துரோண கீதை (என் சிறுகதை)

அரைத் தூக்கத்தில் உடல் புரள முயற்சித்தபோது அம்புகள் காயங்களை இன்னும் கிழித்தன. “அம்…” என்று பீஷ்மர் வலியில் கொஞ்சம் முனகினார். அருகில் இருந்த ஒரு உருவம் “தண்ணீர் வேண்டுமா பிதாமகரே? மதுவும் இருக்கிறது” என்று பரபரத்தது. பீஷ்மர் கண்ணை லேசாக திறந்து பார்த்தார். ரத்தக் கறை படிந்த நீண்ட வெண்தாடியும், அதன் பின்னே அங்கங்கே கிழிந்திருந்த மஞ்சள் பட்டு மேலாடையும் தெரிந்தன. பீஷ்மர் புன்னகைத்தார்.

“உங்கள் பேரன் போல நிலத்தைத் துளைத்து கங்கை நீரை எல்லாம் கொண்டு வரமுடியாது, வில்லும் அம்புகளும் கூடாரத்தில்தான் இருக்கின்றன” என்றார் துரோணர். “உங்கள் சிஷ்யன் ஊற்றை உருவாக்கினான், அதை அடைக்கவில்லையே! இரவெல்லாம் சாரல், துரியோதனன்தான் அடுத்த நாள் வந்து அதை அடைத்தான்” என்று நகைத்தார் பீஷ்மர். “உறங்காமல் இங்கே என்ன செய்கிறீர்கள் ஆசார்யரே?” என்று வினவினார்.

“என்றைக்கு துருபதன் மகளை துச்சாதனன் இழுத்து வந்ததைப் பார்த்தும் நான் பேசாமல் இருந்தேனோ அன்றிலிருந்தே தூக்கம் போய்விட்டது பிதாமகரே!”

“நான் அதிலும் உங்களை முந்திக் கொண்டேன். அரக்கு மாளிகை பற்றி தெரிந்த நாள் முதல் என் தூக்கம் போனது” என்று பீஷ்மர் புன்னகைத்தார்.

“பாதி பாஞ்சாலத்தை நான் எடுத்துக் கொண்ட பிறகாவது நான் அஸ்தினாபுரத்தை விட்டு விலகி இருக்கலாம். யுதிஷ்டிரன் இந்திரப்பிரஸ்தத்துக்கு வந்துவிடுங்கள் என்று வருந்தி வருந்தி அழைத்தான், அவனோடு போயிருந்தால்…” என்று துரோணர் பெருமூச்செறிந்தார்.

“சரி விடுங்கள். போர் நிலை என்ன ஆசார்யரே?” என்று பீஷ்மர் கேட்டார். துரோணர் பதில் சொல்லவில்லை. சற்று நேர மௌனத்துக்குப் பிறகு அவரிடமிருந்து பெருமூச்சு எழுந்தது.

“அர்ஜுனன் யுதிஷ்டிரனின் பக்கத்தில் போரிடும்போது யுதிஷ்டிரனை நெருங்க இயலாது ஆசார்யரே!”

“ஆம், அதனால்தான் சுசர்மாவை அர்ஜுனனை போருக்கழைக்கவைத்து அவனை யுதிஷ்டிரனிடமிருந்து பிரித்தேன். இன்று சக்ர வியூகமும் வகுத்தேன். ஆனால்…”

“அர்ஜுனனை விட்டால் சக்ர வியூகத்தை உடைக்கக் கூடியவர்கள் பாண்டவ சேனையில் கிடையாதே?”

“ஒரு சிறுவன் உடைத்தான்…”

“யாரது?”

துரோணர் மீண்டும் மௌனமானார்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு பீஷ்மர் பெருமையோடு கேட்டார் – “யார் அபிமன்யுவா?”

