கப்பலோட்டிய தமிழன் – ம.பொ.சி. புத்தகத்துக்கு கல்கியின் விமர்சனம்

கப்பலோட்டிய தமிழன் புத்தகத்துக்கு 1946 நவம்பரில் கல்கி எழுதிய விமர்சனம் (படித்தேன் ரசித்தேன் தொகுப்பிலிருந்து)

நாளது நவம்பர் மீ 18உ தமிழ்நாட்டின் பல இடங்களிலும் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் தினத்தைக் கொண்டாடினார்கள். பலரும் பல விதமாய்க் கொண்டாடினார்கள். தமிழ்ப் பண்ணையாளர்கள் அந்தப் புனித தினத்தைக் கொண்டாடிய விதம் மிகச் சிறந்தது என்று சொல்ல வேண்டும். வ.உ.சி. தினத்தில் இந்த அருமையான, அழகான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

புத்தகத்தின் அட்டையில் தேசியக் கொடி பறக்கும் கப்பல் கடலைக் கிழித்துக் கொண்டு செல்லும் காட்சி தத்ரூபமாய் அமைந்திருக்கிறது. புத்தகத்தின் உள்ளேயோ ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வரியிலும் வ.உ. சிதம்பரனார் காட்சியளிக்கிறார். தமிழ் நாட்டின் அந்த ஆதி தேசபக்த வீரர் நம்மோடு கை குலுக்குகிறார். நம்முடைய தோளோடு தோள் சேர்த்துக் குலாவுகிறார். நம்மோடு சேர்ந்து இந்த நாட்டின் பரிதாப நிலையை எண்ணிக் கண்ணீர் வடிக்கிறார். கோபத்தினால் அவருடைய மீசை துடிக்கும்போது நம்மில் மீசையில்லாதவர்களுக்கும் மீசை துடிக்கத்தான் செய்கிறது. கண்கள் கோவைப்பழம் போல் சிவந்துவிடுகின்றன. அவர் சிறைக்குச் செல்லும்போது நாமு உடன்செல்கிறோம். அவர் செக்குச் சுற்றும்போது நாமும் சுற்றுகிறோம்; அல்லது நமது தலை சுற்றுகின்றது. அவர் களைத்துச் சோர்ந்து மூர்ச்சித்து விழும்போது நாமும் ஏறக்குறைய நினைவை இழந்துவிடுகிறோம்.

ஸ்ரீ வ.உ. சிதம்பரனார் கவிதை எழுதும்போது – மோனை எதுகைப் பொருத்தம் பார்த்து, அகவற்பாவோ வெண்பாவோ இயற்றும் சமயத்திலே மட்டும் – அவரோடு நாம் ஒன்றாக முடிவதில்லை. அவர் வேறு நாம் வேறு என்பது நினைவு வந்து சற்று எட்டி நின்று அவர் எழுதுவதைப் பார்க்கிறோம்.

ஸ்ரீ ம.பொ. சிவஞானக் கிராமணியாருக்கு ஸ்ரீ. வ.உ.சி. அவர்களுடன் நேரில் பழக்கம் உண்டா, சிநேகிதம் உண்டா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. இந்தப் புத்தகத்திலிருந்தும் வெளியாகவில்லை. ஆனால் வ.உ.சி. அவர்களோடு கிராமணியாருக்கு ஆன்மநேய ஒருமைப்பாடு பரிபூரணமாக அமைந்திருக்கிறது என்பது இந்த நூலிலிருந்து நன்கு வெளியாகிறது. வாழ்நாளெல்லாம் உடன் இருந்து பழகிய ஆத்மா சிநேகிதர்கள் கூட ஒருவருடைய வரலாற்றை இதைக் காட்டிலும் சிறந்த முறையில் எழுத முடியாது. வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கையிலும் குண விசேஷங்களிலும் தோய்ந்து அனுபவித்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

என்னும் பொய்யாமொழிக்கு, ஸ்ரீ சிவஞான கிராமணியார் எழுதியுள்ள வ.உ.சி. வரலாறு மிகச் சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.

நாமக்கல் கவிஞர் இந்த நூலுக்கு முப்பத்தாறு பக்கங்கொண்ட ஒரு முன்னுரை தந்திருக்கிறார். முதலில் பக்கத்தை மட்டும் பார்க்கும்போது “ஏது? முன்னுரை புத்தகத்தையே மறைத்துவிடும் போலிருக்கிறதே!” என்று தோன்றுகிறது. முன்னுரையைப் படித்துப் பார்த்தவுடனே “இல்லை; புத்தகத்துக்கு முன்னுரை விளக்குப் போட்டுக் காட்டுகிறது!” என்று முடிவு செய்கிறோம்.

நாமக்கல் கவிஞர் ஒரு வரி கூடக் கவிதை எழுதாவிட்டாலும், அவர் சிறந்த வசனகர்த்தாவாகத் திகழுவார் என்று அவருடைய “என் கதை“யைப் படித்ததும் நமக்கு அபிப்ராயம் ஏற்பட்டது. இந்த நாவலின் முன்னுரை அந்த அபிப்ராயத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. கல்கத்தா காங்கிரசுக்குத் தனி ரயிலில் பிரயாணம் செய்தபோது வ.உ.சி. ஒவ்வொரு வண்டியாக ஏறி இறங்கிப் பிரதிநிதிகளுடன் பேசி அவர்களை காந்தி கட்சியிலிருந்து திலகர் கட்சிக்குத் திருப்ப முயன்ற சம்பவம் நம் கண் முன்னாள் நடைபெறுவது போல் தோன்றுகிறது. மெயில் வண்டியை நிறுத்துவதற்காக வ.உ.சி. நடத்துகிற முயற்சி அவருடைய குணாதிசயத்தை நன்கு விளக்குகிறது. ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரையும் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியாரையும் ஒத்திட்டு எழுதியிருப்பது ஒரு அற்புதம். அந்தச் சில வரிகளில் நமக்கு அந்த இரண்டு பெரியார்களையும் நாமக்கல் கவிஞர் படம் பிடித்து நன்றாக இனங் காட்டியிருக்கிறார்.

ஸ்ரீ வ.உ. சிதம்பரனாரைத் தமிழ்நாடு என்றும் மறக்க முடியாது. அவரை மறக்காமலிருப்பதற்குரிய ஞாபகச் சின்னங்கள் ஒன்று இரண்டல்ல, பற்பல ஏற்பட வேண்டும். இந்தக் “கப்பலோட்டிய தமிழன்” என்னும் அருமையான நூலும் அந்தப் பெரியாருக்கு ஒரு சிறந்த ஞாபகச் சின்னமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

தொடர்புடைய சுட்டி: கப்பலோட்டிய தமிழன் புத்தகத்துக்கு என் விமர்சனம்