.
  “ஒண்னும்ஆகியிருக்காதே.நான் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் பேப்பர்ல ஆக்க்ஷனை மாத்திட்டேன்.அவ தண்ணியில விழுந்திர்றான்.வில்லப்பய காப்பாத்தாம பாட்டு பாடறான்.டென்ஷனான ஹீரோயின் வில்லனை படகுத்துடுப்பால மண்டையில அடிச்சி கொன்னுர்றா.காதலனையூம் தண்ணியில இருந்து காப்பாத்திர்றா.இப்படி வெறுமே பேப்பர்ல மாத்தி எழுதினா விதியை மாத்திடலாமா”
  “நான் கொன்னுட்டேன் சார் அந்த மாபாதகனை.படகுத்துடுப்பால அடிச்சிக் கொன்னுட்டேன்.என் லவ்வரை காப்பாத்திட்டேன்.வசந்த கால நதிகளிலே..வைரமணி நீரலைகள்..”என்று அவள் பாட ஆரம்பித்தாள்.
  என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.
  ———————-
  mail:writersuryakumaran@gmail.com
  blog:writersuryakumaran.blogspot.com

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.