“வீர சொர்க்கம் போய்விட்டான் பிதாமகரே! இந்தப் பாவியால்தான், என்னால்தான், என்னால்தான், என்னால்தான், என்னால்தான்” என்று சொல்லும்போது துரோணரின் குரல் உடைந்தது. தன் கண்களைக் கசக்கிக் கொண்டார். “காலம் இருந்திருந்தால் அவன் அர்ஜுனனையே விஞ்சி இருப்பான் பிதாமகரே! அவனுக்கு வித்தை சொல்லிக் கொடுத்த பிரத்யும்னன் பாக்கியசாலி. எனக்கு அந்த பாக்கியம் இல்லை என்றாலும் பரவாயில்லை, அவன் சாவுக்கு நானே காரணமாகிவிட்டேனே, என் பிரிய சிஷ்யனின் செல்வ மகனின் இறப்புக்கு நானே காரணமாகிவிட்டேனே!” என்று கலங்கினார்.

பீஷ்மரின் கண்களிலும் ஈரம் பளபளத்தது. “என் கண் முன்னாலேயே குரு வம்சத்தின் கிளைகள் வெட்டப்படுவதைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு பிரம்மா எழுதிவிட்டான்” என்று மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டார். அந்தக் கிழவர் தன் மனதை திடப்படுத்திக் கொள்வது, அழாமல் இருக்க முயற்சிப்பது தெளிவாகத் தெரிந்தது. அவரது முனகல்கள் கூட முழுமையாக வெளிப்படவில்லை. “அம்…”, “அம்…” என்பதோடு நின்றுவிட்டது. இரண்டு முறை செருமிக் கொண்டார். பிறகு “போர் என்று வந்தாயிற்று, இறப்பில் என்ன ஆச்சரியம்? உங்களைப் போன்ற ஒரு சுத்த வீரர் கையில் இறந்தது அவனுக்குப் பெருமைதான் ஆசார்யரே!” என்றார்.

இப்போது துரோணர் முழுமையாக உடைந்து அழுதார். “நானா வீரன்? நானா சுத்த வீரன்? ஆறு பேர், பிதாமகரே, ஆறு மகாரதிகள்! நானும் கர்ணனும் அஸ்வத்தாமனும் பூரிஸ்ரவசும் சல்யனும் கிருபனும் ஒன்றாக சேர்ந்து அவனைத் தாக்கினோம்! அப்படியும் அவன் எங்களை சமாளித்தான். அவனை வெல்ல முடியாமல் க்ஷத்ரிய குலத்துக்கே யுத்த முறைகளையும் நியாயங்களையும் கற்பிக்கும் ஆசார்யன் நான் கர்ணனிடம் அபிமன்யுவுக்குப் பின்னால் சென்று அம்பெய்தி அவன் வில்லை உடைக்குமாறு சொன்னேன். என் நாவு கூசவில்லையே! அந்த சூத மகன் கூட இது தர்மம் இல்லை என்று என்னை மறுத்தான் பிதாமகரே! மகா ஆசார்யன், நான் அந்த அதர்மமான காரியத்தைச் செய்யச் சொன்னேனே!”

“சக்ர வியூகத்தின் நடுவில் ஆயுதங்களை இழந்து கொல்லப்பட்டானா?”

”ஆம் பிதாமகரே! என் கையில் அவன் இறக்கவில்லை, ஆனால் அவனைக் கொன்றது நான்தான்!”

பீஷ்மரின் கண்கள் மின்னிக் கொண்டிருந்த ஏதோ ஒரு நட்சத்திரத்தில் குத்திட்டன. துரோணரின் தலை நிமிரவில்லை. அவ்வப்போது அடக்கமுடியாத ஒரு விம்மல் கேட்டது. சில நிமிஷங்கள் கழித்து துரோணர் சொன்னார் – “அர்ஜுனன் சபதம் எடுத்திருக்கிறான் – நாளைக்குள் ஜெயத்ரதனைக் கொல்லப் போவதாக.”

“ஜெயத்ரதன்?”

“அபிமன்யுவை யாரும் பின்தொடரமுடியாதபடி அவன் சக்ரவ்யூகத்தை மூடிவிட்டான். அதனால் ஜெயத்ரதன்தான் அபிமன்யுவின் இறப்புக்குக் காரணம் என்று அர்ஜுனன் நினைக்கிறான். அவனுக்கு என் மேல் உள்ள அபிமானம் அவன் கண்ணை மறைக்கிறது.”

பீஷ்மர் கண்ணை மூடிக் கொண்டார். ஒரு நாழிகை கழித்து கண்ணைத் திறந்தபோதும் துரோணர் அங்கேயே குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தார். பீஷ்மர் கனைத்தார். நிமிர்ந்து பார்த்த துரோணரிடம் கேட்டார் – “இங்கே எதற்கு வந்தீர்கள் ஆசார்யரே? என்னிடமிருந்து என்ன வேண்டும்?”

“நான்… ஏன்…நான் இப்படி…அதர்மம்…பிராமணனா க்ஷத்ரியனா…” துரோணரால் கோர்வையாக பேசமுடியவில்லை. அருகில் இருந்த குடுவையிலிருந்து கொஞ்சம் மதுவை அருந்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“நான் நல்ல பிராமணனும் இல்லை, நல்ல க்ஷத்ரியனும் இல்லை, நல்ல குருவும் இல்லை, நல்ல மனிதனும் இல்லை. துருபதன் என்னை அவமானப்படுத்தியபோது சத்வ குணம் நிறைந்த நல்ல பிராமணனாக இருந்தால் அவனை மன்னித்திருப்பேன். நல்ல க்ஷத்ரியனாக இருந்தால் அவனை அங்கேயே எதிர்த்து போராடி வென்றிருப்பேன் அல்லது இறந்திருப்பேன். அவன் படை பலத்தைக் கண்டு அஞ்சினேன், அதனால்தான் அஸ்தினாபுரத்தின் உதவியை நாடினேன். பாண்டவர்கள் ஐவர் மட்டுமே போய் துருபதனை வென்றார்கள், அந்த க்ஷத்ரிய ரஜோ குணமும் என்னிடம் முழுமையாக இல்லையே பிதாமகரே! நல்ல குரு என்ற பெயர் மட்டுமே என் சொத்து. இன்று அதுவும் போனது. நான் சொல்லிக் கொடுத்த யுத்த நியாயங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்று நிரூபித்துவிட்டேனே! நான்…நான்…நான் இவ்வளவு தாழ்ந்த குணம் உடையவனா? என்னைப் பற்றி இனி இந்த உலகம் என்ன சொல்லும்?”

“ஆசார்யரே, நீங்கள் மாவீரர். உத்தமமான குரு. உங்கள் புகழுக்கு எந்த பங்கமும் வராது.”

“ஆனால் என் மனம் என்னை அறுக்கிறதே ஐயா! நான் ஏன் இப்படி செய்தேன்? எனக்கே புரியவில்லையே?”

“ஆசார்யரே, உலகை ஏமாற்றலாம். என்னை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதில் என்ன பயன்? உங்கள் காரணங்கள் என்ன என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.”

துரோணர் அடிபட்ட கண்ணுடன் பீஷ்மரைப் பார்த்தார். பீஷ்மர் கேட்டார் – “ஏகலைவனின் கட்டை விரலை ஏன் கேட்டீர்கள்? அர்ஜுனனை விட அவன் சிறந்த வில்லாளியாக வந்துவிடக் கூடாது என்பதற்காகவா கேட்டீர்கள்?”

துரோணர் அதிர்ந்தார். அவரது கண் இடுங்கித் துடித்தது. நெற்றி நரம்புகள் முறுக்கேறின. அவர் கையில் இருந்த மதுக் குடுவை உடைந்து சிதறியது.

சில நிமிஷங்களுக்குப் பிறகு துரோணர் கேட்டார். “ஏகலைவனைப் பற்றி வேறு யாருக்கெல்லாம் தெரியும்?”

“விதுரன் என்னைப் போலவே மனிதர்களைப் புரிந்து கொள்வதில் மிகவும் திறமைசாலி. அவன் யூகித்திருப்பான். வாசுதேவ கிருஷ்ணன் எங்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடக் கூடியவன். கத்தி போன்ற மூளை அவனுக்கு. ஒரு விஷயத்தை சுற்றி இருக்கும் எல்லா திரைகளையும் கிழித்துவிட்டு அதன் உள்ளே இருக்கும் உண்மையை புரிந்து கொள்வதில் அவனுக்கு இணை அவனே. அவனுக்குத் தெரிந்திருக்கும்.”

“மனதில் புதைத்து வைத்திருந்த ரகசியம் – நானே மறந்துவிட்டேன் என்று நினைத்த ரகசியத்தை நீங்கள் எப்போதோ புரிந்துகொண்டுவிட்டீர்கள். ராஜ்ய பரிபாலனத்தில் வித்தகர் அல்லவா தாங்கள்? மனிதர்களைப் புரிந்து கொள்ளாமல் ஏது ராஜ்ய பரிபாலனம்? உண்மைதான் பிதாமகரே! அர்ஜுனன் என்னை மிஞ்சிய சிஷ்யனாக வருவான் என்று நான் அறிந்த கணத்தில் ஏற்பட்ட துக்கமும் வலியும் இன்னும் மரத்துப் போகவில்லை. ஏகலைவனும் அப்படி என்னை மிஞ்சிவிடக் கூடாது என்றுதான் அவன் கட்டை விரலைக் கேட்டேன். அர்ஜுனனுக்காக அந்த கீழ்செயலை செய்ததாக பரவலாகப் பேசியபோது அதை நான் மறுக்கவில்லை. சூத புத்திரனுக்கு விற்போரின் ரகசிய நுட்பங்களை கற்றுக் கொடுக்க மறுத்ததற்கும் அந்த பயம்தான் காரணம். இன்று அபிமன்யுவை வெல்ல முடியாதபோது ஏற்பட்ட ஆங்காரம், சரியான பயிற்சி கிடைத்தால் இவன் என்னைத் தாண்டிவிட்ட அர்ஜுனனையே தாண்டுவான் என்று உணர்ந்தபோது ஏற்பட்ட பொறாமை, என்னை விட சிறந்த வில்லாளியாகிவிட்ட அர்ஜுனனை இப்படியாவது பழி வாங்க வேண்டும் என்ற உந்துதல் எல்லாம் சேர்ந்துதான்…”

“பலவீனம் இல்லாத மனிதன் இல்லை ஆசார்யரே! நான் முனகும்போது “அம்…” என்றுதான் சொல்கிறேன். முழு வார்த்தை என்ன என்று நினைக்கிறீர்கள்?”

துரோணரின் கண்கள் விரிந்தன. “அம்மா இல்லையா? அம்பா அம்பா என்றுதான் சொல்ல வருகிறதா?”

“என் நினைவு முழுதும் இருப்பது அவள்தான் ஆசார்யரே, குரு வம்சம் இல்லை.”

“ஆனால் அவள் நினைவு உங்களைத் தவறான வழியில் செலுத்தவில்லையே பிதாமகரே! என் பலவீனங்களோ…” துரோணரின் கண்ணீர் திரயோதசி நிலவின் வெளிச்சத்தில் மின்னியது. “என் வாழ்வின் அர்த்தம் என்ன பிதாமகரே? பொறாமையும் தாழ்வு மனப்பான்மையும் அசூயையும்தானா? இவற்றை என்னால் வெல்லவே முடியாதா?”

“சரியான முறையில் சிந்திக்கிறீர்கள் துரோணரே! சென்றதை மறந்துவிடுங்கள். உங்கள் வாழ்வின் பொருளை நீங்கள் உணர்ந்தால் இந்த அசூயையை சுலபமாக வெல்வீர்கள். உங்கள் வாழ்வின் சாரம் அஸ்வத்தாமன் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு அம்பை எப்படியோ அப்படித்தான் உங்களுக்கு அவன். உங்கள் நினைவு முழுதும் நிரம்பி இருப்பவன் அவனே. சத்வ குணம் நிறைந்த பிராமணனாக இருந்த நீங்கள் மாறியது அவனுக்காகத்தான். நீங்களும் இறந்துபோனால் அவன் நிலை என்ன என்று சிந்தித்துத்தான் நீங்கள் துருபதனிடம் நீங்கள் உடனே போரிடவில்லை. அஸ்வத்தாமனின் எதிர்காலம் அஸ்தினாபுரத்தில் சிறப்பாக இருக்கும் என்றுதான் நீங்கள் பாதி பாஞ்சால நாட்டை வென்ற பின்னும் இங்கேயே இருந்தீர்கள். இந்திரப்பிரஸ்தத்தின் ராஜப்பிரதிநிதியாக நீங்கள் இருக்க ஒப்புக் கொண்டதற்கு ஒரே காரணம் அங்கே அஸ்வத்தாமன் கையில்தான் அதிகாரம் இருக்கும் என்றுதான். அப்படி இருக்கும்போது உங்களை விட சிறந்த வில்லாளியா என்று பொறாமைப்படுவதில் என்ன பெரிய பொருளிருக்கிறது? எதிராளி உங்களை விட சிறந்தவனாக, சமமானவனாக, குறைந்தவனாக எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். போரிடுவது இப்போது உங்கள் கடமை, எதிராளியின் தரத்தைப் பற்றி எண்ணாமல் எப்படிப் போரிடுவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.உங்களை அர்ஜுனன் மிஞ்சிவிட்டான் என்பது உண்மை, ஆனால் அர்ஜுனனாலும் உங்களைத் தோற்கடிக்க முடியாது என்பதும் உண்மைதானே ஆசார்யரே! உங்களை வெல்ல யாராலும் முடியாது, ஆனால் உங்களுக்கு இணையாக போரிடக் கூடிய சிலர் – வெகு சிலர் – இருக்கிறார்கள் என்பதை உணருங்கள். முடிந்தால் அவர்களை தவிர்த்துவிட்டு மற்றவர்களிடம் போரிடுங்கள். வெற்றி ஒன்றே க்ஷத்ரிய தர்மம். ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான். கிருஷ்ணன் ஜராசந்தனிடம் தோற்று மதுராவை விட்டு துவாரகையை நிறுவினான். அவர்கள் புகழ் மங்கிவிட்டதா என்ன?நீங்கள் போரிடுவது அஸ்வத்தாமனுக்காக; அவன் எதிர்காலத்துக்காக; அவன் நல்வாழ்வுக்காக; அவனுக்காக மட்டுமே! அந்த நினைவோடு நீங்கள் போரிட்டால் குரோதம், அசூயை எல்லாம் உங்கள் மனதிலிருந்து அகன்றுவிடும்.”

“அவனுக்கு என்னாகுமோ என்று சில சமயம் அச்சமாக இருக்கிறது பிதாமகரே!”

“அஞ்ச வேண்டாம். அஸ்வத்தாமன் இந்தப் போரில் இறக்க மாட்டான். நீண்ட காலம் வாழ்வான்.”

“இது உண்மைதானா பிதாமகரே, இல்லை என்னைத் தேற்றுவதற்காக சொல்கிறீர்களா?”

“என் உள்ளுணர்வு சில சமயம் எதிர்காலத்தை எனக்குக் காட்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது பொய்ப்பதில்லை. ஒரு வேளை சூரியன் மேற்கே உதித்தால், கங்கை வற்றினால், கிருஷ்ணன் பாண்டவர்களை கைவிட்டு கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டால், யுதிஷ்டிரன் பொய் சொன்னால், துரியோதனன் போரை நிறுத்திவிட்டு சமாதானமாகப் போனால், அவன் இறப்பதும் நடக்கக் கூடும்.”

மீண்டும் இரண்டு கிழவர்களும் மௌனத்தில் ஆழ்ந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு துரோணர் “விடை பெற்றுக் கொள்கிறேன் பிதாமகரே! நாளை மீண்டும் வந்து பார்க்கிறேன். உங்கள் குலக் கொழுந்தின் சாவுக்கு நான் காரணம் என்று தெரிந்தும் எனக்கு வழி காட்டியதற்கு நன்றி!” என்று சொல்லிவிட்டு தன் கூடாரத்தை நோக்கி நடந்தார். பீஷ்மர் “நாளையா?” என்று நினைத்துக் கொண்டே துரோணரின் முதுகை நோக்கிப் புன்னகைத்தார்.

முந்தைய சில சிறுகதைகள்:
சுப்பிரமணியின் காதல்
அம்மாவுக்கு புரியாது

14 thoughts on “துரோண கீதை (என் சிறுகதை)

 1. //நான் நல்ல பிராமணனும் இல்லை, நல்ல க்ஷத்ரியனும் இல்லை, நல்ல குருவும் இல்லை, நல்ல மனிதனும் இல்லை. துருபதன் என்னை அவமானப்படுத்தியபோது சத்வ குணம் நிறைந்த நல்ல பிராமணனாக இருந்தால் அவனை மன்னித்திருப்பேன். நல்ல க்ஷத்ரியனாக இருந்தால் அவனை அங்கேயே எதிர்த்து போராடி வென்றிருப்பேன் அல்லது இறந்திருப்பேன். //

  –இந்த இடத்துத் தெளிவும்,

  “…மனிதர்களைப் புரிந்து கொள்ளாமல் ஏது ராஜ்ய பரிபாலனம்? உண்மைதான் பிதாமகரே! அர்ஜுனன் என்னை மிஞ்சிய சிஷ்யனாக வருவான் என்று நான் அறிந்த கணத்தில் ஏற்பட்ட துக்கமும் வலியும் இன்னும் மரத்துப் போகவில்லை. ஏகலைவனும் அப்படி என்னை மிஞ்சிவிடக் கூடாது என்றுதான் அவன் கட்டை விரலைக் கேட்டேன். அர்ஜுனனுக்காக அந்த கீழ்செயலை செய்ததாக பரவலாகப் பேசியபோது அதை நான் மறுக்கவில்லை. சூத புத்திரனுக்கு விற்போரின் ரகசிய நுட்பங்களை கற்றுக் கொடுக்க மறுத்ததற்கும் அந்த பயம்தான் காரணம். இன்று அபிமன்யுவை வெல்ல முடியாதபோது ஏற்பட்ட ஆங்காரம், சரியான பயிற்சி கிடைத்தால் இவன் என்னைத் தாண்டிவிட்ட அர்ஜுனனையே தாண்டுவான் என்று உணர்ந்தபோது ஏற்பட்ட பொறாமை, என்னை விட சிறந்த வில்லாளியாகிவிட்ட அர்ஜுனனை இப்படியாவது பழி வாங்க வேண்டும் என்ற உந்துதல் எல்லாம் சேர்ந்துதான்…”//

  — இந்த இடத்து உள்மனம் விரிந்து வெளிப்பட்ட பாங்கும்,

  படித்து முடித்தும் மனதை விட்டு அகலாமல், கொஞ்ச நேரம் அல்லாட வைத்தது. ‘துரோண-கீதை’ என்று தேர்ந்தெடுத்த தலைப்புக்கு நியாயம் வழங்குவதாகவேப் பட்டது.

  உண்மையில் குருவாகப்பட்டவன் தனக்குக் கைவசப்பட்ட ஞானம், தன் சீடர்களின் மூலம் வழையடி வாழையாக பரவி கிளைப்பரப்ப வேண்டும் என்றே விரும்புவான் என்பது இயல்பு.
  காரணம் தனிமனித சொந்தச் சிறப்பைத் தாண்டி, தனக்குத் தெரிந்ததை தன்னை மீறிக் காதலிக்கும் ஒரு ஞானவான், தன்னைத் தாண்டி அதன் வீச்சையும், வளர்ச்சியையும் காதலிக்கிறான் என்பது அடிப்படை உண்மை. இதற்குக் காரணம், வாழ்வின் நிலையாமை. தான் அழிந்துபட்டும், தனக்குத் தெரிந்தது, அழிந்துபடக் கூடாதென்கிற ஆவேசம். ஆனால், காரண காரியத்தோடையும், பல நியாய-அநியாய பின்னல்களை உள்ளடக்கி இதற்காக இது என்று போகும் இதிகாசங்களின் மேன்மைகளுக்கு யதார்த்த பூர்வமாக எல்லாமே அழகாகத் தான் இருக்கின்றன.

  ‘துரோணர்’ நாடகத்தின் ஒரு சீனைப் பார்த்து அனுபவிக்கிற உணர்வு உங்களதைப் படிக்கையில் ஏற்பட்டது. மஹாபாரதம் ஒரு மஹாசமுத்திரம். அந்த சமுத்திரத்திலிருந்து ஒரு திவலை போன்ற ஒரு காட்சியை எடுத்துச் சொல்கையில், இங்கேயும் அங்கேயும் இந்தக் கதைத் தொடர்பான சில கதைப்போக்குகளும் படிப்பவர்க்குப் புரிகிற மாதிரி அமைத்திருந்தீர்களானால், ‘ஒரு காட்சி’ உணர்வேற்படாமல் கதையின் முழுமையுணர்வு உணரப்பட்டிருக்கும். கதை தெரியாதோருக்கும், தெரிந்து மறந்தோருக்கும் இன்னும் கொஞ்சம் கூடுதலான ஈடுப்பாட்டுணர்வு ஏற்பட்டிருக்கும்.

  அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட காட்சியை எடுத்துக் கொண்டு அலசியதில், படிப்போருக்கு அது பற்றிய யோசனைகள் கொடுப்பதில் வெற்றியடைந்திருப்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

  Like

 2. ஆர்.வி,

  மகாபாரதம் உங்கள் மனதில் ஆழப் படிந்துவிட்ட காவியம் என்பதால் அதைக் களமாக்கி எழுதியது நல்ல தேர்வு. துரோணரின் மனக் கொந்தளிப்புகளை அந்த பாத்திரத்தின் ஆழத்தின் உள்ளே ஊடுருவி பின் தொடர முயற்சித்திருக்கிறீர்கள். அது நன்றாக வந்திருக்கிறது. கதையின் உளவியல் அம்சமும் நன்று.

  சிறுகதையை விட ஓரங்க நாடகம் என்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. இதற்கான தூண்டுதல் உங்களுக்கு ’வடக்கு முகத்தில்’ இருந்து கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  Like

 3. ஜீவி, ஒரு காட்சியாகத்தான் எழுத முயற்சி செய்தேன். என்னால் இன்னும் சிறுகதை வடிவத்தில் ஒரு காட்சியைக் காட்ட முடியவில்லை போலும். ஜடாயுவும் ஓரங்க நாடகம் போலிருக்கிறது என்று சொல்லி இருந்தார்.
  ஜடாயு, வடக்கு முகம் inspire செய்தெல்லாம் எழுதவில்லை. ஆனால் இனி மேல் அப்படி சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன். 🙂
  சந்திரமௌலி, கதை உங்களுக்குப் பிடித்திருந்தது மகிழ்ச்சி!

  Like

 4. Dear RV, excellent one.

  I enjoyed fully. Eventhough with more dialogues and lesser feelings, it is very good to read.

  It is the speciality of “Mahabaratham’. The Ramayanam will travel in a straight line, where as Mahabaratha is having toomany branch stories. Each and every charector has its own history in their way.

  Please continue, we are waiting to enjoy.

  Like

 5. ஐஸ்வர்யா மற்றும் சாரதா, துரோண கீதை உங்களுக்குப் பிடித்திருந்தது மகிழ்ச்சி!
  சாரதா, மகாபாரதம் மற்றும் ராமாயணம் பற்றி நீங்கள் சொல்வது எனக்கு மிகச்சரி.

  Like

 6. இந்த பீஷ்மர் அம்பா புனைவு ஆச்சர்யம் அளிக்கிறது. இப்படி எழுத என்ன காரணம்? அம்பா தன் வாழ்வை அழித்துக் கொள்ள தான் காரணம் ஆகி விட்டதால் பீஷ்மர் இப்படி ஒரு உளவியல் பாதிப்பில் இருக்கக் கூடும் என்ற கற்பனையா இல்லை அதற்கு ஏதாவது கதை இருக்கா?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.